கவிப்பேரரசு வைரமுத்து
இந்தக் கதையின் நாயகர் நடேச அய்யரா – ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரிய ஸ்வாமிகளா என்பது கதை முடியும் வரை தெரியப் போவதில்லை; உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும்.
நடேச அய்யர் ஒரு மூன்றாம் வகை பிராமணர். ஒரு மனிதரை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதுதான் மனித குலத்தில் நிலவிவருகிற நீண்டகாலச் சிக்கல். எல்லாரையும் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? புரிந்து கொண்டால்போதும். ஏற்றுக் கொள்ளுதல் என்பது பிறிதொருவரின் பண்புநலன் சார்ந்தது; புரிந்துகொள்ளுதல் என்பது நம் அறிவு சார்ந்தது. அவரது குடும்பச் சொத்தான தென்னந்தோப்பை எனக்கு விற்பனை செய்ய வந்தபோது அவரை நான் புரிந்துகொண்டேன்.
தொழில் வக்கீல். வயது நடுத்தரம். நிறம் செஞ்சிவப்பு. உயரம் இந்திய சராசரி. பேண்ட்டும் சட்டையும் அணிந்திருந்தாலும் உச்சந்தலையில் திட்டமிட்டு நீட்டி விடப்பட்டிருக்கும் நெடுமுடியோடு காட்சி தருவது அவருக்குப் பீடுதரும் பெருமிதம் என்பது, அனிச்சைச் செயலாய் அதை அவர் தடவிக் கொள்வதில் பிரசன்னமாகும். இந்த உலகத்தையே சந்தேகிக்கப் பிறந்த கண்கள் என்று தோன்றும் _ அவற்றின் பளபளப்பில் மிதக்கும் பரிகாசம் பார்த்தால்.
அவர் நல்லவர் என்று சொல்வதற்கு நான் அவரைவிட நல்லவனா? தெரியாது. அவர் கெட்டவர் என்று சொல்வதற்கு நான் என்ன கீழ்மகனா? மாட்டேன். அவருக்கு ஊட்டப்பட்ட அறிவுக் குட்டையில் ஊறித் திளைத்து அவர் கிடக்கிறார். அது ஒரு நிலை; அவர் நிலை. எனக்கான நம்பிக்கையில் என் வாழ்வு நகர்வது மாதிரி அவருக்கான நம்பிக்கை அது.
அடடா! சொல்ல வந்ததை விட்டுவிட்டுச் சுற்றித் திரிகிறது மனசு. மயிலேறி ஊற்சுற்றப் போனவன் ஞானப்பழத்தைக் கோட்டை விட்டது மாதிரி, சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ துள்ளிப் பாய்ந்துவிட்டது கட்டுத்தறியில் நில்லாத கன்று மனசு.
மூன்றுவகை பிராமணர்களைப் பற்றிச் சொல்ல வந்தேன்.
நான் பிறப்பால் பிராமணன். அந்த உணர்வு ஆத்துக்குள்ளும் அகத்துக்குள்ளும் மட்டும் இருந்தால்போதும் என்போர் ஒருவகை.
பிராமணியம் என்பது ஒரு வாழ்க்கை முறை. மாறிவரும் லவுகீகங்களுக்கேற்ப வளைந்து கொடுத்து அந்த நூலை மட்டும் விட்டுவிடாமல் பற்றிக்கொண்டால் போதும் என்பது மறுவகை.
‘சந்திர சூரியர் போம்கதி மாறினும்’ பிறப்பு முதல் இறப்புவரை நான் பிராமணன் பிராமணன் என்று உள்ளும் புறமும் உறுதிபட வாழும் உடும்புப் பிராமணர்கள் மூன்றாம் வகை.
அதனால்தான் சொன்னேன் _ நடேச அய்யரை மூன்றாம் வகை பிராமணர் என்று.
“இதோ பாருங்கோ! மூணு தலமொறையா இந்தத் தென்னந்தோப்பு எங்க வம்ச ஸம்பத்து. மரங்களைப் பார்த்தேளா? ஸெல்வம் பொழியறது. பராமரிக்க முடியல. குடுக்கிறதா முடிவுபண்ணிட்டன். பலபேர் கேட்டுண்டே இருந்தா. குடுக்கல. பொன்னும் மண்ணும் விதிக்கப்பட்டவாளுக்குத்தானே போய்ச்சேரும்… என்ன ஸொல்றேள்?’’
“தோப்பு எங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. விலைதான் உச்சிமரத்துலேயே இருக்கீங்க. எறங்கமாட்டேங்கிறீங்க’’.
“இதோ பாருங்கோ, இந்தப் பூமிமேல எங்களுக்கொரு பக்தியே உண்டு. நீங்க வாங்கப்போறது நெலமில்ல; ஸந்நிதி’’.
அய்யர் உரையாடலில் குற்றியலுகரத்திற்கு இடமே இல்லை. உண்டு என்பதிலும் உண்‘டூ’ என்று நெடில் இடுவார். அறியப்பட்ட தமிழ்ச் சொற்களிலும் கிரந்தம் கலந்து ‘பேஸு’வார்.
தோப்புக்குள் கோயில் ஏதேனும் இருக்கிறதோ என்று முற்றிலும் பார்த்துவிட்டு, ‘சந்நிதியா?’ என்றேன் திகைப்போடு.
“நீங்க ஸ்நானம் பண்ணிட்டேளா?’’ என்றார் அய்யர் திடீரென்று.
“ஆச்சு’’ என்றேன்.
“இன்னிக்கு மாமிஸம் ஒண்ணும் பொழங்கலீயே…’’
“இல்லை’’ என்றேன்.
“பாதரக்ஷையைக் கழட்டிண்டு வாங்கோ’’ என்றார்.
தென்னந்தோப்புக்கு மத்தியிலிருந்த அந்த எளிய காரை வீட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார்.
திண்ணையைத் தாண்டி ஒரே ஓர் அறைதான் அந்த வீடு.
ஊதுவத்தியும் சாம்பிராணியும் கலந்து திரிபுவாதம் பேசியது அறையை ஆக்கிரமித்திருந்த வாசனை.
நாற்பது வாட் பல்பின் நசுங்கிய ஒளியில் சுவரில் சாந்தமாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரிய ஸ்வாமிகள்.
உள்ளே நுழைந்ததும் தரையில் விழுந்து சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து அறையெல்லாம் உருண்டு புரண்டார் நடேச அய்யர். கையிரண்டும் தரை ஊன்றாமல் கும்பிட்டுக்கொண்டே எழுந்தார்.
“இதுதான் தெய்வம் ஸயனம்பண்ணின இடம். பாதயாத்திரைபோன பரமாச்சாரியார் தங்கி யக்ஞம் பண்ணி அருள்பாலித்த இடம் இதுதான். துண்டுதான் விரிப்பு; கை தலையணை. அவல் _ பொரி _ பழம் _ பால் மட்டுமே ஆஹாரம். அதுவரைக்கும் வீடா இருந்த இந்த எடம் அவாள் தங்கிப்போன பெறகு ஸந்நிதானமாயிடுத்து. பிரம்மயக்ஞம், பிதுர் யக்ஞம், வேத யக்ஞம், பூத யக்ஞம், மானுட யக்ஞம்ன்னு அஞ்சு யக்ஞம் பண்ணின இடமோ இல்லியோ இது? நீங்க பூமி வாங்கல; பொக்கிஷம் வாங்கறேள்.’’
சங்கராச்சாரியாரையும் சேர்த்து விற்கிறாரோ என்று எண்ணுவதற்கு எனக்கு இடமிருந்தபோதிலும் தொண்டையிலிருந்து வந்த சொற்களை நாவில் நசுக்கிவிட்டேன்.
தோப்பு நல்ல தோப்பு; வளமான மண்; நிறைந்த நீர்வளம். தோப்பை அடையவேண்டுமென்றால் இவரைப் பொறுத்தருள வேண்டும். சில சம்பந்திகளைச் சகித்துக் கொண்டால்தான் நல்ல பெண் எடுக்க முடியும் என்கிற நடைமுறை தெரிந்த எனக்கு அய்யரை ஜீரணிப்பதொன்றும் சிரம காரியமாய்த் தெரியவில்லை. அவர் கேட்ட விலைக்குச் சம்மதித்தேன்.
“ஒரே ஒரு நிபந்தனை’’ என்று கண்ணைக் குத்துவது போல ஆட்காட்டி விரலை மட்டும் உயர்த்தி நீட்டினார்.
“நான் ஸொல்ற நிபந்தனை ஸட்டத்துல வராது; ஆனா தர்மத்துல வரும். பரமாச்சாரியாள் தங்கியிருந்த இந்த ஸந்நிதானத்தை நீங்க ஸந்நிதானமாகவே பாதுகாக்கணும். வெள்ளி, செவ்வாய் விளக்குப் போடணும். பரமாச்சாரியாளுக்கு விரோதமான எதுவும் உள்ள பொழங்கப்படாது’’.
என் புன்னகையை மட்டும் அவருக்கு பதிலாய்த் தந்து கொண்டிருந்தேன்.
“இதுல நிபந்தனை எதுக்கு வக்கீல் சார். நீங்க அன்பாக் கொடுக்கிறீங்க. நான் ஆசையா வாங்கிக்கிறேன்.’’
“ஆஸைக்கும் அன்புக்கும் வித்தியாசம் இருக்கோண்ணா. அதுக்கும் ஆச்சாரியாள் அர்த்தம் சொல்லியிருக்கார். பொறத்தியார் மூல்யமா நமக்கு ஸந்தோஷம் தேடிக்கிறது ஆசை. பொறத்தியாருக்கு ஸந்தோஷம் கொடுக்கிறது அன்பு. ஆஸைங்கிறது வாங்கல்; அன்புங்கிறது கொடுக்கல். இந்தாங்கோ தாய்ப் பத்திரம். சரிபாத்துக்கோங்கோ’’. தோப்பு கைமாறியது. அளவானதொரு தென்னந்தோப்பைப் பராமரிக்க ஒரே ஒரு குடும்பம் போதும்.
சொட்டுநீர் பாய்ச்ச, வீழும் தென்னைமட்டைகள் அகற்ற, உதிர்ந்த காய் சேகரிக்கக் கணவனும் மனைவியுமே போதும்.
“வாப்பா காளிப்பா… யம்மா இருளாயி. ஒங்கள நம்பி ஒப்படைக்கிறேன் தோப்ப. இது ஒங்க தோப்பு. மரங்கள நீங்க பாத்துக்குங்க. ஒங்க நல்லது கெட்டத நான் பாத்துக்கறேன்.’’
பரமாச்சாரியாளின் சந்நிதானத்திற்கெதிரே அவர்களுக்கொரு குடிசைபோட்டுக் கொடுத்தேன்.
“காமாட்சியம்மன் கோயில் குருக்கள் வருவார்; வீடு திறப்பார்; துடைப்பார், வெள்ளி செவ்வாய்க்கு விளக்குப் போடுவார். அவர் வந்து கேட்டால் கொடுங்கள்; சாவியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’’
காளியப்பன் இருளாயி கண்களில் கண்ணீர் திரண்டது. “தேசாந்திரம் போயி நாய்ப்பொழப்புப் பொழச்ச எங்களுக்கு நல்ல வாழ்வு குடுத்தீங்க. மறக்க மாட்டோம். ஒங்க சொத்த எங்க சொத்தாப் பாதுகாப்போம்.’’
இரண்டு தலைமுறைகளாய் எங்கள் குடும்பத்தின் உழைப்போடு ஒன்றுபட்டது காளியப்பன் குடும்பம். அவர் தலித் என்பதும் தாழ்த்தப்பட்டவர் என்பதும் சின்னவயதில் எனக்குச் சொல்லப்பட்ட வெறும் சொற்கள். சொற்களில் இருந்த பேதம் எங்கள் வாழ்வில் இருந்ததில்லை. என் பிஞ்சு வயதில் பணியாரம் சுட்டுத் தந்தவள் இருளாயி. எங்கள் வீட்டுக் கறிக்குழம்பைக் காளியப்பன் வீட்டுக்குத் தூக்கு வாளியில் தூக்கிச்சென்றவன் நான். எங்களுக்குக் கொஞ்சம் நிலமிருந்தது. அவர்களுக்கு அது இல்லை. மற்றபடி எங்களுக்குள் ஜாதி பார்த்ததில்லை; இருவருமே உழைக்கும் ஜாதி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது பஞ்சம் பிழைக்கப் போனவன் சொல்லிய சொல்லாக இருக்கக் கூடும். இவர்களும் யாதும் ஊரே என்று அலைந்தார்கள். ஆனால், யாதொருவரும் கேளிர் இல்லை. எந்த ஊரும் அவர்களுக்கு நிரந்தரச் சோறு போடவில்லை. வெவ்வேறு ஊர்களில் பெற்ற பிள்ளைகளை வெவ்வேறு ஊர்களில் சாகக் கொடுத்துவிட்டு உள்ளூரில் சாகலாம் என்று ஓடிவந்தபோது _ யான் பெற்றபேறு _ என்னை அடைந்தார்கள்.
பிள்ளை இல்லை என்கிற ஏக்கம் இவர்களுக்கு இன்றோடு கழிந்தது. இன்றுமுதல் இவர்களுக்கு 700 பிள்ளைகள்; தென்னம்பிள்ளைகள்.
சந்நிதானத்துக்குள் இருந்த தொலைபேசியை எடுத்துத் திண்ணையில் வைத்தேன்.
“எப்போதும் என்னைக் கூப்பிடலாம்; இதுதான் என் எண்’’.
* * *
சில மாதங்களுக்கு பிறகு தோட்டத்து எண் என் தொலைபேசியில் அலறியது.
“நான் நடேஸ அய்யர் பேசறேன்…’’ என்ற குரலில் அதிர்ச்சியும் அதிகாரமும் கலந்திருந்தன.
“சொல்லுங்க சார்’’
“என்னத்தச் சொல்றது? நிபந்தனையை மீறிட்டேள்’’.
“புரியல… என்னாச்சு?’’
“தேனிக்குப் போற வழியில ஸந்நிதானத்த ஸேவிச்சுட்டுப் போயிடலாமின்னு வந்தேன். அபச்சாரம். சொல்லவே நா கூசறது. பரமாச்சாரியாள் படத்துக்கு ஒங்க பண்ணையாளுல்ல தீபம் போட்டிண்டிருக்கா’’.
“சார் பதட்டப்படாதீங்க. ஒங்க வேண்டுகோளுக்காக குருக்கள் கிட்டத்தான் அந்தப் பொறுப்பை கொடுத்திட்டுவந்தேன். அவரு ஒரு மாசமா ஊர்ல இல்ல. அதனாலதான் வெள்ளி செவ்வாய் வீடுபெருக்கி அவங்களையே தீபம் போடச் சொன்னேன்.’’
“ஒங்கள நம்பி என் சொத்தக் குடுத்ததுக்கு எம்புத்திய ஸெருப்பாலடிக்கணும்’’
வேணாம்; செருப்ப அழுக்காதீங்கன்னு… எனக்குச் சொல்லத் தோன்றிற்று. அப்படிச் சொல்லாமல், “தீபங்களில் எரியும் தீயில் ஏற்றத்தாழ்வுகள் எதுவுமில்லையே’’ என்றேன்.
“இந்தக் கவிதையாப் பேசுறதையெல்லாம் மேடையோட வச்சுக்கோங்க. மிலேச்சர்களை ஸந்நிதானத்துக்குள்ள விட்டது தப்பா இல்லையா? சொல்லுங்கோ.’’
என் உடலும் ரத்தமும் சூடாயின. அடடா இவர் எல்லை மீறுகிறாரே!
உடல் கொதித்திருக்கும்போது வார்த்தைகள் குளிர்ந்திருக்கட்டும் என்று சொல்லிக் கொண்டே சூடு தணிந்தேன்.
“ஒலகம் ரொம்ப மாறிக்கிட்டிருக்கு. நீங்களும் மாறணும் அய்யர் சார்.’’
“எல்லாம் மாறட்டும். இந்த லோகம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். மாறவே மாறாத கடைசி பிராமணன்னு நேக்குப்பேரு வரட்டும் ஓய். நீங்க சொன்னவா வெண்கல வௌக்குல தீபம் போடறா. உலோகத்தாலான பாத்திரங்கள அவா தொடவே படாது. அதத் தொலக்கி வச்சாலும் ஸுத்தமாகாது. மனுதர்மம் சொல்லியிருக்கு ஓய்.’’
“மனுதர்மத்துல ஒங்களப் பத்தியும் சொல்லியிருக்கு சார்’’
“நீங்க படிச்சேளா?’’
“கேள்விஞானம்னு வச்சுக்கலாமே… ‘வழக்காடுவதாலும் அரசாங்க சேவையில் புகுவதாலும் நற்குடியும் தாழ்ச்சியடையும்’ _ அதே மனுமர்மம்தான் இதையும் சொல்லியிருக்கு. வக்கீல் சார் தாழ்ந்துட்டீங்களா என்ன…?’’
“நேக்கேது தாழ்ச்சி? பிரம்மாவோட முகத்துல பிறந்தவா நாங்கள்ளாம். முகம்ங்கிறது என்னது? உச்சத்துல இருக்கு. ஆகாய பாகம். ஆகாயம் எப்படி அழுக்காகும்?’’
“நீங்க சொல்றது விஞ்ஞானமில்ல; கற்பிதம். ஒங்க வாதப்படியே விளக்குபோடப் போனவன் பிறந்தது காலடியில. காலுங்கிறது என்ன? பிருதிவிபாகம். ‘பிருதிவி’ன்னா என்னது? மண்ணு. மண்ணுக்குப் பொறந்தவனுக்குத்தான் அய்யர் சார் மண்ணு சொந்தம். மண்ணுல பொறந்து _ மண்ணுல ஒழச்சி _ மண்ணுக்குப் போறவனுக்குப் பிறந்த மண்ணு உரிமை ஆகாதா? மனுதர்மம் கெடக்கட்டும் வக்கீல் சார். மனுச தர்மத்துக்கு வாங்க.’’
“கொடுத்த வாக்க மீறிட்டேள்… ஒங்களப் பொறுத்தவரைக்கும் இதுதான் மனுஷ தர்மமோ?’’
இதன் பிறகு அவரே துண்டித்தாரோ தொழில்நுட்பக் காரணங்களால் துண்டிக்கப்பட்டதோ தெரியாது. எங்கள் பேச்ச தொடரவில்லை.
* * *
வாக்குமீறி விட்டேனா? நானா? அவருக்கு நான் கொடுத்த வாக்கு சட்டப்படியல்லவே! தர்மப்படிதானே? தர்மத்தை நான் ஒன்றும் மீறவில்லையே? தீபத்தை ஒரு பிராமணன் ஏற்றினாலென்ன -_ தலித் ஏற்றினாலென்ன? சங்கராச்சாரியார் சொன்னதாய் அய்யர் சொன்னாரே. ஆசை என்பது மற்றவர்கள் மூலம் நீ சந்தோஷப்படுவது. அன்பு என்பது உன் மூலம் மற்றவர்கள் சந்தோஷப்படுவது. காளியப்பன் இருளாயி விளக்கேற்றியதில் பரமசந்தோஷம்தானே அடைந்திருக்க முடியும் பரமாச்சாரியார்? அவருக்கு விரோதமான எதுவும் இந்த வீட்டில் புழங்கக் கூடாது என்பதுதானே நிபந்தனை? கடவுள் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார் என்ற அத்வைதம் பொய்யா? அது ஆச்சாரியாருக்கு விரோதமா? எனக்குத் தெரிந்து விரோதமில்லை.
* * *
எங்கிருந்து வந்ததோ அந்தச் சூறைக்காற்று?
காடுமேடெல்லாம் கதிகலங்க வைத்துக் கருவேலங்காட்டுக்குள் புகுந்து விசிலடித்து, வாழைத்தோப்புகளைப் படுத்த படுக்கையாக்கி, ஊருக்குள் புகுந்து இளைத்த வீடுகளை யெல்லாம் இழுத்துத் தரையில் போட்டு, கூரைகளைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிவந்த சூறைக்காற்று, காளியப்பன் இருளாயி குடியிருந்த குடிசைக் கூரையைத் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றுவதுபோலத் தூக்கியெறிந்துவிட்டுப் போய்விட்டது. கொஞ்ச நேரத்தில் கூடிவந்த மேகம் பிழிந்து கொண்டது. கண்ணைப் பறித்துக்கொண்டோடிய ஒரு மின்னல் இருளின் அடர்த்தியை இரண்டு மடங்காக்கியது. அருகில் விழுந்த ஓர் இடிச்சத்தத்தில் இருதயம் ஓடிப்போய் முதுகில் ஒளிந்துகொண்டது. தீப்பிடித்து எரிந்ததொரு தென்னைமரம் எதிர்வரிசைத் தோப்பில். அதற்குப் பிறகு பெய்த மழையைக் காளியப்பன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.
இரவு பதினொருமணிக்கு என் தொலைபேசி துடித்தது.
“அய்யா காளியப்பன் பேசுறேன். இன்ன அளவுன்னு இல்ல மழை. காத்துல குடிசை காலியாயிருச்சு. சீல துணிமணியெல்லாம் காத்துல போயிருச்சு. ரெண்டு மணி நேரமா நனைஞ்சே நிக்கிறோம் ரெண்டுபேரும். இப்படியே விட்டா வெறச்சே செத்துருவோம் விடியறதுக்குள்ள’’.
இடிவிழுகிற ஓசையும் என் செவிகளுக்குக் கேட்டது; நான் யோசிக்கவில்லை.
“வீட்டுச்சாவி எங்க இருக்கு?’’
“இடுப்புல இருக்குய்யா’’
“வீட்டத் தெறங்க’’
“அய்யா…!’’
“நான் சொல்றேன். தெறங்க வீட்ட. இன்னிக்கிருந்து வீடு உங்களுக்கு. உள்ளபோயிக் குடியிருங்க… போங்க…’’
எதிர்முனையில் விசும்பல் கேட்டது.
என் முடிவை மகாபெரியவர் ஏற்றுக் கொள்வார். நடேச அய்யர் ஏற்றக் கொள்கிறாரோ இல்லையோ போகப் போகப் புரிந்துகொள்வார்.
(நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து)