கவிஞர் கலி. பூங்குன்றன்
பிரேமானந்தா, நித்யானந்தா, ராம் ரஹீம் ஆகிய மோசடி சாமியார்களின் வரிசையில் புதிதாக இணைந்த சிவசங்கர் பாபா இவர்கள் ஆன்மீகம், சொற்பொழிவு, வாய் ஜாலத்தை வைத்துக் கொண்டு எதையாவது பேசி மக்கள் கூட்டத்தை கூட்டி, அளவுக்கு அதிகமாக சொத்துகளை குவிப்பது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பிரேமானந்தா, நித்யானந்தா, ஆசாராம், ராம் ரஹீம், சாமியார் ராம்பால் தற்போது சாமியார் சிவசங்கர் பாபா. இந்த மோசடி சாமியார்கள் மீது இன்றும் பக்தி என்ற பெயரில் ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது பள்ளியில் படித்து வந்த சிறுமிகளுக்கு பரிசுப் பொருள்களைக் கொடுத்து பாலியல் அத்துமீறல்களை நடத்தியதாக அதன் நிருவாகி சிவசங்கர் மீது எழுந்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது ‘பாபா’ சிறை தாழ்ப்பாளுக்குள் கிடக்கிறார்.
இதேபோல் சாமியார்கள் என்ற போர்வையில் பாலியல் அத்துமீறல்கள் பெருகி வருவது வேதனைக்குரியதாக உள்ளது.
இந்தச் சாமியார்களிடம் சிக்கும் நபர்கள் பெரும்பாலோர் திடீர் என செல்வந்தராக வந்தவர்கள் மற்றும் உயர்ஜாதியினரே என்கிறது புள்ளி விவரங்கள். சாமானியர்கள் இவர்களால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு.
சாதாரண ‘குரளிவித்தை’ விளையாட்டு மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகவும் மக்களின் அறிவை வளர்த்துக் கொள்வதாகவும் கூறி ஏமாற்றி திருநீறு எடுப்பது, லிங்கம் எடுப்பது போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்கின்றனர்.
இவர்கள் அனைவருமே ஆசிரமம் நடத்துவது, பள்ளி நடத்துவது எனப் பணம் கொழிக்கும் தொழில்களையே செய்து வந்தனர். இவர்கள் வழங்கும் ஆன்மிகச் சொற்பொழிவு களைக் கேட்டால் மனம் லேசாவதாக இவரது பக்தர்கள் தெரிவிக்கிறார்களாம்.
இந்தச் சாமியார்களிடம் பத்து பைசாவிற்குப் பயன்பெறாத வாயில் இருந்து எடுக்கும் லிங்கத்திற்கும் விபூதிக்கும் ஆசைப்பட்டு அவர்களைப் பின்தொடர்கின்றனர். இவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி பேசுகிறவர்கள்தாம்.
”விதியை மதியால் வெல்லலாம் என்றாலும் நாம் பிறக்கும் போது தலையில் என்ன எழுதிவைத்துள்ளானோ அதுபடிதான் நடக்கும். ஆனால், அப்படி நடப்பவற்றில் தவறானவைகளை நான் மாற்றிக்காட்டுவேன்’’ என்பதே இவர்களின் துவக்க போதனை. மதநம்பிக்கையில் அதிகம் ஈடுபட்டு எது தவறு _ எது சரி என்று அடையாளம் காண இயலாமல் தடுமாறி இவர்களிடம் போய் அடைக்கலம் தேடுகின்றனர்.
சாமியார்களும் இவர்களின் பின்புலத்தைத் தங்களுக்கு என்றே அமைத்துள்ள தனியார் உளவு அமைப்புகள் மூலம் தெரிந்துகொண்டு இவர்களைப் பற்றிப் பேசி வியப்பில் ஆழ்த்துகின்றனர். அதன் பிறகு அந்த நபர்கள் சாமியார்களின் அடிமைகளாகவே மாறிவிடுகின்றனர்.
நித்தியானந்தா
பல்வேறு பாலியல் வழக்கு மோசடி மற்றும் ஆள்கடத்தல் எனப் பல வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா திருவண்ணா மலையில் குடிசையில் இருந்து தன்னுடைய ஆன்மிக ஏமாற்று வேலையைத் துவக்கியவர். இன்று உலகம் முழுவதிலும் பல்லாயிரம் கோடி சொத்துக்களோடு ‘தனி அரசாங்கமே’ நடத்துகிறார்.
தற்போது எங்கோ ஒரு நாட்டில்? தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தா தன்னுடன் 13 வயது முதல் 17 வயதுவரை உள்ள சிறுமிகளை அழைத்தும் சென்றுள்ளார். அதாவது இந்தச் சிறுமிகளின் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை சாமியார் நித்தியானந்தாவிடம் ஒப்படைத் துள்ளனராம். தற்போது சிலர் தங்கள் மகள்களை மீட்கக் கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என ஊடகங்களும் அரசும் கூறுகின்றன.
தினசரி நேரலையில் வந்து உளறிக் கொட்டுகிறார். அவருடன் அந்தச் சிறுமிகளும் உள்ளனர். நவீன காலத்தில் நாம் வாழ்கிறோம். அரசு நினைத்தால் சில நிமிடங்களில் நித்தியானந்தாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை இழுத்துவந்து சிறுமிகளை மீட்க முடியும். ஆனால், ஒன்றிய அரசு சாமியார்களுக்கான அரசாயிற்றே.
ஆசாராம் பாபு
குஜராத்தில் சைக்கிள் கடை ஊழியராக இருந்த ஆசாராம் என்பவர் மும்பை வீதிகளில் சாமியார் என்ற பெயரில் திரிந்து மும்பை, குஜராத் போன்ற ஊர்களில் ஆசிரமம் அமைத்தார்; ஆசிரமம் அமைத்த உடன் கூட்டம் அவரைத் தேடி வந்தது. ‘சத் சங்கம்’ என்ற பெயரில் மேற்கு இந்திய மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பெருமளவும் சொத்துக்களைச் சேர்த்து ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளார். இவருக்குத் தமிழ்நாட்டில் கூட சொகுசு மாளிகைகள் உண்டாம்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டார். இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த சாமியார், பின்னர் 2014ஆம் ஆண்டு, குஜராத்தில் 2 சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில், சாமியாரின் மகனும் உடன்பட்டிருந்தார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் முஷார்பர் நகரில், தனக்கு எதிராக சாட்சியம் அளித்த சமையல்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கும் ஆசாராம் பாபு மீது தொடரப்பட்டது.
2008ஆ-ம் ஆண்டு, ஓர் ஆங்கில ஊடகம், ரகசிய புலனாய்வு ஒன்றை ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நடத்தியது. அந்த ஆசிரமத்தில், ஆசாராம் பாபுவை சந்தித்துப் பேசுகிறார் அந்தப் பெண் நிருபர். “நான் மிகவும் மனவருத்தத்தில் இருக்கிறேன். நான் உங்களிடம் பேச வேண்டும்”, என்று கூறுகிறார் அந்த நிருபர். அதற்கு ஆசாராம் பாபு, “நீ பேசுவதற்கு இந்த இடம் சரியானது இல்லை. நான் சொல்கிற இடத்தில் பேசலாம். நான் உன் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறேன். இங்கு பல மாநில முதல்வர்கள் வந்து போவார்கள். என்னால் தீர்க்கப்படமுடியாத பிரச்சினை என்று ஒன்றுமில்லை”, எனக் கூறுகிறார். இறுதியாக ஆசாராம் பாபு சொன்ன இடத்தில் அவரை தனியாகச் சந்திக்கிறார் அந்த நிருபர். அவரிடம் ஆசாராம் பாபு தொடர்ந்து பேசி, “நீ இப்போது நன்றாகத் தூங்கு. நானும் உன்னுடன் தூங்குகிறேன். யாரும் உன்னை இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், இதைப் பற்றி, நீ வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது!” என்று கூறுகிறார். இதையெல்லாம், அந்தப் பெண் நிருபர் தான் மறைத்துவைத்திருந்த கேமராவில் பதிவுசெய்கிறார்.
ஜோத்பூர் சிறுமி வழக்கில், பெண் நிருபரின் ஸ்ட்ரிங் வீடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தச் சாட்சி மட்டுமல்ல, அந்த ஆசிரமத்தில் வேலை செய்த பலரும், சிறுமியுடன் ஆசாராம் பாபு இருந்ததைப் பார்த்துள்ளனர். இந்த வழக்கில், அவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட, அவர்கள் ஒவ்வொருவரையுமே கொல்லுவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டன! சிலர் உயிர் இழந்தனர் சிலர் பலத்த காயங்களுடன் தப்பித்தனர். விசாரணை நடந்த நான்கு ஆண்டுகளில், கிட்டதட்ட ஒன்பது பேர்கள் தாக்கப்பட்டனர் . இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்
ஆசாராம் பாபு ஆசிரமத்தில், அவருடன் பணிபுரிந்த ஆயுர்வேத மருத்துவரான அம்ருத் ப்ராஜாபதி என்பவர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம், மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், ஜோத்பூர் சிறுமி வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் சமையல் காரராகவும், ஆசாராமின் உதவியாளராகவும் இருந்த அகில் குப்தா, அவரது வீட்டில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு, குஜராத் காவல்துறை அகில் குப்தாவை ஜோத்பூர் சிறுமி வழக்கில் விசாரித்தபோது ஆசாராமுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சாட்சியான ராகுல் சச்சான் என்பவர், ஜோத்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மேலும், க்ரிபால் சிங் என்ற சாட்சியாளர், ஷாஹ்ஜஹன்பூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத இருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், ஆசாராம் பாபு 12 முறை ஜாமீன் வழங்கக் கோரி மனு அளித்துள்ளார். ஆனால், அத்தனை முறையும் அவரின் ஜாமீன் மீதான மனு நிராகரிக்கப்பட்டது.
இப்படி தொடர்ந்து சிக்கலில் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. எஸ்.சி / எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம், இவரின் வழக்கை விசாரித்து வந்தது. 25.-4.20-18 அன்று ஆசாராம் பாபு மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேருக்கு தண்டனை வழங்க ஜோத்பூர் சிறைக்கே நீதிபதிகள் சென்றனர்.
அங்கு, 2013ஆ-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில், ஆசாராம் பாபு உள்பட மூன்று பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும், இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது
சாமியார் ராம் பால்
அரியானா மாநிலம் ஹிசாரில் ஆசிரம் அமைத்து சாமியாராக வலம் வந்தவர் ராம்பால். பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தான் குருசேத்திரப் போரில் கிருஷ்ணன் எடுத்த பல உருவத்தில் ஒருவன் என்று கூறி ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் ராம்பால். இவரது ஆசிரமம் ஒரு குட்டி அரசாங்கம் போல செயல்பட்டு வந்தது.
பல நூறு ஏக்கர் பரப்புள்ள இவரது ஆசிரமத்திற்கு உள்ளே இவரது ஆசிரம முத்திரை கொண்ட சிறப்பு பணத்தையே வெளியிட்டு தனி அரசு நடத்திவந்தார். ஆசிரமத்தில் இவரது அறையில் வெளிநாட்டு ரக மதுபானங்கள், பாலியல் காணொலிகள் மற்றும் போதை மாத்திரைகள் ஆணுறைகள் என பல சோதனை நடத்திய காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டன. இவரது அறைக்கு அருகே நவீன வசதிகளுடன் கூடிய ஒரு கருக்கலைப்பு மருத்துவமனையே செயல்பட்டுவந்தது. இவர்மீது பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்து இவரைக் கைதுசெய்யச்சென்ற போது ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல்துறை மற்றும் ரோதக் கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொலை செய்தும், மேலும் பலரை படுகாயமடையச் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் கைது நடவடிக்கைகளை தவிர்த்து வந்த ராம்பால், சுமார் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் தவிர்த்து வந்தார். இதனால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஆசிரமத்தை அரியானா மாநில காவல்துறை சுற்றி வளைத்த போது, ராம்பால் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு காவலர்களிடம் சிக்காமல் 12 ஏக்கர் நிலப்பரப்புள்ள ஆசிரமத்துக்குள் சாமியார் ராம்பால் பாதுகாப்பாக இருந்து வந்தார்.
அமைதியான முறையில் அவரை கைது செய்ய முடியாது என்று தெரிய வந்ததும், ஆசிரமத்துக்குள் செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் சப்ளையை அதிகாரிகள் துண்டித்தனர். தொடர்ந்து, ஆசிரமத்துக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் மீது ராம்பால் ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். போலீசார், துணை ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. முடிவில், சாமியாரின் ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, சாமியார் ராம்பாலைக் கைது செய்தனர். காவல்துறை மற்றும் சாமியார் ஆதரவாளர்களுக்கிடையே நடைபெற்ற தாக்குதலில் அய்ந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஆசிரமத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும் ராம்பால் மற்றும் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் மீது மொத்தம் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹிசார் மத்திய சிறையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது இவர் ஹிசார் சிறையில் உள்ளார். சிறைக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பிரமாண்ட சொகுசு மாளிகையில் 12 ஆண்டுகாலமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குர்மீத் ராம் ரஹீம்
ராஜஸ்தான் மாநிலம் சிறீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் குர்மீத் ராம் ரஹீம் ‘தேரா சச்சா சவுதா’ என்ற அமைப்பில் இணைந்து சில ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு அங்குள்ள அத்தனை மூத்த நபர்களையும் பணத்தால் வளைத்துப் போட்டார்..
விரைவில் அந்த அமைப்பின் தலைவரானார் இவருக்கு அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது 2014ஆம் ஆண்டு தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன. 2015ஆம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக புகார் எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி. மக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.அய்- யிடம் அதை ஒப்படைத்தது. இந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை ‘குற்றவாளி’ என அறிவித்துள்ளது சி.பி.அய் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 பேர் பலியானார்கள். இவர் மீதான குற்றச்சாட்டு உறுதியான பிறகு இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சாமியார் ரா-ஜ்யமாகவே ஆகிவிட்டது. சாமியார் ஒருவர் உத்தரப்பிரதேச முதல் அமைச்சராக ஆகிவிட்டார். அரசு அலுவலகங்களுக்கெல்லாம் சாமியார் வண்ணமான (காவி சாயம்) பூசப்பட்டுவிட்டது.
நாடு எங்கே போகிறது? இந்தியா முழுவதற்கும் இன்று பெரியார் மிகவும் தேவை என்ற நிலை எழுந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சி தேவை! எழுச்சியையும் ஏற்படுத்துவோம்!
ராம்தேவ் என்ற ஆசாமி பா.ஜ.க. ஆட்சியில் பெரும் கார்ப்பரேட் சாமியாராகிவிட்டார்.