தகவல் களஞ்சியம்

நவம்பர் 16-30 2019

செல் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்

இந்தியாவில் சுமார் 100 கோடி மக்கள் செல்போன் உபயோகிக்கின்றனர். அவர்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 31 கோடி பேர், இணையம் பயன்படுத்துவோர் 56 கோடி பேர். உலகத்திலேயே, அதிக அளவில் இந்தியாவில்தான் ஒரு நாளில் 1 ஜிபி என்னும் அளவில் இணையப் பயன்பாடு உள்ளது.

******

இரவு நேரம் கழிவறை செல்பவர்கள் கவனத்திற்கு…

வயது முதிர்ந்தவர்கள் பலர், அதிலும் நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்கள் இரவு ஒரு முறையோ அல்லது இரு முறையோ கழிவறை செல்லும் நிலையில் இருப்பர். அவர்கள் படுக்கையிலிருந்து, சட்டென எழுந்து, கழிவறை செல்வதை மாற்ற வேண்டும். நாம் உறங்கும்பொழுது மூளையின் பெரும்பகுதி ஓய்வு கொள்கிறது. அப்பொழுது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். அந்த நிலையில், சிறுநீர் கழிக்கும் உணர்வால், விழிப்பு ஏற்படும். சட்டென்று எழுந்து கழிவறை சென்று நின்றால், தலைசுற்று, தள்ளாட்டம் போன்றவை ஏற்படும்.

மூளையின் இரத்த ஓட்ட குறைவினால் இது நிகழ்கிறது. எச்சரிக்கையாக இல்லாவிட்டால் சில நேரம் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் கூடவும். படுத்திருக்கும் நிலை-யிலிருந்து, சட்டென எழுந்து நிற்கும்பொழுது, மேலும் இரத்த ஓட்டம், மூளைக்குக் குறையும். அதனால்தான் மேற்கூறிய தடுமாற்றம் ஏற்படும். அதனால் இரவில் எப்பொழுதும் சட்டென எழுந்து நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக எழுந்து, செயல்படும்பொழுது இரண்டு நிமிடங்கள் அதிகம் முக்கியமானவை. ஒரு அரை நிமிடம் படுத்திருந்து, பின் ஒன்றரை நிமிடம் படுக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். பின்னரே எழுந்து நடந்து செல்ல வேண்டும். அமர்ந்திருக்கும் நிலையில் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகும். இந்த இரண்டு நிமிடங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. கழிவறையில் பலர் இறந்து விடுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு முக்கியமான காரணங்களில் இந்த நிலையும் ஒன்று. இரவு நேரங்களில் கழிவறை செல்பவர்கள் முக்கியமான “ 2 நிமிட’’ நடவடிக்கையை மேற்கொள்ளுதல் தேவையான ஒன்று.

 மரு.இரா.கவுதமன்

******

இந்திய அரசின் மொத்த உற்பத்தி வரி வருமானத்தில் ஆட்டோ மொபைல் துறையின் பங்கு 18 சதவிகிதமாகும்.

தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன. தலையில் உச்சியில் மூன்று கண்களும் முன் பக்கத்தில் இரண்டு கண்களும் அமைந்துள்ளன.

 ******

குதிரை லாயத்தில் வேலை செய்தவரின் மகன்தான் பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர்.

இந்தியாவில் முதன்முதலாக மின்சார வசதியைப் பெற்றது கல்கத்தா நகரம்.

10 நிமிடங்கள் ஓடக்கூடிய கார்ட்டூன் திரைப்படத்துக்கு சுமார் 1100 சித்திரங்கள் தேவைப்படும்.

 ******

உலகின் முதல் வாரப் பத்திரிகையின் பெயர் ‘பிரெஞ்சு ஜர்னல் மெஸ் ஸ்காவ்ன்ஸ்’ (1665 – 1792) ஆகும். இது 128 ஆண்டுகள் தொடர்ந்து வந்த பத்திரிகை ஆகும்.

மனிதனில் விரல் நகம் ஒரு வருடத்தில் இரண்டரை அங்குலம் வளர்கிறது.

இடி மின்னல் நாடு என்று பூட்டானை அழைக்கின்றனர்.

******

வாழ்நாளைக் கூட்டும் செவ்வாழை!

கண்பார்வை குறைய ஆரம்பித்தால் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் உண்ணலாம். இதனால் பார்வை தெளிவடையும். இரவு உணவுக்குப் பின் தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழைப் பழம் உண்டால், மாலைக்கண் நோய் குணமாகும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டின் கண் நோய்களைக் குணமாக்கும்.

வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ள பழம் இது. ஆன்டி – ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்தும் அதிகம்.

இதய நோய் மற்றும் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பல்வலி, பல் அசைவு போன்ற பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழையை உட்கொண்டு வந்தால் குணமடையும்.

வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, வயிற்று எரிச்சலையும் குணமாக்குகிறது.

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு 48 நாள்கள் தொடர்ந்து செவ்வாழைப் பழம் உண்டால், நல்ல முன்னேற்றம் தெரியும். நரம்புகள் பலப்படும். சருமப் பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாழையை 7 நாள்கள் தொடர்ந்து உண்ண குணமாகும். காலை உணவாக செவ்வாழையைச் எடுத்துக்கொண்டால், பசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உடல் எடை குறையும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு.

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *