முதலில் புதியதொரு தேசியக் கல்விக் கொள்கை, பின்னர் உயர்கல்வி நிறுவனங்களையெல்லாம், அவற்றில் தொண்ணூறு விழுக்காட்டிற்கு மேலுள்ளவை இதுகாறும் மாநில அரசின் விதிகளாலும் நிதிகளாலும், அவற்றின் கோட்பாடுகளுக்கு இணங்கவும் நடத்தப்படுபவை, அனைத்தையும் மத்தியக் கல்வி அமைச்சகம், அதன் உறுப்பான தேசிய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படுவதான பா.ஜ.க. அரசின் திட்டம்.
அதனைத் தொடர்ந்து ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை, ஒற்றைக் கல்விக் கட்டமைப்பு என்ற நிலை நோக்கி நகர்தல், ஒரே தேசம் என்பதற்கு ஒரே (ஒற்றை) வரலாறு என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் முனைப்புகள்; அந்த வரலாறும் ஹிந்து என்கிற போர்வையில் இந்திய நாகரிகம் என்பது பிராமண நாகரிகமாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பரப்புரை முடுக்கிவிடப்படுதல்.
சமஸ்கிருத (பார்ப்பன) தொன்மங்களின் அடிப்படையில் பண்டைய இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதுவது (அதாவது திரித்து எழுதுவது), இதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசினால் பார்ப்பனிய வெறியர்களை மட்டுமே கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு கடந்த 10000 ஆண்டுகால இந்(து)திய பண்பாட்டு வரலாற்றைத் தொகுப்பது. இவற்றையெல்லாம் பின்னணியாகக் கொண்டுதான் யு.ஜி.சி.யின் இளங்கலை வரலாற்றுப் பாடத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.
யு.ஜி.சி. என்ற நிருவாக அமைப்பின் நோக்கங்களிலும் பொறுப்புகளிலும் பாடத்திட்டம் தயாரிப்பது இடம் பெறவில்லை. அது ஒரு நிருவாக அமைப்பு, கல்விக் குழு அல்ல. கல்வியாளர்களைக் கொண்ட துறைவாரியான பாடக் குழுக்களுக்குத்தான் (Boards of Studies) பாடத் திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பும் தகுதியும் உள்ளன. அந்த அடிப்படையில்தான் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துறைவாரி பாடக் குழுக்களால் விவாதித்து உருவாக்கப்படும் பாடத்திட்டங்களை, கல்வியாளர்களை பேராசிரியர்களைக் கொண்ட கல்விக் குழுக்கள் (Academic Council) விவாதித்து ஏற்றுக் கொள்கின்றன. அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்தும் பொறுப்புதான் சிண்டிகேட், செனட் போன்ற நிருவாக அமைப்புகளுக்கு உள்ளது. கல்வித் துறைகளில் அதிகார மய்யங்களில் தலையீடுகளை மட்டுப்படுத்துவதற்கும், கல்வி அமைப்புகளின் சுதந்திரத்தை, தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் இத்தகைய பொறுப்புள்ள பங்கீடுகளை (Distribution of Responsibilities) ஏற்றுக் கொண்டால்தான் கல்விச் சுதந்திரம், கல்வியாளர் சுதந்திரம் உறுதிப்படும். பாடத் திட்டங்களைச் சீரமைப்பது ஆரோக்கியமான முறையில் அமையும். ஆனால், மய்ய / ஒன்றிய அரசின் நிருவாகக் கருவியான பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகங்கள் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்காக இளங்கலை வரலாறு _ பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது, ஆணையிடப்பட்ட ‘வரலாற்றுத் திணிப்பு’ என்பதையே சுட்டுகிறது.
மாநிலங்களின் கல்வி உரிமைகளை அடியோடு மறுக்கும் முனைப்பு:
இதுகாறும் பாடங்களை, பாடத் திட்டங்களை வகுக்கும் உரிமையும் பொறுப்பும் மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்களுக்கே இருந்து வருகின்றன. அந்தந்த பல்கலைக்கழகங்களின் பாடக் குழுக்களும், கல்விக் குழுக்களும் இப்பணியைச் செய்து வந்தன. யு.ஜி.சி இப்போது அறிவித்துள்ள இளங்கலை வரலாறு பாடத்திட்டம், பாடங்களை, பாடத் திட்டங்களை வகுக்கும் உரிமை ஒன்றிய அரசிடம் இருக்கிறது என்ற நிலையில் வந்தது. இனிமேல் பாடங்களை _ பாடத் திட்டங்களை வகுக்கும் ‘உரிமை’ மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கு, அதாவது மாநிலத்திற்கு இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும். யு.ஜி.சி என்பது இதன் மூலம் ஒருங்கிணைப்பு (coordination) என்ற பொறுப்பைத் தாண்டி கட்டளையிடுதல் (ordering)என்ற அத்துமீறலை நோக்கி நகர்கிறது. இது இந்திய அரசியலமைப்பின் ‘நாடுகளின் ஒன்றியம்’ (Union of States) மற்றும் ‘அதிகாரப் பங்கீடு’ (Distribution of Powers) ஆகிய அடிப்படைகளை அழிப்பதாகும். தனித்துவமான நெடிய வரலாற்று மரபுகளைக் கொண்ட மொழிவழி, பண்பாடு _ இன வழி தேசியங்களின் அடையாளங்களையும் தன்மானத்தையும் மறுப்பதாகும்.
மாநில வரலாறுகளை அழிக்கும் சதிகார நோக்கம்:
காலனி ஆதிக்க காலத்தில் பிரித்தானிய வரலாறு, அய்ரோப்பிய வரலாறு போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டன. ஒரு மேலெழுந்த வாரியான, சிந்து _ கங்கை சமவெளியை மய்யப்படுத்திய பொதுவான இந்திய வரலாறும் இருந்தது. விடுதலைக்குப் பின்னர்தான் விரிவான இந்திய வரலாறுகள் வரையப்பட்டன. தென்னிந்திய வரலாறும் இடம்பெற்றது.
தமிழகத்தில் 1967க்குப் பின்னர்தான் (திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான்) தமிழக வரலாறு இளங்கலை வரலாற்றில் ஒரு பாடமாக இடம் பெற்றது. பிற மொழிவாரி மாநிலங்களிலும் கேரள வரலாறு, ஆந்திர வரலாறு, கன்னட வரலாறு, மராத்திய வரலாறு போன்றவை இடம் பெறலாயின. இந்தியா என்பது ஒரேயொரு இனப் பிரிவின் -_ வருணத்தின் _ ஜாதியின் _ மொழியின் வரலாறு அல்ல. பல்வேறு பண்பாடுகளின் தொகுப்பாகவே உண்மையான இந்திய வரலாறு இருக்க முடியும் என்ற வரலாற்று உண்மை ஏற்கப்படலாயிற்று. இந்திய வரலாற்றுடன் பிற பகுதி (பண்பாட்டு அல்லது வட்டார) வரலாறுகளையும் இணைத்துப் பார்த்தால்தான் ஓரளவுக்கு முழுமையான இந்திய வரலாறு புலப்படும் என்பதை வரலாற்றறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசால் யு.ஜி.சி மூலமாகத் திணிக்கப்படும் இளங்கலை வரலாறு. பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடங்களாக 14 பாடங்கள் (Core subjects) தரப்படுகின்றன. அவற்றில் 10 இந்திய நாகரிகம், பாரத (இந்து_வைதீக) அடையாளம், அரசியல் போன்றவை மீதமுள்ள நான்கு உலக வரலாறுகளாகவும், அய்ரோப்பிய வரலாறுகளாகவும் தரப்படுகின்றன. (தமிழக வரலாறு, கன்னட வரலாறு, மராத்திய வரலாறு போன்ற) வட்டார (-?) வரலாறுகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தியக் கூட்டமைப்பின் உறுப்பு தேசியங்களின் வரலாறுகளை, வரலாற்று அடையாளங்களை ஒழித்துக் கட்டும் இந்துத்துவ வெறியின் வெளிப்பாடு அல்லவா இது? (ஒரு சில வட்டார வரலாறுகளின் சிறு பகுதிகளை, குறுகிய பாடப்பகுதிகளாக, முக்கியத்துவமற்று சேர்க்கப்பட்டுள்ளன என்பதின் சூட்சமம் என்ன என்பதை வரலாற்றாளர் அறிவர்; வட்டார வரலாறுகளை வைதீக வரலாற்றுக்கு இசைவான துணைநிலையில் வைக்கிறார்கள், இணை நிலையை மறுக்கிறார்கள்.)
வட்டாரங்களுக்கு வரலாற்று அந்தஸ்து மறுக்கும் யு.ஜி.சி.யின் பாடத் திட்டத்தின் பொதுவான தேர்வுப் பாடங்கள் பகுதியில் (Generic Electives)ஏழு பாடங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் 4, 5, 6ஆவது தாள்களாக தில்லியின் வரலாறு மூன்று பிரிவுகளாக உள்ளன என்பது விபரீதமாகத் தோன்றுகிறது.
திணிக்கப்படும் வரலாற்றுத் திரிபுகள்:
‘இந்தியா’ என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘பாரத்’ என்பது முன்னிலையில் வைக்கப்படுகிறது. பாடத் திட்டத்தின் முதன்மைப் பிரிவில் (Core subjects) கட்டாயப் பாடங்களில் முதலாவது இடம் பெறும் தாளின் தலைப்பு ‘பாரத்’ (இந்தியா அல்ல) என்னும் கருத்து (The Idea of Bharath) ‘இந்தியா’ என்னும் கருத்து அறிவியல் வரலாறு சார்ந்தது. ‘பாரத்’ என்பது புராணம் / தொன்மம் சார்ந்தது. சமஸ்கிருத வைதீகம் சார்ந்தது, பிராமணீய அடிப்படையைக் கொண்டது. இந்தியா_இந்து என்னும் சொல் நதி சார்ந்தது, நிலம் சார்ந்தது, பிற ஆசியப் பகுதிகளிலிருந்து இந்தத் துணைக் கண்டத்தைப் பிரித்துக் காட்டுவது, வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவது. ‘பாரத்’, ‘பாரதீய’ என்பது வைதீகம் சார்ந்தது, பார்ப்பனிய முதன்மையைக் கொண்ட ஓர் ஆரியப் பண்பாட்டு அடையாளத்தைச் சுட்டுவது. ‘பரத்’ என்பது முதலில் ஜைன புராணங்களில் வருவது; ஆதிநாதரான ரிஷப தேவரின் புதல்வர்களில் ஒருவன், கைலாயத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவன். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் விரிவாக்கம் பெற்று, தொகுக்கப்பட்ட (வியாச) பாரதத்தின் கிளைக் கதையாக விஸ்வாமித்ர _ மேனகை உறவில் பிறந்த சகுந்தலை, அவளுன் உறவு கொண்ட துஷ்யந்தன், அந்த உறவில் பிறந்த பரதன் என்பதான கதைப்புகள். ரிக் வேதத்தில் பரதர்கள் சிறு இனக் குழுவினர், சக்கரவர்த்திகள் அல்லர். ராமாயண பரதனுக்கும் துணை நிலை மரியாதையே. சமஸ்கிருத பார்ப்பனியத் தொன்மங்களில் பார்ப்பனிய வர்ணபேதங்களைக் காப்பாற்றும் ஒருவனாக ஒரு பரதன், அவன் பெயரால் ஒரு துணைக் கண்ட நாகரீகங்களை அடையாளப்படுத்துவதின் உள்நோக்கம் என்ன என்பதை வரலாற்றாளர் அறிவர். சமய சார்பற்ற, நவீனமான கூட்டமைப்பு தேசமாக அடையாளப்படுத்தும் ‘இந்தியா’ வருண வெறியர்களுக்கு, வகுப்புவாதிகளுக்கு கசக்கிறது. சனாதன, வர்ணாசிரம தொன்மங்களின் ‘பரத’, ‘பாரத்’ என்ற கருத்து அனைவர் மீதும் திணிக்கப்படுகிறது. நவீன இந்தியாவின் மதசார்பற்ற, சனநாயக குடியரசு மற்றும் நாடுகளின் ஒன்றியம் என்று கருத்தை இல்லாமல் செய்வதற்கான கொடுஞ்சதியின் ஒரு பகுதிதான் இந்த முதலாவது கட்டாய பாடத்தாள். இதற்கான துணைநூற்பட்டியலில் உள்ள 22இல் பதினொன்று இந்தி மொழி நூல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வட்டார மொழி நூல் கூடக் கிடையாது.
2. இந்தியாவின் நாகரிக மரபு வேதத்திலிருந்து துவங்குகிறது என்ற பொய்யை வரலாறாகத் திணிக்கும் பார்ப்பனீய வக்கிரம் பாடத் திட்டத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டாயத் தாளாக கி.மு.550 வரையிலான துவக்ககால இந்திய வரலாறு உள்ளது. அதில் அய்ந்து அலகுகள் (Units) உள்ளன. மூன்றாவது அலகு சிந்து_சரஸ்வதி (Indus-Saraswati Civilization) என்று உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியருக்கு முற்பட்ட, ஆரியரல்லாத (திராவிட) நாகரிகம் என்று அகழ்வாய்வு நிபுணர்களாலும், வரலாற்று ஆய்வாளர்களாலும் உறுதிப்படுத்திய நிலையில் பார்ப்பனிய வெறியர்களாலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற பார்ப்பனிய அமைப்புகளாலும் வேதமுதற்றே உலகு, உலகின் முதல் நாகரிகம் பார்ப்பன வேதியர்களின் அளிப்பே என்பதான கற்பிதத்தை அதாவது வேதப் பார்ப்பனியத்தின் ஒற்றை நாகரீகம்தான் இந்தியாவின் பண்டை நாகரிகம் என்றதுடன் அனைத்து மொழிகளும் ‘முதன் மொழியான’ வேத (சமஸ்கிருத) மொழியிலிருந்துதான் தோன்றிய என்பதான விதண்டாவாதங்களும் வரலாறாக திணிக்கப்படுவதைத்தான் யு.ஜி.சி வெளியிட்டுள்ள இளங்கலைப் பாடத்திட்டத்தில் பார்க்கிறோம்.
3. இந்தியாவில் முதல் (சூத்திரப்) பேரரசான நந்த, மௌரியர்களையும் அசோகனது ஆட்சியையும் ஒரு அலகின் துணைப் பிரிவாக சிறு பாடமாகக் கொள்வதும், வட இந்தியாவின் ஒரு பகுதியை மட்டுமே ஆண்ட குப்தர்களை பேரரசு என்று ஒரு யூனிட்டையே ஒதுக்குவதும் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பிரம்மாண்டமாகக் காண்பிப்பதற்கல்லவா?
குப்தர்களைவிட பெரும் நிலப்பரப்புகளை நெடுங்காலம் ஆண்ட சாதவாகனர், குஷாணர், சாளுக்கியர், தஞ்சை சோழர்களை வெறும் (முக்கியத்துவமற்ற) வட்டார அரசுகளாகக் காண்பிப்பதும் ஏன்? திராவிடர்களின் மகத்தான கலை_கட்டடக் கலைகளை இந்து கட்டடக்கலை (பார்ப்பனியச்) சிறப்புகளாகச் சித்தரிப்பதும் ஏன்? சோழர்களைப் பற்றி உள்ள சிறு குறிப்பும் கூட காஞ்சி சோழர்கள் (Cholas of Kanchi) என்று தவறாகக் குறிப்பிடும் அளவிற்கு தென்னகத்தின் அரசுகள் மீது அலட்சியம் ஏன்? தமிழர்கள் _ தெலுங்கர்கள் _ கன்னடர்கள் _ மராத்தியர்கள் போன்றோரது அரசியல் _ பண்பாட்டுக் கொடைகளை _ இலக்கிய வளங்களை இருட்டடிப்பு செய்வதேன்?
4. சிவாஜியின் சாதனைகளை, உருவாக்கிய முதல் மராத்திய அரசினை ஓர் அலகின் குறு பகுதியாகத் தந்துவிட்டு, சிவாஜியின் வாரிசுகளை சதாரா, கோலாப்பூர் அரண்மனைகளில் முடக்கிவிட்டு, சிவாஜியின் பேரரசினை கபளீகரம் செய்து பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்திய பார்ப்பன பேஷ்வாக்களை பெருமைப்படுத்தும் ஒரு முழு யூனிட்டையே ஒதுக்கிய வக்கிரத்தை இந்த யு.ஜி.சி.யின் பாடத்திட்டம் செய்துள்ளது.
5. பண்டைய இந்தியா எனும் பகுதியில் ‘The Myth of Aryan Invasion’என்பதாக ஒன்றை வலியுறுத்த, பின்னர் ஆரியர்கள் (இந்தியாவின்) பாரதத்தின் பூர்வீகக் குடிகளே என்ற கருத்தைத் திணிப்பதும், ஆரியரல்லாதவர்கள் (திராவிடர்கள் போன்று) யாரும் இல்லையென்றும், நகர நாகரிகத்தை சரஸ்வதி நதிக்கரையிலும் பின்னர் அரப்பா, மொகஞ்சோதாரோ போன்ற பல இடங்களிலும் உருவாக்கியவர்கள் ஆரியரே என்றும் தொன்மையான நாகரிகம் (திராவிடருடையதல்ல) ஆரியருடையதே என்றும் முடிவுகளை, திரிபுகளைத் திரிக்கின்ற பணியை யு.ஜி.சி.யின் பாடத் திட்டம் செய்துள்ளது.
6. வைதீக பார்ப்பனியம் அதனை மறுக்கம் சாருவாகம், லோகாயதம், ஜைனம், பவுத்தம் போன்றவைகளுக்கிடையே ஆன தத்துவப் போராட்டங்களும், சமூகப் போராட்டங்களும் இருட்டடிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
7. இந்தியாவின் சமூக நீதிக்கான சிந்தனைகளை, இயக்கங்களை ஜாதிய சிந்தனைகளாகவும், ஜாதிய இயக்கங்களாகவும் திரிபு செய்துள்ளனர்.
8. ஆங்கிலேய ஆதிக்கத்தினை எதிர்ப்பது முதலில் தென்னகத்தில் _ தமிழகத்தில் நடந்துள்ளது என்பது மறைக்கப்பட்டுள்ளது. கான்சாகிப் _ குஞ்ஞாலி மரைக்காயர் _ பூலித்தேவன் _ மருது சகோதரர்கள் _ வேலுநாச்சியார் _ கட்டபொம்மன் _ ஊமைத்துரை _ கோபால நாயக்கர் _ வேலூர் சிப்பாய்க் கலகம் ஆகியவை யு.ஜி.சி பாடத் திட்டத்தில் இடம் பெறாமல் போனது தற்செயலானது அல்ல.
9. அதனைப் போன்றே வைகுந்தசாமி, வள்ளலார், நாராயணகுரு, அய்யங்காளி, பூலே, சாகு மகராஜ், அயோத்திதாசர், தந்தை பெரியார், நீதிக்கட்சி, பிரஜா மித்ர மண்டலி போன்றவை இடம் பெறாததும் இந்துத்துவ வக்கிரங்களின் விளைவே.
10. காந்தியைப் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் காந்தியின் தத்துவங்களைப் பற்றி, அவரது ‘மதசார்பற்ற இந்தியா’ என்ற கருத்துபற்றி குறிப்பிடாத பாடத்திட்டம் இது.
11. கோகலே, வ.உ.சி., நேரு போன்றவர்களை தனிப்பட குறிப்பிடாத இந்தப் பாடத்திட்டம், விவசாயிகள் இயக்கத்துடன் இணைத்து இந்து மகா சபைத் தலைவரான மதன் மோகன் மாளவியாவை மட்டும் சிறப்பாகக் குறிப்பிடுவதேன்?
12. வட்டார வரலாறுகளை திட்டமிட்டே மறைக்கும் இப்பாடத் திட்டம் தில்லியின் (பண்டைய _ இடைக்கால _ தற்கால) வரலாறுகளாக மூன்று தாள்களை இணைத்துள்ளது ஏன்? வரலாற்று ரீதியில் தில்லியின் வரலாறு முகமது கோரியின் படையெடுப்புக்குப் பின் துவங்குகிறது. பெரும்பாலும் சுல்தானிய மொகலாய ஆட்சியுடன் இணைந்த வரலாறு அது. தொன்மங்களில் உள்ள இந்திரப் பிரஸ்தத்தை தில்லியின் துவக்கமாகக் காண்பிப்பது தொன்மத்தை வரலாறாகக் காண்பிக்கும் Enhemerism என்று கூறப்படும் வரலாற்றியல் குற்றமாகும். தில்லியைவிட பழைமையான பாடலிபுரமும், காசியும் இருந்தாலும், தமிழ்நாட்டின் மதுரைதான் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு வலிமையான அரசின் தலைநகரமாகவும், பண்பாட்டு, மொழி _ இலக்கிய மய்யமாகவும் இருந்து வந்துள்ளது. இன்றும் தொடர்கிறது. வட இந்திய வைணவ மதுராவுக்கு அத்தகைய தொன்மையும் சிறப்பும் இருந்ததில்லை. தென்னகத்திற்கு உரிய உண்மையான வரலாற்றுச் சிறப்புகளை சமஸ்கிருத தொன்மங்களுக்காக புறக்கணிப்பதுதான் தேசத்தின் வரலாறா? தேசிய வரலாறா?
இன்றும் ஏராளமான திரிபுககள் _ முரண்பாடுகள் _ வக்கிரங்கள் யு.ஜி.சி.யின் இளங்கலை வரலாற்றுக்கான பாடத் திட்டத்தில் மலிந்துள்ளன. வரலாறு அறிவியல்பூர்வமாக உண்மைகளின் அடிப்படையில், பாகுபாடின்றி மக்கள் சமூகத்தினரின் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் விளக்குவதாக அமைய வேண்டும். ஒரு சிறு ஆதிக்கப் பிரிவின் வக்கிரங்களுக்கு வடிகாலாக ‘வரலாறு’ அமையக் கூடாது.
முடிவாக நாம் கூற விரும்புவது, இந்தியாவிலுள்ள மாநிலங்களில், மாநிலப் பல்கலைக் கழகங்களில் எதை வரலாறாகக் காட்ட வேண்டும் என்பதை ஒன்றிய அரசோ, ஒன்றிய அரசின் அதிகாரிகளோ, அதிகார அமைப்புகளோ, இவர்களையெல்லாம் பின்னிருந்து முடுக்கி விடுகின்ற வகுப்புவாத அமைப்புகளோ தீர்மானித்துவிட முடியாது, திணித்துவிட அனுமதிக்கக் கூடாது. ஒரே தேசம், ஒற்றை தேச வரலாறு, ஒற்றை பாடத் திட்டம் என்பதை ஏற்க முடியாது. ஏனென்றால், அவை இந்திய ஒன்றியத்தின் அரசமைப்பு அடிப்படைகளுக்கு முரணானவை.
பாடங்கள் _ பாடத் திட்டங்களை தேர்வு செய்யவும் வடிவமைக்கவும், சீரமைக்கவும் மாநில அரசுக்கும், மாநில பல்கலைக்கழகங்கள் _ அவற்றின் பாடக் குழுக்கள் (Boards of Studies) – கல்விக் குழுக்களுக்கு மட்டுமே உரிமையும் பொறுப்பும் இருப்பதை, மாநில சுயாட்சியின் முதல் குரலாக விளங்கும் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடமும் ஒன்றிய அமைப்புகளிடமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும். யு.ஜி.சி. தன் அதிகார வரம்புகளை மீறி ஒன்றிய ஆளுங்கட்சியின் எடுபிடியாகச் செயல்படுவதைக் கண்டித்திட வேண்டும்.
மாநிலத்தின் கல்வி உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாகப் பதவியேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் உயர்கல்விப் பொறுப்பை ஏற்றுள்ள பேராசிரியர் பொன்முடி அவர்களது அறிவிப்புகள் உள்ளன. ‘புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை’ என்ற அவரது முழக்கம் தமிழகத்து மக்களுக்கு குறிப்பாக கல்வியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டுவதாக உள்ளன.
மாநில அரசிடமிருந்து மாநிலப் பல்கலைக்கழகங்களை, தேசியக் கல்விக் கொள்கையின் பெயரிலோ, யு.ஜி.சி.யின் பெயரிலோ, Institute of Eminence / Deemed to be Universitiesபோன்ற போர்வைகளிலோ, அந்நியப்படுத்தாமல் இருக்கவும், இங்குள்ள மாநில உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசின் (ஒற்றைக்) கட்டுப்பாட்டின் கீழ் மாற்றிவிடாமல் தடுக்கவும், தமிழ்நாடு அரசு, குறிப்பாக, உயர்கல்வி அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உள்ளது.
மாநில வரலாறுகளை மாநில அரசு _ பல்கலைக்கழகம் போன்ற மாநில அமைப்புகளே வடிவமைக்க வேண்டும், சீரமைக்க வேண்டும், செறிவூட்ட வேண்டும், தமிழக வரலாறு _ தமிழகம் பண்பாட்டு வளர்ச்சி போன்றவை உயர் கல்வி அரங்கில் கட்டாயப் பாடங்களாக அமைய வேண்டும்.
வரலாறு என்பதை அதிகார பீடங்களின் விருப்பு _ வெறுப்புகள் தீர்மானித்துவிடக் கூடாது. உண்மை தேடுதலும், அறிவியல் பூர்வமான ஆய்வு முறைகளும், விருப்பு _ வெறுப்பற்ற விவாதங்களும்தான் வரலாற்றை வடிவமைக்க வேண்டும்.
ஒரு வரலாற்றுப் பேராசிரியரான கல்வியமைச்சர் அவர்கள், இந்திய வரலாற்றினையும், தமிழக வரலாற்றினையும் புதிய ஆய்வுகளின் அடிப்படையில் சீரமைக்க, செறிவூட்ட தமிழக வரலாற்றாளர்கள் குழு ஒன்றினை அமைத்திட வேண்டும். (Tamil Nadu Council of Historical Research)
கூட்டமைப்பு அடிப்படைகளுக்கு முரணான நீதிமன்றத் தலையீடுகள் கல்வி தொடர்பானவற்றில் தவிர்க்கப்பட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம்.