இயக்க வரலாறான தன் வரலாறு(234) : கர்நாடகாவில் நடைபெற்ற இடஒதுக்கீடு கருத்தரங்கு!

செப்டம்பர் 16-30 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்

கி.வீரமணி

மேலத்தஞ்சை மாவட்டம் கும்பகோணம், மயிலாடுதுறைக்கு இடையில் உள்ள நார்சிங்கன்பேட்டை கடை வீதியில் 11.4.1989 அன்று தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தந்தை பெரியார் அவர்களுடைய முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினேன். பொதுக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன், செயலாளர், கோ.தங்கராசு, ஒன்றிய தி.க. துணைத் தலைவர் சே.பழனிவேலு, சுந்தரப்பெருமாள்கோவில் சன்னாசி, கு.முருகேசன், மயிலாடுதுறை தியாகராசன், குடந்தை நகர தி.க. தலைவர் ஜி.என்.சாமி, பட்டீஸ்வரம் அய்யாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

18.4.1989 அன்று கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சம்மேளனம் சார்பில் நடந்த ‘இடஒதுக்கீடு’ தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் நான் கலந்துகொண்டேன். என்னுடன் தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான பசவராஜ் அவர்களும் கலந்துகொண்டார்கள், கருத்தரங்கம் கம்பன் பூங்கா பெங்களூருவில் நடைபெற்றது.

கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் இணையத்தின் தலைவர் டாக்டர் கே.பீமப்பா சிறப்புரையாற்றினார். சமூக விஞ்ஞானியும், சமூக பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தை நடத்தி வருபவருமான டாக்டர் பி.எஸ்.பார்க்கராவ், ஜஸ்டிஸ் திரு.சென்னபாசப்பா, திருமதி சாந்தகுமாரி, தேவராஜ் அய்.ஏ.எஸ்., எல்.கங்காதரப்பா அய்.ஏ.எஸ். உள்ளிட்டோர் உரையாற்றினார்.

இடஒதுக்கீடு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட பசவராஜ் அவர்களுடன் உரையாடும் ஆசிரியர் கி.வீரமணி

 மாநாட்டில் ஏராளமான அளவில் அரசு அலுவலர்களும், வழக்கறிஞர்களும் பலதரப்பட்ட துறையினரும் கலந்து கொண்டார்கள். கருத்தரங்கத்தை முடித்துக்கொண்டு பின்பு, என்னிடத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கட்கு கன்னட வெறியர்கள் இழைக்கும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று என்னிடத்தில் மனு கொடுத்தார்கள். இதனை நான் இடஒதுக்கீடு கருத்தரங்கில் கலந்துகொண்ட கர்நாடக நிருவாகிகளிடம் எடுத்துரைத்தேன் “கன்னட ரணதீர படை(?)’’ என்னும் காடைக் கும்பலின் வன்முறைகள் படிப்படியாகத் தெரு முனைகளிலிருந்து தொழிற்சாலை வாயில்கள்வரை பரவிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தொழிற்சாலை மேலாண்மையாளர்களைக் “கன்னடரணதீரக் காடை’’கள் நேரடியாகவே அச்சுறுத்தித் தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதில் வெற்றி கண்டு வருவதை நான் கண்டித்து அந்தக் கருத்தரங்கில் நிருவாகிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்று தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவந்தேன்.

 புரட்சிக் கவிஞர்

பாரதிதாசன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா மூன்று நாள் விழாவாக 20, 21, 22.4.1989 ஆகிய நாள்கள். இரண்டு நாள் விழா, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. மூன்றாவது நாள் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. நிறைவு விழா கூட்டத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். விழாவில், சோ.ஞானசுந்தரம், ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால், காவிரிச்செல்வன் உள்ளிட்ட கழக நிருவாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நான் உரையாற்றும்போது, சட்டமன்றத்தில் கலைஞர் தாக்கப்பட்டதை நினைத்து நினைத்து ரத்தக் கண்ணீர் வடித்து வருகிறோம் என்று கண்டித்து உரையாற்றினேன்.

புரட்சிக்கவிஞர் விழாவில் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, புதுவைத் தாக்குதலுக்கு தந்தை பெரியாரின் மருந்துத் துளிகள், சட்டசபைத் தாக்குதலுக்கு வீரமணியின் கண்ணீர்த் துளிகள், என் இதயத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு, தாய்க் கழகம் தரும் மருந்துத் துளிகள் என்றும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மூன்று நாள் விழாவிலும், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிருவாகிகள் உறுதுணையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவரும் திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு உறுப்பினருமான பெரியார் பெருந்தொண்டர் பி.வி.வடிவேலு 6.5.1989 அன்று மறைவுற்றார். ‘விடுதலை’யில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையம் சார்பில் இரங்கல் செய்தி வெளிவந்தது. அதேபோல் தந்தை பெரியார் இடத்திலும், என்னிடத்திலும் கழகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான பெரியார் பெருந்தொண்டர் கடலூர் மானமிகு எஸ்.எஸ்.சுப்பராயன் அவர்கள் 12.5.1989 அன்று தமது இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

புரட்சிக் கவிஞர் விழாவில் கலைஞர் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

 கழகத்தின் சார்பில் கழகத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சாமிதுரையை அனுப்பி இறுதி நிகழ்ச்சியிலும் பங்கேற்க அனுப்பி வைத்தோம். நான், அவசரமாக அமெரிக்காவில் நியூயார்க் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 12.5.1989 அன்று இரவுதான் புறப்பட்டுச் சென்றேன். எனக்குத் தகவல் தெரிவித்தவுடன் அவர்களுக்கு இரங்கல் செய்தியை விடுதலையில் பதிவு செய்ய வலியுறுத்தினேன்.

முதுபெரும் மூதாட்டியார் திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள் முடிவு எய்தினார்கள். ரத்த அழுத்தத்தினால் கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு 31.5.1989 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிட்டது.

திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம்பரனார் அவர்களின் துணைவியார் ஆவார்கள். திருமதி சிவகாமி சிதம்பரனார் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடந்த விதவைத் திருமணமாகும். திராவிடர் கழகத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து இரங்கல் அறிக்கை வாசிக்கப்பட்டது. நான், துணைவியார் மோகனாவுடன் சென்று மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன். சென்னை மாவட்ட தி.க. தலைவர் எம்.பி.பாலு மற்றும் பெரியாரணித் தொண்டர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

சாமி சிதம்பரனார் மற்றும் துணைவியார் சிவகாமி

இலண்டனில் நடைபெற்ற மாநாட்டிலும், அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட நான், ஜப்பான் “புரோக்குமின் விடுதலை இயக்கம்’’ அமைப்பினைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளிலும் 23.5.1989 முதல் 25.5.1989 ஆகிய மூன்று நாள்களும் கலந்துகொண்டேன்.

புரோக்குமின் மக்கள் _ ஜப்பானில் பெரிதும் ஒடுக்கப்பட்டவர்களான அவர்களின் உரிமை மீட்சிக்கு இயக்கம் நடத்துவோர் _ என்னை அழைத்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செய்தனர்.

இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை ஒப்பிட்டு, நான் அரிய உரையை நிகழ்த்தினேன். ஒசாகாவிலிருந்து அந்த அமைப்பின் தலைவர் ‘ஹிமேச்சி சுமினோ’  டோக்கியோ வந்து என்னை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார். அவர் என்னை உபசரித்து அனுப்பினார். ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் உதவினர்.

26.5.1989 அன்று அங்கிருந்து ஹாங்காங் சென்ற தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 28ஆம் நாள் சிங்கப்பூர் வந்தபோது, திரு.பழனிவேல் அவர்களின் இல்லத் திறப்பு விழாவில் கலந்துகொண்டேன். சிங்கப்பூரில் ‘தமிழ்முரசு’ அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களுக்குச் சென்று பிறகு விமானம் மூலம் புறப்பட்டு தாயகம் வந்து சேர்ந்தேன்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில், ‘தமிழ்முரசு’ பலராமன், திருநாவுக்கரசு, சிங்கப்பூர் திராவிடர் கழகத் தோழர்கள், தி.நாகரத்தினம், சந்திரன், மூர்த்தி, மனோகரன், விக்டர் ஆகியோர் வந்து எங்களை வழியனுப்பி வைத்தனர். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி சிங்கப்பூர் வந்து சந்தித்து வாழ்த்துகளைச் சொல்லி உரையாடிச் சென்றார். இந்தப் பயணம் கொள்கைப் பிரச்சாரப் பெரும்பயணமாகத் திகழ்ந்தது. 21.5.1989 முதல் தொடர்ந்த எனது பயணம் நிறைவு பெற்றதும் 1.6.1989 அன்று சென்னை திரும்பினேன்.

4.6.1989 ஞாயிறு காலை, சென்னை பெரியார் திடலில், பெரியார் பெருந்தொண்டர் நாகூர் ஆர்.சின்னதம்பி_ருக்குமணி ஆகியோரின் செல்வன் பெரியார் செல்வனுக்கும் _ மணக்கால் அய்யம்பேட்டை கோவிந்தராசன் அவர்களின் மகள் கோமதிக்கும் நடைபெற்ற வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவிற்கு நான் தலைமை  ஏற்று நடத்திவைத்து உரையாற்றினேன்.

வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வடசேரி து.ஜெகதீசன்_மீரா ஆகியோருடைய செல்வி சித்ரா, சென்னை பழ.நாகப்பன்_சாமுண்டீஸ்வரி ஆகியோர்களுடைய செல்வன் சரவணன் ஆகியோருக்கும், விழுப்புரம் பி.எஸ்.பாளையம் கோ.ராஜாராமன்_கவுரி ஆகியோருடைய செல்வன் ஆர்.சுரேஷ்குமார், வடசேரி து.ஜெகதீசன்_மீரா ஆகியோருடைய இளைய செல்வி சுமதி ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை 25.6.1989 அன்று சென்னை பெரியார் திடலில் செய்துவைத்தேன்.

இந்த மணவிழாவிற்கு தமிழக மூதறிஞர் குழு தலைவர் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

கீழத்தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு அருகிலுள்ள ஓடாச்சேரி என்னும் கிராமத்தில் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ். கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 6.7.1989 அன்று நடைபெற்ற அந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் நானும் கலந்துகொண்டு கண்டன உரையை நிகழ்த்தினேன். கூட்டத்திற்கு கீழத்தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் எஸ்.எஸ்.மணியம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களுடைய  இளவல் சித்திரக்குடி ந.பழனிநாதன்_ கஸ்தூரி ஆகியோர்களுடைய செல்வன் டாக்டர் ப.கண்ணன் அவர்களுக்கும், பொன்னாப்பூர் மேல்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் சா.பன்னீர்செல்வம்_பானுமதி ஆகியோருடைய செல்வி ப.அல்லிக்கும் 7.7.1989 அன்று தஞ்சை குருதயாள்சர்மா அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நான் தலைமை ஏற்று திருமண வாழ்க்கை ஒப்பந்த விழாவினை உறுதிமொழி கூறி திருமணத்தை நடத்திவைத்தேன்.

மேலத்தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிற்கு அருகிலுள்ள மதுக்கூரில் 7.7.1989 அன்று மாலை வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரவில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு மாநாடும் பேருந்து நிலையம் அருகில் சு.சாந்தன் நினைவுப் பந்தலில் நடைபெற்றது.

மாநாட்டில் மேலத்தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் ஆர்.பி.சாரங்கன் தலைமை வகித்தார். நான் ஆர்.எஸ்.எஸ். பற்றி ஆதாரபூர்வமான உதாரணத்தோடு கண்டித்துப் பேசினேன்.

19.7.1989 அன்று ‘காங்கிரஸ் கட்சி’ இன்று பின்வாங்குவது ஏன்? என்னும் தலைப்பில் முக்கிய அறிக்கையை விடுத்தேன். மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று பிற்படுத்தப்பட்டோர் நலனில் காங்கிரசுக்கு பெரிதும் அக்கறை இருக்கிறது என்றும் சொல்லி, திருவாளர் இராஜீவ்காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில் (1984 அக்டோபர்) “Congress in the welfare of Backward classes” என்னும் தலைப்பிலே வெளியீடு ஒன்று வெளியிட்டு இருந்தது. அதனை இங்குத் தருகின்றேன்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வெளியிட்டவர்தானே இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். ஏன் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமலாக்கவில்லை?

எனவே, 9 ஆண்டுகாலம் பொறுத்துப் பார்த்துவிட்டோம். இனி பொங்கி எழவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. அதன் ஒரு கட்ட அறிவிப்புதான் ஆகஸ்ட் முதல் நாள் நாம் நடத்தப்போகும் அறப்போர்!

அரசியல் விடுதலை வேண்டும் என்பதற்காக “ஆகஸ்ட் போராட்டம்’’ நடத்தினர், முன்பு. அதில் ரயில் தண்டவாளம் பெயர்ப்பு, அஞ்சல் நிலையத்திற்குத் தீ, தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்ட நிகழ்வுகள் போன்ற வன்முறைகள் செய்தார்கள். நமது அறப்போர் சமூக விடுதலைக்கு, சமுதாய நீதிக்கு என்பதோடு, இதில் வன்முறை சிறிதும் இடம் பெற முடியாத அளவுக்கு அவ்வளவு கட்டுப்பாடாக நடைபெறும். எனவே, நாம் அதில் அரசியல் கண்ணோட்டத்துடன் அறப்போர் நடத்தவில்லை. முழுக்க முழுக்க சமுதாய நீதிக்கே!

எனவே, பல்லாயிரக்கணக்கில் ஆகஸ்ட் 1.8.1989 அன்று போராட்டத்திற்குத் திரண்டு வருமாறு ஆகஸ்ட் அறப்போரினை விளக்கி மூன்று நாள் ‘விடுதலை’யில் எழுதியிருந்தேன்.

டி.யு.எல்.எஃப் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அமிர்தலிங்கம், முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு.யோகேஸ்வரன் (முன்னாள் எம்.பி.) ஆகிய இருவரும் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதன் தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார் என்று 16.7.1989 அன்று மாலை வந்த செய்தியும் கேட்டு, எல்லையற்ற வேதனைக்கும், துயரத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக நேர்ந்தது.

ஈழத் தமிழர்களுக்காக தந்தை செல்வா அவர்களுடன் இருந்து, உழைத்த அரசியல் தலைவர் திரு.அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் போன்றவர்களுக்கு ஏற்பட்ட முடிவை எந்த நாகரிக உள்ளமும் சகித்துக் கொள்ளாது. தமிழினம் உணர்வோடு மனிதர் பண்புடைய எவரும் இதனைவ் சகிக்கவும் முடியாது. மறைந்த அந்த மாபெரும் வீரத் தலைவர்கள் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த  இரங்கலை 15.7.1989 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் தெரிவித்து இருந்தேன். இந்தத் தகவலை ‘இந்து’, ‘தினமணி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட ஏடுகள் பழிதூற்றும் முரண்பாடான செய்திகளால் நாம் உடனே முடிவுக்கு வர முடியவில்லை. காரணம், இப்படித் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் “இப்படி அவசர அவசரமாக இரு அரசாங்கத் தரப்பிலும் ஏதும் கூறாதிருக்கும்போது செய்திகள் வருவதும் பெரிதும் புலனாய்வுத் துறைகள் பெற்றெடுக்கும் செய்திதானே என்று வாடிக்கையாக அறிந்த ஒன்று’’ என்று தெளிவாகப் பிரகடனப்படுத்தினேன்.

‘RAW’ என்னும் இந்திய உளவு நிறுவனத்தால் சமாதானம் பேச அழைத்துச் செல்லப்பட்டு ‘ஜானி’ என்கிற புலிப்படை இளைஞன் படுகொலைக்கு ஆளாக்கப் பட்டானே _ அதுபோன்ற ஒரு கொடுமையை இந்த நாட்டுப் பத்திரிகை உலகம் கண்டித்ததா? வெறும் யூகம் _ வதந்தி என்று மட்டுமல்ல; இது திட்மிட்டே செய்யப்படும் பழிப் பிரச்சாரம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தேன்.

மண்டல் பரிந்துரையை அமலாக்கக்கோரி நடைபெற்ற மறியலில் கைதாகும்

ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத்தினர்

 16.7.1989 அன்று தீவிர கிராமப் பிரச்சாரத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மறைவிற்கு இரங்கல் 17.7.1989 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பெற்றது.

26.7.1989 முதல் 31.7.1989 வரை ரயில் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மண்டல குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகம் முழுவதும் சென்று மக்களிடத்தில் கிளர்ச்சி குறித்து விளக்கி வந்தேன்.

1.8.1989 அன்று அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, ஊர்வலமாக மறியலுக்குப் புறப்பட்டபோது அருகே போலிசார் தயாராக நிறுத்திவைத்திருந்த வேன்களில் கைது செய்து ஏற்றினர். அப்போது, ‘மண்டல் பரிந்துரையை அமலாக்கு!’ என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

முன்னதாகவே போராட்ட வீரர்களிடையே தமிழக ஜனதாதள் கட்சி முன்னணியினர் வி.எஸ்.தளபதி எம்.ஏ., பி.எல்., கலிவரதன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் எனக்கு கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்தி அனுப்பினர். எங்களை கைது செய்தனர்.  இதில் பெண்கள் 36, ஒரு பெண் கைக்குழந்தையுடன் கைதானார். 2.8.1989 அன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.

‘மாலைமணி’ இதழின் ஆசிரியர் சுயமரியாதை வீரர் பி.எஸ்.இளங்கோ அவர்கள் 11.8.1989 அன்று திடீர் நெஞ்சு வலியின் காரணமாக மறைவுற்ற செய்தி அறிந்து 12.8.1989 அன்று நுங்கம்பாக்கம் மேத்தா நகர் ரயில்வே காலனி முதல் தெருவிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.

16.8.1989 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதல் வாய்ப்புகள் தி.மு.க. அரசின் புதிய ஆணையின் பலன்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் அறிக்கையை வெளியிட்டி ருந்தேன். அந்த அறிக்கையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு செய்துள்ளதால், அந்த சமூகத்தினர் கிடைத்துள்ள பயன்களை நாம் அவசியம் பாராட்டிட வேண்டியதாகும்.

பிற்படுத்தப்பட்டவர்களில் இடஒதுக்கீடு உயர்ந்தாலும்கூட (50 சதவிகிதமாக) ஜாதி எண்ணிக்கைகளும் கூடிவிட்டதால் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று 107 ஜாதிகளை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து எடுத்து, (கிடைத்த மக்கள் தொகை கணக்குகளை வைத்துக்கொண்டு) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு என்கிற ஓர் ஆணையை கலைஞர் அரசு ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களில் நிரூபித்துவிட்டது என்பதை அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டி விளக்கியிருந்தேன்.

கேரள மாநிலத்தில் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்ட சமுதாயச் சீர்திருத்தச் செம்மல் நாராயண குரு அவர்களின் 135ஆம் ஆண்டு  பிறந்த நாள் விழா சென்னை மணலியில் 4.9.1989 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு சுவாமி சித்ரோபானந்தா தலைமை வகித்தார். டாக்டர் கே.சி.சந்திரன், டாக்டர் எம்.கே.ராமன், டாக்டர் கே.ராமமூர்த்தி, நாராயண குரு அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுதிய எஸ்.அரோனி போஸ், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பெரியவர் நல்லபெருமாள் ஆகியோர் பேசியதை அடுத்து இறுதியாக நான் சிறப்புரை ஆற்றினேன். என்னுடன் வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் க.பலராமன், மாவட்ட திக. செயலாளர் அ.குணசீலன், சென்னை மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

17.9.1989 அன்று அய்யா அவர்கள் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள் விழாவில் நான் இரண்டு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன். அதில் ஒன்று, நரிமணத்தில் பெட்ரோலுக்கு ‘ராயல்டி’ கேட்டு 29ஆம் தேதி நரிமணத்திலும், நிலக்கரிக்கு ‘ராயல்டி’ கோரி 30ஆம் தேதி நெய்வேலியிலும் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும்,

மற்றொன்று, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு பல வகைகளில் நடந்துவருகிறது. ஆளுநர் ஆட்சியின்போது மாதம் ஒன்றுக்கு தமிழ்நாட்டுக்கு 80 ஆயிரம் டன் அரிசியை வழங்கிய மத்திய அரசு மக்களாட்சி மலர்ந்த காலகட்டத்தில் 40 ஆயிரம் டன்னாகக் குறைத்துள்ளதைக் கண்டித்து, திராவிடர் கழகம் 29, 30.9.1989 ஆகிய இரு நாள்களும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து என் தலைமையில் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

எஸ்.கருணானந்தம்

மானமிகு கவிஞர் எஸ்.கருணானந்தம் அவர்கள் 27.9.1989 அன்று நெல்லையில் முடிவு எய்தினார். அவருக்கு வயது 64. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியுற்று, உடனே நெல்லை புறப்பட்டு 28.9.1989 அன்று முற்பகல் 11 மணி அளவில் கவிஞரின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன்.

அங்கு கவிஞர் அவர்களின் உடல் கறுப்புச் சட்டை அணிவிக்கப் பெற்று, எவ்வித மூடச் சடங்குமின்றி மாலைகளால் போர்த்தப்பட்டிருந்தது.

கவிஞர் கருணானந்தம் அவர்கள் 1942ஆம் ஆண்டு கும்பகோணம் அரசினர் கல்லூரி இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்தார். அப்போது சிவகாசித் தோழர் தவமணிராசனும் இதே வகுப்பில் பயின்றார். இவர்கள் இருவரும்தான் திராவிடர் மாணவர் கழகத்தைத் துவக்கினர். இருவருமே தமது படிப்பைப் பாதியில் கைவிட்டுப் பின்னர் ஈரோடு ‘குருகுலத்தில்’ அய்யாவோடு பணி தொடர்ந்தனர்.

தோழர் ஈ.வி.கே.சம்பத்தோடு இணைந்து கருஞ்சட்டைப் படை அமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் திரு.கருணானந்தம்.

‘தமிழர் தலைவர்’ என்னும் தலைப்பில் சாமி.சிதம்பரனார் அவர்கள் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை இதைத் தொடர்ந்து யாரும் எழுதாததால் கவிஞர் கருணானந்தம் அவர்கள் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். ‘தந்தை பெரியார்’ என்னும் தலைப்பிலான இந்த நூல் 1979ஆம் ஆண்டு வெளியானது.

டாக்டர் கோவூரின் பகுத்தறிவு விளக்க மனோதத்துவ நூல் ஒன்றை ‘டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தார் கவிஞர் கருணானந்தம். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இந்நூலை வெளியிட்டது.

1967இல் கவிஞர் அவர்கள் “அண்ணா காவியம்’’ என்னும் நூலை இயற்றி, இதற்குத் தந்தை பெரியார் அவர்களிடம் மதிப்புரை வாங்கி வெளியிட்டார்.

1972_73ஆம் ஆண்டுவாக்கில் கவிஞர் அவர்கள் தமிழ்நாடு அரசு செய்தித்துறையில் பணியாற்றிய காலத்தில் தந்தை பெரியாரின் ஒரு நாள் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் மூலம் படமாக்கினார்.

கவிஞர் அவர்கள் இறுதியாக எழுதிய கவிதை “தந்தை பெரியார் கொள்கைக் குறள்’’ என்னும் தலைப்பில் ‘விடுதலை’ வெளியிட்டது. ‘தந்தை பெரியார் 111ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் வெளியிடப்பட்டது.

(நினைவுகள் நீளும்…)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *