ஆகம விதிகளின்படிதான் நடக்கின்றனவா?-(2)
கவிஞர் கலி.பூங்குன்றம்
புரட்டு என்பதன் மறுபெயர் பூணூல் அணியும்
பார்ப்பனர்களே. அதற்கு வெகுதூரம் போக வேண்டாம். பார்ப்பன உக்கிராணமான (கோயில் சமையல்கட்டு) ‘துக்ளக்கை’ ஒரு புரட்டுப் பு
ரட்டினால் போதும் _ இந்தப் பூணூல் பூனைகளின் புரட்டுகளின் மொத்த உருவமும் பூதாகரமாகவே தெரிந்துவிடும்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போர்க்கொடியைத் தூக்கினார் தந்தை பெரியார். கடவுள் பக்திக்காக அல்ல _ ஜாதி ஒழிப்புக்காகவே!
குறிப்பிட்ட பார்ப்பனர்கள் மட்டும்தான் கருவறைக்குள் நுழையலாம்; அர்ச்சனை செய்யலாம். மற்றவர்கள் சென்றால் தீட்டுப் பட்டுவிடும் என்பது ஒரு வகையான தீண்டாமையே!
பொது இடங்களில் ஒழிக்கப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பாம்பு _ கோயில் கருவறைக்குள் புகுந்து கொண்டு படம் எடுத்துக் கொத்துகிறது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் அந்தச் கடைசிப் போராட்டம்.
“நாங்கள் ஆட்சியில் இருக்க, அய்யா அவர்களே நீங்கள் போராட வேண்டுமா?’’ என்று முதலமைச்சர் கலைஞர் கேட்டு, அதற்கான சட்டத்தையும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றித் தந்தார்.
அதனை எதிர்த்து நேரடியாக உச்ச நீதிமன்றம் சென்றவர்கள் யார்? “ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்!’’ என்று தங்களுக்கு ஆள்பலம் தேவைப்படும் பொழுதெல்லாம் கூக்குரல் கொடுக்கும் அந்தக் குல்லூகப்பட்டர் பரம்பரையான 12 பார்ப்பனர்கள்தாம் _ காஞ்சி சங்கராச்சாரி _ ஜீயர் _ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆசியுடனும், அனுசரணையுடனும் உச்சநீதிமன்றம் சென்றனர். பல்கிவாலா இனாமாகவே வாதாடினார்.
அந்த நிலை எல்லாம் கடந்து, இப்பொழுது ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இருவர் பணியமர்த்தமும் செய்யப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள 200க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர்கள் உள்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்பணி நியமனம் செய்யப்படும் தருணம் இது.
தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்ற இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் நூறு நாள்களுக்குள் அர்ச்சகர் நியமனம் நடைபெறும் என்று அறிவித்தாலும் அறிவித்தார்… அடேயப்பா! வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டு அலற ஆரம்பித்துவிட்டது ஆரியம்.
ஆண்டாண்டுக்காலமாக சுரண்டிக் கொழுத்தவர்கள் அல்லவா! அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுத்து விடுவார்களா?
ரத, கஜ, துரக பதாதிகளை எல்லாம் பயன்படுத்த மாட்டார்களா? அதுவும் இப்போது அவாள் ஆட்சியாயிற்றே! (கேரளாவில் 60க்கும் மேற்பட்ட கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனம் நடைபெற்றாயிற்று என்பதையும் மனதில் வையுங்கள்!)
‘துக்ளக்’ குருமூர்த்தி என்ன செய்கிறார்? பழைய ‘துக்ளக்’ குப்பைகளைத் தேடி, அவரின் குருநாதர் திருவாளர் சோ.ராமசாமி அய்யர் 15 ஆண்டுகளுக்கு முன் ‘துக்ளக்’கில் கிறுக்கிய (7.5.2006) தலையங்கம் ஒன்றை எடுத்துப் போட்டு பாஷ்யம் செய்கிறார் பார்ப்பனத் தனத்துடன். (‘துக்ளக்’ 30.6.2021)
அதில் திருமந்திரத்திலிருந்து திருமூலர் எழுதிய புகழ்பெற்ற பாடல் ஒன்று _
“பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே’’
– திருமந்திரம் பாடல் எண்: 519
இதற்கு சோ தரும் விளக்கம்:
(சிவாச்சாரியார்கள் அல்லாத) பிராமணர்கள் சிவனை அர்ச்சித்தால், அந்நாட்டின் அரசனுக்கு கடும் வியாதி உண்டாகும். அந்த நாட்டில் பஞ்சம் தோன்றும்… என்று நந்தி தேவன் அறிந்து கூறினான் _ என்று பாஷ்யம் செய்துள்ளார் பார்ப்பனரான சோ.
ஆனால், இப்பாடலின் உண்மைப் பொருள் என்ன?
பார்ப்பான் அர்ச்சகனாக இருக்கக் கூடாது. கோவில் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று பார்ப்பான் கடவுளை அர்ச்சிக்கக் கூடாது. அப்படி அர்ச்சித்தால் போர்க் குணம் படைத்த நாடாளும் மன்னனுக்குக் கொடிய நோய் உண்டாகும். அத்துடன் நாட்டிலும் பெரிய பஞ்சம் ஏற்படும் என்று நந்தி கூறியதாக திருமூலர் கூறுகிறார்.
இந்த உண்மையான பொருளையும் சோ அய்யரின் பாஷ்யத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ‘அட பித்தலாட்டமே, உன் பெயர்தான் பார்ப்பனரா?’ என்றுதானே கேட்கத் தோன்றும்?
பார்ப்பனர்களைப் பற்றி திருமந்திரத்தில் திருமூலர் எழுதியுள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் எது உண்மை என்பது பளிச் சென்று புரிந்து விடுமே!
நூலும் சிகையும் நுவலின் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணம் நுவலிலே.
– திருமந்திரம் – 230
பார்ப்பானின் உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுக்க வேண்டும். “அறியாமையைப் போக்கிக் கொள்ளாத பார்ப்பனர்கள் உச்சிக்குடுமியும் பூணூலும் பெற்று இருப்பார்களேயானால், இந்த மண்ணுலகானது சோர்வடையும். பெருமை பொருந்திய வாழ்வினையுடைய மன்னவனும் தனது சிறப்புகளை இழப்பான். ஆதலால், இதனைப் பகுத்துணர்ந்து பார்ப்பானுடைய ஆடம்பரப் பூணூலையும் உச்சிக் குடுமியையும் அறுத்தெறிவதே நல்லதாகும்.’’
“மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூற் சிகையறுத் தானன்றே’’
– திருமந்திரம் – 241
(நூல் -_ பூணூல், சிகை _ குடுமி) பார்ப்பானுக்கு மன்னன் நல்லறிவு புகட்ட வேண்டும். தெளிந்த அறிவில்லாத பார்ப்பனர்கள் சடைமுடி, பூணூல் கொண்டு மெய்ஞ்ஞான ஞானிகளைப் போல் நடித்து மக்களை ஏமாற்றி உலவக் கூடும். இப்படிப்பட்ட பார்ப்பனர்களை மன்னன் அறிவாளிகளைக் கொண்டு பரிசோதித்து அவர்களுக்கு நல்லறிவு உண்டாக்குவானேயானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும்.’’
“ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி ஜோதித்து
ஞானமுண் டாக்குதல் நல மாகும் நாட்டிற்கே’’
– திருமந்திரம் – 242
மூடர்களே பார்ப்பனர். “உண்மை பேசுதல் இல்லாமலும், தெளிந்த நல்லறிவு இல்லாமலும், எல்லோருக்கும் பொருந்தும் விஷயங்களை அறிவுகொண்டு ஆய்ந்துணரும் தன்மை இல்லாமலும், பக்தி இல்லாமலும், கடவுளைப் பற்றிய உண்மை அறியாமலும் இருக்கின்ற பித்தம் பிடித்த மூடர்கள்தாம் பிராமணர்கள் ஆவார்கள்.’’
“சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரஊன்மை இன்றினு
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.’’
– திருமந்திரம் – 231
திருமந்திரத்தில் திருமூலர் கூறிய இந்தப் பாடல்களை வைத்துப் பார்க்கும்பொழுது, ‘சோ’ எழுதியது போல பார்ப்பனர் பெருமை என்பது பித்தலாட்டமும் புரட்டும் சேர்ந்து போட்ட குட்டி என்பது விளங்கும்.
எல்லாப் பிராமணர்களும் அர்ச்சகர் ஆக முடியாது தெரியுமா? சிவாச்சாரியர்கள் _ ஒரு பிரிவினர்தான் அர்ச்சகர் ஆக முடியும். இந்த உண்மை தெரியாமல், “பிராமணர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் _ மற்றவர்கள் அர்ச்சகர் ஆக முடியாதா?’’ என்று நாம் கேட்கிறோ மென்று சாமர்த்தியமாக எழுதுவதாக நினைப்பு.
-(‘தினமலர்’ 19.6.2021), (‘துக்ளக்’ 30.6.2021)
2006ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்களுக்கெல்லாம் சென்று ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறதா? அர்ச்சகர்களுக்கு உண்மையிலேயே ஆகமங்கள், மந்திரங்கள் தெரிந்திருக்கிறதா என்பது பற்றி அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. அந்தக் குழுவில் உ.சே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார் போன்றோரும் இடம்பெற்றிருந்தனர்.
வடபழனி கோயிலைப் பற்றி அவர்கள் கூறுவது என்ன?
“வடபழனி முருகன் கோயிலில் குமார தந்திரமும், காமாக ஆகமமும் பின்பற்றப்படுகின்றன. முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்கு உதவியாக உள்ளவர்கள் அவர்களின் உறவினர்கள் என்பதால், அவர்களுடன் பணியாற்றுவதால், உடனிருப்பதிலிருந்து அறிந்துகொண்ட அஷ்டோத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள். இருப்பினும் அவர்கள் அனைவரும் பூசை செய்கின்றனர். அத்துடன் பக்தர்கள் அதிகம் வருகின்ற காரணத்தால், அர்ச்சகர்களின் தேவை அதிகமாக உள்ளதால், அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய உறவினர் பலரை அழைத்து வந்து அர்ச்சகர்களாகப் பணியாற்ற வைத்துள்ளனர்’’ என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு கூறியிருக்கிறதே _ ‘கோயில்கள், ஆகமங்கள், மாற்றங்கள்’ என்ற தலைப்பில் நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதிய நூலாகவும் வெளிவந்துள்ளதே!
(பக்கம் 76)
எங்கே போயிற்று ஆகம விதிகள் _ அர்ச்சகர்களின் உறவினர்கள் என்பதால் தீட்சை பெறாவிட்டாலும் கருவறைக்குள் செல்லலாம் _ அர்ச்சனை செய்யலாமாம்!
தமிழ்நாட்டில் உள்ள 108 வைணவக் கோயில்களில் 106 கோயில்களுக்குச் சென்று வந்த உ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார் அந்த 106 திவ்ய தேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பல கோயில்களில் அர்ச்சகர்களே இல்லை என்றும் கூறுகிறார்.
அய்யய்யோ! ஆகமம் தெரியாதவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே _ இது அடுக்குமா? நாடு தாங்குமா? என்று குரல் எழுப்பி சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு முன் குருமூர்த்தி வகையறாக்கள் மறியல் நடத்துவார்களா?
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர்கள் 116 பேர்களில் 28 பேர்களுக்கும் மட்டுமே ஆகம விதிகள் தெரியும் என்று அறிக்கை கூறுகிறதே! (19.01)
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் நாட்டில் பிரளயம் ஏற்படும் என்று பிதற்றும் பெம்மான்கள் இதற்கு என்ன செய்யப் போவதாக உத்தேசம்?
சிவாச்சாரியார் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது _ முடியாது என்று அடம் பிடிக்கும் அய்யன்மார்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது.
திருப்பதியில் அன்றைய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 3.11.2000 அன்று திருப்பதி வெங்கடாசலபதி கோயில் _ தோமாலை சேவையின் போது, குலசேகரன்படியில் அமர்ந்து, அங்கு அர்ச்சகர்கள் ஆட்சேபித்தும் ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) அர்ச்சனை செய்தாரே _ அதனை எந்த ஆகமக் கணக்கில் சேர்த்துக் கொள்வது? _ சொல்லட்டும் ‘துக்ளக்’ கூட்டம்.
இராமேசுவரம் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியாராக இப்பொழுது இருக்கக் கூடிய விஜயேந்திர சரஸ்வதி செய்த அட்டகாசம் கொஞ்சமா?
(22.2.2021)
கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்றே தீருவேன் என்று தினவெடுத்து முண்டா தட்டவில்லையா? கோயில் அர்ச்சகர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா? சிவஆகம தீட்சை பெற்றவர்கள் மட்டும் கருவறைக்குள் செல்ல முடியும் என்று அர்ச்சகர்கள் சொல்லவில்லையா?
இதே குருமூர்த்தியும் காரைக்குடி எச்.ராஜாவும் (அங்கே எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை) அடாவடித்தனமாக நடந்துகொண்டு, சங்கராச்சாரியாரைக் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று பூஜை செய்யுமாறு செய்யப்பட்டதே!
குறிப்பிட்ட சிவாச்சாரியார் தவிர பிராமணர் கூட கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைய முடியாது _ அர்ச்சனை செய்ய முடியாது என்று ஆகாயத்துக்கும் பூமா தேவிக்குமாகக் குதிக்கும் பூணூல்களே, உங்களின் பதில் என்ன?
ஆகம விதிகளுக்கு மாறாக, இராமேசுவரம் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி நுழைந்ததால் கர்ப்பக் கிரகம் தீட்டுப் பட்டிருக்க வேண்டுமே! _ அந்தத் தீட்டைக் கழிக்கத் தேவையான சடங்குகள் சுத்திகரிப்புகள் நடந்தனவா? ‘சுத்த சுயம் பிரகாசங்கள்’ பதில் சொன்னால் நல்லது.