பெண்ணால் முடியும் …. : ஏழ்மையை வென்று டி.எஸ்.பி.யான சரோஜா!

மே 16-31 2019

திருநெல்வேலி மாவட்டம் சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. அப்பா முருகானந்தம் திரையரங்கில்  வேலைசெய்து வருகிறார். அம்மா பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளி. மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவருக்கு அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்குப் பொருளாதார பலம் இல்லை. “அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே ரொம்ப கஷ்டப்படுறாங்க.

இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில் காலேஜ் போக முடியலை. பகுதி நேரமாக ஏதாவது வேலை செய்துகிட்டே தொலைதூரக் கல்வியில் பட்டப் படிப்பு படிக்க முடிவெடுத்தேன்’’ என்கிறார். தொலைதூரக் கல்வி மூலம் தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்து, குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார். சரோஜாவின் குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரம், அவரின் கணவர் பிரம நாயகம் இருவரும் சரோஜாவை அரசுத் தேர்வுகளை எழுதச்சொல்லி ஊக்குவித்தனர். பின்னர், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மய்யத்தில் சேர்ந்தார்.

“வீட்டிலிருந்து காலைல ஏழு மணிக்கு வேலைக்குப் புறப்பட்டால்  திரும்ப வீட்டுக்கு வர நைட்டு ஒன்பது மணியாகிவிடும். அகாடமியில் கொடுக்கிற பயிற்சி மட்டும்தான். மற்றபடி வேறெந்தச் சிறப்பு வகுப்புகளுக்கும் போனதில்லை. வார இறுதி நாட்களில்தான் பயிற்சி என்பதால் வேலைக்குப் போவதிலும் சிக்கல் இல்லை’’ என்கிறார்.  2016-ல் குரூப் -1 தேர்வை முதன்முறையாக எழுதினார். முதன்மைத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. ஆயுதப்படைக் காவலர்களுக்கான  தகுதித் தேர்வு பற்றிக் கேள்விப்பட்டார்.

“நம்ம குடும்பத்தோட வறுமையைப் போக்க அரசு வேலை வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி என நினைத்தேன். சிறப்புக் காவலர்களுக்கான உடற்தகுதி நடக்கும் இடத்துக்குப் போனபோதுதான் நிறைய போலீஸ்காரர்களைப் பார்த்தேன். அதுக்கு முன்னால  போலீஸை அருகில் சென்று பார்த்ததில்லை. அங்கு நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் என்னால் ஜெயிக்க முடியவில்லை. நம்மால் இந்தச் சின்ன வேலையில்கூட ஜெயிக்க முடியவில்லையேன்னு கஷ்டமா இருந்தது.  ஆனால், இதைவிட வேற ஒரு பெரிய வேலை நமக்காகக் காத்துகிட்டு இருக்கு என எனக்கு நானே தைரியம் செல்லிக்கிட்டேன்” என்கிறார்.

புத்தகங்களையும் நாளிதழ்களையும் படித்து, பொது அறிவை வளர்த்துக் கொண்டார். அவரது வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களோ ஆசிரியர்  ஏதாவது கேள்வி கேட்டால் உடனே ஸ்மார்ட்போனில் பதிலைத் தேடி சொல்லி விடுவார்களாம்.  அப்போது சரோஜாவிட மிருந்தது  பழைய மாடல் பட்டன் போன். அதுபோன்ற நேரத்தில் மட்டும் வருத்தம் ஏற்படும் என சரோஜா சொல்கிறார். குடும்பத்தின் வறுமையைப் போக்கக் கல்வி ஒன்றுதான் வழி என்பதைத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்ட சரோஜா விடாமுயற்சியுடன் படித்தார். 2017-ல் நடந்த குரூப் 1 தேர்வை எழுதினார். தகுதித் தேர்வு, முதன்மைத் தேர்வு இரண்டிலும் தேர்ச்சிபெற்றார்.

“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தேர்வு முடிவு வெளியானது. நான் தேர்ச்சிபெற்ற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை’’ என மகிழ்ந்தார்.

ஜனவரி மாதம்  நேர்முகத் தேர்வு நடந்தது. துணை ஆட்சியர், தீயணைப்புத் துறை, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஆகிய பணிகள் இருந்துள்ளன. “நேர்முகத் தேர்வுக்கு என்னைத் தவிர மேலும் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ஒருவர் துணை ஆட்சியர் பணியைத் தேர்வு செய்தார். அடுத்தவர் தீயணைப்புத் துறையைத் தேர்ந்தெடுந்துவிட, டிஎஸ்பி பணிக்கான ஆணை எனக்கு வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டது’’ என்கிறார்.

தமிழ் வழியில் படித்து, குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கல்வியைப் பற்றுக்கோலாகக்கொண்டு வறுமையை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு தன் லட்சியத்தை வென்றிருக்கிறார்.    

                                            தகவல் : சந்தோஷ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *