பேய் பிடித்தலும் பேயோட்டலும்
நூல் : டாக்டர் கோவூரின்
பகுத்தறிவுப் பாடங்கள்
ஆசிரியர் : மொழிபெயர்ப்பு:
கவிஞர் கருணானந்தம்
வெளியீடு:
திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல், 84/1(50),
ஈ.வெ.கி.சம்பத்சாலை, வேப்பேரி,
சென்னை-600 007.
தொலைபேசி: 044-2661 8161.
பக்கம்: 176 | விலை: ரூ.60/-
அவ்வப்போது கேரளாவிலுள்ள என் மூதாதையர் இல்லத்துக்கு நான் செல்வது வழக்கம். ஒரு முறை என் நண்பர் திரு.எம்.சி.ஜோசப் அவர்களோடு சிறிது காலம் தங்கினேன். கேரளப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் அவர். “யுக்திவாதி’’ பத்திரிகை ஆசிரியர். சிறந்த சொற்பொழிவாளர், வழக்குரைஞர், நூலாசிரியர்! விஞ்ஞானிகள் என்று சொல்லப்-படுவோரைவிடச் சிறந்த அறிவியலாளராவார் அவர். தொழில்முறை செய்தி எங்கள் உரையாடலில் வெளியானது:-_
திருச்சூர் மாவட்டம் இருஞ்ஞாலக் குடாவிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பொதுசேரி உயர்நிலைப் பள்ளியின் விஞ்ஞானப் பிரிவு 14.4.1951 அன்று திறக்கப்பட்டடது. அவ்விழாவுக்குத் திரு.எம்.சி.ஜோசப், அழைப்-பின்பேரில் சென்றிருந்தார். ஆயுர்வேத மருத்துவரான திரு.கேசவன் வைத்தியர் விழாவில் இன்னொரு பேச்சாளர். விழா முடிந்த பின் ஒரே காரில் இவர்களிருவரும் இருஞ்ஞாலக்குடா திரும்பினார். பள்ளியின் சமஸ்கிருத பண்டிதர் திரு.மாதவமேனனும் காரில் ஏறிக்கொண்டார்.
ஒருவருக்கொருவர் பேசிவந்தபோது திரு.மேனன், கடந்த அய்ந்தரை மாதங்களாகத் தனக்கு நேரிட்ட ஓர் ஆபத்து பற்றியும் அங்கே சொன்னார்:_ ‘அவரது 12 வயது மகள், இரண்டாம் படிவம் படிக்கும் ராஜலட்சுமி, அவருடைய மாமியார் இறந்த நாளிலிருந்து பேய் பிடித்த நிலையில், தினசரி மாலை 5 மணிக்குத் தொடங்கி, 2 மணி நேரம் உரக்கக் கூச்சலிடுகிறாள்! அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து என்ன கேட்டாலும், பதில் கூறாமல் கத்துகிறாள். கடைசியாக அயர்ந்துபோய் உறங்கிவிட்டுச் சுமார் இரவு 9 மணிக்கு விழித்து, அற்ப உணவு அருந்தியபின், மீண்டும் உறங்கிப் போகிறாள். மறுநாள் மாலையும் 5 மணிக்கு இதே தொடர்கதை! பகலில் யாராவது, ஏனம்மா! இப்படிக் கூக்குரலிடுகிறாயென்றால், அச்சத்தினால் என்று மட்டும் சொல்கிறாள். அவளை வருத்தாமலிருக்க, இதுமாதிரி யாரும் கேட்க வேண்டாமென, யான் கட்டுப்-படுத்தியுள்ளேன். நாளுக்கு நாள் இது குறையாமல் அதிகரிப்பதாகத் தெரிந்தால் இருஞ்ஞாலக்குடாவிலுள்ள டாக்டர் சி.பி.அய்ப் அவர்களிடம் இட்டுச் செல்ல, அவர் விவரங்களைத் தெரிந்தபின், திருச்சூரிலுள்ள டாக்டர் ஏ.அய்.சூரியன், டாக்டர் வி.கே.நாராயண மேனன் ஆகியோரைக் கலந்தாலோசிக்க எண்ணினார். மூவரும் ஒரு மாதம் வரை மருத்துவமுறையில் எவ்வளவோ சிகிச்சையளித்தும் பயனேற்படாததால் திருவனந்தபுரத்தில் யாராவது மனநோய் மருத்துவரைப் பார்க்குமாறு என்னிடம் சொல்லிவிட்டனர். ஆனால், நானோ அவர்கள் பேச்சைக் கேளாமல், வேறு சில உறவினர்கள் ஆலோசனையில், நாடாவரம்புசந்திரன் என்ற சோதிடரை அழைக்க, அவர் தரையில் ஏதேதோ சக்கரங்கள் வரைந்து பார்த்துவிட்டு, “இது இறந்துபோன இப்பெண்ணின் பாட்டியாருடைய ஆவியின் செய்கை; இப்பெண் ஒருநாள் குளத்தில் குளிக்கச் சுடுகாடு வழியே சென்றிருக்கும். அப்போது அவரது பேய் இப்பெண் மீது குடிகொண்டுவிட்டது. இதை ஓட்டுவதென்றால் முல்லை வழி வாசுதேவன் நம்புதிரிபாட் வரவேண்டும்’’ என்றார். அவரும் வரவழைக்கப்பட்டு, மந்திர உச்சாடனம் செய்து, ஒரு கயிற்றை ராஜலட்சுமியின் வலக்கையில் கட்டிச் சென்றார்; பயனில்லை! இப்போது அவள் தைக்காடு மூசஸ் என்ற ஆயுர்வேத வைத்தியரின் சிகிச்சையிலிருக்கிறாள்’ என்றார் திரு.சி.மாதவ மேனன். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த அறிவுமிக்க இப்பெண்ணின் இவ்வாண்டுப் படிப்பு வீணாயிற்று என வருந்தினார்!
“நான் அந்தப் படத்தைப் பார்க்கவே அஞ்சுகிறேன். அதை என்னிடம் காட்டாதீர்கள் பார்த்தால் மறுபடியும் கூச்சலிட்டு மயக்க-மடைவேன்’’ என்றாள் இராசலட்சுமி.
திரு.ஜோசப், “இது ஹிஸ்டீரியா நோயாக இருக்கும். இப்போது மருந்துகள் கிடைக்கின்றன. நான் ஒரு நாள் போய்ப் பார்ப்போம்’’ என்று சொல்லவே, திரு.மேனனும் தன் வீட்டுக்கு இரு நாளில் வரவேண்டுமென அவர்களிடம் உறுதிபெற்று, இறங்கினார். ஏப்ரல் 17ஆம் நாள் அவர்களிருவரும் திரு.மேனன் இல்லத்துக்குச் சென்று விசாரித்ததில், திரட்டிய செய்திகள்:- 1960 நவம்பர் 1ஆம் நாள் ராஜலட்சுமியின் தாயாரின் தாயார் இறந்தார். மறுநாளிலிருந்து கூச்சலிடத் தொடங்கியவள், ஒரு நாள்கூட நிறுத்தியதில்லை, இந்த அய்ந்தரை மாதங்களில்!
திரு.ஜோசப் அன்புடன் சிறுமியை அருகழைத்துத் தட்டிக்கொடுத்து ஆதரவுடன், ”ஏனம்மா தினமும் சத்தமிடுகிறாய்?’’ என்றார். ‘பயம்’ என்றாள். “பயமென்றால் ஒரு மனிதர், ஒரு மிருகம், ஒரு பொருள், ஒரு சம்பவம் இதனால் ஏற்படலாம். உனக்கு எதனால் -ஏற்படுகிறது?’’ என்ற கேள்விக்கு விடையளிக்கத் தயங்கியதால், மேலும் விளக்கினார்; “ ஒரு நாய் கடிக்க வந்தால் பயப்படுவோம், ஒரு மாடு முட்ட வந்தால் பயம் வரும். ஒரு பாம்பை, ஒரு யானையை, ஒரு பேயைக் கண்டால் பயப்படுவோம். நீ எதனால் பயப்படுகிறாய்? சொல்லம்மமா!’’ என்றார்.
“நான் ஏதோ உயரத்தில் எழும்பிப் போவதுபோல் உணர்வால், கத்துகிறேன்!’’
“உயரத்தில் எழும்பும்போது, கீழே விழுந்து விடுவோமே என்ற பயத்தாலா?’’
“இல்லை; என் கண்முன் ஏதோ இருள் பரவுகிறது; அந்த இருட்டைப் பார்க்கும்போது பயந்து விடுகிறேன்!’’
“நீ ஏன் இருட்டைக் கண்டு பயப்பட வேண்டும்? நாம் எல்லாரும் தினமும் இருட்டைப் பார்க்கவில்லையா, இரவில்? பாட்டி இறக்குமுன் நீ இருட்டைப் பார்த்ததில்லையா? நீ அதற்குமுன் இருளைக் கண்டு பயந்ததில்லையே!’’
“அதோ, அதோ, அவன் என்னைப் பயமுறுத்தவே அந்தப் பக்கத்தைத் திறந்து வைத்திருக்கிறான்!’’ _ என்று எதிரே மூன்று கஜதூரத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்த தன் தம்பியைச் சுட்டிக் காட்டினாள். உடனே திரு.ஜோசப் அந்தப் புத்தகத்தின் திறந்திருந்த அதே பக்கத்தைப் பார்வையிட்டார். அந்தப் படம் எருமை மீது ஏறியிருந்த எமன் _ இடது கையில் திரிசூலம், வலது கையில் பாசக்கயிறு, அந்தப் பாசக்கயிறும் சத்தியவான் கழுத்தில் சுருக்கு மாட்டிய நிலையில்! படத்தினடியில் வாசகம் _ ‘யமன் சத்தியவான் கழுத்தில் பாசக்கயிற்றால் சுருக்கிட்டு யமலோகத்துக்கு அழைத்துச் செல்வது’.
“நான் அந்தப் படத்தைப் பார்க்கவே அஞ்சுகிறேன். அதை என்னிடம் காட்டாதீர்கள் பார்த்தால் மறுபடியும் கூச்சலிட்டு மயக்க-மடைவேன்’’ என்றாள் இராசலட்சுமி.
“அது உண்மைக் கதையல்ல! அதனால், அதைப் பார்க்க நீ ஏன் அஞ்ச வேண்டும்?’’
“என் பாட்டி மரணப் படுக்கையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தபோது, கொடுமையாக அவரைத் தூக்கித் தரையில் கிடத்தினார்கள். உடனே அவர் இறந்து போனார். நான் கதறி அழுதேன். ‘பாட்டியை எமன் தெற்கே உள்ள தன்னுடைய எமலோகத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டான்; அதனால் நீ அழாதே!’ என்ற என் சின்னம்மா சொன்னார்.’’
மேனனுக்கு 7 பையன்கள், இராசலட்சுமி ஒரே பெண். அவளோ, பாட்டியிடம் அளவுகடந்த உள்ளன்பு வைத்திருந்தாள். இறக்கும்போது தரையில் கிடத்தியதால் மிக வருந்தினாள்; அதிர்ச்சியடைந்தாள்! திரு.ஜோசப் உளவியல் தத்துவம் தெரிந்தவர். ஆகையால், இராசலட்சுமி இருட்டைப் பார்த்தால் எமன் வருவதாகக் கற்பனை எனக் கேள்விப்பட்டதால் தானும் வானத்தில் மேலே மிதப்பதாகவும் கற்பனை செய்கிறாள்; பாசக் கயிற்றைக் கழுத்தில் மாட்டி இழுப்பதாகவும் கற்பனை செய்கிறாள்; அதனால் அஞ்சிக் கத்துகிறாள் _ என்று முடிவு செய்தார். இராசலட்சுமியிடம் எமன், தேவதை, பேய், பூதம், பிசாசு, ஆவி எல்லாம் உள்ளன என்பது முட்டாள்களின் கட்டுக்கதை.
உண்மையில் அப்படி ஏதும் கிடையாது _என விளக்கினார். அவள் பழைமை எண்ணங்களில் ஊறியவளானதால், எளிதில் மனத்தை மாற்றிட இயலவில்லை. ஆகவே, “உனக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதை தெரியுமா? சொல்!’’ என்றார். அவள் சொல்லி முடித்ததும், “சரி; ஓநாயோ, அல்லது ஆட்டுக்குட்டியோ மெய்யாகவே பேசுமா?’’ எனக் கேட்டார். அவள் ‘பேசாது’ என்று பதிலளித்ததும் _ “அதே மாதிரிதான், எமன் வந்து இறந்தவர் உயிரை எடுத்துச் செல்வதும் புளுகுக் கதை!’’ என விளக்கமுரைத்தார். மேலும் அவர், “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பேசாது என்று தெரிந்தும் வஞ்சகர்கள் அப்பாவிகளை எப்படி ஏமாற்றுவார்கள் என எடுத்துக்-காட்டத்தான் அவை பேசுவதாகச் சொன்னதுபோல், எமன் பாசக்கயிறு வீசி இழுக்கும் கதையும் இது. ஏதோ நீதிக்காகச் சொன்னாலும், இது நடக்கமுடியாத கதையாகும்’’ என்றும் தெளிவுபடுத்தினார்! புத்திசாலியான இராசலட்சுமி இப்போது நன்கு புரிந்துகொண்டு, புத்தகத்தை வாங்கி, அந்தப் படத்தைப் அச்சமின்றிப் பார்த்து, “அய்யா! நான் இது உண்மைக் கதை என்று இதுவரை ஏமாந்தேன்! இனிக் கத்தமாட்டேன்!’’ என்றனள்.
இரு நாள்கள் கழித்து திரு.ஜோசப், திரு.மேனன் வீடு சென்றபோது, புன்னகை மலர வரவேற்ற இராசலட்சுமி, “அய்யா! நான் முந்தாநாளும் கத்தவில்லை, நேற்றம் கத்த-வில்லை’’ என்றாள். நன்றி மிகுதியால் உணர்ச்சி வயப்பட்ட அவள் பெற்றோருக்குப் பேசவே வார்த்தைகள் வரவில்லை! அய்ந்தரை மாத மனக்குமுறல் ஓய்ந்து, அமைதி நிலவியது, அவர்கள் ஒரே பெண்ணின் நலம் திரும்பியதால்!
பிற்போக்கு நாடுகளில் உள்ளது போலவே கேரளாவிலும் ஒரு முட்டாள்தனமான _ மனித இரக்கமற்ற _ பழக்கம் இந்துக்களால் கையாளப்படுகின்றனது. சாவுத் துன்பத்தில் உள்ளவரைப் படுக்கையிலிருந்து கீழே இறக்கி ஒற்றைப் பாய் அல்லது வாழை இலைமேல் படுக்க வைத்துத் தென்புறமுள்ள வாயில் கதவைத் திறந்து வைத்துத் தெற்குத் திசையிலுள்ள எமபட்டணத்திலிருந்து எமன் வசதியாக உள்ளே நுழைந்து இறந்தவரின் ஆவியை எடுத்துக்கொண்டு தன் எமலோகம் திரும்புமாறு செய்ய வேண்டுமாம்! தெற்கு வாயிலுக்கு நேர்த் திசையிலிருந்து ஒருவர் உயிர் பிரியாமல் போனால், அதாவது, வேறு பக்கத்தில் இறந்து போனால்கூட, அப்போதும் தெற்குப் புறமுள்ள சுவரை இடித்து வழியுண்டாக்கிப், பிணத்தை அப்படியே எடுத்துக் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.
இன்னொரு மூடத்தனமான கருத்து! இறந்தவரோடு தொடர்புடைய எல்லாப் பொருள்களையும் பிணத்துடனேயே எரித்திட வேண்டும் என்பது அவை தூய்மை கெட்டுப் போனவையாம். அதனால்தான் விலையுயர்ந்த கட்டிலை எரிக்க மனமில்லாமல் _ தரையில் கிடத்தி உயிர் பிரியச் செய்வதும் _ கடைசி மூச்சுவிடச் செய்வதும்! இறப்பு நேரிட்ட வீட்டார் 15 நாள் புனிதமும், தூய்மையும் அற்றவர்கள்; 16ஆம் நாள் புனிதப்படுத்தும் சடங்கு நடக்கிற வரைக்கும் _ அவர்கள் வெளியே எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது! இந்த இடைக்காலத்தில் அவர்கள் வெளியார் யாரையாவது தொட்டால் அவர்களும் தீட்டாகிவிடுவார்கள்! அதனால் பிள்ளைகள் பள்ளி செல்லக் கூடாது! இவையெல்லாம் கட்டுப்பாடுகள்!
மூச்சுவிடப் போராடிக் கொண்டிருந்த தன் பாட்டியாரை இரக்கமில்லாமல் கீழே இழுத்துப் போட்ட செயல் இராசலட்சுமியின் மனத்தில் ஆறாத புண்ணை உண்டாக்கி விட்டது.
மூச்சுவிடப் போராடிக் கொண்டிருந்த தன் பாட்டியாரை இரக்கமில்லாமல் கீழே இழுத்துப் போட்ட செயல் இராசலட்சுமியின் மனத்தில் ஆறாத புண்ணை உண்டாக்கி விட்டது. அந்த நேரத்தில் வீட்டுப் பெரியவர்கள் நடந்து கொண்ட தகாதமுறை, தாங்கள் வாழ்ந்து உலவிவந்த அதே தோட்டத்தில் பாட்டியின் பிணத்தை எரியூட்டியது, அத்துடன் எமன் வந்து தன் தென்னாட்டுக்கு அழைத்துச் சென்றதாகத் தன் சிறிய தாயார் சொன்னது, ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், அவள் தனது மலையாளப் பாடநூலில் படித்த ஒரு பாடமும் அமைந்துவிட்டது! அந்தப் பாடத்தில் சத்தியவான் சாவித்தரி கதை; நாரத முனிவர் சத்தியவானிடம், அவன் சரியாக ஓராண்டு கழித்து இதே நாள் மாலைப்போதில் இறப்பான் என்று சொன்னது; யமன் வந்து அதே நேரத்தில் சத்தியவான் உயிரைக் கவர, எருமை வாகனத்தில் ஏறிச்சென்று பாசக்கயிற்றால் அவன் கழுத்தில் சுருக்கிடுவது எல்லாம் பாடமாக வரையப்பட்டிருந்தன; சாவித்திரி தன் கணவன் உயிரைத் தருமாறு வாதாடி, வென்று, கணவன் உயிரை மீட்கவும், யமன் விட்டுச் சென்றது _ இவை யாவும் அப்புத்தக ஆசிரியரால், கணவனிடம் மனைவிக்கு இருந்த பதிபக்தியை எடுத்துக் காட்வதற்காக, எழுதப்பட்டிருந்தன!
கற்பனை வளமுள்ள மனம் படைத்த இராசலட்சமிக்கோ _ தன் பாட்டி உயிர் நீத்த மாலை 5 மணி என்ற நேரம் வந்ததும் _ அது யமன் வரும் நேரமாகத் தோன்ற, இருட்டான இடங்களே யமனது தோற்றமாகக் காட்சி தர, பாட்டியைப் போலத் தன் உயிரும் கவரப்படும் என நம்பினாள்! இந்தக் காரணத்தினால்தான், அவள் அஞ்சி அலறினாளே ஒழிய, மற்றவர் எண்ணியதுபோல், இறந்தவரின் ஆவி அவள்மீது குடிகொள்ளவில்லை! எமன் கதை புளுகுப் புராணம்; கற்பிக்கப்பட்ட ஒன்று என அவளை நம்பச் செய்த பிற்பாடு, அவள் நெஞ்சத்தினின்றும் அச்சம் அறவே அகன்றது!
குழந்தைகளுக்கான நூல்களை எழுதுவோர், இல்லாத தேவதைகள் பற்றிய கதைகளை நுழைப்பதால், தாம் செய்கின்ற கேடுகளை உணர்வதில்லை! பெரியவர்கள் படித்தால் வேடிக்கையாக எண்ணக் கூடியவை, பிஞ்சு உள்ளங்களில் பதிந்து அவர்களுக்கு அச்ச உணர்ச்சியை ஊன்றிவிடுகின்றன!
பேய், பூதம், பிசாசு, தேவதை, ஆவி, கந்தருவர், ராட்சதர், தேவர், நரகர், மந்திரம், மாயம், கண்ணேறு, கருநாக்கு, சகுனம், சோதிடம் நேரம் விதி _ போன்ற அறிவுக்கு ஏற்காத மூடத்தனங்களை, இளம் நெஞ்சங்களில் திணிப்பதால், கதைகளை உண்மையாய் நினைத்து நம்பி, இரவில் தீக்கனா கண்டு பயந்து பிதற்றுதல் போன்ற வேண்டாத செயல்கள் உருவாகின்றன என்பது – புத்துலக உளவியல் தத்துவ வல்லநர்களின் நற்கருத்தாகும்! இம்மாதிரியான செயற்கையான அச்சங்களை _ தண்டனைகளை மதத்தின் பேரால் நம் பெரியவர்கள் முட்டாள்தனமாகக் கற்பனையாய்க் கூறிப் போக _ எப்படி இடக்கைப் பழக்கம் தீயது என்ற தவறாகச் சொல்லித் தரப்படுகிறதோ அதே மாதிரி புகுத்தப்பட்டு _ அக்குழந்தைகள் பெரிய வயது வந்தும், மனோநிலை பாதிக்கப்பட்டு, மனநோயாளி-களாக மாறிவிடுகின்றனர்!
இராசலட்சுமி தான் செய்யாத குற்றத்துக்கு அய்ந்தரை மாதம் தண்டனை அனுபவித்த காரணம், வீட்டிலும் பள்ளியிலும் முட்டாள்-தனமான கதைகளை அவள் நம்ப நேரிட்டதே!
(நிறைவு)