சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!

ஜனவரி 01-15, 2021

கேள்விகள் கேட்பதென்பது அறிவை வளரச் செய்வது. தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும், தன் மனதில் தோன்றி எழும் கேள்விகளை பத்திரிகையில் கேட்டு அதற்கான பதிலை பொதுவில் வைத்து, சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பர். கேள்விகள் கேட்பதென்பது எளிய விஷயமில்லை. அதற்கு  நல்ல வாசிப்பும், பதில் தரும் நபரிடமிருந்து பதிலோடு அவருடைய அனுபவத்தையும் இணைத்துப் பெற்றுக் கொள்ளும் திறமையும் வேண்டும். அந்த வகையில் தொடர்ந்து, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘முரசொலி’ என திராவிடம் சார்ந்த பத்திரிகைகளில் கேள்விகளை தன் ஆயுளின் இறுதிவரை கேட்டு அதற்கான பதிலை அனைவருக்கும் கொடுத்து விழிப்புறச் செய்தவர் ‘கேள்வியின் நாயகர்’ என பெரியார் திடலினால் போற்றப்பட்டவர் திரு.நெய்வேலி க.தியாகராசன். இவரின் தொடர் பங்களிப்பினைப் பாராட்டும் வகையில் 2019இல் நடைபெற்ற ‘உண்மை’ பொன்விழாவில் ஆசிரியரால் பாராட்டப் பெற்று, பொன்விழா சிறப்பு இதழையும் இவரைக் கொண்டு வெளியிடச் செய்து சிறப்பித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். அவ்விழாவில் அவர் எவ்வாறு பெரியாரைச் சந்தித்தார் என்பதையும், தந்தை பெரியார் அவர் வாழ்க்கையில் ஏற்றி வைத்த கல்விச் சுடரையும் மேடையில் பேசி நன்றி பாராட்டினார்.

ஒவ்வொரு ‘உண்மை’ இதழிலும் அவருடைய கேள்விகளுக்கு ஆசிரியரின் பதில்கள் அந்தப் பகுதிக்கு தலைப்பாகவும் மாறியதுண்டு. அந்த வகையில் ‘உண்மை’ தன்னுடைய ‘உண்மை’யான பகுத்தறிவாளரை இழந்துவிட்டது எனலாம். அவரின் மறைவுக்கு ஆசிரியர் வெளியிட்ட இரங்கல் செய்தியே அதற்குச் சான்று. இதோ:

‘விடுதலை’யின் நீண்ட நாள் வாசகர், எழுத்தாளர் நெய்வேலி க.தியாகராசன் மறைவுக்கு ‘விடுதலை’யின் வீரவணக்கம்!

நெய்வேலி (என்.எல்.சி.)யில் பணியாற்றி, பணி ஓய்வுக்குப் பின் குடந்தையையடுத்த கொரநாட்டுக்கருப்பூரில் வசித்து வந்த நெய்வேலி க.தியாகராசன் (வயது 87) 20.12.2020 அன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

திராவிட இயக்க உணர்வோடு தமிழ்நாட்டின் இதழ்களுக்கெல்லாம் ஓயாமல் எழுதிக் கொண்டே இருப்பார். ‘விடுதலை’யின் தொடர் வாசகராகவும், எழுத்தாளராகவும், இருந்த அவருக்கு சென்னையில் நடைபெற்ற ‘விடுதலை’ 80ஆம் ஆண்டு விழாவில்   விருது வழங்கப்பட்டது. அவர்தம் வாழ்விணையர் பெயர் மணியம்மை என்பதிலிருந்தே அவரின் இயக்கப் பாரம்பரியத்தைத் தெரிந்து கொள்ளலாம். அவர் பிரிவால் துயருறும் அவரின் வாழ் விணையருக்கும், ஆருயிர் செல்வங்கள் கனிமொழி, மாதவி ஆகியோருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ‘விடுதலை’யின் வீரவணக்கம்!’’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.

கேள்விகள் அவருடையதாக இருக்கலாம். ஆனால், பதில்கள் நம் எல்லோருக்குமானது. நம் அறிவின் வளர்ச்சிக்கானது. தொடர்ந்து கேள்வி கேளுங்கள்!

–  மேக்சிமஸ்,  சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *