மஞ்சை வசந்தன்
அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் பேய், மந்திரம், தாயத்து, சோதிடம் என்று நம்பி பாழாகும் அவலம் நடப்பது நாம் எல்லாம் வெட்கி வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி எவ்வளவு கட்டாயம் என்பதை அண்மையில் நடந்த கீழ்க்கண்ட கொடிய நிகழ்வு காட்டுகிறது.
உடம்பினுள் புகுந்த பேயை வாய்வழியாக ஓட்டுவதாக நினைத்து, கழுத்தில் காலைவைத்து மிதித்து ஏழு வயது சிறுவனைக் கொன்ற படுபாதகச் செயல், ஆரணி அருகே நடந்திருக்கிறது. இந்த கொடூரச் சம்பவத்தைத் தாயும், அவரின் சித்திகள் இருவருமே சேர்ந்து செய்ததுதான் அதிரவைத்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் வசித்துவந்த கார்த்தி – திலகவதி தம்பதியரின் ஏழு வயது மகன் சபரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவன் கார்த்தி இறந்துவிட்டதால், திலகவதி தனது மகனுடன் வேலூர் அருகேயுள்ள அரியூர் பகுதிக்குக் குடிபெயர்ந்துவிட்டார். திலகவதியுடன் அவரின் தங்கைகளான பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரும் தங்கியிருக்கிறார்கள். தங்கைகள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில், சில தினங்களாக மகன் சபரிக்குப் பேய் பிடித்ததாகக் கூறி தாயும், அவனின் சித்திகள் இருவரும் சேர்ந்து மூடநம்பிக்கையான மாந்திரீகத்தின் பெயரில் சிறுவனை அடித்து, சித்ரவதை செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மாந்திரீகவாதி யாரோ ஒருவர் பேய் ஓட்டுவதாகக் கேள்விப்பட்டு திலகவதியும், அவரின் தங்கைகள் இருவரும் சிறுவன் சபரியை அரியூரிலிருந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்தப் பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஆட்டோக்காரர் ஆரணிக்கு முன்புள்ள கண்ணமங்கலம் பேருந்து நிலையத்திலேயே நள்ளிரவில் இறக்கிவிட்டிருக்கிறார். காலை விடிந்த பின், வேறு ஆட்டோவைப் பிடித்து வந்தவாசிக்குச் செல்லலாம் என்று முடிவு செய்த அந்தப் பெண்கள், சிறுவன் சபரியின் தலைமுடியை இழுத்தபடியே கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் சென்று தங்கினர்.
அதிகாலை 2:00 மணி இருக்கும். தாய் உள்பட மூன்று பெண்களும் சேர்ந்து சிறுவனைக் கொடூரமாக தாக்கத் தொடங்கினர். சிறுவனின் கை கால்களை சித்திகள் இருவரும் நீட்டியிழுத்துப் பிடித்துக்கொண்டனர். தாய் திலகவதியோ, மகன் என்றும் பார்க்காமல், உடலுக்குள் ஊடுருவிய துஷ்ட சக்தியை வாய்வழியாக ஓட்டுவதாக நினைத்து கழுத்தில் காலைவைத்து மிதித்திருக்கிறார். இவர்களின் கொடூரத்தால், சிறுவன் சபரி மூச்சுவிட முடியாமல் துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான். அதன் பின்னரும், சிறுவனின் வாயைத் திறந்து தண்ணீரை ஊற்றுவது, கன்னத்தில் அறைவது என அந்தப் பெண்களின் கொடூரம் நீண்டிருக்கிறது.
அருகிலிருந்த மக்கள் சிலர், அதிர்ச்சியடைந்து அந்தப் பெண்களிடம் வந்து, ‘யார் நீங்கள், அந்தச் சிறுவனிடம் ஏன் இப்படி கொடூரமாக நடந்துகொள்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளனர். உடனே, ஆவேசப்பட்ட மூன்று பெண்களும், ‘எங்கள் குழந்தை. அவனுக்குப் பேய் பிடிச்சிருக்கு. திடீர்னு வலிப்பு வந்துடுச்சு. அதான் இப்படிப் பண்றோம். உங்கள் வேலையைப் பார்த்துட்டுப் போங்க’ என்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த மக்கள், உடனடியாக கண்ணமங்கலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவலர்கள் விரைந்து வந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்ற முயன்றனர்.
அப்போதும், சிறுவனுக்குப் பேய் ஓட்டுவதாகக் கூறி பெண்கள் உடலை விட மறுத்தனர். போலீசார், ஒருவழியாக சிறுவன் உடலை மீட்டனர். சிறுவன் மயக்கநிலையில் இருக்கிறானா அல்லது மரணமடைந்து விட்டானா என்பதை அறிய, சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பரிசோதனை செய்தனர். மருத்துவ உதவியாளர் பரிசோதனை செய்து பார்த்து, சிறுவன் இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதையடுத்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த காவல்துறையினர், சிறுவனின் உடலை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, தாய் திலகவதி மற்றும் அவரின் தங்கைகள் இருவரையும் கைதுசெய்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பேய் உண்மையா?
தற்கொலை மற்றும் விபத்தில் உயிர் இழக்கின்றவர்கள் பேயாக அலைகிறார்கள் என்பது நம்பிக்கை. அதாவது ஆயுள் முடியும் முன்னே இறந்துவிட்டார்கள். எனவே, அவர்கள் உண்மையான ஆயுட்காலம் வரை பேயாக அலைவர் என்பது அவர்கள் நம்பிக்கை.
கடவுள் தத்துவப்படி ஒருவன் வாழ்க்கை கடவுள் விதித்த விதிப்படி என்பதாகும். எனவே, விபத்து நடப்பதும், கொலை செய்யப்படுவதும் விதியின்படியே. அப்படியிருக்க தற்கொலை செய்பவர், கொலைசெய்யப்படுபவர், விபத்தில் இறப்பவர்க்கு மீதி ஆயுள் இருப்பதாக எண்ணுவது தப்பு.
அடுத்து இறந்தவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் செல்வர் என்று சொல்வர். அப்படி என்றால் பேயாக எப்படி இவ்வுலகில் அலைய முடியும்? எனவே, பேய் என்பது ஒரு மூடநம்பிக்கை.
ஒரு விளக்கில் எரியும் நெருப்பை ஊதினால் அது அணையும். அந்த நெருப்பு எங்கு சென்றது? அப்படித்தான் உடலில் உள்ள உயிரையும் உடல் இழக்கிறது. நெருப்பு போல உயிரும் ஓர் ஆற்றல். அது எங்கும் சென்று அலையாது.
மறுபிறப்பும் எடுக்காது; சொர்க்கத்துக்கும் நரகத்திற்கும் செல்லாது. இவையெல்லாம் கற்பனைகள். உண்மையல்ல.
தீக்குச்சியை உரசினால் நெருப்பு வரும். அந்த நெருப்பை ஒரு விளக்கில் பிடித்தால் அது எரியும். அந்த நெருப்பு எரிய காற்று, எரிபொருள் தேவை.
அதேபோல் பெற்றோர் உயிரணுக்களிலிருந்து ஒருவரது உயிர் வருகிறது. அந்த உயிர் நிலைத்திருக்க உணவும், காற்றும் வேண்டும்.
விளக்கிற்கு காற்று கிடைக்காமல் மூடினால் அணையும். அதேபோல் ஒருவர் மூக்கையும், வாயையும் மூடினால் உயிர் அணையும்.
அணைந்த நெருப்பும் அலையாது; அணைந்த உயிரும் அலையாது. அணைந்த நெருப்பு வேறு ஒரு விளக்கில் ஏறாது. அதேபோல் ஒருவர் உடலில் விலகிய உயிர் இன்னொரு உடலில் புகாது.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் பேய் இல்லை, ஆவி இல்லையென்பது எளிதில் விளங்கும்.
பில்லி, சூன்யம் பற்றி கல்கி (29.1.2012)யில் ஒருவர் அளக்கும் கதையைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
கேள்வி: பில்லி, சூன்யம், செய்வினை என்பது நிஜமா? சாத்தியமா? இப் பாதிப்பு நமக்கு இருப்பதை எப்படி உணர்வது? பரிகாரம் என்ன?
பதில்: பில்லி, சூன்யம், செய்வினை என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், இன்று அதில் கை தேர்ந்தவர்கள் யாருமில்லை. நூறு வருடத்துக்கு முன்புகூட பல ஞானிகள் கடவுளைக் கண்டுள்ளனர். இன்று ஒரு பாட்டுப் பாடி கடவுளை வரவழைக்கும் சக்தி வாய்ந்த மகான் யாருமில்லை. ஒரு மந்திரம் போட்டு அடுத்தவன் பிழைப்பைக் கெடுக்கும் சூன்யக்காரர் யாருமில்லை. அருணகிரிநாதரின் அதல சேடனாராட என்னும் திருப்புகழைப் படித்து வந்தால் துர்தேவதைகள் அண்டா – இதுதான் கல்கி தரும் கருத்து!
டாக்டர் ஆபிரகாம் தாமஸ் கோவூர் (10, ஏப்ரல், 1898 – 18 செப்டம்பர் 1978). கேரளாவில் பிறந்து, இந்தியாவிலும், பெரும்பாலும் இலங்கையிலும் வசித்தவரான கோவூர், ஓர் உளவியல் நிபுணர். அவருடைய அனுபவங்கள் ஒவ்வொன்றும் இன்றும் நாம் சந்திக்கும் பல வகை அமானுஷ்யங்களின் புதிர்களை விடுவிக்கக் கூடியவை. அவை தமிழிலும் திராவிடர் கழகத்தால் பல வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘உண்மை’ இதழில் முன்பு தொடராகவும் வெளிவந்துள்ளன.
ஆவி பிடித்ததாகவும், ஏவல் வேலையென்றும், மாந்திரிகம், சாமியார்கள் என்று மூடத்தனத்தில் வீழ்ந்த பல குடும்பங்களின் பிரச்சினைகளை, உரிய முறைகளில் ஆய்வுக்குட்படுத்தி, அவர்களின் உளவியல் பிரச்சினைகளை ‘ஹிப்னாடிச’ முறையில் சீர்செய்தவர். இந்தியாவிலும், இலங்கையிலும் பல மனிதக் கடவுள்களின் குட்டுகளை உடைத்தவர். அதனால் வந்த எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவர்.
பல ஆண்டுகாலம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். பலமுறை அவர் திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதுண்டு. 1975ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பங்கேற்று மிகச் சிறந்த உரையாற்றினார். அவரது நூற்றாண்டுவிழாவையும் திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்தியது. இலங்கை பகுத்தறிவாளர் அமைப்பை நிறுவியவர் இவரே! கேரளாவில் ஆண்டுதோறும் இவர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தனது மறைவுக்குப் பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கும், கண்களைப் பார்வை யற்றோருக்கும் கொடையாகக் கொடுத்துச் சென்றார் கோவூர்.
கோவூரின் பகுத்தறிவுப் பிரச்சாரமும், அதில் அவர் கையாண்ட முறையும் மேலும் பலரை அவரைப் போல செயல்படவைத்தன. அப்படி அவரால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பணியையும், பாணியையும் தொடர்ந்தவர்களில் முக்கியமானவர் பசவ பிரேமானந்த் (17 பிப்ரவரி 1930 – 4 அக்டோபர் 2009).
கேரளாவில் பிறந்தவரான இவர் 1969-இல் ஆபிரகாம் கோவூரைக் காணும்வரை தியோசாபிகல் சொசைட்டியைப் பின்பற்றுபவராகத் திகழ்ந்தார் தமது பெற்றோரைப் போல. தியோசாபியை போதித்த ஹெலெனா ப்ளவாட்ஸ்கி என்ற ரஷ்ய அம்மையாரைத் தீவிரமாகப் பின்பற்றினார் பிரேமானந்த். கோவூரின் சந்திப்புக்குப் பின், தியோசாபியை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களில் முக்கியமானவரானார்.
1940களில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்பதற்காகத் தனது பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டு, பின்னர் குருகுலக் கல்வி மூலம் சில காலம் பயின்ற பிரேமானந்த், தனது வாழ்வினை புரட்டர்களுக்கெதிரான போராட்டக் களமாகவே மாற்றிக் கொண்டார். புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவைத் தோலுரித்து, போராட்டங்களும், வழக்குகளும் நடத்தினார். 500 பேருடன் புட்டபர்த்தி நோக்கி நடைபயணம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டார். மக்களை ஏமாற்றிய அவரது தந்திர விளையாட்டுகளுக்கு உரிய செயல்விளக்கங்களுடன் பதிலடி கொடுத்தார். அலகு குத்துதல், மந்திரித்தல், உயிருடன் புதைத்தல், மாந்திரிகம் செய்தல் போன்றவற்றின் புரட்டுகளை அம்பலப்படுத்தி, அவற்றைத் தானும் நிகழ்த்திக் காட்டி பிரச்சாரம் செய்தார். ‘சாய்பாபாவின் படுக்கையறையில் கொலைகள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டதோடு, சாய்பாபாவின் பாலியல் அத்துமீறல்களையும் வெளிப்படுத்தினார். இதற்காக இவர் மீது நான்கு முறை கொலைமுயற்சிகள் நடைபெற்றன. சில முறை தாக்குதலால் காயம்பட்டுமிருக்கிறார். வெறுங்கையில் விபூதி வரவழைத்தல், நகை வரவழைத்தல், வாயிலிருந்து லிங்கம் கக்குதல் போன்ற சாய்பாபாவின் வித்தைகளைத் தானும் செய்துகாட்டி அவை வெறும் தந்திரங்களே என்று விளக்கினார்.
அந்தரத்தில் மிதப்பதாகவும், அமர்வதாகவும் வித்தை காட்டும் ஏமாற்றுப் பேர்வழிகளின் மோசடி வித்தைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அதற்காக ‘இந்தியன் ஸ்கெப்டிக்‘ என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியதோடு, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பையும் (FIRA) உருவாக்கினார். இவரைப் பற்றி பன்னாட்டு ஊடகங்கள் ஆவணப்படங்களை உருவாக்கியுள்ளன. இயற்கையை மீறிய சக்திகளையோ, அற்புத சக்திகளையோ சரியான விதிமுறைகளுக்குட்பட்டு நிரூபிப்பவர்களுக்கு இந்திய பண மதிப்பில் ஒரு லட்சம் ரூபாயைப் பரிசாக 1963இல் அறிவித்தார் ஆபிரகாம் கோவூர். அவரது மறைவுக்குப் பிறகு அதே ஒரு லட்ச ரூபாய் சவாலைத் தொடர்ந்தார் பிரேமானந்த். இறுதிவரை இந்தச் சவாலை எவரும் எதிர்கொள்ளவுமில்லை; வெல்லவுமில்லை. கோவை மாவட்டம் போத்தனூரில் தனது இறுதிக் காலத்தைச் செலவிட்டு, அங்கேயே 2009ஆம் ஆண்டு மறைந்த பிரேமானந்த், தனது உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடையளித்ததோடு, தனது சொத்துகளை இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புக்கே உரித்தாக்கிச் சென்றார். அவருடைய பணியை இன்றும் அவ்வமைப்பின் தலைவராகத் திகழும் நரேந்திர நாயக் முன்னெடுத்து வருகிறார்.
பசவ பிரேமானந்த்தும், நரேந்திர நாயக்கும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பல முறை பங்கேற்றுள்ளதோடு, மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறைகளையும் நடத்திப் பலரையும் உருவாக்கியுள்ளனர்.
மந்திரம் என்றால் என்ன?
குறிப்பிட்ட சில சொற்களைச் சொன்னால் அதற்குச் சக்தியுண்டு. அது குறிப்பிட்ட சிலவற்றைச் சாதிக்கும் என்பதே மந்திரம் என்று சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது.
வார்த்தைகளுக்குச் சக்தியுண்டா?
மொழியென்பதே மிகப் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் சொற்களும் இல்லை; மொழியும் இல்லை. தான் நினைக்கும் கருத்தைப் பிறருக்குச் சொல்லும் கருவியே வார்த்தைகள் _ அவற்றின் தொகுப்பே மொழி. அப்படியிருக்க அதற்கு எப்படி சக்தி வரும்; அது எப்படி ஒன்றைச் சாதிக்கும்?
நஞ்சு போக்கும் மந்திரம்?
பாம்பு கடித்தால் அல்லது தேள் கொட்டினால் உடலில் நஞ்சு ஏறிவிடும். அதை மந்திரத்தால் இறக்குகிறேன் என்று சிலர் ஏமாற்றுவர். எந்த மந்திரத்தாலும் உடலில் ஏறிய நஞ்சை இறக்க _ அகற்ற முடியாது. முறிவு மருந்தால் மட்டுமே நஞ்சை முறிக்க முடியும். பாம்பு கடித்து நஞ்சு ஏறாமல் மயங்கிக் கிடப்பவனை வேண்டுமானால் மந்திரத்தால் பிழைக்க வைத்தேன் என்று ஏமாற்றலாம். உண்மையில் நஞ்சு ஏறியவனை மந்திரத்தால் காப்பாற்ற இயலாது.
தாயத்து, முடிக்கயிறு:
அதேபோல் செப்புத் தகட்டிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன்; முடிக் கயிற்றிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன். அதைக் கட்டிக் கொண்டால் நோய் நீங்கும், பேய், பிசாசு அண்டாது, காரியம் வெற்றியாகும் என்று கூறி அவற்றை விற்பனை செய்து சம்பாதிக்கின்றனர்.
வார்த்தைக்கே சக்தியில்லை யென்னும்போது அதைச் செப்புத் தகட்டிலும், முடிக் கயிற்றிலும் ஏற்றியுள்ளேன் என்பது ஏமாற்று வேலையல்லவா? பித்தலாட்டம் அல்லவா?
மந்திரம் ஜெபித்தல்:
அமாவாசையில் பூசை, சுடுகாட்டில் பூசை, பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தல் என்று கூறி பல பித்தலாட்டங்களைச் செய்கின்றனர். தலைப்பிள்ளை தலையில் மை இருப்பதாய் ஓர் அபாண்டப் புளுகு! எந்தத் தலையிலும் எந்த மையும் கிடையாது. மண்டையுள் மூளை மட்டுமேயுள்ளது.
மந்திர சக்தி?
மந்திரத்தால் மணலைச் சர்க்கரைக்குவேன்! எரித்த ரூபாயை மீண்டும் தருவேன் போன்ற அனைத்தும் பொய்யே! மந்திரத்தால் மணலைச் சர்க்கரையாக்க முடியும் என்றால் சர்க்கரை ஆலைகள் எதற்கு? கரும்பு விவசாயம் எதற்கு? ஒரு மந்திரவாதியை ஆற்றுமணலில் விட்டு, மணலைச் சர்க்கரையாக்கி லாரி லாரியாக வாரிக் கொள்ளலாமே! மந்திரவாதியே சர்க்கரையைக் காசு கொடுத்துத்தானே வாங்குகிறான். சிந்திக்க வேண்டாமா?
எரிந்தவற்றை மந்திரத்தால் மீண்டும் பெறலாம் என்றால் எரிந்த அனைத்தையும் திரும்பப் பெற்று விடலாமே!
இப்படிச் சிந்திக்காததால்தான் மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி லட்சகணக்கில் சம்பாதிக்கின்றனர்.
ஜோதிடம்
பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை, பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?
குழந்தைக்கான ‘கரு’ உருவான (பிறந்த) நேரமா? பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள்தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகமே கிடையாதா?
குறைப் பிரசவத்தில் கருவியில் வைத்திருக்கிறார்களே அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா? எது?
அடுத்து, ஒன்பது கிரகங்களை வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. ஆனால், இப்போது புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அப்படியாயின் ஒன்பது கிரகங்களை வைத்து கணிக்கும் ஜோதிடம் எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?
சூரியன் நிலையாக இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. ஆனால், சூரியன் ஒவ்வொரு கிரகமாக சுற்றி வருகிறது என்று சொல்லும் ஜோதிடம் எப்படி சரியாக இருக்க முடியும்?
கடவுள் தத்துவப்படி, கடவுள் விதித்த விதிப்படி நம் வாழ்க்கை அமைகிறது என்பது உண்மையாயின் கிரகப்படி வாழ்க்கை அமைகிறது என்று கூறும் ஜோதிடம் பொய்யல்லவா?
போரில் இறக்கின்றவர்கள், சுனாமியில் இறக்கிறவர்கள், பெரும் விபத்தில்இறக்கிவர்கள், ஜோதிடத்தைப் பார்த்தால் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார்கள் என்று இருக்கிறது. அவர்கள் முன்கூட்டியே இறக்கும்போது ஜோதிடம் பொய்தானே. எனவே, இப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத ஜோதிடத்தை நம்பி வாழ்வைப் பாழாக்கலாமா? சிந்திக்க வேண்டும்!
(குறிப்பு: சாமியார்கள் மோசடிகள் பற்றி
தனிக் கட்டுரையில் காண்க.)