Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பாராட்டுகள்! பாராட்டுகள்!! பாராட்டுகள்!!!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அவர்களுக்குப் பாராட்டுகள்…..

இனி என்னை யாரும் ஜெகன்மோகன் ரெட்டி என அழைக்க வேண்டாம், நான் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என அறிவித்து, அதன்படி ஜெகன்மோகன் என்று கையெழுத்திட்டு தொடங்கியுள்ள ஆந்திர முதல்வர் திருமிகு ஜெகன்மோகன் அவர்களைப் பாராட்டுவோம்.

இந்தப் பண்புமாற்றம் இந்தியத் தலைவர்கள் அனைவருக்கும் குறிப்பாக பொதுவுடமை இயக்கங்களில் உள்ளவர்களுக்கு வந்தால் இன்னும் மகிழ்ச்சி.

 


 

செவ்வாய் தோஷமல்ல – கிரகம்!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களைச் சேகரிப்பதே பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியமான பணியாகும்.

ஆனால், பாறைத் துகள்களைச் சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா அறிவித்தது. எனினும், கடந்த மாத இறுதியில் செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில் இருந்து 2 பாறைத் துகள்களை பெர்சவரன்ஸ் சேகரித்தது!

அதன் தொடர்ச்சியாக தற்போது செவ்வாய் கிரகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்ததற்கான அடையாளங்களை பெர்சவரன்ஸ் ரோவர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நாசா அந்தப் படங்களை டுவிட்டரில் வெளியிட்டு, “விண்வெளியில் இருந்து, செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் பெர்சவரன்ஸ் ரோவர், நீர்நிலையுடன் இருந்த ஜெசேரோ பள்ளத்தாக்கின் கடந்த காலத்தைப் பற்றிய அற்புதமான குறிப்புகளைத் தந்தது என்றும், புவியியல் குறித்த இந்த ஆச்சர்யங்கள் விஞ்ஞானிகளை உறச்£க மடையச் செய்துள்ளது’’ என்றும் தெரிவித்துள்ளது!


 

வரதட்சணை தண்டனைகள்!

வரதட்சணை தடுப்புச் சட்டம்

1961இன் படி

1. வரதட்சணை கொடுப்பது, வாங்குவதற்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் அல்லது வரதட்சணை தொகை.

2. வரதட்சணை கோரினால் 6 மாதங்கள் சிறை, ரூ.10,000 அபராதம்.

இந்திய தண்டனைச் சட்டம்:

304 ‘பி’யின் படி

வரதட்சணைக் கொடுமையால் இறப்பு ஏற்பட்டால் – 7 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை.

இந்திய தண்டனைச் சட்டம் :

498 ‘ஏ’யின் படி

கணவன் அல்லது உறவினர்கள் கொடுமைப் படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம்.

 


 

பாசிசத்தின் 14 குணங்கள்

அரசியல் அறிவியலாளரான லாரன்ஸ் டபிள்யூ பிரிட் கூறும் பாசிசத்தின் குணங்கள்:

1.சக்திவாய்ந்த தொடர்ச்சியான தேசியவாதம்,

2. மனித உரிமைகளை அங்கீகரிப்பதில் வெறுப்பு, 3.எதிரிகளை அடையாளப்படுத்துவது,

4.இராணுவத்தை மேன்மைப்படுத்துதல்,

5.கட்டுப்பாடற்ற பாலியல், 6. ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது, 7. தேசியப் பாதுகாப்பில் பின்னிப் பிணைந்திருத்தல், 9. கார்பொரேட் பெருங்குழும அதிகாரம் பாதுகாத்தல்,

10. தொழிலாளர்களின் ஆற்றலை நசுக்குதல்,

11. கலைகள் மீதும் அறிவு ஜீவிகள் மீதும் வெறுப்பு, 12. குற்றமும் தண்டனையும் குறித்த வெறி,

13. கட்டுப்பாடற்ற கள்ளக் கூட்டும் ஊழலும்,

14. மோசடித் தேர்தல்கள்.

(தரவு: countercurrents.org)


 

பேட்டரியில் இயங்கும் விமானம்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர் களைத் தடுக்க சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதே ஒரே வழியாக உள்ளது.

இதன் முதல்கட்டமாக கார்பன் வெளி யேற்றத்தைக் குறைக்க மின்சாரக் கார்கள், இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவித்து சாலைப் போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

அடுத்ததாக விமானப் போக்குவரத்தில் இந்த மாற்றங்களைக் கொண்டு வரும் ஆராய்ச்சி கள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல்கட்டமாக சூரிய மின்சாரத்தின் மூலம் இயங்கும் விமானம் சோதனை முறையில் வெற்றிகரமாக இயக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தில் பேட்டரிகளை வைத்து, அதன் மூலம் ஒருவர் பயணம் செய்யும் மின் விமானத்தை 15 நிமிடங்கள் இயக்கி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

சுமார் 600 செல்-பேட்டரி பேக்குகளை அடைத்து வைத்து அதன் மூலம் 500 குதிரைத் திறனை அளிக்கும் மூன்று மோட்டார்களை இயக்கி இந்தச் சோதனை வெற்றி பெற்றுள்ளது.


 

ஒரு வரிச் செய்திகள்

உலக மொழிகளிலே குறைந்த சொற்களைக் கொண்ட மொழி – டாகி. கயானா நாட்டின் ஒரு சில பகுதிகளில் பேசப்படுகிறது. 340 சொற்கள் மட்டுமே உள்ளன.

மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காணும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

***

இரவிலும் கூர்மையாகப் பார்க்கும் திறன் கொண்டது முதலை. பெரும்பாலும் அவை இரவுகளில்தான் இரையைத் தேடும்.

உலகளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளில் 53 சதவிகிதம் இந்தியப் பெண் குழந்தைகள் என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


 

இயற்கை ஆக்ஸிஜன்

 ஜப்பான் நாட்டில் இருக்கும் “யோகோஹாமா’’ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தாவரவியலாளர் அகிரா மியா வாக்கி என்பவர்  மரங்கள் அதிவேகமாக வளர ஓர் முறையைக் கண்டுபிடித்துள்ளார். “இடைவெளி இல்லாத அடர்காடு’’ என்கிற இவரின் தத்துவத்தின்படி, குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நடலாம். இந்த மரங்களும் அதிவேகமாக வளர்வதை மெய்ப்பித்தார்.

இந்த முறையில், இதுவரைக்கும் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, சிறு குறுங் காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியாவாக்கி. இவரது இந்த சேவைக்காக 2006ஆம் ஆண்டு, பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு இவருக்கு “புளூ-_பிளானெட்’’ விருது கொடுத்துப் பெருமைப்படுத்தியது.

“மியாவாக்கி முறை என்பது குறைவான இடத்தில், காடுகளை உருவாக்கும் ஒரு முறை. மக்கும் குப்பையைக் கொண்டே சிறிய வனத்தை உருவாக்கலாம். ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பையைப் போட்டு, நெருக்கமாகச் செடிகளை நடும் முறைக்குப் பேர்தான் மியாவாக்கி.

இந்த முறையின் சிறப்பு என்னவென்றால், பத்து ஆண்டுகளில் ஒரு மரம் என்ன வளர்ச்சியை அடையுமோ அந்த வளர்ச்சியை இரண்டே ஆண்டுகளில் அடைந்துவிடும்.

இதனால் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். எடுத்துக்காட்டாக 1000 சதுர அடி நிலத்தில் 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். இந்த சிறிய இடத்தில் பெரிய ஆக்ஸிஜன் தொழிற்சாலையை சிறப்பாக இந்த முறையில் அமைக்கலாம்.