சிறுகதை : சஞ்சீவிச் சாலை

மார்ச் 1-15, 2020

 

இளமைப் பித்தன்

(திராவிட இயக்க எழுத்தாளர்)

இரவு ஒன்பது மணி இருக்கும். சாப்பாட்டை முடித்துக் கொண்டு வாசல் திண்ணையின்மேல் சாய்ந்து கொண்டிருந்தேன். அரையுங் குறையுமாக எழுதப்பட்டிருந்த கதை _ ‘முடிவை’ எதிர்பார்த்த வண்ணம் உள்ளே இருக்கும் மேஜையின்மேல் கிடந்தது! மிகவும் நெருக்கடியான கட்டத்தில் வந்து சிக்கியிருந்ததால் அப்படியே விடப்பட்டிருந்தது அந்தக் கதை! நாளைத் தபாலில் அதுபோய்ச் சேரவேண்டும். அவசரமான வார்ப்பு; கொஞ்சம் இளகல் தன்மை ஏற்பட்டுவிட்டது!

அதை இறுக வைப்பதற்குள் இடும்பைகூர் என் வயிற்றில் பசி வெறியாட்டம் போடத் தலைப்பட்டது. பசி வந்திடப் பத்தும் பறந்துபோவது இயல்புதானே!

சாப்பாட்டை முடித்துக் கொண்டதும், பிறகு களைப்பு! உண்ட களைப்பு லேசாக மயக்கத்தை வருவித்துக் கொடுத்தது. படுத்தால் ‘கட்டை’ விறைத்துப் போகக்கூடிய அளவுக்கு வந்துவிடுமென்று நன்றாகத் தெரிந்துபோய் விட்டது. அதற்காகத் தூக்கத்திற்குப் ‘போக்கு’க் காட்டிக் கொண்டிருந்தேன். முடியாத கதைக்கு ஓர் முடிவைத் தேடித் திரிந்த வண்ணம் இருந்தது என் மனம்.

பார்வை வானத்தில் தொலைதூரத்திற்கு அப்பால் சுழலும் ஒரு பிரகாசமான ஒளிக்கோளத்தையும், பிறை நிலவையும் சுற்றிச் சுற்றி வட்டம்போட்டுக் கொண்டிருந்தது.

வீதியில் நடமாட்டம் அற்றுப்போய் அமைதி குடி கொண்டு விளங்கியது. தூக்கம் மாத்திரம் மெள்ள மெள்ள என் கண்ணிமைகளுக்குள் இழை போட்டபடியே இருந்தது. ‘படக் படக்’ கென்ற பாதக் குறடுகளின் ஓசை தூரத்திலிருந்து நெருங்கிவந்து வீட்டு வாசலில் மவுனம் சாதித்தது!

“யாரது?’’ என்றேன், வந்து நின்றவரை நோக்கி. இருட்டில் சரியானபடி அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

“மோகனசுந்தரம்தானே பேசுவது?’’ எனும் கேள்வி என் பக்கமே திரும்பிவந்து மோதிற்று.

“ஆமாம், நாந்தான்! நீங்கள் யார்?’’

கீழே நின்றவர், படியேறிவந்து என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு, “தெரியவில்லையா என்னை?’’ என்று கேட்டார். வாசல் திண்ணையில் விளக்கில்லாத குறையைப் போக்கிவிட்டது அவருடைய குரல்.

“அடடா! திரிசங்குவா? வரவேண்டும். ஏது இந்த வேளையில் எதிர்பாராத வகையில் வந்துசேர்ந்தீர்கள்! உள்ளே வாருங்கள்’’ என்று அவரை அழைத்துக் கொண்டு போனேன். விளக்கு வெளிச்சத்தில் பார்த்த பிறகும்கூட அவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. கழுத்துப் பிடரி வரையில் சுருண்டு புரளும் கேசமும், மார்பைத் தொட முயலும் தாடியும், உடலை மறைக்கக் காவியுடையும் -விசித்திரமாகத்தான் இருந்தன எல்லாம்!

நண்பர் திரிசங்கு ஒரு கவிஞர். வெகு நாள்களுக்கு முன்பே பத்திரிகை மூலமாக எங்கள் இருவருக்கும் நட்புத் தொடர்பு உண்டு. ஆனால், சில மாதங்கள் வரையில் அவருடைய நடமாட்டமே கண்ணில் தென்படாமலிருந்து வந்தது. எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற விவரங்கள் எதையுமே என்னால் அறிய முடியவில்லை.

பேச்சை, அவரே துவக்கினார். “மோகன-சுந்தரம்! முன்பு நாம் சந்தித்தபோது, நான் இருந்த நிலை வேறு; இப்போது இருக்கும் நிலைமை வேறு. என்னடா, பிச்சைக்காரன் மாதிரி காவியும் கமண்டலமுமாக மாறி-விட்டானே திரிசங்கு என்று நினைக்கிறாய் அல்லவா? எல்லாம் நன்மைக்குத்தான். உம்… அது இருக்கட்டும், இப்போது கதைகள் எழுதுவதை நீ விட்டு விடவில்லையே? வருமானம் எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டார்.

“வருமானமா? இன்றைக்குப் பாங்கிலிருந்து மினிமம் பாலன்ஸ் போக மீதி ரூபாய் அய்ந்து வீட்டுச் செலவுக்கு எடுத்து இருக்கிறேன். குறையாகக் கிடக்கும் கதையை முடித்தனுப்பினால் ஏதாவது வந்துசேரும். பிறகு இருக்கவே இருக்கிறது என்றேன் புன்முறுவலுடன்.

“சச்சிதானந்தம்… சச்சிதானந்தம்… என்ன வாழ்க்கையப்பா இது! எப்போது பார்த்தாலும் இல்லை என்ற குறைதானா?’’

“அதுதான் நமது பிறப்புரிமையாயிற்றே கிடக்கட்டும், இதெல்லாம் என்ன வேஷம்?’’

“வேஷமா? மோகனசுந்தரம், இது வேஷமல்ல. நான் ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டு ஏறக்குறைய ஏழெட்டு மாதங்களுக்கு மேலாக ஆகின்றன. இதில் உள்ள சுகம், சம்சார வாழ்வில் நிச்சயமாய்க் கிடையாது என்று உறுதியாகச் சொல்லுவேன். சச்சிதானந்தம்…’’ என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தார்.

இரவு வெகுநேரம் வரையிலும் இலக்கியம், வேதாந்தம் முதலியவற்றை பற்றிப் பேசிக் கொண்டே இருந்துவிட்டுக் கண்ணயர்ந்தோம்.

மறுநாள் திரிசங்கு ஊருக்குக் கிளம்பினார். அவர் இருக்கும் ஆசிரமத்தைப் பற்றியும், அதன் நோக்கங்களைப் பற்றியும் அவருக்கே உரிய அழகு மொழிகளால் கேட்பவர்களை வசீகரிக்கும் ‘பாணி’யில் பேசியதைக் கேட்டதும் எனக்கும் கொஞ்சம் ‘சபலம்’ தட்டிற்று! “நானும் உங்களுடன் வரலாமா?’’ என்று கேட்கக்கூடிய கட்டத்தில் என்னைக் கொண்டுவந்து நிறுத்தி வைத்துக்கொண்டு, “வருகிறாயா என்னுடன்?’’ என்று கேட்டார் அவர். செலவு முழுவதும் அவரைச் சேர்ந்ததாக இருக்கும்பொழுது போவதற்கு என்ன தடை! புறப்பட்டுவிட்டேன்!

* * *

ரயிலை விட்டிறங்கிச் சுமார் ஒரு மைல் தூரம் நடந்து சென்றோம். ஒரு கிராமத்தை ஒட்டியிருந்தது அந்த இடம். அழகான மாந்தோப்பு! அதன் நடுவே ஒரு வெள்ளைக் கட்டடம். அதைச் சுற்றிலும் காய்ந்த சருகும், புல்லும் வேய்ந்த குடிசைகள், சிரிப்பொலிக்கும் சுழல்களை முழக்கிக் கொண்டே ஓடும் சிற்றாறு!

“இந்த இடம்தான் நாங்கள் வசிப்பது! வெள்ளைக் கட்டடத்தில்தான் எங்கள் குருநாதர் பிரம்மானந்த சுவாமி இருக்கிறார். பெரிய ஞானக்கடல், அலை ஓயாத ஆழி! வா, போய் அவரைத் தரிசனம் செய்துவிட்டு வரலாம்’’ என்ற அங்கே அழைத்துச் சென்றார் என்னை.

முன்கூடத்தில் நான்கைந்து பேர், கிட்டத்தட்ட திரிசங்குவைப் போலவே காவி தரித்திருந்தார்கள். திடகாத்திரமான ‘தேகி’களாகக் காணப்பட்டார்கள்.

“சச்சிதானந்தம்’’ என்றார் திரிசங்கு. அவர்களும், பதிலுக்கு அதே வார்த்தையை எதிரொலித்தார்கள். அதுதான் அங்கே மூலமந்திரமாக விளங்கியது: ஒவ்வொருவருடைய உதட்டிலிருந்தும் வெடித்து வெளியே வந்து விழுந்தது.

அந்த வெள்ளைக் கட்டடத்திற்குள் நுழைந்ததுமே எனக்கு என்னவோ ஒரு மாதிரியான மயக்கம் பீடித்துக் கொண்டது. மயக்கமென்றா சொன்னேன்? இல்லை. விழிப்புற்றுக் கிடந்த புலனுணர்ச்சிகள் யாவும் உறக்கத்திலாழ்ந்து விட்டன. அகிற்புகை ‘கமகம’வென்று மணம் வீசிக்கொண்டிருந்தது.

முன்கட்டைத் தாண்டி உள்ளே போனோம். திரிசங்கு ‘சாடை’களாலேயே என்னிடம் பேசத் தொடங்கிவிட்டார். கடைசியில், பிரம்மானந்த சுவாமி இருக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.

சுவாமிகள் ஏதோ நூலாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவரைச் சுற்றிப் பழங்கால நூல்களிலிருந்து, அன்றுவந்த தினசரிப் பத்திரிகை வரையில் சிதறுண்டு கிடந்தன.

“சிவோகம்_சிவோகம்_சச்சிதானந்தம்’’ என்று இரு கைகளையும் கூப்பி வணங்கினார் திரிசங்கு.

சுவாமிகள் புன்முறுவலுடன் எங்களை வரவேற்றார். அவருடைய காந்த அலைகள் புரளும் கண்களைக் கண்டதுமே, என்னுடைய கண்கள் கூசின.

நல்ல வலுவான உடற்கட்டு, செந்தாமரை போன்று செக்கச் சிவந்திருந்த முகத்தில் கருகருவென்று வளர்ந்திருந்தது தாடி. வயதை எடைபோட முடியாத தோற்றம்.

“இந்த உடம்பு புதிதாக இருக்கிறதே, யார்?’’ என்று கேட்டார் அவர்.

“தம்பி என் நண்பர், நல்ல எழுத்தாளர். சன்னிதானத்தைத் தரிசிக்க வேணுமென்று விரும்பினார். அழைத்துக் கொண்டு வந்தேன்’’ என்றார் திரிசங்கு.

“அவருக்குக் கொடுத்த ‘தலைப்பின்’கீழ் நீர் போகலாம். உம்முடைய ‘தலைப்பின்’ கீழ் அவர் வருவாரோ?’’ என்று கேட்டார் திரிசங்குவைப் பார்த்து.

அந்தக் கேள்வியின் பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

“தம்பி ரசிகனே தவிர, புனையமாட்டான்’’ என்று பயபக்தியுடன் சொன்னார் நண்பர்.

“சிலர் ‘இரட்டை வாழ்வு’ வாழ்ந்து வருகிறார்களே என்று கேட்டேன். தம்பியின் பெயர்?’’

“மோகனசுந்தரம்’’

“அப்படியா?’’

“ஆசிரமத்தில் இன்று இரவைக் கழிக்க உத்தரவாக வேணும்.’’

“நல்லது. அப்படியே தங்கிப் போகலாம். சுற்றிப் பார்க்க விரும்பினால் ‘சஞ்சீவிச் சாலை’க்கு மட்டும் அழைத்துச் செல்ல வேண்டாம். பக்குவப்படாத உடம்பு’’

“சித்தம்!’’

“சச்சிதானந்தம்; சிவோகம்; சிவோகம்’’

திரும்ப சுவாமிகள் பேசவில்லை. மவுனத்தில் மூழ்கிவிட்டார். அவரை வணங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினோம். திரிசங்குவின் ஆசிரமக் குடிசையில் நெடுநேரம் வரையில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தேன். திரிசங்கு வெளி வேலைகளைக் கவனிப்பதற்காகச் சென்றிருந்தார். சுவாமிகள் சொன்ன ‘இரட்டை வாழ்வு’க்கு என்ன பொருள்? அதைப்பற்றிய சிந்தனைதான் என்னை மடக்கிக் கொண்டிருந்தது.

உடலும் உயிருமா? ஞானமும் அஞ்ஞானமுமா? பொய்யும் மெய்யுமா? இன்பமும் துன்பமுமா? உயர்வும் தாழ்வுமா? நித்தியமும் அநித்தியமுமா? என்று விளங்கவே இல்லை. எப்படி விளங்கப் போகிறது? அந்த வார்த்தைக்குள் எத்தகைய தத்துவம் மறைந்து கிடக்கிறதோ? அதன் சூட்சுமத்தைக் கேவலம் வாழ்க்கைச் சேற்றில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் எனக்குப் புரிந்துகொள்ளத் திராணி உண்டோ? பொய்யும், புனைசுருட்டும் நிரம்பிய கற்பனைக் கதைகளை எழுதிப் பொருளிலும், விஷய சுகத்திலும் ஈடுகொடுத்துக் கொண்டிருக்கும் என் மனம் வெகு வேகமாக ‘ஓட்டப் பந்தயம்’ விட்டுக் கொண்டிருந்தது.

“மோகனசுந்தரம்! ஏது ஒரேயடியாக மவுனத்தில் மூழ்கிப் போய்விட்டாய்!’’ என்று என்தோளைப் பிடித்துக் குலுக்கினார் திரிசங்கு. அவர் வந்ததைக்கூட நான் அறியவில்லை.

“இரட்டை வாழ்வு என்பதற்குப் பொருள் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்றேன்.

திரிசங்கு ‘இடிஇடி’யென்று சிரித்துவிட்டுப் “பைத்தியமே! இரட்டை வாழ்வென்றால் உனக்குத் தெரியாதா? கதாசிரியன் கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல் கவிதை புனைந்து, கவிஞனாகவும் மாறுவதற்குத்தான் சுவாமிகள் இரட்டை வாழ்வென்று கூறினார். மேலும் எழுத்தாளன் என்னும் தலைப்பில் கவிஞனும் இருப்பான். கவிஞனென்னும் தலைப்பிற்குள் கதை எழுதும் ஆசிரியன் வந்து நுழைய முடியாது. அதையும் குறிப்பிட்டுக் கேட்டாரே நுட்பமாய்; உனக்குப் புரியவில்லையா?’’ என்றார்.

“நாசமாப் போச்சு! எதை யெதையோ எண்ணியல்லவா இவ்வளவு நேரம் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன்’’ என்று மனதிற்குள்ளேயே எண்ணிக்கொண்டு பதிலுக்குச் சிரித்தேன்.

“அதிருக்கட்டும், ‘சஞ்சீவிச்சாலை’ என்றாரே, அது என்ன?’’

“ஓ! அதுவா? அது சுவாமிகள் சிவசக்தியுடன் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசும் தனியறை. விளக்கம் கேட்காதே. உனக்குப் புரியாது’’ என்று சொல்லிவிட்டு ஆசிரமத்தைச் சுற்றிக் காண்பிக்க என்னை அழைத்துக் கொண்டு போனார்.

* * *

இரவு நெடுநேரமாகிவிட்டது.

ஆசிரமத்துக் குடிசையின் வெளிப்புறத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். யாரோ உளறிப் பிதற்றும் சத்தம் கேட்டது.

சிற்றாற்றின் ஒலியும், சில் வண்டுகளின் சத்தமும் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன. எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தேன்.

எதிரிலுள்ள புல் தரையின்மேல் நண்பர் திரிசங்கு விழுந்து புரட்டு கொண்டிருந்தார். அடிக்கடி ‘சச்சிதானந்தம் சச்சிதானந்தம்’ எனக் கூறியபடி, விண்மீன்கள் மினுமினுக்கும் வானவெளியை நோக்கித் தம் இரு கைகளையும் நீட்டி ஆவேசம் நிறைந்த குரலில் கூவிக் கொண்டிருந்தார். இடையிடையே “அரனத்த சஞ்சீவிப் பரவெளிக்கு அழைக்குதே; தருநிறைந்த சோலையிலே தேவமணம் தழைக்குதே’’ என்கிற கவிதை குரல் கொடுத்தது. அருகில் சென்று அவருடைய கவிதைக் கனவைக் கலைத்தெறிய மனம் ஒப்பவில்லை.

திரிசங்கு திரும்பத் திரும்ப அந்த அடிகளை விடாது சொல்லிக்கொண்டே இருந்தார். சிறிதுநேரம் சென்றபிறகு அவருடைய ஆவேசம் அடங்கியது. தள்ளாடிக்கொண்டே குடிசைக்குள் வந்து நுழைந்தார்.

இருட்டோடு இருட்டாய் உட்கார்ந்திருந்த அவர் என்னைப் பார்த்ததும் “யாரடா அவன்?’’ என்று ஓர் அதட்டல் போட்டார். எனக்குத் ‘திக்’கென்றது. சமாளித்துக் கொண்டு “மோகனசுந்தரம்’’ என்றேன். பதிலைக் காதிலே வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. உள்ளே நுழைந்தவர்தான், பொழுது விடியும் வரையில் வெளியில் வரவே இல்லை. நான் கண்விழித்துக் கொண்டிருந்ததுதான் மிச்சம்.

அங்கே இன்னொரு அதிசயமும் எனக்கு வெளியாயிற்று. இரவு வெகுநாழி கழிந்தும் கூடக் ‘கார்’களும், வண்டிகளும் வந்து போய்க் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் இடை-விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. யார் வருகிறார்கள், போகிறார்களென்பதை அறிந்துகொள்ள என்னால் முடியவில்லை. அது என்ன மூடுமந்திரமோ அல்லது யோக தந்திரமோ நானறியேன். பொழுது புலர்ந்தது.

திரிசங்குவிடம் ஊருக்குப் போக விடை பெற்றுக் கொண்டேன். இரவில் நடந்த நிகழ்ச்சியைக் கேட்கவும் நான் தவறவில்லை. அதற்குத் திரிசங்கு தாடியைத் தடவிக் கொண்டே ‘கவிதை இயற்றுவதற்கு நேரம் காலம் என்று ஏதாவது இருக்கிறதா! ஏதோ வெறி வந்தது; பாடினேன். அவ்வளவுதான்’’ என்று சொல்லிவிட்டு, உள்ளே போய் அய்ம்பது ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து என் கையில் திணித்தார்.

பாலைவனத்தில் இனிய நீரூற்றுக் கிளம்பிய மாதிரி இருந்தது எனக்கு. ஒரு மாதத்தின் கவலையை அல்லவா போக்கி இருக்கிறார் திரிசங்கு!

நான் அங்கிருந்து கிளம்பினேன். திரிசங்கு இடைமறித்து “மோகனசுந்தரம்! நீ இனிமேல் அடிக்கடி இங்கு வரும் வழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். தெரிகிறதா? உனக்குப் பக்குவநிலை போதாது. போய் ஒழுங்காகக் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்க வழியைப் பார்த்துக் கொள்’’ என்று சொன்னார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கு அர்த்தம் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எனக்குப் புலப்பட்டது. தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக்கொண்டு வரும்போது; அது பின் வருமாறு:

“மதுவிலக்குப் போலீஸாரின் வேட்டை”

“தீர்த்தங்குடி பிரம்மானந்த சுவாமியின் ஆசிரமத்தில் கள்ளச் சாராயம் ஏழு பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கஞ்சா, அபின், லேகியம் முதலான போதை தரும் பொருள்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆசிரமத்திலுள்ள முப்பது சீடர்களும் (இவர்கள் முன்னாள் குடிகாரர்கள்) இதற்கு உடந்தையாய் இருந்தார்கள் என்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்-கிறார்கள். போலீஸார் மேலும் புலன் விசாரித்து வருகின்றனர்.’’

இதைப் படித்ததும் என் தலை ‘கிர்’ரென்ற சுழல ஆரம்பித்தது. “அந்த மயக்கத்திலும் அய்ம்பது ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து உதவிய நண்பர் திரிசங்குவின் உருவத்தை மறக்க என்னால் முடியவே இல்லை. ‘சஞ்சீவிச்சாலை’ என்கிற பெயரைக் கேட்கும்-போதெல்லாம் அவருடைய நினைவுதான் என் நெஞ்சை வந்து தொட்டுச் செல்கிறது.

(இளமைப்பித்தன் சிறுகதைகள் நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *