சென்ற இதழ் தொடர்ச்சி…
ரவிசங்கர் கண்ணபிரான் தலைமையுரை
பெரியார் திடலில் அறிவு துயில் கொண்டு இருக்கும் தமிழினத் தலைவர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நீள்துயில் கொள்ளும் அந்த மூலையில் கரம் கூப்பி வணங்கிக் கொண்டு இவ்வுரை துவக்குகிறேன்.
அமெரிக்காவில் பெர்க்ளிக் பல்கலைக்கழகத்தில் ‘இளங்கோ வென்ற தமிழ் _ கம்பன் கொன்ற தமிழ்’ என்னும் ஆய்வுத் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றேன். என்னுடைய இப்படிப்புக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அவற்றை எல்லாம் வென்று பட்டம் பெற்றேன். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் கல்விக் கதவைத் திறந்த இயக்கம் திராவிட இயக்கம். உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்விக் கதவைத் திறந்தது திராவிட இயக்கம்தான்.
பெரியாருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். முதல் பிள்ளை _ ‘குடிஅரசு’, நடுப்பிள்ளை _ ‘விடுதலை’, பெரியாரின் கடைக்குட்டி “உண்மை’’ இதழ். உண்மை எப்படி கடைக்குட்டியோ அதுபோல நானும் கடைக்குட்டிதான். கடைக்குட்டியாக இருந்துகொண்டு நான் இந்த தலைமையுரையைத் துவங்குகிறேன். ‘உண்மை’ என்பது பொன்விழா இதழின் பெயர். உண்மை என்றால் என்ன?
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
என்னும் அய்யன் குறள். உண்மை மூன்று வகையாகப்படும். வாய்மை என்பது வாய் அளவில் சொல்லப்படுவது. மெய்மை என்பது,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என வள்ளுவர் கூறுகிறார். உண்மை எனச் சொல்ல வரும் வள்ளுவர், நுண்ணிய நூல் பல கற்பினும், அதை, தம் நுண்ணிய அறிவால் கற்பதே உண்மை எனக் கூறுகிறார்.
உண்மை எதுவென்றால் உள்ளத்தில் உள்ளதே உண்மை. உண்மை என்பது உள்ளுக்குள் மனதில் ஆழமாக ஒளிந்திருப்பது. அதை நீங்கள் கூறினால் மட்டுமே வெளியே சொன்னால் மட்டுமே தெரியும்.
திராவிட இயக்கம்போல் உலகில் பல இயக்கங்கள் தோன்றி உள்ளன. உலகில் தோன்றிய புரட்சி இயக்கங்களில் திராவிட இயக்கம் மட்டுமே குன்றின்மேல் விளக்குப் போல தனித்துத் தெரியும். அது என்ன வென்றால், வேறு எந்த உலக இயக்கங்களிலும் இத்தனை இதழ்கள் வெளிவந்தது கிடையாது. மொத்தம் 257 இதழ்கள் வெளிவந்துள்ளன. இவை திராவிட இயக்கங்கள் கொண்டுவந்தவை. பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருடைய ‘வெள்ளை மாளிகை’ என்னும் நூலில் என்றாவது ஒரு நாள் இந்த வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பினத்தவன் வந்து ஆள்வான் என்று சொன்னார். அவர் கூற்றுப்படி பின் ஒரு நாள் ஒபாமா வந்து ஆட்சி செய்தார். இதையே சங்கராச்சாரியார் சொல்லியிருந்தால் “என்னே ஞானதிருஷ்டி’’ என சொல்லி இருப்பார்கள். ஆனால், நம்முடைய அறிஞர் அண்ணா வரலாற்று தீர்க்கமாக அன்றே சொல்லிவிட்டார். இதனை பெரியார் இன்டர்நேஷனல் அமைப்பு மூலம் அண்ணா சொன்னபடி அமெரிக்க மாளிகைக்குச் செல்லுவோம் என உங்களிடம் கூறிக் கொள்கிறேன்.
‘உண்மை’ இதழ் உலக அறிஞர்களை நிறைய பேரை கிராமந்தோறும் அறிமுகப்படுத்தியது. திராவிடர் இயக்கத்தினர் கொண்டுவந்த அத்தனை இதழ்களும் உலகத் தலைவர்கள் வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்றது திராவிடர் இதழ்கள்தாம்! திருக்குறளை மலிவுப் பதிப்பாக வெளிக்கொண்டு வந்தவர் தந்தை பெரியார். இத்தனை சாதனை இதழ்களைக் கொண்டு வந்தவர்கள், படிப்பவர்கள், அறிவாளிகள் இல்லையாம்! வெறும் அய்ந்நூறு பேர் படிக்கும் இதழ் அறிவாளி இதழாம். என்னடா, தமிழ்நாட்டிற்கு வந்த சோதனை!
உண்மையில் வந்த சில கட்டுரைகள் சிவனின் யோக்கியதையும், ஆத்மா உண்டா, கடவுள் உண்டா, தீபாவளி பண்டிகை, சாமவேதம், அர்ச்சகர் _ ஜோதிடர் உரையாடல், பிராமணர் அல்லாத சங்கீத வித்வான்கள், நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? போன்ற கட்டுரைகளை, “விடுதலை’’யில் விரிவாக எழுத முடியாது. அதனால் தந்தை பெரியாரால் துவக்கப்பட்டது “உண்மை’’ இதழ். ‘பஞ்சாகண்ஸியாஸ் மரேன்’ போன்ற கட்டுரைகளை அய்யாவே எழுதியுள்ளார்.
கட்டுக்கதைகள் இல்லாத விழா பொங்கல் விழா, திராவிடர் திருநாள் பொங்கலின்போது துவங்கிய உண்மை இதழ்,
‘சமுதாய மாற்றத்திற்கான வாழ்வியல்’ என்னும் வாசகத்தோடு வெளிவருகிறது. பெரியாரை உலகமயமாக்கும் பெரியார் இண்டர்நேஷனல் அமைப்பு மூலம் அமெரிக்க சோம.இளங்கோவன் உடன் இணைந்து இன்னும் பல நிகழ்வுகளை நாங்கள் நிகழ்த்த இருக்கிறோம். அப்போது, “உண்மை’’ இதழின் நூற்றாண்டு விழாவிலும் நான் பேசுவேன் எனக் கூறி வாழ்த்தி அமைகிறேன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புரை
50 ஆண்டுகால “உண்மை’’யின் வளர்ச்சி என்பது _ திராவிடர் இதழின் வளர்ச்சி, பெரியாரியலின் வளர்ச்சி. தந்தை பெரியார் ‘உண்மை’ இதழைத் துவங்கும்போதே அதன் நோக்கத்தினை தனது முதல் தலையங்கத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அது இதோ,
“உண்மை’’யின் முதல் அட்டைப் படம் புத்தர் படமாகும். இதன் அடுத்த இதழில் அய்யாவே ஒவ்வொரு இதழுக்கும் ஒரு வாசகம் எழுதுகிறார். அதில் புத்தி உள்ளவனே புத்தன், சிந்திப்பவனே சித்தன், சிந்திப்பவன் எவனோ அவனே சித்தனாக முடியும் என்கிறார். எது பொய்யோ அதை உண்மை என நினைக்கிறார்கள்; எது உண்மையோ அதை பொய் என மக்கள் நினைக்கிறார்கள். இதை மாற்ற வேண்டும் என அய்யா நினைக்கிறார். அதற்காகவே ‘உண்மை’ இதழைத் துவக்கினார். “இந்தப் பணியைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, என்பது எனக்குத் தெரியாது. ஆனால், யாரும் இந்தப் பணியைச் செய்ய முன்வரவில்லை. எனவே, நான் செய்ய முன் வருகிறேன். ஆகையால் எனக்கு யோக்கியதை இருப்பதாகவே கொள்கிறேன்’’ என தந்தை பெரியார் பெருமையுடன் கூறுகிறார்.
திருச்சியில் வெளியீட்டு விழாவில் தந்தை பெரியார் பேசுகையில், “அரசாங்கம் என்பது மக்களை அடக்கி ஆளவும், அவர்களை மடையர்களாக ஆக்கவும், மடையர்களாக இருந்தால்தான் அடக்கி ஆள முடியும் என்பதால், அவர்களை மடையர்களாக வைப்பதையே தன்னுடைய கடமையாக்கிச் செய்கிறது.’’ இதனை மாற்றும் நோக்கிலே இந்தப் பத்திரிகையைத் துவங்குவதாகக் கூறுகிறார்.
இந்த மாபெரும் பணியை என்னிடம் கொடுக்கையில், எனக்குக் குருவி தலையில் பனங்காய் வைத்தது போல பெரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன். அவர் ஆணையிட்டால் ஏற்றுப் பணி செய்வதே ஒவ்வொரு பெரியார் தொண்டனின் முக்கியப் பணியாகும். அந்த வகையில் அதனை ஏற்றுப் பணி செய்து வருகிறேன். தத்துவரீதியான முறையில் மக்களை உண்மையாக அறிவாளியாக்குவது யார்? இதனைக் கொள்கையாகக் கொண்டு அறிவு பெறச் செய்யவும், அறிவினை விசாலமாகச் செய்யவும், அறிவினை அகண்டாமாக்கவும் “உண்மை’’ பணி செய்யும் என்னும் கொள்கையில் நடைபெற்று வருகிறது. ‘விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை’ என்னும் வழியில் அத்தகைய மானிடப் பார்வை பார்த்த இயக்கம் திராவிட இயக்கம். எப்படி எல்லாம் சிந்தித்து உண்மையைக் கூறுகிறார் தந்தை பெரியார். இதனை யாராவது மறுக்க முடியுமா? வேண்டுமென்றால், குறை சொல்லியும், புரளி பேசலாம். அதில் உள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றில் அரசுகள் மக்களை அறிவுடையவர்களாக மாற்றாமல், அவர்களை மடையர்களாக மாற்றத்தான் முயற்சி செய்கிறது.
மனிதன் எதற்காக கடவுளை உருவாக்கினான் என்று சிந்திக்கும்போது, மக்களை மடையராக்கவும், அவர்கள் மடையராக இருந்தால்தான் அடக்கி ஆள முடியும் என்பதால்தான் கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட புராணங்கள், கட்டுக்கதைகள், பொய்கள், மூடநம்பிக்கைகள், மதம், இதிகாசம் போன்ற புரட்டுகளை எல்லாம் ஆதாரத்தோடு எடுத்துக் கூற வேண்டும் என்னும் நோக்கில் “உண்மை’’ பணி செய்யும் என்கிறார்.
தந்தை பெரியார் ‘ராமாயண ஆராய்ச்சி’ எழுதினார். அது பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ‘ராமாயண ஆராய்ச்சி’ நூல் வெளியீட்டு விழாவில் ‘Truth Ramayana’ என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பில் அங்கு பரப்பும்போது அய்யாவிற்கு மிகப் பெரிய எதிர்ப்பு _ ஆங்காங்கே கருப்புக் கொடி காட்டப்படுகிறது. புலவர் இமயவரம்பன் அவர்களிடம் உள்ள புத்தகத்தை ஒரு அம்மா வாங்கி கிழித்து எறிந்தார்கள். மேடையில் உள்ள ராஜ்நாராயணன் போன்றவர்கள் கோபப்பட்டு துள்ளிக் குதித்தார்கள். பெரியார் அவர்களை அடக்கிவிட்டு, என் பேச்சைக் கேட்பவர்கள் மட்டும் இங்கிருக்கலாம். மற்றவர்கள் வெளியே செல்லலாம் என்கிறார். அதன் பின் ஒரு அம்மா வந்து அய்யாவிடம் இந்தப் புத்தகத்தை இந்தியில் மொழிபெயர்க்க அனுமதி கேட்கிறார். அய்யாவுக்கு கரும்பு தின்னக் கூலியா? என்பதுபோல! உடனே கடிதம் எழுதி அனுப்புங்கள், அனுமதி தருகிறேன் என்கிறார். அதுதான் “சச்சி இராமாயண்’’ என்னும் பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றிபெற்றது. இன்றைக்கும் பிரசாகு மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் “சச்சி இராமாயண்’’ விற்பனையில் சாதனை படைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அன்றைய அரசு (காங்கிரஸ்) இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள், “அந்தப் புத்தகத்தில் உள்ளதெல்லாம் ஆதாரப் பூர்வமானவை’’ எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. கருத்துச் சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறியது _ இதுதான் பெரியாரின் வெற்றி. எதையும் ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறும் பகுத்தறிவு.
உத்தரப்பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர், பென்ச் அமர்வில் விசாரித்த நீதிபதி ஆயிரம் பூக்கள் மலரட்டும், அவர் வால்மீகி இராமாயணத்தில் உள்ளதைத்தானே எடுத்துக் கூறி உள்ளார் எனக்கூறி தீர்ப்பே தந்தது. இன்றைக்கு அதே உத்தரப்பிரதேசத்தில் அந்தப் புத்தகம் விற்பனையாகி வருகிறது. எதிர்நீச்சல் எனச் சொல்பவர்கள் _ அதைப் பெரியார் செய்து வெற்றி பெற்றதுதான் வரலாறு.
“உண்மை’’யில் அய்யா எழுதிய, “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’’ என்னும் கட்டுரையின் சாராம்சம் எதுவென்றால் கடவுள் பற்றி மய்யப்படுத்திய நேரத்தில் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என கடவுள் மறுப்பைச் சொன்னார். இதில் அவருக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள். அவர் மீது கோபப்படுகிறார்கள். அவர் ஒரு விஞ்ஞானிபோல கடவுளைப் பற்றிய கருத்து பழைய காலத்தில் அவனுக்கு விவரம் தெரியாத காலத்தில் இயற்கையாகத் தோன்றிய மின்னல், காற்று, நெருப்பு, இடி போன்றவற்றைக் கண்டு பயந்தான். அவற்றைக் கும்பிட்டான். அதைக் கும்பிடுபவனை தன்னுடைய ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டுவந்து பயன்படுத்த நினைத்தவன் அயோக்கியன். முட்டாளை மன்னிக்கலாம், அயோக்கியனை மன்னிக்க முடியாது. முட்டாள் அவற்றைத் தெரியாமல் செய்தவன்; அயோக்கியன் அந்தத் தவறை தெரிந்தே அதைப் பயன்படுத்த வேண்டுமென நினைக்கிறான். இப்போதும் இதனை வைத்துக்கொண்டு மார் அடிப்பது காட்டுமிராண்டித்-தனம்-தானே!
இன்றைய காலகட்டத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரம் பற்றி ஒன்பது நீதிபதிகள் உட்கார்ந்துகொண்டு, ஏற்கெனவே கொடுத்த தீர்ப்பைப் பற்றி பேச வேண்டிய நிலையில் இருக்கிறது. இன்னொரு பக்கம் அரசியல் சட்டத்தின் அடிப்படை கடமை என்னவென்றால், “Article 51A of our constitution which deals with fundamental duties makes it a duty of every citizen to develop a Scientific Temper…. It is the Scientific Temper that helps in developing Secularism, Humanism & Spirit of inquiry and reform” என்பது அடிப்படைக் கடமை என்று போட்டுவிட்டு, இந்தப் பணியைச் செய்வது எது? திராவிடர் கழகத்தைவிட, பகுத்தறிவாளர் கழகத்தைவிட யார் இந்தப் பணியை எடுத்துச் செய்வது? நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? கட்டுரையில் கடவுள் தானாகக் தோன்றினான் எனில், ஏன் எல்லோருக்கும் ஒரே மாதிரி தோன்றவில்லை? ஆளுக்கு ஒவ்வொரு மாதிரி ஏன் தோன்ற வேண்டும்? என கேள்வி கேட்கிறார்.
கடவுள் மறுப்பு வாசகத்தை எதிர்த்து இப்போது நடந்த வழக்கிலும் திராவிடர் கழகம் வெற்றிபெற்றது. அந்தக் காலத்தில் அய்யாவின் சிலைக்குக் கீழே உள்ள வாசகத்தைப் பார்த்துவிட்டு ஒருவர், “அய்யா, சிலை உங்களை மாதிரி இல்லை. இன்னும் கொஞ்சம் சரி செய்யலாமா எனக் கேட்க, அதற்கு அய்யா, “சிலை முக்கியமல்ல; அதன் கீழ் உள்ள வாசகமே முக்கியம், அந்தக் கொள்கையே முக்கியம் எனக் கூறினார். மேலும், அந்தக் கொள்கைதான் நான். அதில் முக்கியமானது எது தெரியுமா? கடவுள் மறுப்பு வாசகத்திற்கு கீழே உள்ள “இல்லவே இல்லை’’ அதுதான் முக்கியம். இல்லை என்றால் என்னை நாளைக்கு கடவுளாக்கிவிடுவார்கள். புதிய அவதாரமாக்கி விடுவார்கள். அதுதான் முக்கியம். என் கொள்கைதான் முக்கியம் என எடுத்துக் கூறினார்.
அந்தக் கடவுள் வாசகத்தை தற்சமயம் பெரியார் போடவில்லை, அதை வீரமணி போட்டார் எனக் கூறினார்கள். அதற்கு தக்க ஆதாரங்களை எடுத்துக் கொடுத்து வெற்றி பெற்றோம். நம்முடைய கொள்கை எதிரிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்தத் தீர்ப்பு கூறும் நீதிபதிகளில் ஒருவர் பிராமணராகவும் இருந்துள்ளார். இதுதான் உண்மையில் வெற்றி. எப்போதும் நம்முடைய எதிரிகள் நம்மை இன்னும் பலமாக்குவார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
இதைப்போல பழைய தீர்ப்பில் _ நீதிபதி இஸ்மாயில் கூறிய தீர்ப்பில் அவரைக்கூட ஆவணத்திலிருந்து எடுக்க முடியவில்லை. தேட வேண்டிய நிலை. இதுபோல தீர்ப்புகளை, “உண்மை’’ போன்ற இதழ்களில் பதிவு செய்து உள்ளோம். இதற்கு இதுபோன்ற ஏடுகள் தேவைப்படுகின்றன. இதுதான் “உண்மை’’யின் பொன்விழா வெற்றி. எனவே, தோழர்களே! கூட்டத்தில் துண்டு, பரிசுப் பொருள் தருவதை தவிர்த்துவிட்டு உண்மை சந்தாக்களை கொடுங்கள். புதிய சந்தாதாரர் ஒரு வருடம் உண்மையைப் படித்தால் போதும், அவருக்கு அதில் நிறைய பகுத்தறிவுச் செய்திகள் கிடைக்கும். அவரும் மாறுவார்; சமுதாயத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவார்.
இவ்வாறாக சந்தாக்களை அதிகப்படுத்த வேண்டிய நிலை. அய்யா காலத்தில் மாதத்திற்கு ஓர் இதழாக வந்தது. அம்மா காலத்தில் மாதத்திற்கு இரு இதழாக மாறியது. இன்னும் வளர்ச்சி பெற்று வாரத்திற்கு ஓர் இதழாக வளர வேண்டும் எனக் கூறிக்கொள்கிறேன். விரைவில் அதற்கான முயற்சியும் நடக்கும்.
சந்தா பற்றிக் கூறும்போது ஒரு நிகழ்ச்சியை மட்டும் கூறிக்கொள்கிறேன். மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தந்தை பெரியார் விழாவில் _ சத்திய சாயிபாபா பற்றிக் குறிப்பிட்டுப் பேசியதற்காக, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஈழத்தமிழரான பாரீஸ்டர் ஜெயராம் என்பவர். அவரது ‘ராம்_ரயஸ்_யாப்’’ என்னும் வக்கீல்கள் குழுவின் சார்பாக வழக்குத் தொடர அச்சுறுத்தி நோட்டீஸ் அனுப்பி, நாமும் அதை ஏற்று பதில் நோட்டீசைத் தந்து, வழக்கை அங்கேயே சந்திப்பதற்குத் தயார் என்று கூறியபின் 6_8 மாதங்கள் கழித்து அதே வழக்குரைஞரிடமிருந்து இன்ப அதிர்ச்சிக் கடிதம் வந்தது.
இளைஞர்களை ‘ஒயிட்பீல்டு’ (சாயிபாபா ஆசிரமம்)க்கு பாபாவிடம் அனுப்பினோம். அவர்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டார். எனவே, தாங்கள் கூறியது உண்மை _ முழு உண்மை என்று உணர்ந்து விட்டதோடு, அவர் பற்றி நிறைய உண்மையான தகவல்களைப் பரப்ப, தங்களிடம் உள்ள ஆதாரங்களை உடனே எங்களுக்கு அனுப்புங்கள் என்று கேட்டார்கள்! ‘உண்மை’ ஏட்டில் அக்கடிதமும் பிரசுரமானது. அவர்களும் ‘உண்மை’ இதழுக்குச் சந்தாதாரராக மாறி வாசிக்கத் துவங்கினார். இதுதான் “உண்மை’’யின் பொன்விழா வெற்றி _ தந்தை பெரியாரின் வெற்றி! “உண்மை’’ இன்னும் பல உண்மைக்கு மாறான கருத்துகளை வென்று சாதனை படைக்கும்!