ஆசிரியர் பதில்கள் : மக்கள் போரட்டமே தீர்ப்பு!

ஜுலை 16-31,2021

கே:       இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பாடத்தில் ஜோதிடத்தைச் சேர்த்திருப்பது சட்டத்திற்கு எதிரானதுதானே?

               – மகிழ், சென்னை

ப:           ஜோதிடம் -_ அறிவியல் (Science) அல்ல; அவை போலி அறிவியல் (Pseudo science) என்பதாலும், 148க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள் இதனை ஆய்ந்தறிந்து அறிவிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். நமது அரசமைப்புச் சட்டத்தின் 5Aஇன் படியான அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனிடமும் புகுத்த வேண்டும் என்ற அடிப்படைக் கடமை விதிக்கு நேர் முரணானது இது! ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை _ அலகு _ இப்படி மூடத்தனத்தை _ அறியாமையைக் கல்வியாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கே:       7 பேர் விடுதலையில் சட்டவிதி 53(3)(அ)படி மாநில அரசே முடிவெடுக்க என்ன தடை?

               – குமார், மதுரை

ப:           தக்க வகையில் செய்ய ஆழ்ந்து யோசித்துக்கொண்டுள்ளனர். நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம்.

கே:       அய்.அய்.டி. ஜாதிவெறிக் கொடுமைகளுக்குத் தீர்வு என்ன?

               – சோழா, தாம்பரம்

ப:           அய்.அய்.டி _ அய்யர் அய்யங்கார் இன்ஸ்டிடியூட் ஆகவே துவக்கம் முதல் நடைபெறுகிறது. ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி _ மோடி தலைமையில் ஏற்பட்ட பிறகு அப்பட்டமான ஆரிய ஆணவம் தலைவிரித்தாடுகிறது!

               மக்கள் ஆதரவுடன் அறப் போர்களே ஒரே விடை _ நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து நடத்தும்.

கே:       ஒத்திசைவுப் பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில் ஒன்றிய அரசே எதேச்சாதிகாரமாக முடிவுகளை மேற்கொள்வதை உச்சநீதிமன்றம் எப்படி ஏற்கிறது?

               – கல.சங்கத்தமிழன், செங்கை

ப:           ஒன்றிய அரசு இதற்காகப் போதிய திருத்தத்தைக் கொண்டு வர சமூகநீதி அமைச்சர் அறிவித்துள்ளார். பெரியளவில் போதிய அழுத்தம் தர வேண்டும்.

கே:       அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பதை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

– பெரியார் பித்தன், சேலம்

ப:           நீதிமன்றங்களே இத்தகைய நீதி வழங்குவதை எதிர்கொள்வது அவ்வளவு எளிதா?

கே:       பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் நிதி, மருத்துவ ஒதுக்கீடுகள் செய்யும் ஒன்றிய அரசின் செயலை உச்சநீதிமன்றம் ஒழுங்குபடுத்தாதது ஏன்?

               – முகமது, மாதவரம்

 ப:           உச்சநீதிமன்றம் கொள்கை முடிவுகளில் தலையிடுவதில்லை என்ற சாக்கில் இதில் தலையிடாத நிலையே தொடரும் பரிதாப நிலைதான்! எளிதில் தீர்வு _ 3 ஆண்டுகளுக்கு  கிடைப்பது துர்லபமே!

கே:       பெரியாரைப் பேசி வளர்ந்த பின், பெரியாரை எதிரியாகக் காட்டும் அரசியல் கட்சிகளை இளைஞர்கள் நாடிச் செல்வதைத் தடுக்க சமூக ஊடகப் பிரச்சாரங்களை அமைப்பு ரீதியாக அதிகப்படுத்துவீர்களா?

               – ஜெ.ச.வீரநிதி, காஞ்சி

ப:           வெம்பி விலைபோனவர்களை ‘பெரிய மனிதர்களாக்குவது’ புத்திசாலித்தனம் அல்ல -_ அவர்களை அலட்சியப்படுத்தினால், விஷமம் வேர்கொள்ளாது தானே வீழ்வது உறுதி!

கே:       பெரியாரின் முன்னோடி பாரதி என்று கூறியுள்ள அப்பாவு அவர்களுக்கு உண்மை இதழ்களைத் தொடர்ந்து அனுப்பினால் என்ன?

               – த.வெங்கடேசன், பேரம்பாக்கம்

ப:           அ-னுப்பி வையுங்கள். காலத்தால் சில கருத்துகளை முன்னாலேயே கூறிய வாழ்க்கைக் காலத்தைப் பொறுத்த வரலாறு. அதனால் முன்னோடி ஆக முடியாது!

 

கே:       பெண்ணையாற்றின் குறுக்கே கருநாடகம் கட்டிய அணையை அகற்ற சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?

               – பெரு.இளங்கோ, திருவள்ளூர்

ப:           உச்சநீதிமன்றத்திலும் காவிரி ஒழுங்கு ஆணையத்திலும் தமிழ்நாடு அரசு அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளில் காலந்தாழ்த்தாது ஈடுபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *