உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது பச்சை அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

மார்ச் 16-31

காவிரி நதிநீர்ப் பங்கீடு உரிய முறையில் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கவேண்டி நாம் (தமிழ்நாடு) வற்புறுத்தியதை ஏற்று, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது (1989_-1990) காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தினார்.

அந்த நடுவர் மன்றம், இடைக்கால நிவாரணமாக 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர ஆணையிட்டது.

தீர்ப்புகளை மதிக்காத கருநாடக அரசு

இதற்கிடையில், காவிரி நடுவர் மன்ற நியமனத்தை எதிர்த்து கருநாடக மாநிலம் அவசரச் சட்டம், வல்லடி வழக்குகள், குறுக்கு சால் ஓட்டிய நிகழ்வுகள்மூலம் தொடர்ந்து, காவிரியே தங்களுக்குத்தான் சொந்தம் என்ற அடாவடித்தனத்தை அன்றாடப் போக்கு களாக்கி, ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்ற ஆணைகளையும், தீர்ப்புகளையும்கூட மதிக்க மறுத்தே வந்துள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தும்கூட கடந்த பல ஆண்டுகளாக மதிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கினால், உச்சநீதிமன்றம் தரும்படிக் கூறிய நீரின் அளவைக்கூட தரத்தயார் இல்லாததோடு, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைக் கூட ஏற்க முடியாது என்ற பிடிவாத, அரசியல் சட்ட விரோதப் போக்கையே தனது நிலைப்பாடாகக் கொண்டு வருகிறது!

உச்சநீதிமன்றத்தின் திட்டவட்ட தீர்ப்பு

இவைகளைத் தாண்டி, உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு 16.2.2018 அன்று வெளிவந்தது! 15 ஆண்டுகளுக்கு இத்தீர்ப்பு நிலைத்த தீர்ப்பு; காவிரி நதி எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல என்று கூறி, நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு அளித்த இறுதிப் பங்கீடான 187 டி.எம்.சி., என்பதில், 10 டி.எம்.சி. பெங்களூரு மற்றும் கருநாடக குடிநீர் தேவைக்கு என்று கூறி, குறைத்து, கருநாடகா 177.25 டி.எம்.சி.யைத் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டும். இந்த மாற்றத்தைத் தவிர, கருநாடகம் _ நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறிய எதிலும் குறுக்கிடத் தேவையில்லை என்று கூறி, எப்படி மாதாமாதம் நீர்ப் பங்கீடு தரவேண்டும் என்ற அட்டவணை உள்பட தெளிவாக்கியது.

அத்துடன் மிக முக்கியமாக, நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கூறியபடி, திட்டத்தின் (ஸ்கீம்)படி,

இத்தீர்ப்பு கிடைத்த 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் (Cauvery Water Management Board- CMB), நீர்ப் பங்கீடுகளை 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் ஒழுங்காற்றுக் குழுவையும் (Regulatory Commission அமைக்கவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது!

அத்துடன் இத்தீர்ப்பில் இதனை அமல்படுத்துவது சட்டக் கட்டாயம் என்பதைத் திட்டவட்டமாக அதன் 465 பக்கத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தத் தவறுவது உச்சநீதிமன்ற அவமதிப்பே!

இதனை செயல்படுத்தவேண்டிய கடமை, பொறுப்பு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு என்பதால், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு கட்டாயமாகும்.

அமல்படுத்தத் தவறினால், அது உச்சநீதிமன்ற அவமதிப்பு  (Contempt of Supreme Court) என்பதோடு, மத்திய அரசு தனது கடமைப் பொறுப்பிலிருந்து தவறிய குற்றம்; இந்திய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு என்ற பழியை ஏற்றாக வேண்டும்!

இவை எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டின் கோடானகோடி விவசாயிகளின் (குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள்) வாழ்வாதாரத்தைப் பறித்த மாபெரும் மனிதநேய விரோதப் போக்கும் ஆகும்!

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, வேண்டுமென்றே தமிழ் நாட்டினை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டிற்குச் சலுகை செய்ய நாம் கேட்கவில்லை. உரிமையைத்தான் கேட்கிறோம்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று ஒரு மனதாகப் பிரதமரிடம் வற்புறுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், சந்திப்பதற்கும் பிரதமர் மறுத்துக் கொண்டிருப்பது, ஜனநாயக தத்துவத்திற்கே முரணாகும்!

மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் முதலமைச்சர், காவிரி நீர் மேலாண்மை வாரியம்பற்றிக் கூறுகிறார், அரசு பொது நிகழ்ச்சியில்;  அதைச் சிறிதும் கண்டு கொள்ளாது பிரதமர் அலட்சியம் காட்டிப் போனது நியாயம்தானா? தமிழ்நாட்டின் சுயமரி யாதைக்கு இதைவிட மிகப்பெரிய இழுக்கு வேறு உண்டா?

வெந்த புண்ணில் வேலைச் செருகுவது போல, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி (நீர்வளத்துறை அமைச்சுப் பொறுப்பு) உச்சநீதிமன்றத் தீர்ப்பினை காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் நியமிக்க முடியாது என்று பகிரங்கமாக பேட்டி தருகிறார்.

இதற்கு ஒரே காரணம்!

அரசியல்! அரசியல்!! அரசியல்!!!

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

கருநாடக மாநிலத்திற்குத் தேர்தல் சில மாதங்களில் வரவிருப்பதால், காங்கிரசு ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த, இதைச் செய்யாவிட்டால்,  கருநாடக தேர்தலில்  மக்கள் ஆதரவு தங்கள் கட்சிக்கு _ பா.ஜ.க.வுக்கு கிடைக்காது என்பதற்காகவே இப்படி, உச்சநீதி மன்றத்தால் தரப்பட்ட 6 வாரத்தில், ஏறத்தாழ 3 வாரங்கள் ஓடிவிட்ட நிலையில், கூச்சநாச்ச மின்றி சட்ட அவமதிப்பு என்பதைப்பற்றிக் கூட கவலைப்படாது, குறுக்கு வழி யோசனைகளைக் கருநாடகாவுக்குச் சொல்லித் தருவது மகாமகா வெட்கக்கேடு அல்லவா!

முன்னாள் முதல்வர் (பிரதமரும் கூட) தேவகவுடா, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் போடும்படி கருநாடகாவுக்கு ஆலோசனை கூறினார் என்று கூறியிருப்பதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே!.

இது எவ்வகையில் நியாயம்? தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இழைக்கும் பச்சைத் துரோகம் அல்லவா?

தீர்ப்பு கூறுவது என்ன?

The Report of the Commission as the language would suggest, was to make the final decision of the Tribunal binding on both the States and once it is treated as a decree of this Court, then it has the binding effect. It was suggested to make the award effectively enforceable.

ஆணையத்தின் அறிக்கையில் அறிவுறுத்தப் பட்டுள்ளதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி முடிவுகளை இரண்டு மாநிலங்களும் ஏற்க வேண்டும். சட்டம் _ ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதை நீதிமன்றம் ஏற்காது. ஆணையம் தனது தீர்ப்பை செயல்படுத்த உறுதியுடன் இருக்க வேண்டும்.

Keeping that in view, we direct that a scheme shall be framed by the Central Government within a span of six weeks from today so that the authorities under the scheme can see to it that the present decision which has modified the award passed by the Tribunal is smoothly made functional and the rights of the States as determined by us are appositely carried out. When we say so, we also categorically convey that the need based monthly release has to be respected. It is hereby made clear that no extension shall be granted for framing of the scheme on any ground.

இதனடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் நியமிக்கவேண்டும். மேலும் மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை மாநிலங்கள் நிறைவேற்றவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நீர் குறித்து மாதம் தோறும் கண்காணித்து வரவேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மேலும் கால அவகாசம் எடுக்காமல், காரணங்களைக் கூறி இழுத்தடிக்காமல் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கும் கால அவகாசத்திற்குள் (6 வாரங்களுக்குள்) அமைக்கவேண்டும்.

இதனைச் செய்ய தமிழ்நாடே மீண்டும் ஒரே குரலில், ஒன்றாக எழுந்தாகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது!

ஆயத்தமாவீர்!

மத்திய அரசினை செயல்படுத்த வைக்க, கட்சி, ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபடுவோம்!

வென்று முடிப்போம்! வாரீர்!! வாரீர்!!!

– கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *