மதிப்பிற்குரிய ‘உண்மை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
குமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வை யிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆறுதல் அவர்களுக்குத் (மக்கள்) தேவையான ஒன்றே. தன்னுடைய முதுமையைக் கருத்தில் கொள்ளாது பொதுநலம் காணும் ஆசிரியர் வாழ்க. திருமலையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரியின் தகவல் மகிழ்ச்சி அளிக்கின்றது. ‘நான் யார்’ பகுதி பெரியாரின் பெருமையை எடுத்துச் சொல்கின்றது. ‘நன்கொடை’ எனும் சிறுகதை சிறப்பாக உள்ளது. தந்தை பெரியாரைப் பற்றிய கண்ணதாசன் (கவிஞர்) அவர்களின் ‘ஒரு சரித்திரம்’ இரங்கற்பா பெரியாரின் ஆளுமையை விளக்குகிறது. மரித்தது பெரியாரல்ல; மாபெரும் தமிழர் வாழ்வு! எனும் வரிகள் மனதைத் தொடுகிறது. ‘உண்மை’ இதழை சிறப்பாக வடிவமைக்கும் பொறுப்பாசிரியர் திரு.மஞ்சை வசந்தன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி!
– அ.உதயபாரதி, கெருகம்பாக்கம்,
சென்னை-128
உயர்திரு ‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். உண்மை விளிம்பை அறியச் செய்யும் தங்களின் எல்லையில்லா சமூகத் தொண்டிற்கு தலைவணங்குகிறேன்.
‘உண்மை’ இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் திரு.ஆறு.கலைச்செல்வன் அவர்களின் சிறுகதைகள் சிறப்பாக உள்ளன.
“அகந்தை தொலைந்தது’’ என்ற சிறுகதையில் மிகச் சிறந்த பேச்சாளர்களின் தாமதத்தை திரு.பெரியாரின் பொருப்பான தன்மையைக் கொண்டு விளக்கியது. “முயற்சியே வெல்லும்’’ என்ற கதையில் கால்வயிற்றுக்குக் கூட வழியில்லா ஒரு பெண் மன உறுதியிருந்தால் சிகரத்தையும் எட்ட முடியும் என விளக்கியிருப்பது விழிப்புணர்வின் செயற்கரிய செயலாகும். அடுத்து, “நன்கொடை’’ இதில் நன்கொடை என்பது உயிர்களை காப்பாற்று வதற்கே தவிர ஏமாற்றுவதற்கு அல்ல என விளக்கியும், “நாகத்தை நம்பாதே!’’ சிறுகதையில் மடமையான மக்களைப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டும் நயவஞ்சகர்களின் செயல்பாட்டை வெளிப்படுத்தி விழிப்பூட்டியதும் அருமை.
இவரது பயணக் கட்டுரைகளும் சிறப்பபானவை! உண்மையில் வெளிவரும் மற்ற படைப்புகளும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளவை. வளர்க ‘உண்மை’யின் பணி!
இரா.திலகம்,
9/12, நலிலம்பல பிள்ளை தெரு,
பரங்கிப்பேட்டை