சிகரம்
“கன்யாகுப்ஜம் என்னும் நகரில் அஜாமிளன் என்றொரு ஒழுக்கம் கெட்ட பிராமணன் இருந்தான். அவன் தீயவன்.
அவனுக்குப் பத்து புத்திரர்கள் பிறந்தனர். அவர்களை சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சியோடு காலம் கழிய அவன் மிக்க முதுமையை அடைந்தான். அவனுக்குக் கடைசி மகன் நாராயணனிடம் அன்பு, பாசம், நாளுக்கு நாள் அதிகம் ஆக அக்குழந்தையைச் சிறிது நேரம் கூட பிரியாமல் இருந்தான்.
அவன் மரணப் படுக்கையில் படுத்தான். அவன் உயிரை எடுக்க மூன்று யமகிங்கரர்கள் வந்தனர். அவர்களைக் கண்டு பயந்த அவன், “நாராயணா! நாராயணா! எங்கே இருக்கிறாய்! ஓடிவா’’ எனக் கூவி அழைத்தான்.
இவ்வாறு மரணகாலத்தில் ஸ்ரீஹரி நாமத்தை உச்சரித்ததால் விஷ்ணு பாதர்கள் அங்கே வந்து யமதூதர்களைத் தடுத்தனர். அவ்வாறு தடுத்து அவர்களிடம் “எந்தச் செயலைச் செய்தவர்கள் யமதண்டனைக்கு உரியவர்கள்?’’ என்று விஷ்ணு பாதர்கள் கேட்டனர்.
“சாக்ஷாத் ஸ்ரீஹரியே வேதம். வேதம் கூறுவதே தர்மம். எல்லாமே சரீரம் படைத்த ஜீவன்கள். அவை குணங்களின் சேர்க்கையால் நல்ல (அ) தீய செயல்களைச் செய்கின்றன. பிரகிருதியின் தொடர்பினால் இழிவான நிலை ஏற்படுகிறது. பகவானிடம் பற்றுதல்களால் அவை மறைந்து விடும்.
இந்தப் பிராமணன் காமவசனாகி தர்மத்திலிருந்து நழுவினான். ஒரு வேசியுடன் கூடி பிள்ளைகளைப் பெற்றான். எல்லோரிடமும் நிந்தனை பெற்ற இவனை யமதர்மராஜனிடம் அழைத்துச் செல்லப் போகிறோம்’’ என்றனர் யமகிங்கரர்கள்.
நாராயணர் என்னும் பகவான் நாமத்தைக் கடைசி காலத்தில் கூறுபவனிடம் உள்ள சகல பாபங்களும் நீங்கிவிடுகின்றன. இவன் மரணகாலத்தில் பகவான் நாமத்தை நன்கு உச்சரித்ததால் சகல பாப பரிகாரங்களும் செய்தவனாகிறான். எனவே, இவனை நீங்கள் கொண்டு போக வேண்டாம்’’ என்றனர் விஷ்ணுபாதர்கள். மேலும் “இவன் மந்திரத்தின் மகிமையை அறியாமலே சொன்னாலும் அதன் நற்பயனை அடைகிறான். எனவே, இவன் பாபமற்றவன்’’ என்றனர்.
இவ்வாறு அஜாமீளன் யமபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். அவன் விஷ்ணு தூதர்களை வணங்கி ஏதோ சொல்ல நினைக்க, அவர்கள் மறைந்து விட்டனர்.
ஒருநாள் அஜாமிளனுக்கு விஷ்ணு பார்ஷதர்கள் கண்முன் தோன்ற அவர்களைப் பூஜித்து வணங்கி, தன்னுடலை கங்கையில் அர்ப்பணித்து பார்ஷத சரீரத்தைப் பெற்றான். உடனே விஷ்ணு தூதர்களுடன் அவன் பொன் மயமான விமானத்தில் ஏறி, வைகுண்டத்தை அடைந்தான்.’’ என்கிறது இந்து மதம்.
ஒருவன் உயிர் என்பது பெற்றோரின் உயிர் அணுக்களிலிருந்து வருகிறது. நோய், மூப்பு, விபத்து போன்ற காரணங்களால் உயிர் ஆற்றலை உடல் இழக்கிறது. இதுதான் அறிவியல் உண்மை. ஆனால், இந்து மதம், எமன் வந்து ஓர் உடலிலிருந்து உயிரை பிரித்துச் செல்கிறான் என்கிறது. உயிர் மனிதனுக்கு மட்டுமல்ல; எண்ணற்ற உயிரினங்களுக்கும் உண்டு. அவற்றின் உயிர்களை எல்லாம் எமன்தான் பிரித்து எடுத்துச் செல்கிறானா?
இது எவ்வளவு பெரிய அறியாமை _ மூடநம்பிக்கை! இப்படிப்பட்ட மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
அதைவிட மூடக்கருத்து என்னவென்றால் கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாது என்று இந்துமதம் கூறுவது. கடவுள் பெயரைச் சொல்லி உயிர் போனால் தடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அப்படியிருக்க இப்படிப்பட்ட மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
யாகம் செய்து பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?
சூரசேன தேசத்தரசன் சித்திரகேது. அவன் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம் நிலவியது. அவனுக்குப் பல மனைவியர் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை.
ஒரு நாள் அவன் அரண்மனைக்கு ஆங்கீரச முனிவர் வந்தார். அவரை வரவேற்று, அதிதி பூசை செய்து உபசரித்த மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, அப்பேறு பெற அருள்புரியுமாறு வேண்டினான்.
அப்போது ஆங்கீரச முனிவர் ஒரு யாகம் செய்து, அந்த யஜ்ஞ பிரசாதத்தை அவன் பட்டமகிஷியான கிருதத்யுதிக்கு கொடுக்கச் சொன்னார். சில காலம் கழித்து ஒரு புத்திரன் பிறந்தான். சித்திரகேதுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ஆனால், கொடியவர்களான மற்ற பத்தினிகள் பொறாமையின் காரணமாக அக்குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டனர். அந்தத் துக்கத்தைத் தாங்க முடியாமல் அரசனும், கிருதத்யுதியும் அழுது புலம்பினர்.
அவ்வமயம் அங்கு வந்த நாரதரும், ஆங்கீரச முனிவரும் அரசனிடம், “கால வெள்ளத்தில் உயிர்கள் ஒன்று சேர்ந்து பின்னர் பிரிந்து விடுகின்றன. சரீரம் நிலையற்றது. ஜீவன் மட்டுமே அழிவற்றது.
எனவே, அஞ்ஞானம் அகற்றி பரமாத்மாவிடம் மனதைச் செலுத்தி ஆறுதல் கொள்க’’ என்று கூறினார்.
சோகத்தினால் நிறைந்த அவன், அவர்களை யார் என்று வினவ, புத்திரனுக்காக யாகம் செய்துவித்த ஆங்கீரச முனிவரே, தான் என்றும், அடுத்தவர் நாரதர் என்றும் அரசனுக்கு ஞானம் புகட்டவே வந்ததாகவும் கூறினார். மேலும் சூரசேனன் அவரது உண்மை நிலையை அறிந்து, அமைதி பெற்று பரம புருஷரான வாசுதேவரையே தியானம் செய்து பெருமை அடையுமாறு உபதேசம் செய்தனர்.
நாரதர் ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, “இதைச் சிரத்தையாக ஜபித்தால் ஏழு நாள்களில் பகவான் சங்கர்ஷருடைய தரிசனம் கிட்டும். அவர் அனுக்கிரகத்தினால் சோக, மோகங்கள் நீங்கி சாந்தி அடைந்து, ஆனந்தம் கொள்ளலாம்’’ என்றார். பின்னர் அவர் தனது யோக சக்தியினால் மரணமடைந்த அரச குமாரனை பிழைக்கச் செய்து “ஓ, ஜீவாத்மாவே! உனது பெற்றோர் உனது மரணத்தினால் மிக்கத் துயரத்தில் உள்ளனர். நீ மறுபடியும் இந்த உடலிலேயே பிரவேசித்து அரசைப் பெற்று மகிழ்வாயாக’’ என்றார் என்கிறது இந்து மதம்.
ஆண்_பெண் உடலுறவால் கருத்தரித்து குழந்தை பிறக்கும் என்பது அறிவியல். ஆனால், யாகம் செய்து, அதில் வரும் பிரசாதத்தை உண்டால் குழந்தை பிறக்கும் என்று இந்து மதம் கூறுகிறது. பிரசாதம் சாப்பிட்டால் எப்படி குழந்தை பிறக்கும்? பிரசாதம் இரைப்பைக்குச் சென்று மலக்குடல் வழியாக வெளியேறும். குழந்தை கருப்பையில் உருவாவது. அப்படியிருக்க இந்து மதம் கூறும் இக்கருத்து அறிவியலுக்கு நேர் எதிரானது. இப்படிப்பட்ட மடமைக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா? மேலும் மந்திரத்தால் இறந்தவன் பிழைப்பான் என்று இந்து மதம் கூறும் கருத்தும் அறிவியலுக்கு எதிரானது. இறந்த உடலில் மீண்டும் உயிர் வரவே வராது என்பதே அறிவியல் உண்மை. அப்படியிருக்க அறிவியலுக்கு முற்றிலும் ஒவ்வாத கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாக இருக்க முடியும்?
(சொடுக்குவோம்…)