எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (80) : தாழ்த்தப்பட்டவருக்கு பாரதி பூணூல் மாட்டியது ஏன்?

ஜுலை 16-31,2021

நேயன்

பாரதி வீட்டில் ஒரே குழப்பம்; கலக்கம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2:30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.

பாரதி புறப்பட்டு வரும் செய்தி ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி அய்யருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது’’ என, பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார். (16. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164)

மேலும், 1919ஆம் ஆண்டு சூன் மாதம் பாரதி கடயத்தில் இருந்தபோது அவர் மகள் தங்கம்மாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது. மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாதுரைக்குத் தூக்கமே வரவில்லை.

விடியற்காலை 4:00 மணிக்குத் தங்கை செல்லம்மாவை அழைத்துக் கொண்டு பாரதியிடம் சென்று, ‘இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும்’ என்றனர். பாரதி மகிழ்ச்சியுடன் ‘சரி’ என்றார்.

அங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார். வழக்கமான தலைப்பாகை கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்று பூணூலுடன், பஞ்ச கச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர். அதைவிட ஆச்சரியம் தந்தது அவர் ஸம்ஸ்க்ருத மந்திரங்களை அழுத்தந் திருத்தமாக அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும்.’’

(19, சித்ராபாரதி, ரா.த.பத்மநாபன்)

இப்படிப்பட்ட ஜாதிவெறி பிடித்த, வர்ணாசிரம ஆதரவாளரான பாரதி,

“பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே’’, “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று எப்படிப் பாடினார்? என்று நீங்கள் குழப்பமடைவீர்கள். அதற்கான விளக்கம் அறிந்தால் உங்கள் குழப்பம் தீரும்; பாரதியார் உண்மை உள்ளம் தெரியும்!

இந்தப் பாடல்களைப் பாரதி எழுதினாலும், அவர் எதற்காக எழுதினார், எந்த நோக்கில் எழுதினார் என்ற உண்மை தெரிந்தால் பாரதியார் உண்மை உள்ளம் வெளிப்படும்; குழப்பமும் தீரும்.

“இந்தியா’’ ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டபம் சீனிவாசன் அவர்கள் இதுபற்றி கூறியுள்ளதைப் படியுங்கள். அப்போது உண்மை புரியும்.

“எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும், தான் விசேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார். நான் என்ன வேலையா யிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது, தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார். அவருடைய ‘பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம்’ முதல் பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது. ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே, அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிறேன் என்றார்.’’ எனப் பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார்.

அதைப் போல ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்ற பாடல். இந்தப் பாடலைப் படித்தவுடன் பாரதி பார்ப்பனர்களை எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் எனத் தோன்றும். இந்தப் பாடலை முழுமையாகப் படித்துப் பார்த்தால்தான் இதன் பொருள் நன்கு விளங்கும். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாளராக இருந்தபோது எழுதப்பட்டது இப்பாடல். அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும்தான் காவல்துறையில் பணியாற்றினார்கள். நம்மவர்களால் சாதாரணக் காவலர் வேலையில் கூடச் சேர முடியாத காலம் அது. காவல் துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் பாரதிக்குச் சில துன்பங்களை விளைவித்து வந்தனர். (ஆதாரம்: பாரதி _ காலமும் கருத்தும்; ஆசிரியர்: தொ.மு.சி.இரகுநாதன்) எனவேதான் பாரதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

“நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு _ ஐயோ

நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு

பாயும் கடிநாய்ப் போலிசுக் _ காரப்

பார்ப்பனுக் குண்டிதிலே _ பிழைப்பு

பேராசைக் காரனடா பார்ப்பான் _ ஆனால்

பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை இழைப்பான் _ துரை

இம்மென்றால் நாய்போல உழைப்பான்

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்

மூன்றுமழை பெய்யுமடா மாதம்

இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் _ இவர்

ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார்’’

இப்பாடல் மூலம் பாரதி உணர்த்துவது என்ன? வேதம் ஓதும் பார்ப்பானை உயர்த்திப் போற்றும் பாரதி வெள்ளையனிடம் போலீசாக இருக்கும் பார்ப்பனர்களை மட்டுமே கண்டிக்கிறார். பார்ப்பான் மற்றவர்களால் அய்யர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே பாரதியின் உட்கிடக்கை என்பது இதன் மூலம் புலனாகிறது.

அதேபோல கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு பாரதி, பூணூல் அணிவித்ததைப் பலரும் புரட்சி என்று கருதுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா?

“பாரதி புதுவையில் இருந்தபோது, கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடருக்குப் பூணூல் மாட்டி விட்டு, “உன்னை இன்று முதல் பார்ப்பான் ஆக்கி விட்டேன்’’ என்று கூறினார். இதனால் பாரதி ஒரு ஜாதி ஒழிப்பு வீரர் என்று பலர் கருதுகின்றனர்.

கனகலிங்கம் என்பவர் வள்ளுவர் ஜாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்கள்தான் ஆதி திராவிடர்களின் வீடுகளுக்குப் புரோகிதம் செய்யச் செல்வார்கள். பறைச்சேரிக்குப் பார்ப்பனர்கள் செல்வதில்லை. பார்ப்பனர்கள் மேல்ஜாதியினர் வீடுகளில் செய்யும் சடங்குகளைப் பறைச்சேரியில் வள்ளுவர்கள்தான் செய்வார்கள்.

எனவேதான் பாரதி, கனகலிங்கம் என்ற வள்ளுவனுக்குப் பூணூல் மாட்டி விட்டு, ‘உன்னைப் பார்ப்பான் ஆக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். கனகலிங்கம் வள்ளுவன்தான் என்பதை பாரதியே உறுதிப்படுத்தியுள்ளார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *