தந்தை பெரியார்
உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப் படுமானால், அவரை நடுநிலைமை யுடையவரென்று சொல்லுவதை விட, பாரபக்ஷம் (ஒரு சார்பு) உடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.
அவரைக் கருணை உடையவர் என்று சொல்வதை விட, கருணையற்றவர் என்று சொல்வதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ (நடைமுறை) உதாரணங்கள் இருக்கின்றன.
அவரை நீதிவான் என்று சொல்வதை விட, அநீதிவான் என்று சொல்வதற்கே தாராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட, அவரால், அதிக தீமையே ஏற்படுகின்றது, என்று சொல்வதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.
(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்ட யோக்கியர் என்று சொல்வதை விட, அயோக்கியர் என்று சொல்வதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.
அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கின்றாரென்பதை விட, தீமையே செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களிடம் தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவரென்று சொல்வதை விட, அவர் காட்டுமிராண்டி என்று சொல்வதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.
அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதை விட, அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேகக் காரணங்கள் இருக்கின்றன.
அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்து வதை விட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.
அறிஞர்களே! ஆராய்ந்து பாருங்கள்!
– ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது. (‘குடிஅரசு’ 9.10.1930).
* * *
தேவஸ்தானச் செல்வங்களை
பொது நலத்திற்குப் பயன்படுத்தலாமே!
திரு.வி.வி.இராமசாமி அவர்கள் சுய மரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியேயாகும்.
நான், சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4, 5 வருஷம் தேவஸ்தானக் கமிட்டியில் பிரசிடென்டாகவும், வைஸ் பிரசிடென்டாகவும் இருந்தேன். தேவஸ்தானச் செல்வங்களைப் பொதுநலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால் அது நல்ல வேலை தான். அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தானச் சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால், அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.
ஆகவே, நான் ராஜினாமா செய்தேன். எனது சகபாடிகள் எனது ராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும், ஆனால், பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன்னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப் படுத்தலாம் என்பதும் ஓர் அளவுக்கு உண்மைதான். இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடென்ட் திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கிறார். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற்சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக்காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.
ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும், கோவில்களின் பேராலுள்ள செல்வங்களையெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தமில்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை. ஆகையால், இந்தவித அபிப்பிராயமுள்ள திரு.இராமசாமியைத் தெரிந்தெடுத்தவர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத்திருப்பார்கள். ஏனென்றால், திரு.வி.வி.இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால், அப்படிப் பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு.இராமசாமி தனது கடமையைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.
– 6.7.1931, விருதுநகரில் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு (‘குடிஅரசு’ 19.7.1931).