Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முதல் செங்கல்

அரங்கநாயகி…

இளந்திரையனின் அம்மாவான அரங்கநாயகி இறந்த பிறகு அவன் பல நாள்களாக பித்துப் பிடித்தவன் போல் காணப்பட்டான். சீரிய பகுத்தறிவாதியாக இருப்பினும் அம்மாவின் மறைவை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

தனக்கு ஆசிரியர் பணி கிடைத்த ஒருசில மாதங்களிலேயே அம்மாவை இழந்தது அவனுக்கு மிகப்பெரும் பேரிடியாக அமைந்தது. ஏற்கெனவே அவன் தந்தையையும் இழந்தவன். வாடகை வீட்டிலேயே அவர்கள் காலம் ஓடிவிட்டது.

இந்த நிலையில் அவனுக்கு ஆறுதலாக இருந்த ஒரே முகம் செல்வராணியுடையதுதான்.

செல்வராணி, இளந்திரையனின் அம்மா அரங்கநாயகியின் உடன்பிறந்த தங்கையாவார்.

மிகவும் பக்திச் சிரத்தையுடன் இருப்பவர். சாத்திர சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். இருந்தாலும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் தனது தாயைப் பார்ப்பது போலவே உணர்ந்தான் இளந்திரையன்.

செல்வராணியின் கணவர் கோபால் குடிப்பழக்கம் உள்ளவர். எந்த வேலையும் செய்ய மாட்டார். வீட்டிலேயே அடைந்து கிடப்பார். அவர்களது மகன் இரஞ்சித் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் வான்மதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டான் இளந்திரையன். அவளும் ஓர் ஆசிரியை. பரந்த மனப்பான்மை உடையவள்.

ஒரு நாள் செல்வராணி இளந்திரையன் வீட்டுக்கு வந்தார். மகிழ்வுடன் அவரை வரவேற்றான் இளந்திரையன்.

“இளந்திரையா! உன் சித்தப்பா குடிப்பழக்கத்தால் இருந்த வேலையும் விட்டுட்டார். வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறார். எங்க புள்ள இரஞ்சித்து படிச்சுக்கிட்டு இருக்கான்ல. ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. வீட்டு வாடகை கொடுக்கவே சிரமமா இருக்கு. நான் தையல் வேலை பார்த்து சம்பாதிக்கிறேன். அந்த வருமானத்தில்தான் குடும்பமே ஓடிக்கிட்டு இருக்கு’’ என்று வருத்தத்துடன் சொன்னார் செல்வராணி.

சின்னம்மாவின் முகத்தில் தன் அம்மாவையே பார்த்துக்கொண்டிருக்கும் இளந்திரையன் அதைக் கேட்டு மிகவும் வருந்தினான். பிறகு ஒரு தீர்மானத்துடன் செல்வராணியை நோக்கி,

“சின்னம்மா, நீயும் சித்தப்பாவும்

இரஞ்சித்தும் இங்கேயே வந்து தங்கிடுங்க. உங்களுக்கு வாடகைப் பணம் மிச்சமாகும்’’ என்றான்.

செல்வராணி உடனே அதற்கு ஒப்புக்கொண்டார். அடுத்த சில நாள்களில் மூவரும் இளந்திரையனின் வாடகை வீட்டிற்கே வந்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு அந்தக் குடும்பத்தையும் கட்டிக் காத்து அவர்களுக்குத் தேவையான அத்தனை செலவுகளையும் செய்தான் இளந்திரையன். அவன் செயல்கள் அனைத்துக்கும் முழு ஒத்துழைப்பு நல்கினாள் வான்மதி.

சில மாதங்கள் கடந்த பின் வான்மதி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள்.

இரஞ்சித் பட்டப்படிப்பை முடித்துவிட்டான். அவன் படிப்புச் செலவுகள் அனைத்தையும் இளந்திரையனும் வான்மதியுமே ஏற்றிருந்தனர்.

“இளந்திரையா! இரஞ்சித் பட்டம் வாங்கிட்டான். அவனுக்கு எப்படியாவது வேலை வாங்கிக் கொடுத்துட்டா நல்லாயிருக்கும். நீதான் அதுக்கு ஏற்பாடு செய்யணும்’’ என்று ஒரு நாள் இளந்திரையனிடம் கேட்டுக் கொண்டார் செல்வராணி.

வேலை வாய்ப்பே இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் வேலை கிட்டுவதென்பது சாதாரணமா? எப்படி வேலை பெறுவது என்று யோசிக்கலானான் இளந்திரையன்.

பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். இரஞ்சித்தை போட்டித் தேர்வுகள் எழுத வைக்க முடிவெடுத்தான். அதற்காக அவனை பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்க்க விரும்பினான். ஒரு பெருந்தொகையைக் கடனாகப் பெற்று இரஞ்சித்தை சென்னைக்கு அனுப்பி பணம் கட்டி பயிற்சியில் இணையச் செய்தான்.

இரஞ்சித் பயிற்சியில் கவனமாகப் படித்தான். எப்படியும் தேர்ச்சி பெற்று அரசுப் பதவியை அடைய முழு மூச்சுடன் பாடுபட்டான். தமிழக அரசுப் பதவிகளில் வடநாட்டானும் நுழைந்து விட்ட இந்தக் காலக்கட்டத்தில் எல்லாவற்றையும் மீறி அரசுப் பதவியைப் பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு முழு மூச்சுடன் படித்தான்.

இந்நிலையில் இளந்திரையன் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானான். சிற்றப்பா ஊதாரித்தனமாகச் செலவு செய்தார். வேறு வழியின்றி அவருக்கும் தனியாக செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் இளந்திரையன் தனது செலவுகளையெல்லாம் குறைத்துக் கொண்டு சின்னம்மாவின் குடும்பத்துக்கு முழு மனதுடன் உதவிகள் செய்துவந்தான்.

அனைவரும் எதிர்பார்த்தபடியே இரஞ்சித் போட்டித் தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றுவிட்டான். அதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு ஒரு வளமான துறையில் பணியும் கிடைத்தது.

செல்வராணிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இளந்திரையனுக்கு மிகவும் நன்றி தெரிவித்தார். இளந்திரையனுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னம்மாவின் குடும்பத்துக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்துவிட்டதாக உணர்ந்தான். இரஞ்சித்தை தனது தம்பியாகக் கருதி அனைத்து உதவிகளையும் செலவுகளையும் செய்தான் அல்லவா!

இரஞ்சித் பணியில் சேர்ந்து இரண்டாண்டுகள் கடந்தன. இரஞ்சித் நடத்தையில் மாற்றங்களும் ஏற்படத் தொடங்கின. இளந்திரையன் வீட்டில் தங்கி இருப்பது அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு வேறு வாடகை வீடு பார்த்துச் செல்ல முடிவெடுத்தான். தன்னுடைய விருப்பத்தை அம்மாவிடம் சொன்னபோது செல்வராணியும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.

“தம்பி இளந்திரையா! இனிமேலும் உனக்கு நாங்க சிரமம் கொடுக்க விரும்பல. இரஞ்சித்தும் அப்படித்தான் நினைக்கிறான். அதனால நாங்க வேறு வீடு பார்த்துகிட்டு போயிடலாம்னு இருக்கோம். நீயும் எனக்கு மகன்தான். தப்பா நெனைச்சுக்காதே!’’ என்று ஒரு நாள் இளந்திரையனிடம் சொன்னார் செல்வராணி.

தனது தாயைப் போலவே நினைத்துப் போற்றி வந்த சின்னம்மா வீட்டைவிட்டுச் செல்வது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை இளந்திரையனால். இரஞ்சித்திடம் பேசிப் பார்த்தான். இரஞ்சித் சம்பளம் வாங்கினாலும் அவனிடம் குடும்பச் செலவுக்குப் பணம் கேட்டதே இல்லை.

நல்ல நாள் பார்த்து அவர்கள் வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின், தான் தனிமையில் விடப்பட்டதைப் போலவே இளந்திரையன் உணர்ந்தான். மனைவி, பிள்ளை இருந்தபோதிலும் அம்மாவின் நினைவே அவனுக்கு மேலோங்கி இருந்தது.

மேலும் இரண்டாண்டுகள் கடந்தன. வேலை செய்வது வளமான துறை என்பதால் தானோ என்னவோ இரஞ்சித் பொருளாதார நிலையிலும் சற்றே உயர்ந்தான். வீட்டு மனை ஒன்றை வாங்கினான். அதில் உடன் வீடு கட்டவும் திட்டமிட்டான். அலுவலகத்தில் முடிந்த அளவுக்கு கடனுக்கும் விண்ணப்பித்தான். இருந்தாலும் உடனடியாக பணியைத் தொடங்க நிறைய பணம் தேவைப்பட்டது. செல்வராணியும் மகனின் நிலையை அறிந்தார்.

இதுபற்றிப் பேச இளந்திரையனைப் பார்க்க ஒரு நாள் செல்வராணி வந்தார். தனது தாயைப் பார்ப்பது போல் உணர்ந்த இளந்திரையன் அவரை அன்புடன் வரவேற்றான்.

“அம்மா, வாங்கம்மா. நல்லாயிருக்கீங்களா?’’ என்று நலம் விசாரித்தான்.

“தம்பி, இரஞ்சித் வீடு கட்டப்போறான். உனக்குத் தெரியும்தானே!’’ என்று கேட்டார் செல்வராணி.

“ஆமாம்மா. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’’ என்றான் இளந்திரையன்.

“ஆனாலும் பணத்திற்கு ரொம்ப சிரமப்படறான். நிறைய கடனுக்கும் விண்ணப்பம் போட்டிருக்கான். இருந்த பணமெல்லாம் மனை வாங்கவே சரியாயிடுச்சு. அதனால்…’’ என்று தயங்கியவாறு பேசியபடியே  இளந்திரையன் முகத்தைப் பார்த்தார்.

“அதனால் நான் என்னம்மா செய்யணும்?’’ என்று கேட்டான் இளந்திரையன்.

“பணம் கடனா கொடு. பின்னால் இரஞ்சித் திருப்பிக் கொடுத்திடுவான்’’ என்றார் செல்வராணி.

சில நாள்களில் தன்னிடம் இருந்த வான்மதியோட நகையையெல்லாம் அடகு வைத்து பணத்தைத் திரட்டி செல்வராணியிடம் கொண்டுபோய்க் கொடுத்தான்.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து வீடு அடிக்கல் நாட்ட பூமி பூசையுடன் பூசாரியை வைத்து தடபுடலாகத் தொடங்கினான் இரஞ்சித்.

இளந்திரையன், வான்மதி இருவரும் மகனுடன் மகிழ்ச்சியாக விழாவுக்குச் சென்றனர். தான் வீடு கட்டவில்லை என்றாலும் தம்பி வீடு கட்டுவதில் அவனுக்கு மகிழ்ச்சியே. விழாவுக்கு இரஞ்சித் அலுவலகத்தில் வேலை செய்யும் பலரும் வருகை தந்தனர்.

அடிக்கல் நாட்ட செங்கல் எடுத்துக் கொடுக்கும் நிகழ்வு தொடங்கியது.

முதல் செங்கல்லை எடுத்துக் கொடுக்க தன்னையும் தனது துணைவியாரையும் சின்னம்மா அழைப்பார் என மகிழ்வுடன் எதிர்பார்த்தான். ஆனால், அவர் அழைக்கவில்லை. இருந்தாலும் அவன் முன்னே சென்று ஒரு செங்கல்லை எடுத்து துணைவியாரிடம் கொடுத்துவிட்டு தானும் ஒரு செங்கல்லை எடுத்தான்.

அப்போது திடீரென செல்வராணியின் குரல் ஓங்கி ஒலித்தது.

“இளந்திரையா! நீ செங்கல்லை எடுத்துக் கொடுக்காதே’’.

இதைக்கேட்டு திடுக்கிட்ட இளந்திரையன் அதிர்ச்சியில் அப்படியே அசைவற்று நின்றான். பிறகு, “ஏன்?’’ என்று கேட்பதைப்போல் சின்னம்மாவைப் பார்த்தான்.

“ஏற்கெனவே வீடு கட்டி குடிபோனவங்க தான் கல் எடுத்துக் கொடுக்கணும். அப்பத்தான் வீடு நல்லபடியா கட்டி முடியும். குடும்பமும் விருத்திக்கு வரும். நீதான் இன்னும் வீடு கட்டலையே. அதனால நீ கல்லை எடுத்துக் கொடுக்கக் கூடாது. சாஸ்திர சம்பிரதாயத்தை மீறக் கூடாது’’ என்று உரத்த குரலில் சொன்னார் செல்வராணி.

எடுத்த கல்லை இருவரும் கீழே வைத்தனர். சுற்றி இருந்த அனைவரும் தன்னை இகழ்ச்சியுடன் பார்ப்பதுபோல் உணர்ந்தனர்.

 

“வீடு கட்டாதவனிடம் பணம் மட்டும் வாங்கலாமா?’’ என்று மனதிற்குள் எண்ணினாள் வான்மதி.

இரஞ்சித் நண்பர்கள் பலரும் கல் எடுத்துக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் வீடு கட்டியவர்களா என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

மூடப் பழக்க வழக்கங்கள், சடங்குகள், எவ்வாறு உறவுகளைச் சீரழிக்கின்றன என்பதை இளந்திரையன் உணர்ந்து வருந்தினான். உடன் அந்த இடத்தை விட்டும் அகன்றான்.

சுயமரியாதையைத் தொடும்போது மனிதன் யாராக இருந்தாலும் வெகுண்டெழுவது அவசியமாகிறது அல்லவா!

தான் வீடு கட்டும்போது வீடு கட்டாதவர்களைக் கொண்டே செங்கல் எடுத்துத் தரச் சொல்ல வேண்டும். சின்னம்மாவும் அதைப் பார்க்க வேண்டும் என்கிற உறுதியுடன் வீடு திரும்பினான் இளந்திரையன்.

ஆறு. கலைச்செல்வன்