ஆடியில்
விதைத்த நெல்மணிகள்
தையொன்றில் பொங்கலாய்
பொங்கி வழியும்!
மேழி பிடித்து
காய்த்த கரங்கள்
செங்கரும்பு பிடித்து
ஆனந்தத்தில் திளைக்கும்!
வாயிற்படியில்
செருகிய பூலாம்பூ
கழனி வியர்வைக்கு
விசிறி வீசும்!
வாசலில் பூத்த
வண்ணக் கோலம்
மாரி தந்த மேகத்திற்கு
நன்றி நவிலும்!
நெற்கதிர்களுக்கு
பிரசவம் பார்த்த
களத்து மேடு
கதிரவனைப் போற்றும்
வயலிலிறங்கி
வதை பட்ட பாதங்களை
வலியோடு வரப்புகள்
நினைவு கூறும்…
பொங்கலிடும்
புதுப் பானை
ஏக்கத்தோடு
இட்டவனோடு
எருதுகளையும் தேடும்!
உழவனுக்கேயன்றி
உண்ணும் அனைவர்க்கும்
உகந்த விழா!
உன்னதத் தமிழன் தந்த
உலகப் பண்பாட்டுப் பெருவிழா!
பொங்கல் எனும்
நன்றித் திருவிழா!