தலையங்கம் : “திராவிடம்” என்பது வரலாறு; ‘ஒன்றியம்’ அரசமைப்புச் சட்டத்தின் சொல்! இதில் என்ன குற்றம்?

ஜுலை 1-15,2021

 “இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு விளைவிக்கும் எந்தச் செயலையும் பா.ஜ.க. வேடிக்கை பார்க்காது”

“சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தி.மு.க.வினர் ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.”

“பேரவையில், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலங்களால் ஆனது இந்தியா. அரசமைப்புச் சட்டத்தில் ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்றே இந்தியா வரையறுக்கப்பட்டுள்ளது!’ என்று கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது.”

“இந்தியா பல மாநிலங்களைக் கொண்டதாக இருக்கலாம் என்றே அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா தனது நிருவாக வசதிக்காக தன்னை மாநிலங்களாகப் பிரித்து அரசாளும் என்பதே இதன் பொருள். எனவே, இந்தியாவில் அமைந்ததே மாநிலங்கள். இதில் நிலைத்து நிற்பது இந்தியாதான்.”

“ஒன்றியம் என்ற சொல்லில் குற்றம் இல்லை, என்றாலும், இதைச் சொல்வதில் பெரும் உள்நோக்கம் இருப்பதாகவே பா.ஜ.க. கருதுகிறது.”

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற மறு நிமிடமே ‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று பதிவிட்டார். 1962இல் நாடாளுமன்றத்தில் அண்ணா, ‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று கூறினார்.”

“…………இதுபோன்ற தேச விரோதக் குரல்களை ஒடுக்கக் கடும் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.”

இவ்வாறு தமிழ்நாட்டில், சென்னையில் (25.6.2021) நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களைப்  பெற்று, தமிழ் நாடு சட்டமன்றத்தில் உள்ளே நுழைந்து விட்ட தைரியத்தில் இப்படி அபத்தமான தீர்மானங்களைப் போட்டு ஒன்றிய ஆட்சியாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இருக்கிறது என்பதால் இது போன்ற மிரட்டல் வித்தைகளில் ஈடுபட்டுள்ளது – பரிதாபத்திற்குரிய பா.ஜ.க.!

இந்த 4 இடங்களையும் பெற்றதுகூட ‘திராவிடம்’  பெயர் கொண்ட முந்தைய ஆளுங்கட்சியின் தோள்மீது ஏறி நின்றே பறித்த இடங்களே தவிர, தனியே தங்கள் கட்சியின் பலத்தால் பெற்றவை அல்ல என்பது நாடறிந்த உண்மை!

‘திராவிட’ கட்சியின் துணையால்தானே 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு?

இந்தத் தோல்விக்குச் சமமான வெற்றிக்கென்று (Pyric Victory) அவர்கள் பெருந்தொகை செலவழித்தனர். பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து பேசினர். இருந்தும் தமிழ்நாட்டில், பா.ஜ.க.வினர் தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர்கள் படங்களைக் கூடப் போடாது – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களைப் போட்டே தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.  அது  ‘திராவிட’ என்ற பெயரில் அமைந்த கட்சிதான் என்பது அப்போதும், இப்போதும் மறந்து விட்டதா? அது ஒருபுறம் இருக்கட்டும்.

‘ஒன்றியம்‘ என்பது ‘யூனியன்’ என்ற ஆங்கிலச் சொல்லின் தனித் தமிழ்ப் பொருள். தமிழ் தெரிந்தவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல; ஒன்றியம் என்ற சொல்தான் அரசமைப்புச் சட்ட கர்த்தாக்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோதே, பயன்படுத்தப்பட்டுள்ள சொல் என்பதனைத் தி.மு.க. மட்டுமல்ல; தமிழ்நாட்டு ஊடகங்கள் – தமிழ் நாளேடுகளிலும், தமிழ்த் தொலைக் காட்சிகளிலும் பயன்படுத்தி வருகிறார்களே, அவர்கள் எல்லோரும் பா.ஜ.க. பார்வையில் ‘தேச விரோதிகளா?’

அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர் அம்பேத்கர் பயன்படுத்திய சொல்தானே “ஒன்றியம்’’ .

பிரபல சட்ட நிபுணர்கள், வழக்குரைஞர்கள் அனைவரும் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள், ஏன், எதற்கு, எப்படி – அந்த ‘யூனியன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்? கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தவே டாக்டர் அம்பேத்கர் அதைக் குறிப்பிட்டதாகப் பல விளக்கக் கட்டுரைகளை எழுதி வருகிறார்களே, அதுகூட பா.ஜ.க.வின் ‘காமாலைக் கண்’களுக்குப் படவில்லையா?

“அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்” என்பது பழமொழி. நீங்கள் அரண்டவர்களா? அல்லது அச்சுறுத்தும் ஏஜெண்ட்டுகளா?

இந்தத் தீர்மானம் – வாசகம் உங்களை ‘அரசமைப்புச் சட்ட சூன்யர்கள்’ என்றே உலகுக்குக் காட்ட உதவுமே தவிர மற்றபடி காதொடிந்த ஊசிக்கும் பயன்படாது.

“தமிழும் தெரியவில்லை; அரசமைப்புச் சட்ட வாசகத்தின் பொருளும் சரி வரத் தெரியவில்லை தமிழ்நாட்டு பா.ஜ.க.வினருக்கு” என்றே எவரும் கூறுவர்.

‘திராவிடம்‘ – ஒவ்வாமையா?

‘India that is Bharat shall be a union of States’  என்று அரசமைப்புச் சட்ட முதல் பிரிவு கூறுவதில் என்பதற்கு இருக்கலாம் என்றா பொருள்?

“இந்தியா பல மாநிலங்கள் இணைந்த ஓர் ஒன்றியமாக இருந்தே தீரும் என்று திட்டவட்டமாகக் கூறுவது – பிரிந்து போகும் உரிமையில்லாதவை என்ற பொருளில்தான்” என்று கட்டுரையாளர்கள் கூறுகின்றனர். அது மட்டுமா? பா.ஜ.க.வினர் போட்ட தீர்மானங்களில் ‘திராவிட’ ஒவ்வாமையையும் கொட்டித் தீர்த்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் நான் ‘திராவிடன்’ என்று சொல்லி விட்டாராம்! (அறிஞர் அண்ணா மாநிலங்களவைப் பேச்சில் குறிப்பிட்டதையும் கூறியுள்ளனர் பா.ஜ.க. தீர்மானத்தில்!) அதில் என்ன குற்றம்? அவர்கள் சார்ந்த இனத்தின் அடையாளம் தானே அது? அதை எப்படி மறைக்க முடியும்? ஏன் மறைக்க வேண்டும்?

“திராவிட” என்பது வரலாற்றுப் பெருமை கொண்டது. சிந்துவெளி நாகரிகத்தின் காலம் மிகப் பழைமையானது.

மனுதர்ம நூலில் ‘திராவிடம்‘ இருக்கிறதே!

புராணங்களையெல்லாம் வரலாறாகவே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்ட பா.ஜ.க.வினரே, மனுதர்மத்தில் பத்தாவது (10) அத்தியாயத்தில் 44ஆவது சுலோகத்தில்,

“பௌண்டரம், ஔண்டரம், திராவிடம் காம்போசம், யவனம், பாரதம், பால்ஹீகம் சீநம், கிராதம், தரதம், கரம் – இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்ன சூத்திரர்கள் ஆவார்கள்” என்று உள்ளதை மறுக்கமுடியுமா?

“விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு.”

                                       (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

வேதவியாசர் எழுதி, வேணுகோபாலாச்சாரி தமிழில் மொழிபெயர்த்த சிறீமத்  பாகவதம் பக்கம் 404இல் ‘திராவிடம்‘ குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சியில் நாட்டுப்பண் – தப்பு தப்பு… “தேசிய கீதம்!” பாடப்படுவதில்  உள்ள திராவிட உத்கலவங்கா…வை நீக்கிவிடுவார்களா, தீர்மானம் போடும் பா.ஜ.க.வினர்?

வரலாற்று உண்மைகளைத் தலைகீழாக்கித் தீர்மானம் போடுகிறீர்களே – நியாயமா?

மனுதர்மத்தில் ‘இந்தியா’ இருக்கிறதா?

வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே ‘இந்தியா’ இருந்ததா? இராஜ்யங்கள் இருந்தனவே அவற்றை ஒன்றாக்கித்தானே ‘இந்தியா’  அமைக்கப்பட்டது? ‘மாநிலங்களின் கூட்டுதான் இந்தியா’வே தவிர, இந்திய நாடு உருவாக்கியவை அல்ல மாநிலங்கள்.

தி.மு.க. ஆட்சிமீது குற்றமோ, குறையோ சொல்ல உங்களுக்கு ‘சரக்கு’ கிடைக்கவில்லை. வெள்ளத்தில் அடித்துக் கொண்டு செல்லப்படுபவர் துரும்பை – இரும்பு என்று நினைத்துப் பிடித்துக் கரை சேர நினைக்கும் பரிதாபமே இது!

பா.ஜ.க.வினர் ஏமாறுவது நிச்சயம்!!

– கி. வீரமணி 

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *