சிறுகதை

ஜனவரி 1-15 2019

 பாடம்!

கடலூர் இள.புகழேந்தி

தமிழ்செல்வன் மகிழ்ச்சியாக நண்பர்களக்கு இனிப்பு வழங்கினான். மகள் பிறந்ததற்கு வெறும் இனிப்பு மட்டும் போதாது விருந்து வைக்கணும் என்று நண்பன் இளங்கோ கேட்க மற்ற அனைவரும் கைதட்டி ஆமோதித்தனர். “கண்டிப்பா பெயர் சூட்டும் நிகழ்வன்று விருந்து உங்களுக்கு தனியா உண்டு’’ என்று சிரித்தான் தமிழ்செல்வன்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அன்று தமிழ்செல்வன், தன் காதல் மனைவி ஓவியாவிடம்,

”குஜராத் வங்கியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கிட்டு அந்த யோகியும் அவனுடன் ரந்தீர் மோடியும் வெளிநாட்டுக்கு ஓடிட்டானுங்களாம்.”

“ஓவியா, குழந்தை சிரிக்கும்போது என்னைப் போலவேயிருக்கு இல்ல’’ என்றவுடன் ஓவியா சிரித்துக்கொண்டே ‘இல்லை’ என்றாள். “பின்ன யார் போல இருக்காம். உன்னை மாதிரியா’’ எனப் பொய் கோபத்துடன் தமிழ்செல்வன் முறைக்க, “சே, சும்மா சொன்னேன் தமிழ் மகளாயிற்றே சிரிக்கும்போது மட்டுமில்ல, முறைக்கும்போதும் உங்களாட்டம்தான் முறைக்கிறா’’ என்று ஓவியா வாய்விட்டு சிரித்தாள். இருவரும் மகிழ்வில் குழந்தையை கொஞ்ச ஓவியா “நம் வாழ்வில் தென்றலாய் வந்த நம்ம செல்லப் பெண்ணுக்கு பூந்தென்றல்’னு பேர் வைக்கலாம் என்ன சொல்றீங்க?’ என்று அவனைப் பார்க்க அவன், “ஓவியா, பூந்தென்றல் நல்ல பேருதான். ஆனா….’’ என இழுத்தான். “என்னாச்சு தமிழ் ஏன்? பூந்தென்றல் பிடிக்கலைன்னா ‘பூவிதா’ன்னு வைக்கலாம். இல்லை நீங்க ஏதாவது நினைச்சிருந்தா சொல்லுங்க’’ ஓவியா சொல்வதில் தமிழுக்கு பிடித்தம் என்றாலும் அவன் தயங்கியபடியே,

“ஓவியா, நான் சொல்றதை கவனமா கேள். நமக்கு நம்ம குழந்தை நல்லாயிருக்கணும் அவ்வளவுதான். அதனால, என் நண்பன் ரன்தீர்மோடி இருக்கான்ல அவனும் அவன் மனைவியும் காலைலே சொன்னாங்க குழந்தை பிறந்த நேரம் நாள் பார்த்து பேர் வைச்சா நல்லதுன்னு சொல்லி பாத்தாங்க, ‘வர்னிஷ்கா’ன்னு வைக்கச் சொன்னாங்க. நல்லாதான் இருக்கு வர்னிஷ்னு செல்லமா கூப்பிடலாம்’’ என்றான்.

ஓவியா வெறுத்துப் போனாள். அவனை வியப்புடன் பார்த்தாள். தமிழா இப்படி பேசறான். பேர் சொன்னவங்க மேல கோபம் வரலை. தமிழ் மேலத்தான் கோபம் வந்தது. ‘அவுங்க வடநாட்டுப் பேரை வைக்க சொல்ல, நேரம் நாள்னு காரணம் சொல்லி நம்ம மூடத்தனத்தை புத்திசாலித்தனமா பயன்படுத்திக்கிறார்கள். ஆனா, வடநாட்டில் நாம இருந்து அங்க யாருக்காவது நேரம் காலம் பாத்து குழந்தைக்கு கண்மணி, முத்துசெல்வன், அன்பழகின்னு பேர் வைக்கலான்னு சொன்னா, சிரிப்பாங்க என்பது மட்டுமல்ல உங்க ஊர் பேரை ஏன் எங்ககிட்ட சொல்றீங்க? எங்க ஊர் பேரைத்தான் நாங்க வைப்போம் என்பார்கள். புரியுதா? அவர்கள் சரியா இருப்பாங்க ஆனா நாம் நம்மை மறந்து அவர்களிடம் இளித்து போவது, இனமானத்துக்கு இழிவல்லவா! உணர்வா வாழறவன்கூட, ஜோசியம், ஜாதகம், நாள், கிழமை, மணின்னு சொல்லிட்டா அவ்வளவுதான் தனக்கு தானே சமாதானம் பேசிக்கிட்டு யார் மேலயாவது பழிபோட்டு தலைகீழ மாறிடறாங்க. என்றெல்லாம் ஓவியா நினைத்தபடி அவனைப் பார்த்தாள். தமிழுக்கு ஓரளவு தெரியும். அவளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைப்பதுதான் பிடிக்கும் அதனாலதான் சிரிப்பில்லாமல் பாக்கறா! யோசிக்கிறா! பரவாயில்ல அவள சமாதானப்படுத்திடலாம் என்று சாதாரணமாக நினைத்தபடி,

“ஓவியா, வர்னிஷ்கா நல்ல பேர்தான். செல்லமா வர்னிஷ்னு கூப்பிடலாம். எப்படி கொஞ்சம் சிரியேன்’’ என கொஞ்சிப் பேச ஓவியா அவன் எதிர்பாராதபடி கடுமையாக,

ஏன்? வர்னிஷ்! பேசாம வார்னிஷ்னு கூப்பிடலாமே! என்று முறைத்தாள்.

அவன் பதில் சொல்வதற்குள் பதற்றத்துடன் அவனுடைய நண்பன் முருகன் ஓடிவந்தான். தமிழனின் நெருங்கிய நண்பன் மட்டுமில்ல ஓவியாவை தன் தங்கையாக அன்பு பாராட்டுபவன். அவன் வந்த நிலையைப் பார்த்து ஓவியாவும் தமிழும் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்கள்.

‘முதல்ல முருகா உட்கார். என்னாச்சு பதற்றமில்லாமல் என்னாச்சுன்னு சொல்லு’ என்று தமிழ் அவனை அன்புடன் அரவணைத்து உட்கார வைச்சான்.

“ஏதாவது சாப்பிடறீங்களாண்ணா, முதல்ல தண்ணி குடிங்க’’ என்று ஓவியா வேகமாக உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்தாள். கண்கள் கலங்க தமிழின் கரத்தை பிடித்துக் கொண்டு முருகன் தண்ணீரை வாங்கி குடித்தான்.

“இப்ப சொல்லுங்கண்ணே, என்னாச்சு’’ ஓவியா நெகிழ்வுடன் கேட்டாள். முருகன் சொல்ல ஆரம்பித்தான்.

“தமிழ், என்னால் நம்ப முடியலடா’’… அப்படியே நிறுத்திட்டு அவன் மீண்டும் கண்கலங்க… அவனை உரிமையுடன் தட்டி கொடுத்து, தமிழ் “முருகா, நாங்க இருக்கோம். -ஓ….ங்கூட எப்பவும் இருப்போம் கலங்காமல் சொல்லு’’ என்றான். முருகன் தொடர்ந்தான்.

“நீங்க இருப்பிங்க, எனக்கு துணையா-யிருப்பீங்கின்ற நம்பிக்கையில்தான் முதல்ல ஒங்ககிட்ட ஓடிவந்தேன். உன் நண்பன் ரந்தீர்மோடி இருக்கான்லே அவன் கேட்டான்னு ரூ. பத்து லட்சம் அங்க இங்க அலைந்து கொடுத்தேன்.’’

“கேட்டா, கொடுப்பீயா? என்னடா ஆச்சு உனக்கு’’ தமிழ் கேட்டவுடன் கண்கள் கலங்க முருகன்.

“டேய் தமிழ், அவன் சொன்ன ஊர் குஜராத்தில் இருக்கு. அங்க ஒரு சாமியார் வர்னீஸ் யோகின்னு ஒருத்தன். அவன் சகலமும் அறிந்தவன். அவனால் முடியாதது ஒன்னுமில்லேன்னு சொன்னான். நானும் ஒரு தடவை அங்க போய் வந்தேன். பெரிய மாளிகையில் இருந்தான். அதான் ஆசிரம குடிலாம். குஜராத் மந்திரிகள் பெரிய மனிதர்கள், எல்லாம் வந்து போறனுங்களாம். ரந்தீர், அந்த ஆளை காட்டினான். அசந்து போயிட்டேன். என் புத்திக் கெட்டு அவன் சொன்னதெல்லாம் புரியாமலே திருப்பி சொன்னேன்’’ ஓவியா குறுக்கிட்டாள்.

“எப்ப போனீங்க, எங்களுக்கு கூட தெரியாது’’

“அம்மா, உனக்கு தெரிஞ்சா திட்டுவ. போவ கூடாதுன்னு சொல்லுவ, அதனாலதான் சொல்லாம போயிட்டேன். அப்பதான் ரந்தீர் சொன்னான். நீ நல்லா வியாபாரம் செய்யற. நல்ல நேரத்துக்கு வந்திருக்க, யோகிஜி ஒருவரை கண்திறந்து பாத்திட்டா, அதைவிட அதிஷ்டம் எதுவுமில்லை. அவர் எவரை பார்த்தாலும் அவர் கோடீஸ்வரனாகிவிடுவார். உன்னை பாத்துட்டார்.

அவர் எதைச் சொன்னாலும் சரின்னு சொல்லு என்றான். ஓ… பேரை முருகன்னு சொல்லாத அவருக்கு (தமிழ்) நீசமொழிப் பேர்னா பிடிக்காது. அஸ்வீர்ன்னு சொல்லிடு என்றான். தமிழ், ஓவியா என்னை மன்னிச்சிடுங்க மானங்கெட்டு மதியிழந்து அவன் சொன்னதையெல்லாம் கேட்டேன். அந்த யோகிபய பத்து லட்சம் கொடு பத்தாயிரம் கோடி சொந்தகாரனாக்கிடறேன்னு இந்தியில சொன்னதை திருட்டு பய ரந்தீர்மோடிதான் தமிழ்ல சொன்னான். நான் மயங்கிட்டேன். ஊருக்கு வந்து ரந்தீரிடம் படாத பாடுபட்டு சம்பாதித்த பணம் என் மனைவி நகைகளை வித்து ரூபாய் பத்து லட்சத்தை கொடுத்து அனுப்பினேன். யோகி ஆசிரமத்திலிருந்து பணம் வந்திட்டதுன்னு தகவல் வந்திச்சி. ரந்தீர் வந்து, யோகி கைலாயத்திற்கு போயிருக்கார். திடீர்னு வருவார். நீ கோடிஸ்வரன்னு அள்ளிவிட்டான். மூடநம்பிக்கை முத்திட்டா கால்ல இருக்கிற செருப்பையே கழட்டி அடிச்சிக்க சொன்னாலும் அடிச்சிக்குவாங்க என சொல்றது உண்மைதான்னு இப்ப புரியுது.’’

“டேய் முருகா, முடிவா என்னாச்சு அதைச் சொல்லு ரந்தீர்மோடி என்ன சொல்றான்’’ தமிழ் கேட்க.

“என்னடா சொல்றது. செய்தி இப்பதான் தெரிந்தது. குஜராத் வங்கியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கிட்டு அந்த யோகியும் அவனுடன் ரந்தீர் மோடியும் வெளிநாட்டுக்கு ஓடிட்டானுங்களாம்.’’

முருகன் வேதனையுடன் சொல்லி முடிப்பதற்குள்,

“அய்யையோ! நீரவ்மோடி, மல்லையா மாதிரி ஓடிட்டானா? அவ்வளவுதான் ஓடறவரைக்கும் பாத்திட்டு டாடா காட்டிட்டு… விடமாட்டோம் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்… திருடியது ரூ.5 லட்சம் கோடி. இங்க ரூ.500 கோடி சொத்தை முடக்கிட்டோம்னு செய்தி போடுவானுங்க, சே… காவிகள் ஆட்சி, காலிகள் ஆட்சியால்ல இருக்கு, பாவி பய… முருகண்ணே பணத்தையாவது கொடுத்திட்டு போவகூடாதா. வர்னிஷ்யோகியா அவன்பேரும், அவன் வேலையும்’’ எரிச்சலுடன் ஓவியா தமிழை பார்க்க, தமிழ் அவள் பார்வையை தவிர்த்து முருகனை பார்த்து,

“கவலைப்பட்டு என்னாவாக போவுது, அடுத்து என்னா செய்வது என்று பார்ப்போம். எனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரி ஒருவர் உள்ளார். சட்டப்படி என்ன செய்யலாம் என்று அவரிடம் கேட்போம். முருகா, தைரியத்தை இழக்காதே, வெளியில் சொல்லக்கூட முடியாதுல்ல. முயற்சி செய்வோம். வா… அந்த அதிகாரிகிட்ட போவலாம்’’ என அவனை கூப்பிட்டுக் கொண்டு செல்ல எழுந்தான்.

பக்தியும், மூடநம்பிக்கையும் ஏற்படுத்தும் இழப்பு பணத்துக்கு மட்டுமல்ல, நம் தாய்மொழிக்கும்தான்!’’ என்றாள் ஓவியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *