மின்சாரம்
மின் பற்றாக்குறையால் தத்தளிக்கிறது சீனா. இதன் விளைவாக, தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், சீனாவின் ஏற்றுமதி, சரிவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. தொழிற் சாலைகள், நிறுவனங்களைத் தாண்டி வீடுகளிலும் மின்வெட்டுகள் அதிகரித்திருப்பதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சீனா தனது மின் உற்பத்திக்கு நிலக்கரியையே அதிகம் சார்ந்திருக்கும் நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் அங்கு மின்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பான்மை பொருள்களை உலக நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் சீனாவில், மின் தட்டுப்பாட்டால் உற்பத்திகள் குறைந்திருப்பது உலக நாடுகள் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்!
சிறிய வயதில் சிகரம் தொட்ட பெண்!
பூர்ணாமலாவத் இருபது வயது முடிவதற்குள் உலகின் பெரும்பாலான கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தின் பகலா என்ற ஊரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களான தேவிதாஸ் – லட்சுமி தம்பதியரின் மகள் இவர்.
2014ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது பூர்ணாவுக்கு வயது 13. எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு முன் பயிற்சியாளர்கள் அவரது பெற்றோரைச் சந்தித்து அனுமதி கேட்டனர். பூர்ணா, அவரது பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் அம்மா பயந்திருக்கிறார். ஆனால், அப்பா மறுப்பு ஏதும் சொல்லவில்லை. அம்மாவை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார் பூர்ணா.
தன் மன திடத்தாலும் அசாதாரணமான உடல் பலத்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். உலகிலேயே மிகச் சிறிய வயதில் எவரெஸ்டில் ஏறிய பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ, அய்ரோப்பாவின் எல்பிரஸ், தென் அமெரிக்காவின் அகங்கா குவா, ஓஷியானாவின் கார்ட்ஸ்னெஸ், அண்டார்டிகாவின் வின்சன் மாஸிஃப் என ஆறு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி வெற்றி வாகை சூடியவர்.
தற்போது வட அமெரிக்காவின் டெனாலி சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார். இவரது சாதனைகளுக்காக ஃபோர்ப்ஸ் தரவரிசைப் பட்டியலில் சுயமுயற்சியால் உயர்ந்த பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
அச்சுக்கலையும் தமிழும்
அச்சுக்கலையின் வருகைதான் வாசிப்பைப் பரவலாக்கியது. முதல் தமிழ்ப் புத்தகம் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் லிஸ்பனில் வெளியானது. இந்நூலில் தமிழ்ச்சொற்கள் இலத்தீன் எழுத்துகளில் அச்சுக் கோக்கப்பட்டன.
1577இல் கோவாவில் அச்சிடப்பட்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூல்தான் இந்திய வரிவடிவொன்றில் அச்சேறிய முதல் தமிழ் நூல். 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் இந்தியாவிலும் இலங்கையிலுமாக அச்சிடப்பட்ட மொத்த நூல்கள் 1,771. மேற்கத்திய மொழி நூல்கள் 1,099. கிழக்கத்திய நூல்கள் 672. இவற்றில் தலையாய இடம் தமிழுக்கே. இக்காலகட்டத்தில் 266 தமிழ் நூல்கள், வங்காள மொழியில் 80 நூல்கள், ஹிந்துஸ்தானியில் 20 நூல்கள் அச்சேறின. சமஸ்கிருத மொழியில் ஒரு நூல் மட்டும் அச்சாகியது.