நெ.முகிலன்
மானமும் அறிவும் கொண்டு வாழ்பவனே மனிதனாவான்.
பகுத்தறிவு அற்றவன் விலங்குக்கு ஒப்பாவான்.
எதையும் பகுத்தாய்வு செய்வதே பகுத்தறிவின் இயல்பு.
எப்பொருளையும் பகுத்துப் பார்த்து, ஆய்ந்து மெய்ப்பொருள் காண்பது பகுத்தறிவின் பயன்.
அறிவியல் முறைப்படி மெய்பிக்கப்படாத எதனையும் பகுத்தறிவு ஏற்காது.
யார் எதைக் கூறினாலும் ஏன்? எதற்காக? எப்படி? என்று வினாக்களை எழுப்பி உண்மையைக் கண்டறிவான் பகுத்தறிவாளன்.
அந்த மூடநம்பிக்கையால் வரும் கேடுகள் பல. அவற்றுள் அடியில் சில:
ஜாதி மூடநம்பிக்கை
மேல்ஜாதி, கீழ்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதெல்லாம் மூடநம்பிக்கையே. அறிவியல் அடிப்படையில் அது சரியல்ல. இந்த மூடநம்பிக்கையால் பல உயிர்கள் கொலையாவதோடு எத்தனையோ அழிவுகளும் அதனால் ஏற்படுகின்றன.
சுவர்க்க மூடநம்பிக்கையால் 3000 பேர் மாண்டனர்
அமெரிக்காவில் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் வாக்கோ (Waco) என்னும் பகுதியில் சமயக்கூடம் அமைத்தவர் டேவிட் கொரேசு (David Koresh) அவருக்கு 3000 அடியார்கள் உண்டு. தன்னைக் கடவுள் என்றும், கடவுள் தன்னிடம் உரையாடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அதை அவருடைய அடியார்கள் அப்படியே நம்பினார். அது ஒரு மூடநம்பிக்கையேயாகும்.
உரிமம் பெறாமல் அளவற்ற போர்க்கருவிகளை வாங்கிக் குவித்தார் கொரேசு. இதை அறிந்த காவல்துறையினர் அவ்விடத்தை முற்றுகையிட்டனர். அரசு நம்மை அழிக்க முனைந்துவிட்டது; நாம் அவர்களிடம் சிக்காமல் சுவர்க்கம் போக வேண்டும் என்றார், கொரேசு. 1993 ஏப்ரல் 19ஆம் நாள் கொரேசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அடியார்கள் உள்ளே தீ வைத்துக் கொண்டனர். அனைவரும் கருகிவிட்டனர்.
(What Everyone Should know about the 20th century P-279)
யார் எதைக் கூறினாலும் கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுவது மூடநம்பிக்கையாகும்.
கடவுள் மூடநம்பிக்கையால் 235 பேர் தற்கொலை
தென்மேற்கு உகாண்டாவில் கனுங்கு என்னும் சிற்றூரில் ஒரு தேவாலயத்தில் மூடநம்பிக்கை நிகழ்ச்சி ஒன்று 17.3.2000 அன்று நடைபெற்றது. கடவுளின் பத்துக் கட்டளைகளைப் புதுப்பிக்க வேண்டும், என்னும் ஓர் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 235 பேர் ஒரு தேவாலயத்துக்குள் 17.3.2000 அன்று காலை சென்றனர். பல மணி நேரம் கூட்டு வழிபாடு நடத்திய பின்னர் அவர்கள் அவர்களுடைய உடல்களுக்கு நெருப்பு வைத்துக் கொண்டனர். இதுபோல் எத்தனையோ நிகழ்வுகள்.
மூடவிழாக்களில் உயிர்ப்பலி
1992 பிப்ரவரி 18இல் கும்பகோணத்தில் மகாமக விழா நடைபெற்றது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மகாமகக் குளத்தில் நீராட கும்பகோணம் வந்தார்கள். குளத்தின் கொள்ளளவு 40 ஆயிரம் பேர். ஆனால், அதைவிடப் பல மடங்குக் கூட்டம் குளத்தில் நின்றது. முதல்வர் நீராடுவதைக் காண ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு சென்றதால் நெருக்கடியில் பலர் இறந்தனர்.
மூடநம்பிக்கை விழாக்களால் உயிரிழப்பு
கோயில் விழாக்களில் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக,
1999 _ சனவரி 4, கேரளா பம்பையில் _ 50 பேர்
2003 _ ஆகஸ்ட், நாசிக் கும்ப மேளாவில் _ 40 பேர்
2008 _ ஆகஸ்ட் 3, இமாசலப்பிரதேசம் நைனா தேவி கோவிலில் _ 150 பேர்
2008 _ செப்டம்பர் 30, சோத்பூர் சாமுண்டி கோயிலில் _ 250 பேர்
2010 _ மார்ச் 4, உ.பி. கிருபால் மகராஜ் முனிவருறையுளில் _ 63 பேர்
2011 _ சனவரி சபரிமலையில் _ 104 பேர்
2014 _ ஜூலை 14, இராஜமுந்திரி கோதாவரி புஷ்கர விழாவில் _ 27 பேர்
ஜோதிட மூடநம்பிக்கையால் குடும்பமே அழிவு
நேபாள இளவரசர் ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது அவருடைய அகவை 29. மன்னரின் குடும்பத்தினர் அதை எதிர்த்தனர். ஏனெனில் இளவரசருக்கு 35 அகவைக்குள் மணம் செய்து குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் தந்தை இறந்து விடுவார் எனக் காலக்கணிதர் (சோதிடர்) கூறினாராம். திருமணத்திற்குத் தடை போட்டதால் சினம் கொண்ட இளவரசர் தன் கைத்துப்பாக்கியை எடுத்துப் பெற்றோர்கள் உள்பட எட்டுப்பேர்களைச் சுட்டு விட்டுத் தானும் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்.
பேய் ஓட்டும் மூடநம்பிக்கை!
இறந்தவர்கள் பேயாக அலைவர். அவர்கள் மனிதர்களை பிடித்துக் கொள்வர் என்னும் மூட நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதை ஓட்டுவதற்காக அவர்களை சாமியார் எருக்கன் குச்சியாலும் சவுக்காலும் அடித்துத் துன்புறுத்துவார்.
தீ மிதித்தல், அலகு குத்துதல்
அலகு, தீமிதி மூடநம்பிக்கையால் தீ மிதித்தல், தீச்சட்டி தூக்குதல், அலகு குத்துதல், கத்தி போடுதல் போன்ற கொடிய செயல்களைச் செய்கின்றனர். அவ்வாறு செய்தால் கடவுள் அருள்புரிவார் என்பது அவர்களின் மூடநம்பிக்கை. இவற்றைச் செய்வதற்கும், கடவுள் அருளுக்கும் தொடர்பே இல்லை. இந்த மூடநம்பிக்கையால் தீவிபத்துகள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சவுக்கடியும் தலையில் தேங்காய் உடைத்தலும்
பைத்தியம் பிடித்தோர், பேய் பிடித்தோர் சவுக்கடி வாங்கினால் பைத்தியம் தெளியும். பேய் ஓடிவிடும், குழந்தையில்லாத பெண்கள், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் மற்றும் தொழில் சிறக்கவும், குடும்பம் செழிக்கவும் வேண்டிக் கொண்டு சவுக்கடியைப் பெற்றால் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் என்பது மக்களின் மூடநம்பிக்கை. பூசாரியிடம் சவுக்கடி வாங்குபவர்கள். இதனால் பயன் ஏதும் இல்லை ஆனால், பாதிப்புகள் அதிகம். அதேபோல், தலையில் தேங்காய் உடைப்பதும் மோசமான மூடநம்பிக்கை இதனால் மூளை பெரிதும் பாதிக்கப்படும்.
தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டால் கடவுளின் அருள்கிட்டும் என்ற மூடநம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.
தேங்காயைத் தலையில் உடைக்கும்போது மூளைக்குத் தீங்கு ஏற்படும். இதனால் குருதிக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உயிருக்கே ஊறுவிளைவிக்கக் கூடும். பக்கவாதம் போன்ற நோயும் வரலாம். பல பேர்களின் மண்டைகள் உடைந்து குருதி பீறிட்டு இருக்கிறது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
நல்ல நேரம் – கெட்ட நேரம்
நல்லநேரம், கெட்டநேரம், இராகு காலம், குளிகை, எமகண்டம், வாரசூலை பார்ப்பது, சீர், சடங்குகள் செய்வது ஆகிய அனைத்தும் மூடநம்பிக்கையால் செய்யப்படும் செயல்களே. உண்மை எதுவுமில்லை. இதனால் நமது பொன்னான நேரத்தில் பலமணி நேரம் பாழாகிறது.
மூடநம்பிக்கையை விட்டொழிப்போம்! பகுத்தறிவால் பண்படுவோம்!