மணமக்கள் வே.தினகரன் – கீதா ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்
சாலியமங்கலம் ஏ.கே.ஆர். திருமண மண்டபத்தில் 21.8.1995 அன்று காலை வே.தினகரன் _ கீதா ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று நடத்திவைத்தேன். விழாவில் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு எனது துணைவியார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து 10:30 மணியளவில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் எழில்ராணி _வெங்கடேசன் ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த விழாவையும் தலைமையேற்று நடத்திவைத்தேன். இந்தத் திருமணத்தில் புதுமையான முறையில், மணமகளான எழில்ராணி மட்டும் மணமகன் வெங்கடேசனுக்கு பொன்அணி அணிவித்தார். தாலி கட்டுதலோ பிற எந்தவிதமான மூடச் சடங்குகளோ இல்லாத முறையில் சிறப்பாக நடைபெற்றது.
நமது கழகத்தின் மத்திய நிருவாகக் குழுத் தலைவர் சிதம்பரம் கு.கிருட்டினசாமி அவர்களின் இல்லத் திருமணத்தில் 27.8.1995 அன்று கலந்துகொண்டேன். கு.கிருட்டினசாமி அவர்களின் பேரன் தி.மணியரசன்_பத்மா ஆகியோருக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து சுயமரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்தேன். மண விழாவில் அப்பகுதியின் கழகப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மணியரசன் – பத்மா ஆகியோர்க்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை நடத்தி வைக்கும் ஆசிரியர் உடன் கோ.கிருட்டினசாமி, கோ.சாமிதுரை
ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து _ தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அய்.நா.வின் மனித உரிமைக் கமிஷனுக்கு அனுப்ப கழகம் திட்டமிட்டு, சென்னை மாநகரத்தில் 20 நாள்களாக 170 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை கழக இளைஞரணியினர் நடத்தி கையொப்பங்களைப் பெற்றனர். அப்படிப் பெறப்பட்ட பத்து லட்சம் கையொப்பங்களை கழக பொதுச் செயலாளர் என்னும் முறையில் என்னிடம் ஒப்படைக்க பொதுக் கூட்டத்திற்கு புதுப்பேட்டை காவல்நிலையத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு காவல் துறையினர் ‘வினாயகர் சிலைகள்’ வைத்திருப்பதாகக் கூறி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி 31.8.1995 அன்று திட்டமிட்ட இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டு, காரியத்தில் இறங்கினோம். பெரியார் திடலுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் உணர்ச்சியோடு திரண்டனர். வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு கழகத் தோழர்களின் அணிவகுப்போடு தலைமை ஏற்று, “தந்தை பெரியார் வாழ்க! கருத்துரிமையை பறிக்காதே! மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் தடையா? என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. அப்போது போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்படியே சாலையில் அமர்ந்தோம். போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. அப்போது தோழர்களிடம் உரையாற்றுகையில், “ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு கோடி கையொப்பங்களைப் பெற்று, அய்.நா.மனித உரிமைக் குழுவுக்கு அனுப்ப நாம் திட்டமிட்டு புதுப்பேட்டையில் நிறைவு விழா கூட்டத்திற்கு காவல் அனுமதி தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. புதுப்பேட்டை பகுதி என்றாலே _ அது இந்து முன்னணிக்கே குத்தகைக்கு விடப்பட்டு அவர்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்தது போல் காவல்துறை நடந்துகொள்வது எதனால்?
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தி கைதாகும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்
இந்த ஆட்சியில் உள்துறை செயலாளராக ஒரு பார்ப்பனர், தலைமைச் செயலாளராக ஒரு பார்ப்பனர், சென்னை மாநகர காவல்துறை அதிகாரியாக ஒரு மலையாளி. இப்படி தமிழர் அல்லாதவர்களை காவல் துறையில் நியமித்துக் கொண்டு வருகிறார்கள். காவல் துறையில் உள்ள தமிழர் அதிகாரிகள் நாதியற்றுப் போய்விட்டார்கள் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? இது முடிவானதல்ல, இதுதான் துவக்கம். மீண்டும் சட்டப் போராட்டம் செய்து வென்று இதே இடத்தில் இந்த தடை செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தை நடத்துவோம்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். 200க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் என்னோடு கைது செய்யப்பட்டு, இரவு 10:00 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.
பகுத்தறிவாளர் கழகப் புரவலரும் ‘அறப்பணிச் செம்மலுமான’ கே.ஆர்.ஜி.நாகப்பன் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழாவும் 72ஆம் பிறந்த நாள் விழாவும் இணைந்து 3.9.1995 அன்று சேலம் நெத்திமேடு _சங்ககிரி நெடுஞ்சாலையிலுள்ள கே.ஆர்.ஜி.என்.ஆர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் நீதியரசர் எஸ்.நடராசன், நீதியரசரும் பேராசிரியருமான ஜஸ்டிஸ் எஸ்.மோகன் அய்யா அவர்களும் கலந்துகொண்டனர்.
கே.ஆர்.ஜி.நாகப்பன் அவர்களது முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்து உரையாற்றுகையில், “பெரியார் பெருந் தொண்டரான கே.ஆர்.ஜி.அவர்கள் தனது சிலையை தந்தை பெரியாரின் தொண்டர்களுக் கெல்லாம் தொண்டனான சாதாரணமான என்னைக் கொண்டு திறந்திருக்கிறார்கள். தந்தை பெரியார் ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்று கூறியதற்கு நடைமுறை உதாரணம் வேண்டுமானால் கே.ஆர்.ஜி.யைப் பாருங்கள். தான் ஒரு கடவுள் மறுப்பாளர் _ நாத்திகர் என்பதை கல்வெட்டிலும் பதித்துள்ளார். வாழும்போதே சிலை வைத்தால் வாழ்க்கை சுருங்கிவிடுமோ என்று கருதுகிறார்கள். அந்த மூடப்பழக்கத்தையும் தனது சிலை திறப்பின் மூலம் தவிடுபொடியாக்கிவிட்டார். அய்யா கே.ஆர்.ஜி. அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து சமுதாயத் தொண்டாற்ற வேண்டும்’’ என்று வாழ்த்தினேன்.
பெரியார் திடலில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், அகில இந்திய மய்ய _ மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து 5.9.1995 அன்று நேருக்கு நேர் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. அதில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி அவர்களும் கலந்துகொண்டார். அப்போது, மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கத்தினால், முதல் வேலை வாய்ப்புப் பெற்ற சென்னை _ ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலர் செல்வி எஸ்.கார்குழலி தமக்கு வேலைவாய்ப்பு கிட்டியமைக்காக, தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் எனக்கும், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். அமைச்சர் அவர்களுக்கு சால்வை போர்த்தி நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
பெரியார் திடலில் அகில இந்திய மய்ய – மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் உரையாடலில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சீதாராம் கேசரியுடன் ஆசிரியர்.
மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி உரையாற்றுகையில், “சமூகநீதித் தத்துவத்தை தந்தை பெரியாரின் கருத்துகளில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். சமூகநீதிப் போரை முன்னெடுத்துச் செல்வதில் தந்தை பெரியாருக்குப் பின்னால் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் நண்பர் கி.வீரமணி அவர்கள் தான் முன்னணியில் உள்ளார்.
நான் தந்தை பெரியாருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அங்கு நான் எழுப்பிய ‘கிரீமிலேயர் (பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர்) என்கிற கோட்பாடு தொடரக்கூடாது என்கிற கருத்தை நான் ஆதரிக்கிறேன். கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு அரசியல் சட்டத்திருத்தம் தேவை. அரசு என்பது அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது. சுதந்திரம் அடைந்ததும் வகுப்புவாரி உரிமை ஆணை செல்லாது என உயர்நீதிமன்றம் சொன்ன நேரத்தில், பெரியார் தலைமையில் எழுச்சியோடு போராட்டம் நடந்ததை நீங்கள் அறிவீர்கள். இன்றைய சூழ்நிலையில் அத்தகைய வலுவான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் இல்லை. நாம் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.
விக்கிரவாண்டியில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்
நண்பர் திரு.கி.வீரமணி அவர்கள் பெரியார் வழியில் சிறப்பாகச் செயல்பட்டு அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி செயல்படக் கூடியவர். அவரைப் பார்த்து நான் உத்வேகமடைகிறேன். கிரீமிலேயரை ஒழிக்க உங்களோடு தோளோடு தோள் நிற்பேன் என உறுதியளிக்கிறேன்’’ என எடுத்துக் கூறினார். முன்னதாக அமைச்சர் மற்றும் கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மாயாதை செலுத்தினோம். இந்தக் கூட்டத்தில் மய்ய, மாநில, நிதித்துறை நிறுவனங்களைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
விக்கிரவாண்டியில் தந்தை பெரியார் சிலை திறப்பும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் 10.9.1995 அன்று சிறப்பாக நடைபெற்றது. சிலை திறப்பு விழாவினையொட்டி கழக இளைஞரணியினர், மகளிரணியினர் ஏற்பாடு செய்திருந்த மூடநம்பிக்கை ஒழிப்பு நாடகங்களும், ஜாதி, மத சம்பிரதாயங்களைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் செய்யும் பித்தலாட்டங்களை விளக்கி நாடகங்களும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. சிலை அமைக்க அயராது உழைத்த நல்லாசிரியர் த.தண்டபாணியை சால்வை அணிவித்துப் பாராட்டினோம். அந்தப் பகுதியில் ஆழ்ந்த கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்த சுயமரியாதைச் சுடரொளி மறைந்த இராவணனின் குடும்பத்துக்கு கழகத்தின் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.
அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், பல்வேறு மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் வண்ணம், மதத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கியும், பார்ப்பனர்களால் ஏற்படும் சமுதாயச் சீரழிவை விளக்கியும், நீண்டதொரு எழுச்சி உரை நிகழ்த்தினேன். சிலை திறப்பு விழாவிற்கு உழைத்த கழகத் தோழர்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் சால்வை அணிவித்து நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டேன்.
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் 1995, செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் மிகப் பெரிய அளவில் “பெரியார் மேளா’’ நடத்த அம்மாநில பகுஜன் சமாஜ் அரசு அறிவித்தது. லக்னோவில் உள்ள மற்ற சமூக மாற்றப் பூங்காவில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நாராயண குரு, சாகு மகராஜ், ஜோதிபாபுலே ஆகியோரின் சிலைகள் திறப்பும் நடைபெற்றது. இதற்கு முழுக் காரணம் கன்ஷிராம் அவர்களே!
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். சக்திகளின் எதிர்ப்பையும் மீறி, பல்வேறு விமர்சனங்களையும் பொருள் படுத்தாது சமூகநீதிப் போராளி கன்ஷிராம் அவர்களும், அம்மாநில முதல்வர் மாயாவதி அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவை ஆட்சி கவிழ்ந்தாலும் கவலை இல்லை என்று அறிவித்து, பணி செய்து வருவது பாராட்டுக்குரியது. அவர்களின் அழைப்பினை ஏற்று 14.9.1995 அன்று தனி ரயில் மூலம் கழகக் குடும்பத்தினர், முதியவர்களும், இளைஞர்களும், மகளிரும், குழந்தைகளும் என குடும்பம் குடும்பமாக பெரியார் திடலில் இருந்து ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்களை வழியனுப்ப ரயில் நிலையம் சென்று வாழ்த்தி உரையாற்றுகையில், “லக்னோ பெரியார் மேளாவிலும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களிலும் கலந்துகொள்ள குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்திருப்பதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கன்ஷிராம் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசியபோது, “பெரியார் கொள்கை காவிரி நதிக்கரையிலிருந்து கங்கை நதிக்கரைக்குப் பரவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். திராவிடர் கழகத்தினர் கலந்து கொள்ளுவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது’’ என்றார்.
லக்னோ விழாவிற்கு பிறகு 19ஆம் தேதி டில்லியில் நடக்கும் விழாவும் மிகச் சிறப்பானதாக இருக்கும். கழகத் தோழர்களே, உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய உங்களுடன் கழகப் பொறுப்பாளர்களும் வருகின்றனர். வைக்கத்திலே அய்யா விழாவுக்கு சென்றபோது கடைப்பிடித்த அதே கட்டுப்பாட்டோடு பயணம் செய்து வாருங்கள். உங்களை லக்னோவில் சந்திப்பேன்’’ எனக் கூறி கழகத் தோழர்களை வழியனுப்பி வைத்தோம். அங்கிருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்களும் தனி ரயிலில் புறப்பட்டனர். அவர்களையும் வாழ்த்தி, கொடியசைத்து வழியனுப்பினேன்.
உத்தரப்பிரதேசம் லக்னோவில் 17.9.1995 அன்று நடந்த பெரியார் மேளாவில் லட்சோபலட்சம் மக்கள் குவிந்தனர். லக்னோவில் ‘டாலிபாக்’ பகுதியில் தங்கியிருந்த கழகக் குடும்பத்தினரை சந்திக்க காலை 11:00 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் தனது கட்சியினருடன் விருந்தினர் மாளிகைக்கு வந்தபோது, அவருடன் வந்த கட்சியினர், “பிதா பெரியார்கி ஜிந்தாபாத்! நேதாஜி வீரமணிகி ஜிந்தாபாத்! கன்சிராம்கி ஜிந்தாபாத்! எனும் முழக்கங்களை தோழர்கள் விண்ணதிர முழக்கமிட, கன்சிராம் அவர்கள் வரவேற்றும், அங்கிருந்த ‘அய்யா’ படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். நமது பெரியார் சமூகக் காப்பு அணியினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கழகத் தோழர்கள் கைகளில் கழகக் கொடிகளை ஏந்தி பேரணியாகப் புறப்பட்டனர். மக்கள் பிற பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக வந்தனர். பேரணி ‘பேகம் அஸ்ரத்’ மகால் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் திடலை சென்றடைந்தது. பிற்பகல் 2:45 மணியளவில் ‘பெரியார் மேளா’ துவங்கியது. விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில்,
“தந்தை பெரியார் ஒரு பிறவிப் போராட்ட வீரர். தென்னகத்தில் பிறந்த தந்தை பெரியாரின் விழாவை இங்கு கொண்டாடுவதன் மூலம் ‘உண்மையான சமுதாய ஒருமைப்பாடு’ ஏற்பட்டிருக்கிறது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிறவி ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் பாடுபட்டவர் பெரியார். காசியில் சம்பூர்ணானந்த் சிலையை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்தபோது, தீட்டாகிவிட்டது என உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கங்கை நீரை ஊற்றிக் கழுவினர். அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தது திராவிடர் கழகம். வடநாடு அயோத்தி ராமனை மட்டுமே அறிந்திருந்தது. இப்போது ஈரோட்டு ராமசாமியையும், கன்சிராமையும் அறிந்திருப்பது வரவேற்கத்தக்கது’’ எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். அந்த ஆங்கில உரையை ‘டாக்டர் பிரிஜ்லால் வர்மா’ இந்தியில் மொழிபெயர்த்துக் கூறியதை மக்கள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைக் காட்டினர்.
மாநில முதல்வர் மாண்புமிகு மாயாவதி உரையாற்றுகையில், “எதிர்ப்புகளைக் கண்டு எங்கள் அரசாங்கம் அஞ்சாது, பெரியாருக்குச் சிலை வைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். காந்திக்கும், நேருவுக்கும் விழா எடுக்கும்போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு ஏன் சிலை வைக்கக் கூடாது? எங்கள் அரசாங்கம் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும்’’ என்று குறிப்பிட்டார்.
நிறைவுரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராம் அவர்கள், “தந்தை பெரியார் சிலையை நிறுவுவதில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின்வாங்க மாட்டோம். பெரியார் அம்பேத்கரின் கொள்கைகள்தான் வெகுமக்களின் உரிமைகளை ஈட்டித் தரமுடியும். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை தேசத் துரோகி என்றவர்கள் இப்போது, “பாரத ரத்னா’’ என்று போற்றுகிறார்கள். அதேபோல், இப்போது ‘பெரியார் மேளா’வைத் தூற்றுபவர்கள் நாளை வேறு மாதிரி பேசுவார்கள். இது அவர்கள் வழக்கம். நான் சாவதற்குள் பெரியார் சிலையை அமைத்துவிட்டுத்தான் சாவேன்!’’ என்றார்.
விழாவினை சிறப்பாக நடத்தியமைக்காக மாநில முதல்வருக்கும், கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்களுக்கும், சிவகங்கை ராமலக்குமி சண்முகநாதன் அம்மையாருக்கும் பொன்னாடை போர்த்தி, ‘அய்யா’ படம் பொறித்த நினைவுப் பரிசினை வழங்கி உரையாற்றினேன். வடபுலத்திலிருந்து கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி கூறினேன். இந்த ‘பெரியார் மேளா’ எல்லோர் மனதிலும் புதிய எழுச்சியை உருவாக்கியது.
(நினைவுகள் நீளும்)
கி. வீரமணி
Leave a Reply