ஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்!

நவம்பர் 16-30 2019

கே:       அகில இந்திய அளவில் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்பட தீர்மானித்திருப்பது, நாட்டில் புதிய நம்பிக்கை ஏற்படும் என எண்ணலாமா?

                – மகிழ், சைதை

சோனியா காந்தி

ப:           1. இது சற்று காலந்தாழ்ந்த முயற்சி என்றபோதிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

                2. காங்கிரஸ் தலைவராக துடிப்புள்ள செயல்திறன்மிக்க 50 வயதுக்குட்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரையோ, பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரையோ தலைவராக நியமிக்க வேண்டும்.

                3. வயது முதிர்ந்த உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை காங்கிரஸ் காரிய கமிட்டியில் வளர விடக்கூடாது. வெளியேறினால் மகிழ்ச்சி. அக்கட்சி தூய்மையாகும்.

கே:       பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் மீதான குண்டர் சட்டம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது அரசியல் அழுத்தம் காரணமா?

–  ஸ்டாலின், ஆவடி

ப:           இருக்காதா என்ன? ஈடுபட்ட குற்றவாளிகள் பெரிய இடத்துப் பிள்ளைகள் ஆயிற்றே, பதவி பலமும் பண பலமும் சும்மாவா?

கே:       2015 ஏப்ரலில் மாட்டிறைச்சி விருந்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு பெற்ற தடையாணையின் தற்போதைய நிலை என்ன?

                – அய்ன்ஸ்டின் விஜய், உடையார்பாளையம்

ப:           பா.ஜ.க.வின் எஜமான விசுவாச ஆட்சியில் என்ன பெரிய மாறுதலை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

உத்தவ் தாக்கரே

கே:       தேர்தல் முடிவுக்குப் பின் பாஜகவுக்கு இறங்குமுகம் ஆரம்பிக்கிறது என தாங்கள் அறிக்கையில் குறிப்பிட்டபடி மகாராஷ்டிராவில் காணப்படும் தடுமாற்றம் அதனை உறுதிப்படுத்துவதாகக் கொள்ளலாமா?

–  கல.சங்கத்தமிழன், செங்கை 

ப:           ‘பாலும் கசந்ததடி; பதவியும் நொந்ததடி சகியே’ என வசமாக மாட்டிக் கொண்டாரே. இனி ஒட்டினாலும் ரொம்ப நாள் வண்டி ஓடாது!

நரேந்திர மோடி

கே:       செஞ்சி அருகே நவீன தீண்டாமையாக குறிப்பிட்ட பிரிவினருக்கு மளிகைப் பொருள்கள் விற்பதைத் தடுக்கும் ஆதிக்க ஜாதியினர் மீது அரசு நடவடிக்கை எப்படியிருக்க வேண்டும்?

–  க.காளிதாஸ், காஞ்சி

ப:           கடும் நடவடிக்கை எடுக்க முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டும்.

கே:       எந்த தற்கால, எதிர்கால திட்டமிடல் இல்லாமலே அரசு செயல்படுகிறதே, விளைவு எப்படியிருக்கும்? தீர்வு என்ன?

–  தமிழ்நேசன், சென்னை

ப:           எத்திட்டம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால்  என்ன? தேர்தலில் மூன்று மடங்கு கரன்சி இறக்கப்பட்டால் மடங்காத கை மடங்கும். பணத்தாலும் ஜாதியும் அதிகாரமும் கைகொடுக்க வெற்றி பவனி வரலாமே! அந்தோ ‘ஜனநாயகமே’!

சுர்ஜித்

கே:       ஆழ்துளையில் வீழ்ந்து இறந்த குழந்தைக்கு பலரும் பல லட்சம் தருவதற்கு மாறாக பொதுநிதியாக அதைச் சேர்த்து பாதிக்கப்படும் குழந்தைகளுக்குப் பகிர்ந்தளிப்பது சரியாக இருக்குமா?

–  குமார், ஈரோடு

ப:           நல்ல யோசனை _ நிதியைத் தருவது உண்மையான இரக்கத்தினால்தானே! அப்படியானால் உங்கள் யோசனை நல்லதே!

நிர்மலா சீதாராமன்

கே:       பொருளாதார மந்தநிலை தொடர்ந்துகொண்டே இருக்கும் சூழலில் ஆசிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திடுவது இந்திய சிறுதொழிலைப் பாதிக்காதா? தங்களின் கருத்து என்ன?

–  அகமது, மாதவரம்

ப:           மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும் அபாயம் உள்ளது. மூன்று ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேய்மானம்! நாடு எங்கே போகிறது _ போகும் _ புரியவில்லை. இதற்கிடையில் ‘விந்தைகள்’ அவ்வப்போது!

திருவள்ளுவர்

கே:       வள்ளுவருக்கு காவியும், பட்டையும், கொட்டையும் அணிவித்துள்ள காவிக் கூட்டத்திற்கு தமிழர்களின் எதிர்ப்பு எப்படியிருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?

–  கவுசல்யா, சிதம்பரம்

ப:           தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து, விஷமிகளின் திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *