தலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக!

நவம்பர் 16-30 2019

‘நீட்’ தேர்வால் என்ன நடக்கும்? _ சமூகநீதி குழிவெட்டிப் புதைக்கப்படும் என்றோம்.

இப்பொழுது அதுதான் நடந்திருக்கிறது.

‘நீட்’ தேர்வால் ஏற்பட்ட இழப்புகள்

லட்சம் லட்சமாய் ரூபாய் செலவு செய்து  ‘நீட்’ கோச்சிங்கில்  யாரெல்லாம் சேரவில்லையோ அவர்களில் ஒருவர் கூட கீழ்க்கண்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரவில்லை.

1. தருமபுரி

2. தூத்துக்குடி

3. கோயம்புத்தூர்

4. திருவண்ணாமலை

5. விழுப்புரம்

6. திருவாரூர்

7. செங்கல்பட்டு.

மீதமிருக்கிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிலைமை என்ன?

ஒரு கல்லூரியில் 3 பேர் வீதம் 16 கல்லூரிகளிலும் சேர்த்து வெறும் 48 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ பயிற்சி வகுப்பு செல்லாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கின்றார்கள். இவர்களில் பலரின் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள். இந்த  ஆண்டு அரசு பள்ளிகளில்  படித்தவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அனைவரும் தனியார் பள்ளிகளிலும், மருத்துவப் படிப்பிற்காக சிறப்பு வகுப்புகளிலும் சேர்ந்து படித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3081 இடங்கள் உள்ளன.

48/3081 = 1.55 விழுக்காடு. இதுதான் நமக்குக் கிடைத்த விழுக்காடு.

இந்த 48 பேர் போக மீதமுள்ள 3033 பேரும் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்புக்குச் சென்றவர்கள்.

இப்போது புரிகிறதா தகுதி எது? தரம்  எது என்பது?

2016_2017இல் 12ஆம் வகுப்பு படித்துவிட்டு பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்புகளுக்குப் போய், ‘நீட்’ தேர்வை எழுதி அதில் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போய், 2017_2018இல் மறுபடியும் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்பிற்குப் போய், மறுபடி இரண்டாம் முறையாக ‘நீட்’ தேர்வு எழுதி, தேர்வாகி 2018இல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 2007 பேர்களாம். என்ன கொடுமையடா இது!

இவர்கள்  2 ஆண்டு ‘நீட்’ தேர்வுக்காக பிரத்யேகமாக ‘நீட்’ பயிற்சி மய்யங்களுக்குப் பயிற்சிக் கட்டணம் கொடுத்துள்ளனர்.  அதாவது பிரபல பயிற்சி மய்யங்களுக்குத் தலா ஒரு நபர் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

‘நீட்’ தேர்வு – பணம் கொழுத்தவர்களுக்காகவா?

‘நீட்’  யாருக்காக _ ‘நீட்’ பயிற்சி மய்யங் களுக்காகவா?

‘நீட்’ யாருக்காக _ பணம் கொழுத்த வர்களுக்காகவா?

2016_2017இல் ‘நீட்’ இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் வெறும் 62. ‘நீட்’  வந்த பிறகு பெற்ற இடங்கள் 1220. அதாவது கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.

‘நீட்’ பின் திரையில் இருக்கும் சதி இன்னமுமா புரியவில்லை? ‘நீட்’ என்பது யார் வயிற்றில் அறுத்துக் கட்ட என்பது விளங்கவில்லையா?

‘நீட்’ பயிற்சி மய்யங்களில் காசோலையோ, வரைவோலையோ கொடுக்க முடியாது. எல்லாம் நேரிடைப் பணப் பரிவர்த்தனைதான் _ வருமான வரித் துறையினரை ஏமாற்றிட!

பணம் உள்ளவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியா? இவர்களுக்காகத்தான் ‘நீட்’ கல்வியா?

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அர்த்தமுள்ள கேள்வி

மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் ஏழைகளுக்காகத் திறக்கப்படுவதில்லை. பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேரும் முறையை மாற்றிடவே ‘நீட்’ தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், ‘நீட்’ பயிற்சிக்காக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முழு அதிருப்தியை அழுத்தமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை திரும்பப் பெறும் மத்திய அரசு ‘நீட்’ தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை? என்கிற நியாயமான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் “கமுக்கமாக”’ நிராகரிக்கப்பட்டதே ஒழுங்கு முறையற்றது! தமிழ்நாடு அரசும் ஏன் மறைத்தது என்பது போன்ற கேள்விகள் சமூகநீதியாளர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.

நடக்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப் படவேண்டும். அம்மா ஆட்சி என்று சொல்பவர்கள், சமூகநீதி காத்த வீராங்கனையாக அவர் செயல்பட்டதை மறந்தது ஏன்? ஏன்??

விரைவில் இதற்கொரு தீர்வு காணப்பட வேண்டும். சமூகநீதியாளர்களை ஒன்று திரட்டி, வீதிக்கு வந்து போராட திராவிடர் கழகம் தயங்காது, தயங்காது! _ எச்சரிக்கை! எச்சரிக்கை!!

– கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *