Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

விழிப்புணர்வு – சொந்தத்தில் திருமணம் கூடாது! ஏன்?

 

சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக உறவுகளுக்குள் திருமணம் செய்வது பல்லாண்டுகளாக இருந்துவரும் பழக்கம். ஆனால், இதனால்  சந்ததிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் நீண்ட காலமாக அறிவுறுத்தி வருகிறார்கள். அதனை உறுதிப்படுத்தியுள்ளது – சமீபத்தில் வெளியாகியுள்ள மத்திய அரசின் ஆய்வறிக்கை!

“ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வதால் குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகப் பிறப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் 24.5 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உறவுமுறை திருமணத்தால் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறப்பது 27 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 20.7 சதவிகிதமாகவும் உள்ளது. இந்தப் பட்டியலில் அருணாச்சலப் பிரதேசம் 46.4. புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது’’ என்கிறது அந்த ஆய்வறிக்கை.

குரோமசோம்தான் காரணம்!

இது குறித்து, மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் இந்திரா நெடுமாறன் கூறுகையில், “நமது உருவம், நிறம், பாத அமைப்பு,இதயத் துடிப்பு, நக வளர்ச்சி உள்பட நம் உடலை குரோமோசோம்கள்தான் முடிவு செய்கின்றன. நாம் எப்போது இறப்போம் என்பதைக்கூட முடிவு செய்வதும் குரோமோசோம்கள்தான். உடம்பு – செல்களால் ஆனது. அதிலுள்ள நியூக்ளியஸில் உள்ளதுதான் குரோமோசோம்.

ஒவ்வொரு மனிதருக்கும் உடம்பில் 46 குரோமோசோம்கள் இருக்கும். இதில் 23 குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும் 23 குரோமோசோம்கள் அம்மாவிடமிருந்தும் வருகின்றன. அதனால்தான் உருவ அமைப்பு, பழக்க வழக்கங்களில் பெற்றோர்கள் மாதிரி குழந்தைகள் இருக்கிறார்கள்.

குரோமோசோம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே ஒரே மாதிரி இருக்கும் என்பதால்தான் குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகப் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. சொந்தத்தில் இல்லாமல் வெளியிலிருந்து திருமணம் செய்தால் புதுவகையான குரோமோசோம்களாக இருக்கும் என்பதால் குழந்தைகள் மாற்றுத் திறனாளியாகப் பிறப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.

சொந்தத்தில் திருமணம் செய்யும்போது ஒரே மாதிரியான மரபணுக்கள்தான் எல்லோருக்கும் இருக்கும். அதனால், ஜெனிட்டிக் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. பழக்க வழக்கங்கள், தோற்றங்களை மட்டுமல்ல; சொந்தங்களிடம் உள்ள உடல்நலப் பிரச்சினைகளையும் சந்ததியினருக்கு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். சர்க்கரை நோய், கேன்சர், இதய நோய் உள்பட பல ஜெனிட்டிக் பிரச்சினையால் வருபவைதாம். சொந்தங்களுக்குள் நிகழும் திருமணத்தால் ரத்தச் சிவப்பணுக்கள் பிரச்சினையான தாலசீமியாவும் வரும். இதுவும் பரம்பரை பரம்பரையாக ஏற்படக்கூடிய நோய்தான் என்கிறார் மருத்துவர் இந்திரா.

வெளிநாடுகளில் எல்லாம் ஜெனிட்டிக் டெஸ்ட் எடுத்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்படியே பிரச்சினைகள் வரும் என தெரிந்தால் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வார்கள். இப்பிரச்சினைக்குத் தீர்வு – வெளியில் திருமணம், காதல் திருமணம் போன்றவைதாம்! இதன்மூலம் 95 சதவிகிதம் குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகப் பிறப்பதைத் தவிர்த்து விடலாம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல் ராஜா கூறுகையில், “குறிப்பிட்ட சில சமூகங்களில் திருமணம் என்றாலே தாய்மாமன் அல்லது தாய்மாமன் மகனுக்குத்தான் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். கல்வி, தொழில் காரணமாக அண்மைக் காலங்களில் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளோம். ஆனால், சினிமாவில் தாய்மாமன்கள், மாமன் மகன்களுக்கு திருமணம் செய்வது, சீர் செய்வது என்றெல்லாம் காட்டி, இதனையெல்லாம் விட்டுவிடக் கூடாது என்று காட்டி முக்கியத்துவப் படுத்துகிறார்கள்.

குறிப்பாக, சுயஜாதிப் பெருமை பேசும் எல்லா சமூகங்களிலும் சொந்தத்தில் திருமணம் செய்வது நடக்கிறது. சொத்து போய்விடக் கூடாது என்பது காரணமாக இருந்தாலும் ஜாதியும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. அறிவியலுக்கு எதிராகத்தான் நம்

மக்கள் இருக்கிறார்கள்’’ என்கிறார் வேதனையுடன்.