வாசகர் மடல்

ஜனவரி 01-15, 2021

ஊர்தோறும்  “உண்மை”

நமது நாட்டில் வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் நாள்தோறும் பல வண்ணங்களில் வகைவகையாய் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் அவை அனைத்தும் வர்த்தக ரீதியாக வலம் வந்துகொண்டிருக்கின்றன என்பது நடைமுறை உண்மை. எனவே, நாட்டு நடப்புகளை சமூகநலக் கண்ணோட்டத்துடனும் பகுத்தறிவுச் சிந்தனையுடனும் இளைஞர்களையும் மாணவர்களையும் நல்வழிப்படுத்துகின்ற வார இதழ்கள், மாத இதழ்களை மட்டுமே எனது கண்கள் தேடி அலைந்தன. அப்போது என் கண்களைக் காந்தமாய்க் கவர்ந்தது மாதமிருமுறை வெளிவருகின்ற ‘உண்மை’ இதழ்  மட்டுமே!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 88-ஆம் பிறந்த நாள் (டிசம்பர் 2, 2020) முன்னிட்டு இதழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ‘உண்மை’ இதழின் முகப்பு அட்டையில் ஆசிரியர் அவர்களின் ஒளிப்படம் கம்பீரமாய்க் காட்சி அளித்தது. ஆகவே, அவ்விதழை வாங்கி ஆவலுடன் படித்தபோது அவற்றில் ஆசிரியர் அவர்களின் அறிவார்ந்த கட்டுரைகள், அரிய – புதிய தகவல்கள் மற்றும் ஆவணங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒளிப்படங்கள் ஆகியவை பொக்கிஷமாய்க் கொட்டிக் கிடந்தன.

பகுத்தறிவு மலராகப் பூத்துக் குலுங்கும் ‘உண்மை’ இதழ் சமூகநீதி, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகிய முற்போக்குச் சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருப்பதால்  அவ்விதழ் இளைஞர்கள் – மாணவர்கள் மற்றும் மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

எனவே, இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து  “ஊரெங்கும் ‘உண்மை’ பாரெங்கும் பகுத்தறிவு’’ எனும் உயரிய நோக்கில் ‘உண்மை’ இதழை ஊரெங்கும் கொண்டு சென்று மக்களிடையே பரப்புகின்ற சீரிய பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கப்படுத்துகின்ற வகையில் பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், கல்வியாளர்கள், மாதர் சங்கங்கள் உள்ளிட்டோர் தங்களது நல் ஆதரவை நல்கி வருகின்றனர் என்பது தேனினும் இனிய தெவிட்டாத செய்தியாகும்.

உயரட்டும் உண்மை இதழ்!     

வளரட்டும் பகுத்தறிவு!

– சீதாலட்சுமி, திண்டிவனம்.

பேரன்புமிக்க அய்யா வணக்கம்.

அக்டோபர் 16-31 (2020) நமது உண்மை இதழைப் படித்தேன்; சுவைத்தேன். மிக்க மகிழ்ச்சி!

ஆசிரியர் அவர்களின் தலையங்கம், ஆசிரியர் அவர்கள் எழுதிய இயக்க வரலாரான தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில் (254) அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளைப் பதிவு செய்தது, ‘பக்தி’ என்ற தலைப்பில் வெளியான அருமையான சிறுகதை, அய்யா மஞ்சை வசந்தன் எழுதிய “மத்திய பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட தமிழ் – பண்பாடு புறக்கணிப்பு’’ கட்டுரை, முனைவர் த.ஜெயக்குமார் எழுதிய உலகப் பகுத்தறிவு மாமேதைகள் ‘பெரியாரும் இங்கர்சாலும்’ ஓர் ஒப்பீடு, நமது மருத்துவர் அய்யா இரா.கவுதமன் எழுதிய ‘நுரையீரல் அழற்சி’ எனும் மருத்துவப் பகுதி, ஆசிரியர் பதில்கள் பகுதி, எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை, கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா? என்ற புரட்டுக்கு பதிலடி கொடுக்கும் வரலாற்றுப் பதிவுகள். இது மட்டுமன்றி நூல் முழுவதும் பகுத்தறிவுச் சுரங்கமாக, அறிவுப் பெட்டகமாக உள்ளது. நான் ‘உண்மை’ இதழைப் படிப்பதோடு மட்டுமன்றி அனைவருக்கும் அதனைப் பரப்பி வருகிறேன். தமிழர்கள் அனைவரின் கையில் தவழ வேண்டிய அறிவுச் சுரங்கம், கருத்துக் கருவூலம் நமது ‘உண்மை’ இதழ், 1970ஆம் ஆண்டு தொடங்கிய ‘உண்மை’ இதழ் அதன் பிறகு வரும் உண்மை இதழ்கள் அனைத்தையும் படித்துப் பாதுகாத்து வருகிறேன். 1970ஆம் ஆண்டு இதழ் என்பது நமது மூத்த தோழர்கள்  – பெரியார் தொண்டர்கள் எனக்கு வழங்கியது.

– கோ.வெற்றிவேந்தன், கன்னியாகுமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *