தந்தை பெரியார்
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை, ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக தை மாதத்தையும், முதல் தேதியையும் ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை, உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும் மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்னவென்றால், விவசாயத்தையும் வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப் படுவதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல் (Harvest Festival) என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான். என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வேளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்துப் பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள். இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடவில்லை.
இம்மாதிரியான இந்திர விழாபற்றி, கிருஷ்ணன் பொறாமைப்பட்டுத் தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அதன்படி செய்ததாகவும், இந்த இந்திரவிழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்தக் கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல் – நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடு, மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய்யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணன் மக்களையும் ஆடு, மாடுகளையும் காக்க ஒரு பெரிய மலை (கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதைத் தன் சுண்டு விரலால் தாங்கிப் பிடித்துக் காத்ததாகவும், இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கிரங்கி, கிருஷ்ணன், எனக்கு ஒருநாள் பண்டிகை, உனக்கு ஒருநாள் பண்டிகையாக, மக்கள் முதல் நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும் அதற்கு மறுநாள் உனக்காக மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான – ஆபாச முட்டாள்தனமான கதைகளைக் கட்டிப் பொருத்திவிட்டார்கள்.
இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான, இந்திரனின் யோக்யதை எப்படிப்பட்டது? மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மற்றும், இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையையும், மறுநாளுக்கு ஒரு கதையையும் போகிப் பண்டிகை என்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி, அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் புகுத்தி விட்டார்கள். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடுகெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்கின்றதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும் நல்லுடை உடுத்துவதையும் மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு, நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கும் உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன்மூலம் விழாக் கொண்டாட வேண்டியது அவசியம். மற்றபடியாக, மதச்சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும் பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்து வருவதால் – பயனளித்து வருவதால் அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து, தங்களை மானமும் அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
“மானமும் அறிவும் மனிதர்க்கழகு.’’
– ‘விடுதலை’ – 13.1.1970