இன்றைய காலகட்டத்தில் நாம் உணவு விஷயத்தில் நிறைய அக்கறை செலுத்தி வருகிறோம். அந்த வகையில் கோடைக்காலத்தில் நமது உடலுக்கு நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் மிக முக்கியம். அது நமது உடலுக்கு சோர்வு தராமல் நம் உடலை சமச்சீராக வைத்திருக்கக் கூடியதாக இருக்க வேண்டியது முக்கியமானது. கோடையில் பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியது. அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்த காய்களில் முதன்மையானது சுரைக்காய். இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கக் கூடியது.
சுரைக்காய் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தைத் தணிப்பது மட்டுமல்லாது, கோடையில் ஏற்படும் சருமப் பிரச்சினைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. வாரம் இருமுறை உணவில் இந்த காயைச் சேர்த்து வந்தால் தோலுக்கு பளபளப்பைத் தரும். சுரைக்காயை கூட்டு, பொறியல், சூப், ஜூஸ், அவியல், என வலி போன்ற பிரச்சினைக்கும் கண் எரிச்சல், உடல்சூடு தணிதல், கண் வலி போன்ற பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. இன்றைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம், உட்கார்ந்தபடியே வேலை செய்வது அல்லது மன அழுத்தம் இவற்றால் நிறைய பேர் இன்று செரிமானக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் நெஞ்சு எரிச்சல், இரைப்பை அழற்சி, புற்றுநோய்கூட ஏற்படலாம். இவர்கள் சுரைக்காயை உணவில் அதிகம் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். காரணம், சுரைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்தானது செரிமானம் நன்றாக ஆக உதவுகிறது. அடிக்கடி இதை உணவில் எடுப்பதன் மூலம் மலச்சிக்கல் தீர்வதோடு, மூலநோய் உள்ளவருக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது. குடல் புண் மற்றும் வயிற்றில் ஏற்படும் எந்த பாதிப்பையும் சரி செய்யும் தன்மை இந்தக் காய்க்கு உள்ளது. சுரைக்காயில் ரசம் வைத்து அதில் தேக்கரண்டி எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கோளாறுகளான எரிச்சல், நீர்க்கட்டு, சிறுநீர் வெளியேறாமல் அவதிப்படுவோருக்கு சிறந்த பலனளிக்கும்.
உணவே மருந்து
அடுத்து, கொழுப்புச்சத்து உணவுகளையும், வறுத்த உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் அப்போது அதிகமான தண்ணீர் தாகம் எடுக்கும். அடிக்கடி நா வறட்சி ஏற்படும். இவர்கள் ஒரு கோப்பை பச்சை சுரைக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து அருந்தினால் நா வறட்சி நீங்கி புத்துணர்வு ஏற்படும். கை கால்களில் எரிச்சல் உள்ளவர்கள் சுரைக்காயின் சதைப் பகுதியை எடுத்து எரிச்சல் உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால் எரிச்சல் உடனே குறையும். அதைப் போன்று நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உணவில் சிறிதளவு உணவில் சுரைக்காய் சேர்க்க உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இக்காய் நல்ல பலனைத் தரக்கூடியது. கண்களுக்குப் புத்துணர்வு தந்து பார்வைத் திறனை அதிகப்படுத்தும். இந்த ஊரடங்கு காலத்தில் அனைவரும் அதிக நேரம் கணினி, போன், தொலைக்காட்சி பயன்படுத்துவதால் ஏற்படும் கண் அழற்சியைப் போக்கக் கூடியது சுரைக்காய் உணவு. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்சினையான அதிக இரத்தப்போக்கைத் தீர்க்கக் கூடியது. இதில் உள்ள இரும்புச் சத்து பெண்களுக்கு சத்து தரக்கூடியது. நமது உடலில் உள்ள கல்லீரலை நன்கு பாதுகாக்க சுரைக்காய் பயன்படும். கல்லீரலில் சேரும் அழுக்குகளை அகற்றி பாதுகாக்கும் தன்மை சுரைக்காய்க்கு உண்டு. ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கும் சத்துகளும் இதில் உண்டு. மேலும், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதனை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். எளிதில் கிடைக்கும் இக்காயை அனைவரும் உண்டு பயன்பெறுவோம்.