– சிகரம்
“வாசு மன்னன் தன்னரசைத் தன் மகன் விவாசனனுக்கு அளித்து, புஷ்கர தீர்த்தம் அடைந்து, அங்கு புண்டரீகாக்ஷனை முன்னிட்டு ஒரு யாகம் செய்ய, யாகத் தீயிலிருந்து ஓர் உருவம் தோன்றி வாசுவின் முன் நின்று, “உங்கள் ஆணை என்ன?’’ எனக் கேட்டது.
வாசு அந்த உருவத்தைப் பார்த்து, “நீ யார்? எங்கிருந்து வந்தாய்?’’ என வினவினான். அதற்கு அவ்வுருவம் கூறிய வரலாறு கீழே தரப்பட்டுள்ளது:
முற்பிறவியில் வாசு, காசுமீர மன்னனாக இருந்தான். அவன் ஒரு சமயம் வேட்டையாடச் சென்றபோது ஒரு மானைக் கண்டு அதை அம்பெய்திக் கொன்றுவிட்டான். அது உண்மை மானல்ல; ஒரு முனிவர் மான் வடிவில் திரிந்து கொண்டிருந்தார். அதை அறிந்த வாசு தான, தர்மங்களும், மற்ற சமயச் சடங்குகளும் செய்வதுடன் தவமும் இயற்றினான். முடிவில் வயிற்று வலியால் அவன் மரணமடைந்தான். மரணத் தறுவாயில் ‘நாராயணா’ என்கிற பகவான் நாமத்தை உச்சரித்தான்.
பின்னர் யாகத் தீயிலிருந்து தோன்றிய உருவம், தான் ஒரு பிரம்மராக்ஷசன் என்றது. வாசு மான் வடிவில் இருந்த மானை அதாவது பிராமணனைக் கொன்றதால் அது வாசு மன்னன் உடலில் புகுந்து இருந்ததாகவும், அதுவே அவனது மரணத் தறுவாயில் தண்டனையாக வயிற்று வலி கொடுத்ததாகவும் கூறிற்று.
வாசுவின் நாராயண நாம உச்சரிப்பால் அவன் விஷ்ணு தூதர்களால் சொர்க்கம் அழைத்துச் செல்லப்பட்டான். விஷ்ணு தூதர்கள் பிரம்ம ராக்ஷசை வாசுவின் உடலிலிருந்து விரட்டி அடித்தனர். வாசு சொர்க்க லோகத்தில் பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்தான். மறுபடியும் அவன் காசுமீர் மன்னனாகத் திரும்பவும் அந்த பிரம்மராக்ஷசன் அவன் உடலில் பிரவேசித்தது. எனினும் வாசு, புண்டரீகாக்ஷனை தியானித்து அவன் நாமங்களை உச்சரித்து யாகம் செய்ய அது விலகியது. இப்போது அதன் பாவங்கள் புண்டரீக நாமங்களைக் கேட்டதன் பயனாக விலகிவிட்டன. அது மறுபடியும் ஒரு தர்மவான் ஆயிற்று.” என்று கூறுகிறது இந்துமதம்.
மேற்கண்ட பகுதியில், 1. முனிவன் மானாக மாறி மேய்ந்து கொண்டிருந்தான் என்றும், 2. நாராயணன் என்று சொன்னால் எல்லா பாவமும் விலகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மனிதன் மனிதனாகவும், மான் மானாகவும் பிறந்து வாழ முடியுமே தவிர, மனிதன் மானாகவோ, மான் மனிதனாகவோ மாற முடியாது என்பது அறிவியல் உண்மை. அப்படியிருக்க மனிதன் மானாக மாறினான் என்று, அறிவியலுக்குப் புறம்பான கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாக இருக்க முடியும்? இது மடமையின் உச்சம் அல்லவா?
அதேபோல், நாராயணன் பெயரைச் சொன்னால் எல்லா பாவமும் தொலையும் என்று கூறுவது அறிவியலுக்கு முரண். நோய் என்பது சிகிச்சையால்தான் தீரும். மாறாக, கடவுள் பெயரை உச்சரித்தால் நோய் தீரும் என்பது மூடநம்பிக்கை. அறிவியலுக்கு எதிரானது. இப்படிப்பட்ட மூடக் கருத்துகளின் மொத்த வடிவமான இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
ஹிரண்யாக்ஷன் தேவர்களைத் துன்புறுத்த எண்ணி உலகத்தையே பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு சமுத்திரத்துக்கு அடியிலே போய் ஒளிந்து கொண்டு விட்டான். தேவர்கள் நாராயணனிடம் சென்ற முறையிட, அவரும் அரக்கனிடமிருந்து உலகத்தை மீட்க எண்ணி, பிரம்மதேவனின் நாசியிலிருந்து வராக உருவம் எடுத்து அவதரித்தார்.
வராக உருவம் எடுத்த நாராயணன் அரக்கனைத் தேடிக் கொண்டு சமுத்திர தீரத்துக்கு வந்தார். அங்கே நாரதர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.
நாரதர் விஷ்ணுவை அறிந்து அவரைத் துதிக்க, நாராயணன், “நாரத மகிரிஷே, ஹிரண்யாக்ஷனைத் தேடிக் கொண்டு வந்துள்ளேன். பாதாள லோகம் வரை சென்று திரும்பும்வரை கடல் நீரைப் பானம் செய்து வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.
“பிரபோ, அப்படியே செய்கிறேன்’’ என்ற நாரதர் சமுத்திர நீர் அனைத்தையும் உள்ளங்கையிலே ஏந்தி ஆசமனம் செய்து வாயிலே நிறுத்திக் கொண்டார்.
சமுத்திர நீர் வற்றிவிடவே அடியினுள் பதுங்கியிருந்த அரக்கன் வெளிப்பட்டான். நாராயணன் அவனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்தார். நாரதரும் வாயிலே வைத்திருந்த நீரை வெளிப்படுத்த, மீண்டும் சமுத்திரத்தில் நீர் நிறைந்தது.
தேவியோடு ஆனந்தமாகப் பொழுதைப் போக்கி வந்த பரமேச்வரன் அங்கு வந்த புறாவைக் கண்டதும், “யாரடா வந்திருப்பது?’’ என்று கேட்டபடி கோபமாக எழுந்தார். அப்போது அவரிடமிருந்து வீரியம் வெளிப்பட்டது. அடுத்த கணம், வந்திருப்பது அக்கினி தேவன் என்பதும், அவன் வந்த நோக்கம் குமாரக் கடவுளின் அவதார நிமித்தம் என்பதையும் அறிந்த ஈசன், சாந்தமடைந்து தம்முடைய வீரியத்தைக் கொண்டு சென்று கங்கையில் விடுமாறு தெரிவித்தார்.
அக்கினியும் அவ்வாறே புறா வடிவத்தோடு, ஈசனின் வீரியத்தை அவர் ஆணைப்படி, கங்கையில் விட்டார். கங்கையாலும் அதன் உக்கிரத்தை தாங்க முடியாமல் போனதால் அது தர்ப்பைப் புற்கள் வளர்ந்திருந்த சரவணப் பொய்கை எனப்படும் மடுவில் அதை சேர்த்தது. அந்த க்ஷணமே அழகிய ரூபத்தோடு குமாரன் தோன்றினான்.
அப்போது மடுவுக்கு நீராட வந்த கன்னியர் அறுவர், புற்களிடையே நீரில் மிதக்கும் குழந்தையைக் கண்டு ஓடி வந்து, என் குமாரன், என் குமாரன் என்று தூக்க வந்தனர். அவர்களிடையே பூசலை உண்டாக்க விரும்பாத சிவகுமாரன் ஆறு முகங்களோடு அவர்களுக்குத் தோற்றமளித்தான். ஒவ்வொருவரும் அவரை வாரி எடுத்து முலைப்பால் கொடுத்தனர். அதன் காரணமாக அவருக்கு ஷண்மாதுரன் (ஷண்முகன்) என்கிற பெயர் விளங்கலாயிற்று. மேலும் குமாரக் கடவுளுக்குப் பார்வதி மைந்தன், அக்கினி புத்திரன், ஸ்கந்தன், சரவணபவன், கங்காபுத்திரன் போன்ற நாமங்களும் விளங்கலாயின.’’ என்கிறது இந்து மதம்.
அதாவது, 1. கடல் நீர் முழுவதையும் ஒருவர் குடித்துவிட முடியும் என்றும், 2. விந்து நீரில் விடப்பட்டால் குழந்தையாக மாறும் _ அதுவும் ஆறுமுகங்களோடு குழந்தை உருவாகும் _ என்று இந்து மதம் கூறுகிறது.
கடல் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கி நிற்பது அல்ல; அது உலகம் முழுதும் பரவி நிற்பது. அதை ஒரு மனிதன் குடித்து வற்றச் செய்தான் என்பதைப் போன்ற அறிவியலுக்கு எதிரான மூடக் கருத்து இருக்க முடியுமா?
அடுத்து, விந்து பெண் உறுப்பு வழியாக கருப்பைக்குள் சென்றால்தான் குழந்தை உருவாகும் என்பது அறிவியல். அப்படியிருக்க விந்து நீரில் விடப்பட்டதும் குழந்தையாக மாறியது என்பது அறிவியலுக்கு அறவே பொருந்தா மூடக்கருத்தல்லவா? இப்படிப்பட்ட அறிவியலுக்கு எதிரான மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
(சொடுக்குவோம்…)