கவிதை : நாத்திக நன்னெறி!

நவம்பர் 16-30 2019

– கவிஞர் மாரி.விசுவநாதன்

இறைவா யென்று கூறித் தொழுது

குறையைச் சொல்லிடுவார் – பொய்

திரையை யிட்டு பூசை யென்று

பொருளைத் திருடிடுவார்! – இவர்

மறையே யென்றுகூறும் மொழியில்

பொய்யை யுரைத்திடுவார் – இதை

மதியால் ஆய்ந்தால் தெரியும் திருடர்

சதிதான் என்றிடுவாய்!

 

வாழு முயிரை வருத்தும் மூடர்

விதியை யுரைத்திடுவார் – இவர்

தாழ்வும் உயர்வும் இறைவன் தந்தான்

என்றே யுரைத்திடுவார் – இவர்

ஆழ நீரில் மூழ்க நேரின்

அலறித் துடித்திடுவார் – இவர்

தாழும் நிலையை யடைந்தால் நீதி

முறையை யுரைத்திடுவார்!

 

வல்ல இறைவ னென்றே சொல்லி

கோயில் சென்றிடுவார் – இவர்

பொல்லா எலியாய் மாறிக் கோயில்

பொருளைத் திருடிடுவார் – இவர்

தொல்லை அகல துயரும் நீங்க

பூசை என்றிடுவார் – இவர்

தொந்தி யுடலைப் பேணப் பொருளை

முந்தித் திருடிடுவார்!

 

கல்லா மூடர் நம்பா ரிறையை

என்றே கூறிடுவார் – இவர்

எல்லாம் தெரிந்த ஞானி போல

இறைவன் என்றிடுவார் – இவர்

சொல்லால் செயலால் திருட்டுத் தொழிலை

மெதுவாய்ச் செய்திடுவார் – இறை

இல்லை யென்றே உணர்ந்த தாலே

கொள்ளை யடித்திடுவார்!

 

பத்தி மோக வலையை வீசும்

யுத்தி யறிந்திடுவார் – மறை

சத்தி இறைவ னென்றே கூறி

சதியை மறைத்திடுவார் – இவர்

குக்கல் போல குரைத்து உரிமை

குரலைத் தடுத்திடுவார் – நாடு

நக்கல் நிலையை யடைய மக்கள்

நலத்தைக் கெடுத்திடுவார்!

 

மதத்தின் சின்னம் அணி வீரென்று

இதமாய்க் கூறிடுவார் – இவர்

கதியே மதந்தா னென்று கூறி

கண்ணைக் கெடுத்திடுவார் – உயர்

மதியின் செயலை அறவே மறைத்துக்

குழியைப் பறித்திடுவார் – இவர்

சதியை யறியா மூடர் மதத்தின்

குழியில் வீழ்ந்திடுவார்!

 

மதியைக் கெடுக்கும் மதுவாம் மதத்தைச்

சதியால் கொடுத்திடுவார் – அந்த

மதுவாம் மதத்தை அருந்தும் மனிதனை

மந்தியாய் ஆக்கிடுவார் – அவர்

குதியாய்க் குதிக்கச் சமயக் கோலைக்

கொண்டே ஆட்டிடுவார் – மூடர்

விதியை நம்பக் கதைகள் கூறிக்

காதை அறுத்திடுவார்!

 

மோட்ச மென்று கூறி ஆசை

ஆட்சி வளர்த்திடுவார் – இறைக்

காட்சி காணக் கோயி லென்று

காசைப் பறித்திடுவார் – இறை

மாட்சி யென்று பொய்யை யுரைத்து

சூழ்ச்சி புரிந்திடுவார் – இதை

நாட்டில் விளக்கி மறுத்து ரைத்தால்

நாத்திக ரென்றிடுவார்!

(‘வெடிகுண்டு’ தொகுப்பிலிருந்து….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *