கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?

டிசம்பர் 01-15 2019

தட்டிவிட்டுப் பறிக்கின்றார் கல்வி வேலை

தறிகெட்டு கிடக்கிறது சட்டம் நீதி

கட்டவிழா மொட்டுகள் கருகிச் சாக

காட்டாட்சி நடக்கிறது மதத்தின் பேரால்

எட்டப்ப ராகிவிட்டார் இம்மண் ஆள்வோர்

எதுநடந்தும் வாய்பேசா ஊமை யானார்

கொட்டட்டும் அய்யாவுன் முழக்கம் இங்கு

கொடுமைதனைப் பொசுக்குதற்கு இடியைப் போலே!

 

எட்டுத்திக்கும் பெரியாரை ஏற்றி வைப்போம்

இனமானம் காப்பதற்கும் சூளு ரைப்போம்

நட்டமென தந்துவுயிர் நாடு காக்க

நடைகட்ட உம்பின்னால் தமிழர் சேனை

வட்டமிடும் கழுகார்க்கு வளைந்தோ மில்லை

வாய்ப்பந்தல் போடுபவர் இங்கே இல்லை

“விட்டோமா பார்’’ என்றே வினைமு டிக்கும்

வீரமிகு பெரியார்படை யாரே வெல்வார்?

 

பத்தொன்று வயதினிலே மேடை ஏறி

இன்றுவரை வழங்குகின்றார் உழைப்பை வாரி

தொட்டாலே தீட்டென்ற சோகம் போக்க

தொடர்வாயே வரலாற்றின் துவக்கம் சொல்லி

கட்டாக ஆதாரங் காட்டிக் காட்டி

கனிவாக ‘அருள்கூர்ந்து’ கேட்கச் செய்து

பொட்டினிலே அடித்தாற்போல் தருவாய் பேச்சும்

போனதிசை தெரியாமல் மடமை போகும்!!

 

சிட்டாக நீயிருந்த போதில் சீறி

செருக்குற்ற பகையழிக்கப் போரும் செய்தாய்

பட்டாளம் இன்றுண்டு உன்றன் பின்னே

பார்த்தசைக்க விழியோரம் பாரும் சுற்றும்

கிட்டாது உரிமையிங்கு கானல் நீராய்

கேடர்களின் கொடுசெயலால் போன தய்யா!

“எட்டாதோ?” எனவேங்கும் எளியார்க் கெல்லாம்

எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?

கவிஞர்.சுப.முருகானந்தம், மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *