முனைவர் வா.நேரு
தந்தை பெரியாரின் நினைவு நாள் டிசம்பர் 24. தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார் என்று தனக்கே உரித்தான பாணியில் சொன்னது மட்டுமல்லாது, தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதையுடன், குண்டுகள் முழங்க அடக்கம் செய்ய வழிவகுத்தார். தந்தை பெரியார் அவர்கள் உடல்ரீதியாக தனது சுற்றுப்பயணத்தை நிறுத்தி 47 ஆண்டுகள் கடந்துவிட்டன.. ஆனால், அவர்தம் கொள்கைச் சுற்றுப்பயணம் இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் மூச்சுக்காற்றாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எப்படி?
தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டபோது, திராவிடர் கழகமும் முடிவுபெற்றுவிடும் என்று சிலர் சொன்னார்கள், எழுதினார்கள். ஆனால், இன்றைக்குத் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளும், தந்தை பெரியாரின் கொள்கைப் பரவலும் மிகப்பெரும் வீச்சாக நடைபெறுவதற்கு அடிப்படையான காரணம், தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட தமிழர் தலைவர் அவர்களின் உழைப்பும், அவருக்குக் கீழ் பணியாற்றும் தோழர்களின் ஒத்துழைப்பும் _ உழைப்பும் மட்டுமே.
தந்தை பெரியார் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும், அவரின் உரையும் எழுத்தும் எதிரிகளைக் கலங்க வைக்கிறதே ஏன்… சாதாரண திண்ணைப் பிரச்சாரம் முதல் பாராளுமன்றத்தில் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை, எதிரிகளை எதிர் கொள்வதற்கு ஏதுவாக தந்தை பெரியாரின் உரைகள் இருக்கிறதே, எப்படி? எப்படிப்பட்ட பக்தராக இருந்தாலும், திறந்த மனத்துடன், உண்மையை அறிய வேண்டும் என்கிற நோக்குடன் ஆராய்பவர் எனில், அவரைத் தந்தை பெரியாரின் கொள்கை ஈர்க்கிறதே எப்படி?… ஏன் எனில் தந்தை பெரியாரின் கொள்கை என்பது உண்மை, உண்மை, உண்மை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதால் அவர்களை ஈர்க்கிறது. சிலர் இருக்கிறார்கள், தூங்குவதுபோல நடிப்பவர்கள், அவர்களை நாம் எழுப்ப முடியாது…. நாம் எழுப்ப, எழுப்ப இன்னும் அதிகமாக குறட்டை போட்டுத் தூங்குவது போல நம்மிடம் நடிப்பவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஆனால், உண்மையைத் தேடுபவர்கள் சென்று அடையும் இடமாக பெரியார் கொள்கை இருக்கிறது.
தந்தை பெரியாரின் தலைமை என்பது ஒப்பற்ற தலைமை. ஒப்பற்ற தலைமை என்ற தொடர் சொற்பொழிவில் இதனை மிகச் சிறப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்கள். ஒப்பற்ற தலைமை என்பதே தந்தை பெரியாருடைய தலைமைதான் என்று நான் என்றென்றைக்கும் சொல்லக்கூடியவன். ஓர் அடையாளத்திற்காக அதனைக் கொள்ள வேண்டும். -இயக்கத்தை நடத்துகிறவன் என்கிற முறையில், நான் உங்கள் தோழன், உங்கள் தொண்டன். இதனைக் கடமையாகக் கருதிக்கொண்டு, உயிர் மூச்சாகக் கருதிக்கொண்டு நடக்கின்ற இராணுவ சிப்பாய்களில் கடைசிச் சிப்பாயாக இருந்தாலும், என்னை நீங்கள் திரும்பிப் பார்க்கின்ற நேரத்தில் நிச்சயமாக அந்த உணர்வோடு உங்களை வழி நடத்தக்கூடிய ஒரு மகத்தான பொறுப்பை எங்கிருந்து நான் பெறுகின்றேனோ, அதுதான் அந்த ஒப்பற்ற தலைமை. வயதில் _ அறிவில் முதியார் _ வாய்மைப் போருக்கு என்றும் இளையார் உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதுபோல, வாய்மைப் போரை என்றைக்கும் நடத்துகிறார். தந்தை பெரியாருடைய போர் என்பது இருக்கிறதே, அது லட்சியப்போர் என்பதைவிட, புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்ன அந்த சொல்லாக்கத்தில், வாய்மைப்போர்…
வாய்மைப் போர் எப்படி நடக்கும்? எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் வாய்மைப் போர் உண்மையைச் சொல்லும். புரூனோ உண்மையைச் சொன்னார். கொல்லப்பட்டார். கோபர்நிக்கஸ் உண்மையைச் சொன்னார். துன்பப் படுத்தப் பட்டார். கலிலியோ உண்மையைச் சொன்னார். அச்சுறுத்தப்பட்டு சிறைப் படுத்தப்பட்டார். புரூனோ இன்றைக்கு இல்லை, கோபர்நிக்கஸ் இன்று இல்லை. கலிலியோ இன்று இல்லை. ஆனால், அவர்கள் சொன்ன உண்மை இன்றும் இருக்கிறது; நாளையும் இருக்கும். அதனைப்போல தந்தை பெரியார் அவர்கள் இன்று இல்லை. ஆனால், அவர் சொன்ன உண்மை இன்றும் இருக்கிறது. அதனால் அவர் நினைக்கப்படுகிறார், போற்றப்படுகிறார். பரப்பப்படுகிறார் _ உண்மையை விரும்புகிறவர்களால்.
உண்மையை விரும்பாதவர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக மக்கள் மூட நம்பிக்கையிலேயே மூழ்கிக் கிடக்கவேண்டும் என நினைக்கிறார்கள். மூட நம்பிக்கைகள் வேரூன்றி இருக்கும் வரைக்கும் நமது பிழைப்பு நடக்கும் என்று நினைக்கின்றார்கள். மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் வெளியே வந்து விடாமல் இருக்க உண்மையினால் விளைந்த அறிவியல் ஊடகங்களை, கருவிகளைப் பயன்படுத்து கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் தந்தை பெரியாரின் கருத்துகள் என்றால் உண்மை, உண்மைதான் என்பது. ஆனால், உண்மை தெரியாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதற்காக வெறுப்பினை உமிழ்கிறார்கள். சமூக ஊடகங்களில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் பெரிய ரவுடியாக்கும், எங்கள் சொற்களில், எழுத்துகளில் கெட்ட வார்த்தைகள் மட்டும்தான் வருமாக்கும் என்று தாங்கள் காட்டு மிராண்டிகளாய் இருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்கள். அவர்களைப் பார்க்கிறபோது நமக்கு சிரிப்புதான் வருகிறது.
மத்தியில் மதவெறி பாரதிய ஜனதா கட்சி வந்த பிறகு பெரியார் கொள்கை நோக்கி பல இளைஞர்கள் வருகிறார்கள். மடமையை மறக்காமல் இருப்பதற்காக மதவாதிகள் நடத்தும் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டு வெறுத்து, பெரியாரை நோக்கி வருகின்றார்கள். மனிதர்களை நினைக்க மறுத்து மாடுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் மனு(அ)நீதி ஆட்சியாளர்களைப் பார்த்து வெறுத்து வருகின்றார்கள். உத்தரப்பிரதேசத்தில் மூச்சுத்திணறி பல குழந்தைகள் உயிரிழந்தார்கள். அவர்களைப் பற்றி நினையாத மதவெறி அரசு, குளிரில் பசுமாடு நடுங்குகின்றன என்று சொல்லி கம்பளி கொடுக்கும் அவலத்தைப் பார்த்து பெரியார் கொள்கை நோக்கி வருகின்றார்கள். கடும்குளிரில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக டில்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படாத நாட்டின் பிரதமர், அவர்களை சந்திக்க மறுக்கும் மதவாத அரசின் பிரதமர், மயிலுக்கு உணவு கொடுப்பதாக பம்மாத்து பண்ணும் நாடகத்தைப் பார்த்து இளைஞர்கள் பெரியார் கொள்கை நோக்கி வருகின்றார்கள்.
திராவிடத்தின் தந்தை பெரியார் அவர்கள், திராவிடம் என்பது _ தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவது போல அனைவருக்கும் அனைத்தும்; ஆரியம் என்பது ஆரியர்களுக்கே அனைத்தும். திராவிடம் என்பது அனைத்து மனிதர்களையும் மனிதர்களாக மதிப்பது; ஆரியம் என்பது மனிதர்களை ஜாதி அடிப்படையில் ஒதுக்கிவைப்பது, வெறுக்க வைப்பது. திராவிடம் என்பது _ பெண்களை தனது சக உயிராகப் பார்ப்பது, அவர்களை நேசிப்பது, அவர்களுக்கு ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் வேண்டும் எனக் கேட்பது, போராடுவது; ஆரியம் என்பது _ பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று இழிவுபடுத்துவது, அடிமைகளாக நடத்துவது, நடத்த வேண்டும் என்று சொல்வது, பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கக்கூடாது என்று சொல்வது.
எது வெல்லும்? எது வென்றது? இன்று திராவிடத்தின் வெற்றியைச் சொல்லும் வரலாறு, நாளையும் அதன் வெற்றியைச் சொல்லும். ஏனெனில், திராவிடம் என்பது, பெரியாரியல் என்பதே உண்மை. உண்மை என்றும் வென்றே தீரும்.
இந்த 2020ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று சமூக ஊடகங்களில் பார்த்தோம். தந்தை பெரியாரின் 142-ஆம் பிறந்த நாள் கேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பெற்றது. தந்தை பெரியாரைக் கொண்டாடிய இளைஞர்களும், இளம் பெண்களும், எங்கள் தந்தை பெரியார் என்று இறுமாப்புடன், நாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கான காரணம் தந்தை பெரியார் என்று கூறினர். தமிழகத்தில் இருப்போர், தமிழகத்தில் இருந்து வெளிநாட்டில் சென்று வசிப்போர் மற்றும் அயல் நாடுகளில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டோர் அனைவரும் தந்தை பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்ததைக் கண்டோம். தந்தை பெரியாரின் கொள்கை சுற்றுப் பயணத்தால் விளைந்த இணைய ஊடகங்கள் வழி பாராட்டுதலைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24-ஆம் நாளன்றும் சமூக ஊடகங்களின் கேஷ்டேக் டிரண்டில் தந்தை பெரியார் முதலிடத்தில் வருவார். அவரின் நினைவு நாளில் அவரின் தொண்டினை திராவிடர் கழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, நாத்திகர்கள் மட்டுமல்ல; நன்றியுணர்ச்சி உள்ள திராவிடர்கள் அனைவரும், உலக மாந்தர்கள் பலரும் நினைவு கொள்வர். அவரின் வாய்மைப் போரை நினைவு கொள்வர். இன்று நம்மைச் சுற்றிப் படரும் ஆரியப் படை நோயை நீக்கும் மருந்து பெரியாரியல் என்பதை மக்கள் உணர்கின்றனர்.
தந்தை பெரியாரின் நினைவு நாளில், ஆண்டுதோறும் நாம் ஏற்கும் உறுதிமொழியை உள்ளத்தில் ஏற்றுவோம். எந்த நிலையிலும் வன்முறையைக் கையில் எடுக்காமல், ஆனால் தனது போராட்டங்களால் எதிரிகளை நடுங்கவைத்த தந்தை பெரியாரை நினைவில் கொள்வோம். தன்னை வருத்திக்கொண்டு, எதிரிகளின் குலக்கல்வி போன்ற நயவஞ்சகத் திட்டங்களை முறியடித்த தந்தை பெரியாரின் போர் முறையை நன்றாக மனதில் இருத்துவோம். எந்த விதமான சஞ்சலங்களுக்கும் ஆளாகாமல், தந்தை பெரியார் போட்டுத்தந்த பாதையில் நம்மை வழி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றி, தந்தை பெரியார் பணி முடிப்போம்! தந்தை பெரியார் காணவிரும்பிய அனைவருக்கும் அனைத்தும் என்னும், பொது உரிமையும், பொது உடைமையும் அனைவருக்கும் கிட்டும் பொன்னான உலகத்தை நோக்கிய இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
வாழ்க தந்தை பெரியார்! வளர்க அவரது நினைவுகள்!