மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]

டிசம்பர் 01-15 2019

மரு.இரா.கவுதமன்

 கண் மருத்துவம்

நம் உடல் உறுப்புகளில் கண்கள்தான் பார்வை மூலம் வெளியுலகு தொடர்பை ஏற்படுத்துகிறது. பார்வையின்மை மிகவும் கொடுமையானது. ‘கண்புரை நோய்’ முதியர்களுக்கும், ‘கண் அழுத்த நோய்’ அனைத்து வயதினர்க்கும் குருடாக்கி விடும் தன்மை கொண்டவை. லேசர் ஒளிக்கற்றை மருத்துவம், கண் மருத்துவத்துறையில் பெரிய புரட்சியையே உண்டாக்கியுள்ளது. கோடிக்கணக்கில் நோயாளிகள் இம்மருத்துவத்தால் குருடாகாமல் தப்பியுள்ளனர்.

கண் புரை நோய்:

இதை நோய் என்பதைவிட, முதுமையினால் கண்ணில் ஏற்படும் இயல்பான மாற்றம் என்பதே சரியானதாகும். முதுமையில் வளர்சிதை மாற்றங்களால், விழி லென்ஸில் நாரிழைகள் படர்வதால் பார்வை மங்கும். இதுஅதிகமாகும்பொழுது ஒளி, விழி லென்ஸ் வழியே ஊடுருவது தடைப்படும். அதனால் குருடாகக் கூடிய நிலை உண்டாகும். முன்பெல்லாம், நாரிழை மூடிய விழிலென்ஸ்களை நீக்கிவிடுவர். மொத்தையான கண்ணாடியை நோயாளிகளுக்கு வழங்குவர். இயல்பாக நமக்கு ‘இருவிழிப் பார்வை’(Binocular Vision) இருக்கும். ஆனால், விழிலென்ஸ் நீக்கப்பட்ட இந்நோயாளிக்கு குழாய்ப் பார்வை (Tubular Vision) தான் இருக்கும். இவர்கள் மொத்தையான கண்ணாடிகளுடன், தட்டுத்தடுமாறித்தான் இயங்குவர். இவற்றைப் போக்குவதற்கான ஆய்வின் காரணமாகக் கண்டுபிடிக்கப்பட்டதே ‘உள்விழிலென்ஸ்’ (Intra ocular lens). இந்த லென்ஸைப் பொருத்துவதுதான் நலம். இருவிழிப் பார்வை நோயாளிகள் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஆரம்பக் கட்டங்களில் சிறிய மரப்பு ஊசியைக் கண்ணில் செலுத்தி இந்த அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. சற்று கடினமாக இருந்த இந்த செயற்கை லென்ஸ்கள், இன்று மிகவும் மெல்லியதாக, மென்மையானதாகச் செய்யப்படுகின்றன. இதன் மூலம் மிகவும் எளிமையாக இவை கண்களில் பொருத்தப்படுகின்றன. லேசர் கண்டுபிடிப்பு, இந்த அறுவை மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. லேசர் மூலம் செய்யப்படுவதால் தற்பொழுது கண்களில் ஊசி போடாமலே இந்த அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. ஏறத்தாழ பத்தே நிமிடங்களில் மருத்துவம் முடிவடைந்து விடும். முன்பு இந்த அறுவை மருத்துவம் செய்து கொண்டவர்களுக்கு, கண்ணை மறைக்க துணியாலான ஓர் உறையைக் கொடுப்பர். நோயாளி படிக்கவும், தொலைக்காட்சி பார்க்கவும், தலைக்கு குளிப்பதற்கும் தடை என, பல கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், லேசர் மருத்துவத்தால் பார்வை பெற்றவர்கள் ஒரு சில மணிகளிலே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். கண்களில் சொட்டு மருந்துகள் மட்டும் தவறாமல் சில நாள்கள் பயன்படுத்த வேண்டும்.

இதன் செய்முறையைப் பார்ப்போமா? கண்களில் மரப்பு சொட்டு மருந்தை விட்ட உடன் கண்கள் மரத்துவிடும். பின் லேசர் ஊசி (மிகவும் மெல்லியது) மூலம் விழிக் கரும்படலம் (Cornea) வழியே செலுத்தி, விழி லென்ஸை அடைவர். லேசர் மூலமே நூலிழைகளால் அடைப்பட்ட லென்ஸை சிறு துகள்களாக உடைத்து, அதை வெளியேற்றிவிட்டு, புதிய மென்மையான லென்ஸை அந்த இடத்தில் பொருத்தி விடுவர். தையல் எல்லாம் கிடையாது. மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் செய்யப்படும் இந்த அறுவை மருத்துவத்தால் கோடிக்கணக்கில் கண்பார்வை பெற்றுள்ளனர்.

கண் அழுத்த நோய்(Glaucoma) :

நம் கண்களில் நீர் சுரப்பு தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். கண்களின் உட்பகுதிகளில் சுரக்கும் இந்த நீர் தொடர்ச்சியாக ஒரு வலைப்பின்னல்  (Trabacular meshwork) வழியே கண்ணில் உள்ள அய்ரிஸ்(IRIS) சதையும், விழிக் கரும்படலம் இணையும் இடத்தில் உள்ள கோண வழியே வெளியேறும். இப்படி வெளியேறும் நீர்தான் கண்களைப் பாதுகாக்கின்றன. இயல்பாக கண்கள் உள்ளே சுரக்கும் நீரின் அளவும், வெளியேறும் அளவும் சமமாக இருக்கும். அப்படி இருக்கும் நிலையில் உள் கண் (நீரின்) அழுத்தம் 12 முதல் 22 mm/Hg என்கிற அளவில் இருக்கும். வெளியேறும் நீரின் அளவு தடைப்பட்டால், இந்தச் சமநிலை பாதிக்கப்படும். உள் கண்ணில் ஏற்படும் சுரப்பு குறையாமல் இருக்கும் நிலையில், வெளியேறும் நீரின் அளவு குறைந்தால், உள் கண்ணில் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் உள் கண் அழுத்தம் இயல்பான அளவை (22 mm/Hg) விட அதிகரிக்கும். அழுத்தம் மிகவும் அதிகரிக்கும்பொழுது கண் நரம்புகள் அழுத்தப்படும். மூளைக்குச் செல்லும் நரம்புகள் அழுத்தப்படுவதால், பார்க்கும் உணர்வு மூளைக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டு விடும். இதனால் திடீரென கண் பார்வை இழக்கும் நிலை ஏற்படலாம். கண் அழுத்த நோயால் பார்வை போனால் மீண்டும் எந்த மருத்துவத்தாலும் பார்வை வராது. பெரும்பாலும் 60 வயதிற்கு மேல் இந்நோய் வந்தாலும், எந்த வயதிலும் இந்நோய் வரலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய்  ‘திறந்த கோண கண் அழுத்த நோய்’  (Open Angle Glaucoma) எனவும், ‘மூடிய கோண கண் அழுத்த நோய்’  (Angle Closure Glaucoma) எனவும் இரண்டு வகைப்படும். திறந்த கோண கண் அழுத்த நோயில் அய்ரிஸ் சதையும், கருவிழி இணையும் கோணமும் திறந்திருக்கும். ஆனால், வலைப்பின்னலில் அடைப்பு உண்டாகி இருக்கும். மூடிய கோண அழுத்த நோயில் அய்ரிஸ் சதைக்கும், கருவிழிக்கும் உள்ள கோண இடைவெளியே அடைபட்டிருக்கும்.

நோயின் அறிகுறிகள்: பல நேரங்களில் கண் பார்வை போனாலும் சில நேரங்களில் முன் அறிகுறிகள்கூட தோன்றக் கூடும். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால் பார்வையிழப்பு ஏற்படுவதை முழுமையாகத் தவிர்க்கலாம்.

திறந்த கோண கண் அழுத்த நோய்: சிறிய, சிறிய கரும்புள்ளிகள் பார்க்கும்பொழுது தோன்றுதல், கண்ணின் நடுவிலோ, சுற்றியோ இது தோன்றலாம். அழுத்தம் அதிகமாகும்பொழுது “குழாய்ப் பார்வை’’ ஏற்படும்.

மூடிய கோண கண் அழுத்த நோய்: கடுமையான தலைவலி, கண்ணில் வலி, குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை, கண்கள் சிவத்தல், விளக்கைச் சுற்றி ஒளி வட்டம் ஆகியவை தோன்றும். இரண்டு வகை நோய்களிலும் உடனடியாகவோ, மெதுவாகவோ பார்வை இழப்பு ஏற்படும்.

மருத்துவம்: தொடர் கண் பரிசோதனை மூலம் உள்கண் அழுத்தத்தைக் கண்டறிய முடியும். ஆரம்ப நிலையில் சொட்டு மருந்துகள் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம். ஆனால், இந்த மருந்துகளை அறிகுறிகள் இல்லாவிடிலும் தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டும். லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு கருவிழிகளில் துளையிடும் மருத்துவத்தில் நீர் வெளியேற வழி ஏற்படுத்துவர். திறந்த கோண அழுத்த நோயில் இது பயனளிக்கும். சில நேரங்களில் அறுவை மருத்துவத்தால் இந்நோய் குணமடைய வைப்பர். ஏதாகிலும் ஆரம்ப நிலையில் கண்டறிந்து, மருத்துவம் செய்தால் பலன் உண்டு.

இதேபோல் விழித்திரை பாதிப்பு, மாறுகண், கண் கட்டிகள், கண் நரம்புக் கோளாறுகள் போன்றவை லேசர் மருத்துவம் மூலம் சரியாக்கப்படுகின்றன. கடவுள் சாபத்தால் உண்டானதாக நம்பப்பட்ட “மாறுகண்’’ (Squint),  பார்வை இழப்பு மருத்துவத்தால் சீரானதல்லவா?

(தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *