அண்மையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மய்யமான நாசா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது. அந்தத் தகவல் இது:
ஜூலை 11ஆம் தேதி விண்வெளியில் பயணம் செய்யும் 6 பேரில் சிறீஷா பந்தலா இடம் பிடித்து சாதனை செய்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிறீஷா பந்தலா அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வளர்ந்தார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலட்டிக் யூனிட்டி என்ற விண்கலம் மூலம் அவர் விண்வெளிக்குப் பறக்கவிருக்கிறார்.
சிறீஷா பந்தலாவுக்கு முன்னதாக விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் என எடுத்துக் கொண்டால், 3 பேர்தான். கல்பனா சாவ்லா, ராஜேஷ் சர்மா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு சிறீஷா இந்தச் சாதனையை நிகழ்த்தவுள்ளார். இதன் மூலம் விண்வெளியில் கால் பதிக்கும் இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் அடையவுள்ளார். விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் சிறீஷா பந்தலாவுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பறக்கவுள்ளனர். கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பு கிடைத்தமைக்காக இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஜூலை 11ஆம் தேதி நியூமெக்ஸிகோவில் இருந்து இந்த விண்வெளிப் பயணம் தொடங்கவிருக்கிறது. அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அமைப்பானது கடந்த வாரம்தான் விர்ஜின் கேலட்டிக் விண்கல நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் செய்தியை சிறீஷாவின் தாத்தா ராமைய்யா அறிந்து மகிழ்ந்து கூறுகையில், “சிறீஷா பந்தலா தைரியமானவர், முடிவெடுப்பதில் வலிமையானவர். சிறு வயது முதலே வானத்தால் ஈர்க்கப்பட்டு, கனவு காணத் துவங்கினார். இந்திய வம்சாவளிப் பெண்கள் தொடர்ந்து இதுபோன்ற விண்வெளிச் சாதனைகளைப் படைத்து வருவது மகிழ்ச்சிக்குரியது. அவரின் கனவு விரைவில் பூர்த்தியாகும்.
சாதனை நாயகி சிறீஷா பந்தலா தனது டிவிட்டரில், “நான் எப்போதுமே ஒரு கனவு காண்பவளாகவே இருக்கிறேன். ஒருபோதும் கைவிடக் கூடாது. முயற்சி செய்து விண்மீன்களை அடைய வேண்டும் என்று அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தார். அந்தக் கனவை நனவாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என ட்விட்டில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக விண்வெளியில் இந்தியப் பெண்களின் சாதனைகள் நம்மை வியப்படையச் செய்யும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண்களை ஜோதிடத்தின் மூலம் மூடநம்பிக்கையைக் கூறி ‘செவ்வாய் தோஷம்’, ‘நாகதோஷம்’ எனப் பல்வேறு முறையில் அடிமைப்படுத்தும் செயலை முறியடிக்க இதுபோன்று பெண்கள் விண்வெளியில் பயணம் செய்வதன் மூலம் சிந்திக்க வைத்து முன்னேறி வருவது முக்கியமான ஒன்றாகும்.
(தகவல் : சந்தோஷ்)