முனைவர் வா.நேரு
கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் நாணயம். டிஜிட்டல் என்றால் நம்மால் ரூபாய் நோட்டைப்போல, 5 ரூபாய் நாணயம் போல கையால் எண்ணிப் பார்க்க, தொட்டுப் பார்க்க இயலாது. 2008இ-ல் சதோசி நகடோமா, தான் உருவாக்கிய டிஜிட்டல் நாணயத்திற்கு பிட்காயின் (Bitcoin) என்று பெயரிடுகிறார். அவரே தயார் செய்து வெளியிடுகிறார். அப்போது ஒரு பிட்காயின் மதிப்பு 1 சென்ட். 2009இ-ல் ஒரு பிட்காயின் மதிப்பு 27 டாலர்கள். இன்று (22.12.2021) ஒரு பிட்காயின் மதிப்பு 46,859 டாலர். இந்திய ரூபாயில் ஒரு பிட்காயினின் மதிப்பு 35,25,792. இதைப் போல பல கிரிப்டோ கரன்சி நாணயங்கள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டன. எந்த வகை அறிவியல் தொழில்நுட்பம் என்றாலும் அதனை யார் யார் பயன்படுத்துகிறார்கள்? எதற்காகப் பயன்படுத்து-கிறார்கள் என்பதுதான் அடிப்படை. இன்றைக்கு இந்த கிரிப்டோ கரன்சி பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
மதுரையில் ஒரு நபரிடம் ஒரு வீட்டுமனை இருக்கிறது. 1000 சதுர அடி இருக்கிறது. ஒரு சதுர அடி ரூ 1000 என்றால், 1000 சதுர அடி 10 இலட்சம் ரூபாய். மதுரையில் இருக்கும் நபரிடம் ஆன்லைனில் ஒருவர் வருகிறார். அவரிடம் இந்த மனையை 10 இலட்சம் என மதுரைக்காரர் விற்கிறார். வாங்கும் ஒன்றாவது நபர் இன்னொருவரிடம் அந்த மனையை 20 இலட்சத்திற்கு விற்கிறார். 20 இலட்சத்திற்கு வாங்கியவர் சில ஆண்டுகள் கழித்து 30 இலட்சத்திற்கு விற்கிறார். இப்படியே அந்த மனை விலை உயர்ந்து, உயர்ந்து கை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த நிலத்தைப் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கிறது. வாங்கி விற்பவர்களுக்கும் பணம் கிடைக்கிறது.
இதையே அப்படியே மதுரையில் இருக்கும் ஒரு நபர் கிரிப்டோ கரன்சியை உருவாக்குகிறார். கிரிப்டோ கரன்சி அசையாச் சொத்தும் அல்ல, அசையும் சொத்தும் அல்ல, அது ஒரு கற்பனை கரன்சி. நம்மூரில் ஏலத்தில் விடுவது போல இல்லாத கரன்சியை அவர் இணையத்தில் ரூ.1000க்கு விற்கிறார். ஏலத்தில் அதனை எடுப்பதுபோல வாங்கியவர் மறுபடியும் ஏலத்தில் விடுவது போல இணையத்தில் ரூ.2000க்கு விற்கிறார். இன்னொருவர் ரூ. 2000க்கு வாங்கி, 4000க்கு விற்கிறார். அப்படியே சங்கிலித் தொடராக மாற்றி மாற்றி விற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆயிரம், இலட்சம் என்று மதிப்பு உயர்கிறது. ஒரு கட்டத்தில் ஏலத்தை விடுபவரே ஏலத்தை முடிப்பது போல கிரிப்டோ கரன்சியைத் தொடங்கியவரே கணக்கை முடித்தவுடன் ஒட்டு மொத்தமாக அந்தக் கரன்சியே முடிந்து விடுகிறது. ஒருவகையில் இது நாமாக ரூபாய் நோட்டை அச்சடிப்பது போலத்தான். ரூபாய் நோட்டு அடித்தால் கள்ள நோட்டு என்று பிடித்து விடுவார்கள். இது டிஜிட்டல் நோட்டு. ஒருவரும் ஒன்றும் செய்யமுடியவில்லை. கிரிப்டோ கரன்சியை உருவாக்குபவர் யார் என்று தெரியவில்லை, எப்படி விற்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் இதனை வாங்குகிறார்கள், விற்கிறார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்து பணம் பார்ப்பது போல சிலர் பணம் பார்க்கிறார்கள். பலர் கையில் இருக்கும் பணத்தை இதில் போட்டு விட்டு இழந்தும் நிற்கிறார்கள். குதிரைப் பந்தியத்தில் குதிரை மீது பணம் கட்டுவது போல இது ஓர் ஊக வணிகம். இது ஓர் ஒட்டு மொத்த ஏமாற்று வேலை. ஒரு மனிதன் அவனுடைய உழைப்பினாலே, அவனுடைய அறிவினாலே, ஆற்றலாலே அவனுடைய முயற்சியினாலே எதையும் அடையலாம். பகுத்தறிவாளர்கள் என்பவர்களுக்கு குறுக்கு வழியிலே நம்பிக்கை கிடையாது. அவர்களுக்கு ‘அதிர்ஷ்டம்’ என்பதிலே நம்பிக்கை கிடையாது என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவார். டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் என்று வருகின்றன. ஆசை ஊட்டுகிறார்கள். இன்று நீங்கள் ரூ. 1 இலட்சம் முதலீடு செய்தால் நாளை மாலையில் உங்களுக்கு 1 இலட்சத்து 80000 கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆம் எனக்குக் கிடைத்தது என்று ஒருவர் சாட்சியாக அதில் பேசுகிறார். குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் என்று பிரார்த்தனைக் கூட்டங்களிலே சிலர் சாட்சி சொல்வதைப் போல கிரிப்டோ கரன்சி மூலம் எனக்கு இவ்வளவு லாபம் கிடைத்தது, அவ்வளவு கிடைத்தது என இணையத்தின் வழியாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். சீனாவில் கிரிப்டோ கரன்சியைத் தடை செய்து விட்டார்கள். நமது நாட்டில் ஒழுங்குபடுத்தப் போகிறோம் என்று சொல்கிறார்கள். கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்துவது என்பது இயலாத காரியம் என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சிறீநிவாசன்.
“இந்த கிரிப்டோ கரன்சியே கோட்-பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கூடுதல் விலை கொடுத்து வாங்கும் ஆள்கள் இருக்கும்வரை இது தொடர்ந்து நடக்கும். பிறகு விலை இறங்க ஆரம்பிக்கும். இதனை ஒழுங்குபடுத்துவது குறித்துப் பேசுகிறார்கள். எப்படி இதனை ஒழுங்குபடுத்துவார்கள்? யார் இதனை இயக்குகிறார்கள் என்று தெரியாத-போது யாரை இவர்கள் ஒழுங்குபடுத்துவார்-கள்? அது நடக்காத காரியம்” என்கிறார் ஆனந்த் சிறீநிவாசன்.
தவிர, பிட்காயின் மட்டும்தான் கிரிப்டோ கரன்சி என பலரும் கருதுகிறார்கள். அதுபோல நூற்றுக்கணக்கான காயின்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் யார் இயக்குகிறார்கள், கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே உலகில் யாருக்கும் தெரியாது. ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து, அது வீழ்ந்து-விட்டால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்கிறார் ஆனந்த் சிறீநிவாசன்.
உதாரணமாக, அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்க்விட் கேமை மய்யமாக வைத்து, ஸ்க்விட் காயின் என்ற பெயரில் ஒரு க்ரிப்டோ கரன்சி வெளியானதையடுத்து நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிரிப்டோ கரன்சி துவக்கத்தில் ஒரு சென்ட் மதிப்பில் விற்பனையானது. பிறகு கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு காயினின் விலை 2,861 டாலருக்கு விற்பனையானது.
ஆனால், அன்றைய தினம் அந்த க்ரிப்டோவை உருவாக்கியவர்கள் அனைத்து காயின்களையும் விற்று, பணமாக மாற்றிக்-கொண்டு வெளியேறிவிட ஸ்க்விட் காயினின் மதிப்பு ஒன்றுமே இல்லாமல் போனது.
“இந்தியாவில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது. சிலர் ரூபாய் ஆறு லட்சம் கோடி என்கிறார்கள். சிலர் 3 லட்சம் கோடி என்கிறார்கள். அரசு நினைத்தால், வங்கிகளில் இருந்து ஓரளவுக்கு மேல் க்ரிப்டோ முதலீடுகளுக்குச் செல்வதைக் கட்டுப்-படுத்தலாம்; அவ்வளவுதான் செய்ய முடியும்.” என்கிறார் ஆனந்த் சிறீநிவாசன்.
இதுதவிர, கிரிப்டோ கரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். அதன் பின்னணிகளைச் சாதாரண முதலீட்டாளர் புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதனை மேலும் சிக்கலாக்குகிறது. உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் விலை சுமார் 20,000 டாலராக இருந்தபோது, ஒரே நாளில் திடீரென மூன்றில் ஒரு பங்கு விலை குறைந்தது. 2018இல் இதன் விலை வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது. கிரிப்டோ சந்தையில் இருந்த பல லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனது.
ஆனால், முதலீட்டாளர்கள் கவனம் கொள்ள வேண்டியது, கிரிப்டோ கரன்சி விளம்பரங்களின் கீழே சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகத்தைத்-தான். “க்ரிப்டோ கரன்சிகள் ஒழுங்கு முறைப்படுத்தப்படாத டிஜிட்டல் சொத்துகள். சட்டபூர்வமாக எங்கும் பரிவர்த்தனை செய்யத்தக்கதல்ல. கடந்தகாலச் செயல்திறன் வருங்காலப் பலன்களுக்கு உத்தரவாதம் ஆகாது. முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள்” என்கிறது அவ்வாசகம்.
புத்தாண்டில் கையில் இருக்கும் பணத்தை, பேராசைப்பட்டு, கிரிப்டோ கரன்சியில் நாம், பகுத்தறிவாளர்கள் போடப் போவதில்லை. ஆனால், நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் சொல்ல வேண்டும். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது பாதுகாப்பும் அல்ல, நன்மையும் அல்ல. கிரிப்டோ கரன்சி என்பது ஒரு வகையான சூதாட்ட முதலீடு. அதில் முதலீடு செய்வதோ அல்லது வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு கடன் வாங்கி அதில் பணத்தைப் போடுவதோ ஆபத்தில் முடியக்கூடும் என்பதை நாம் மற்றவர்களுக்கும் விளக்கிச் சொல்லவேண்டும்.ஸீ