ஆய்வு : இராமாயணம் : சரித்திரமா? காவியமா?

அக்டோபர் 16-31

– ம. கிருஃச்ணமூர்த்தி

அய்ம்பெரும் கூறுகளால்தான் உலகத் தோற்றமும் இயக்கமும் நடைபெறுகிறது என்றும் (புறம்-2) வானவியலை முற்றும் கண்டு விண்டவர்கள்தான் நமது குமரிக் கண்டத் தமிழர்கள் என்றும், அவற்றை எல்லாம் குறியீட்டுச் சொற்களாக அறிவுறுத்தினார்கள் நமது கணியர்கள் என்றும் அக்குறியீட்டுச் சொற்களையே ஆரியர்கள் திருடி, திருத்தி இராமாயணம் புனைந்தார்கள் என்றும் கூறுவர் ஆய்வறிஞர் முனைவர் பெ.க.வேலாயுதம் அவர்கள்.

வானவியல் குறியீடுகள்தான் வாலி, அனுமன், வீடணன், இராவணன், இராமன் முதலிய பெயர்கள் என்றும் விளக்குவார்.

 

பக்குடுக்கை நன்கணியனார் பகுத கச்சாயனர் என மாற்றி அவரும் வடபுலத்தார் என ஆக்கினர் என்பதையும் உபநிடதங்கள் தமிழர்களால் இயற்றப்பட்டன என்பதையும் குணா அவர்களின் வள்ளுவத்தின் வீழ்ச்சியில் பரக்கக் காணலாம்.

கண்டப் பெயர்ச்சியும் ஊழிப் பேரலைகளும் தமிழர்களைச் சிதறடித்தன. கிரேக்க நாட்டில் ஒதுங்கிய ஓமர் தன் தொன்மைகளைக் கூற இலியது, ஒதீசியசு காவியங்களைப் புனைந்தார்.

இந்திய நாடு முழுவதும் தமிழ்நாடாக இருந்தபோது இமயம் முதல் குமரிக் கண்டம் வரை இராமாயணம் பலரும் அறிந்த நாட்டுப்புறக் கதைகளாக உலவியவைதான். அலெக்சாண்டருக்குப் பின் வடபுலத்தில் கிரேக்க ஆளுமை நிலவிய காலங்களில் ஓமரின் காவியங்கள் நாடகங்களாக உலவி வந்தன.

அதைத்தான் நாடோடிகளாக வந்தேறிய ஆரியக் கூட்டம் தங்களுடையதாகப் பறைசாற்றிக் கொண்டு கவர்ந்துவிட்டது.

அப்படிப் பிறர் பொருளைக் கவருதல், திரித்தல் போன்றவை அவர்களது பிறவிக் குணம் – அனாதிக் காலம் முதல் பரம்பரையான வியாதி -அன்றாட வாழ்வு முறை.

பார்ப்பனர்கள் தாசிகளைப் போல் தங்கள் வாழ்க்கையை நேசிக்க வேண்டும். பாம்புகள், கரையான் புற்றைத் தம் இருப்பிடமாக்கிக் கொள்வதுபோல் பிறர் வீட்டில் புகுந்துகொள்ள வேண்டும். பிறரது கருத்துகளை, கொள்கைகளைத் தமதாக்கிக் கொண்டு தமது என்று உரிமை கொள்ள வேண்டும் என்று மகாபாரதம் வனபருவம் அறிவுறுத்துகிறது.

கி.மு. 2500களில் பாரசீகப் பாலைவனத்தினிடையே கிடைத்த செழிப்பான மண்ணில் விளைவிக்கப்பட்ட, சேமிக்கப்பட்ட விளைச்சலை இரவோடிரவாகத் திருடிக் கொண்டு போய் உழைக்காது உண்டு கொழுத்தது ஒரு கூட்டம்.

பாரசீக மொழியில் அஹுரா என்றால் விவசாயி என்றும் தேவா என்றால் திருடன்/ராட்சசன் என்றும் பொருள்.

அந்த அஹுராதான் சிந்துவெளி வந்தபோது அசுரா என்றும், விவசாயம் தெரியாத தேவா தேவர் என்றும் மாறி தாழ்வு உயர்வு நிலை எய்தியது. அந்த தேவர்களைத்தான் நாம் ஆரியர் – அயலவர் (alion) என்று கூறுகிறோம் என்கிறார் கே. கங்காதரன், வாழ்வை வழிமறிப்பது எது? என்ற நூலின் 53 -57ஆம் பக்கங்களில்.

அதனால்தான் நமது அய்யனும் தேவரன்ன கயவர் என்றார் போலும்.
இவ்வாறு பாரசீகத்தில் துவங்கிய அவர்களின் திருட்டுத் தொழில் இன்று வரை தொடர்வதைக் காணலாம்.

புஷ்யமித்ர சுங்கன் காலத்து மக்களிடையே உலவிய நாட்டுப்புறக் கதைகளையும் கிரேக்கர்கள் நடத்திய The Helen of Troy என்ற நாடகக் கருவையும் இணைத்துத் திரித்து ஒரு பித்துக்குளிப் பயல் உளறியது எல்லாம் இராமாயணம் என்று பெயர் பெற்றது ஆரிய வர்த்தம் என்ற வடபுலத்தில்தான். (ஆரிய வர்த்தம் என்பதே ஒரு திருட்டு வேலைதான். பாம்பு, புற்றுள் நுழைந்து தமதாக்கிக் கொண்டதுபோல) அதை எழுதியவன் வால்மீகி என்று கூறுவதும் ஒரு திருட்டுதான்.

வால்மீகி பற்றி ரிக் வேதம் 4:19:9இல் அக்ரு என்ற கன்னி தன் பொய்யொழுக்கத்தால் பெற்ற மகனை எறும்புப் புற்றிலிருந்து வெளிப்படுத்தினாய் ஓ இந்திரனே! புற்றிலிருந்து (வன்மீகம்) வந்த அக்குருடன் பாம்பைப் பார்க்கும் அளவு பார்வை பெற்றான். உடைந்திருந்த அவன் எலும்புகளும் இணைந்தன என்று கூறுகிறது அலைகள் வெளியீடு பக்கம் 837.

இந்தச் செய்தியைத் தவிர வால்மீகி பற்றி வேறு எந்த இடத்திலும் எவ்வேதத்திலும் வேறு எந்தச் செய்தியும் கிடையாது.

இவன் முனிவனா? கவிஞனா? பாடல் எதுவும் யாத்துள்ளானா? என்ற எத்தகவலும் கிடையாது.

இந்த அனாதரவான குழந்தையைத் தூக்கி வந்து வால்மீகி என்று பெயர் சூட்டி இராமாயண ஆசிரியராக்கியது ஒரு பச்சைத் திருட்டு வேலைதானே -_ (பார்க்க: ராகுலஜியின் வால்காவிலிருந்து கங்கை வரை _ பக்கம் 258) திருட்டு மட்டுமல்ல வஞ்சகம் நிறைந்ததும்கூட – இந்து மதத் தத்துவ இயல் _ ராகுல்ஜி_ பக்கம் 69, ஞானதீபம் 6ஆவது சுடர் – தமிழ்ப் பதிப்பு – 101ஆம் பக்கத்தில் விவேகானந்தர் கூறுவதையும் கவனிக்க.

விவேகானந்தர் வேதகால முனிவர் ஒருவரைத் தெய்வீகக் காட்சியில் கண்டு அம்முனிவர் சிந்து நதிக் கரையில் நின்றபடி காயத்ரி மந்திரத்தை உணர்ச்சிப் பெருக்குடன் ஓதியது விவேகர் காதுகளில் தெளிவாக விழுந்ததாம். (ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள தைத்திரீய உபநிஷதம் – பக்கம் 2)

சிந்து நதிக்கரை என்று எந்த அடையாளத்தில் தெரிந்ததோ? முனிவர் ஓதியது இவர் காதுகளில் தெளிவாக விழுந்ததாமே!

கனவில் மட்டுமே நிகழக் கூடியதை தெய்வீகக் காட்சி என்று கூறுவது சரியா? அப்படியானால் சிந்து வெளித் தமிழர்களின் சிறந்த நாகரிகக் காட்சிகள் இவருக்குக் காட்சிகளாகத் தெரியாதது ஏன்?

இதேபோல் குமரிப் பாறையில் இவர் நின்று தென்கடலை நோக்கும்போது மேற்குத் திசையில் ஒரு புள்ளியில் தோன்றிய ஒளி அவரை நோக்கி வரவரப் பெரிதாகி அவர் அருகே வந்து வா வா என்றதாம் _ விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு – ரா. கணபதி எழுதியது – ராமகிருஷ்ண மட வெளியீடு.

என்ன, ஒளிகூட பேசியிருக்கிறதே!

இந்த ஒளி தெரிந்த விவேகருக்குக் கடலில் மூழ்கிக் கிடக்கும் குமரிக் கண்ட நாகரிகச் சிறப்பைக் காண இயலவில்லையே _ ஏன்?

அடுத்து…

இக்காலப் பெருந்திருட்டு ஒன்று. மாணவன் ஒருவனின் ஆய்வுக் கட்டுரையைத் திருத்த வந்த நல்லாசிரியர் ஒருவர் அந்த ஆய்வைத் தானே எழுதியதாக வெளியிட, எளிய அம்மாணவன் ஆசிரியர் மீது வழக்கிட, ஆசிரியர் வேண்டிய பணத்தையும் மாணவனுக்கு அடித்து அவன் வாயை மூடிவிட்டு ஆய்வின் முழு உரிமையையும் தனதாக்கிக் கொண்டு அன்று முதல் பெரிய தத்துவவாதியாகி விட்டார். பாம்பு, புற்றைத் தனதாக்கிக் கொண்டது. இத்திருட்டுத் தொழிலை ஓஷோ தன் The Books I have loved  என்ற நூலில் 178ஆம் பக்கம் விவரிப்பதைப் பார்க்கலாம்.

திருடுவதற்கு அடுத்த நிலை திரிபு வேலை புரிவதுதானே. இந்தத் தத்துவவாதி புத்தரை அர்த்தமற்றவராகவும் அபத்தமாகவும் விமர்சிப்பதை ராகுல்ஜி தன் பவுத்த தத்துவஇயல் என்ற நூலில் 46-51ஆம் பக்கம் வரை விவரித்து தத்துவவாதியைக் கிண்டல், கேலி செய்வதைக் காண்க.

லிப்கோ வெளியீடு சிறீமத் வால்மீகி இராமாயணம், உ.வே.சி.ஆர். சீனிவாச அய்யங்காரின் மொழிபெயர்ப்பு – அவர்தம் முகவுரையில் (பக்கம் 46 -XLVI)

இராமாயணம் தற்காலச் சரித்திரம் என்ற சொற்பொருளில் சரித்திரமல்ல. கேவலம் காவியமே என்கிறார்.

இன்னும், நாம் படிக்கும் ராமாயண பாடம் வால்மீகியால் சொல்லப்பட்டதல்ல. அநேக மாறுதல்களும், திரிபுகளும், குறைகளும் உள்ளன. அக்கால மக்கள் பேசிய மொழியில் எழுதப்பட்டதே தவிர சமக்கிருதத்தில் எழுதப்பட்டதல்ல என்றும் கூறுவது கவனிக்க வேண்டிய செய்திகள்.

இதைத்தான் தமிழகக் காமுகக் கம்பன் திருடி, திருத்தி தன் கேவல உணர்வுகளுக்கேற்ப எழுதி – வால்மீகியில் கோதாவரி நதியைக் கடந்து தெற்கே வராத இராமனை இலங்கை வரை கூட்டி வந்து போரிட்டான் என்று திரித்துக் கூறுகிறான். தமிழ் நாட்டையே பாழாக்கிவிட்டான்.

கீதையின் மறுபக்கத்தைப் படித்தால் ஓய்வு பெற்ற (அ) நீதிபதி ஒருவன் வியாசரையும் விஞ்சி பாரதப் போரில் 100 கோடிப் பேர் இறந்ததாகத் திரித்துக் கூறுகிறான்! அன்றிருந்த அத்தனை மதங்களுக்கும் கிருஷ்ணனே தலைவன் என்று திரித்துக் கூறுகிறான். எனவே கீதை ஒரு திரிபு வேலை.

தேசிங்கு மன்னனின் வரலாற்றை, புரட்டுத்தனமான வகையில் புராணக் கதையாகக் கூறும் விகடன் குழுமம் தற்சமயம் தமிழர்களின் முகவரியைக் கிழிக்கத் துணிந்துள்ளது. அண்ணா – ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை என்ற நூலை வெளியிட்டுள்ளது. அந்நூலின் இறுதியில் முதல் இணைப்பாக – நூலுக்குத் துளியேனும் சம்பந்தம் இல்லாத இணைப்பு – சிலப்பதிகாரத்தைச் சிதைத்து சின்னா பின்னமாக்கி உண்மைக்கு மாறான பொய்யுரைகளை வரிக்கு வரி கூறி திரிபு வேலை செய்து தன் அரிப்பை அடக்கிக் கொள்கிறது!

இப்படியெல்லாம் திருடுவதும் திரிபு வேலை செய்வதும் அவர்களின் பிறவிக் குணம் – 6ஆம் வருணப் பிறப்பு போலும். தந்தை பெரியார் இல்லை என்ற நெஞ்சுத் துணிவு இன்னும் எதை எதையெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. இவற்றைத் தட்டிக் கேட்க பெரியார் போல் வலிமையான ஆளும் இன்று இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *