அறுத்து, சமைத்து உண்ணப்பட்டவர்கள் மீண்டும் உயிர்பெற்று வருவார்களா?
சூரபதுமன் உடன் பிறந்தவள் அஜாமுகி. அவள் முனிவர்கள் செய்யும் யாகங்களையும், தவத்தையும் கெடுத்து நாசமாக்கி வந்தாள்.
ஒரு நாள் அவள் துர்வாசரைக் கண்டு மோகித்துக் கூடி மகிழ்ந்திட அழைக்க, அவர் மறுக்க, அவருடன் பலாத்கார முறையில் சல்லாபம் புரிந்து, அதன் பயனாக வில்வலன், வாதாபி என இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.
வில்வலன், வாதாபி ஆகிய இருவரும் கொடூர குணத்தினர். துர்வாசரை அணுகி அவருடைய தவப் பலனை யாசித்தனர். கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் அழிவை அவர்களே தேடிக் கொள்வார்கள் எனச் சபித்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் பிரும்மாவை நோக்கித் தவம் செய்தனர். சகோதரன் வாதாபியை வெட்டி யாகத்தில் போட்டுக் கடும் தவம் செய்ய, பிரும்மன் தோன்றிட, என்ன வரம் வேண்டும் என வினவ, வில்வலன், “வெட்டி ஆஹுதி செய்யப்பட்ட வாதாபி உயிருடன் வரவேண்டும். அவனை எத்தனை முறை வெட்டினாலும், எரித்தாலும் அவன், தான் கூப்பிட்டவுடன் உயிருடன் வரவேண்டும்’’ என்று வரம் கேட்டுப் பெற்றான்.
இருவரும் தாய்மாமனான சூரபதுமனிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறிப் பின் குடகு நாட்டுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் தினமும் ஒரு முனிவர் அல்லது தவயோகியரை ஏமாற்றி விருந்துக்கழைப்பர். ஆட்டுருவம் உள்ள வாதாபியை வெட்டிக் கறி சமைத்து உபசரிப்பான்.
அவர் உணவருந்தி வெளிவந்ததும், வில்வலன் ‘வாதாபி’ என்று மும்முறை அழைக்க, அவன் முனிவரின் வயிற்றைக் கீறிக் கொண்டு வெளிவர இறந்த முனிவரின் உடலைப் பங்கு போட்டு இருவரும் உண்பர்’’ என்கிறது இந்துமதம்.
மேலும், சிறுத்தொண்டன், தன் பிள்ளை சீராளனை அறுத்துக் கறி சமைத்து சாமியாருக்கு விருந்து படைக்க, அந்தச் சாமியாரும் நரமாமிச விருந்து உண்டபின், மீண்டும் சீராளனை பழைய உருவில் உயிருடன் சாமியார் உயிர்ப்பித்துக் கொடுத்தார் என்கிறது இந்துமதம்.
அறுத்து, வேகவைத்து சமைத்து உண்ட பின், அறுக்கப்பட்டவர்கள் உயிருடன் வந்தனர் என்னும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
சமைக்கப்பட்ட காய்கறி மீண்டும் காய்கறியாக வருமா? சமைக்கப்பட்ட மீன் மீண்டும் மீனாக வருமா? வராது என்பதுதான் அறிவியல். அப்படியிருக்க, சமைக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்தனர் என்பது அடிமுட்டாள்தனமான, அறிவியலுக்கு ஒவ்வாத கருத்தல்லவா?
மனிதன் மரமாக மாறுவானா?
நான்கு நாட்கள் சூரபதுமனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. சூரபதுமன் எடுத்த பல உருவங்களையும் முருகன் அழித்துவிட அவன் மாத்திரமே நின்றான்.
முருகன் சூரனிடம் பல வடிவங்கள் எடுத்து, அவனைத் தன் வடிவங்களைப் பார்க்குமாறு தனது விசுவரூபத்தைக் காட்டினார்.
சூரபதுனின் உள்ளத்தில் ஞானம் உதயமாக முருகப் பெருமானின் விசுவரூபம் கண்டு மகிழ்ந்தான்.
உடனே முருகன் தன்னுடைய ஞானத்தை அகற்றி பழைய வடிவில் தோன்றினார். சூரனும் பழைய நிலையில் கோபம் கொண்டு முருகனை எதிர்த்திட பல வடிவங்கள் எடுத்தான்.
தேவர்களைக் காக்க முருகன் வேல்கொண்டு வீசினார். சூரபதுமன் மாமரமாக நின்று அனைவருக்கும் தொல்லை கொடுக்க, முருகன் மாமரத்தை நெருங்கிட, அவன் சுய உருவத்துடன், சக்தியுடன் வெளிப்பட்டான்.
அப்போது முருகன் அவன் மீது வேலை எறிய அது அவன் மார்பைப் பிளந்து அவனை இரு கூறாக்கியது. அவ்விரண்டு கூறும் மயிலும், சேவலுமாக மாறி முருகப் பெருமானை எதிர்த்திட சண்முகன் அவற்றைக் கருணையுடன் நோக்கிட அவை அமைதி அடைந்தன.
முருகன் சேவலைக் கொடியாகப் பிடித்தார். மயிலைத் தன் வாகனம் ஆக்கிக்கொண்டார்’’ என்கிறது இந்துமதம். மனிதன் எப்படி மரமாக மாறமுடியும்? மரமாக மாறிய மனிதனை வேலால் பிளந்தால் ஒரு பகுதி சேவலாகவும், ஒரு பகுதி மயிலாகவும் எப்படி வரும்? எதைப் பிளந்தாலும் அதுவாகத்தானே பிளவுபடும்? அது எப்படி வேறு ஒன்றாக மாறும்? அறிவுக்கே பொருந்தாத அபத்தக் கருத்துக்களை அறிவியலுக்கு அடிப்படையென்பது அசல் மோசடியல்லவா?
பூமியை ஆதிசேஷன் என்ற பாம்பு தாங்குகிறதா?
நம்முடைய இந்தப் பூமியை ஆதிசேஷன் என்ற பாம்பு தாங்கிக் கொண்டிருப்பதாக இந்து மதம் கூறுகிறது.
இவ்வளவு பெரிய பூமியைத் தாங்கும் பாம்பு அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் பூமியைவிடப் பெரியதா ஆதிசேஷன்?
இரண்டாவதாக, பூமியை ஆதிசேஷன் தாங்கி நிற்கிறது என்றால், அந்த ஆதிசேஷன் எதன்மீது நின்று அல்லது படுத்து இப்பூமியைத் தாங்குகிறது? இந்துமதத்துக்காரன் எவனாவது பதில் சொல்வானா?
மூன்றாவதாக, பூமி தட்டையில்லை உருண்டை, அது வான்வெளியில் மிதந்து கொண்டுள்ளது என்ற அறிவியல் உண்மைப்படிப் பார்த்தால், பூமியை யாரும் தாங்க வேண்டியது இல்லையே!
ஆக, அந்தரத்தில் மிதந்து கொண்டே சுற்றும் பூமியை ஆதிசேஷ தாங்குவதாய்க் கூறும், அசல் மூட மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
இதில் கொசுறு செய்தி வேறு!
ஆதிசேஷன் தொடர்ந்து பூமியைச் சுமப்பதால் வலி தாங்காமல் ஒரு தலையிலிருந்து மற்றொரு தலைக்கு பூமியை மாற்றுமாம். அப்போது பூமி குலுங்குமாம். அதுதான் நிலநடுக்கம் என்கிறது இந்து மதம்! நிலநடுக்கம் பூமியின் நில அடுக்குகள் நகர்வதால் ஏற்படுவது என்பது அறிவியல்; ஆதிசேஷன் ஒரு தலையிலிருந்து இன்னொரு தலைக்கு பூமியை மாற்றுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்கிறது இந்து மதம். இப்படிப்பட்ட இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையா?
கங்கை ஆற்றைக் கொண்டுவந்தவன் பகீரதனா?
கங்கை நதியும், சிந்து நதியும் இமயமலையில் உற்பத்தியாகி ஓடிவருபவை.
“இம்’’ என்றால் பனி என்று பொருள். பனிமலை என்பதே இமயமலை எனப்பட்டது.
இமயமலை முழுவதும் படிந்துள்ள பனியானது உருகி ஓடிவந்து நிலத்தை அடைந்து நிலப்பகுதி வழியே ஓடிச்சென்று கடலில் கலக்கிறது. கங்கை இமயமலை பனி உருகி நீராக ஒடிவந்ததால் உருவான ஆறு. இந்த ஆற்றை யாரும் உருவாக்கவில்லை.
உண்மை இப்படியிருக்க, கங்கையாற்றை பகீரதன் தவம் செய்து கொண்டுவந்தான் என்கிறது இந்துமதம். தவம் இருப்பதால் ஒரு நதியை உருவாக்க முடியுமா? நதிகள் இயற்கையாய் அமைந்தவையல்லவா? இப்படி, அறிவியல் உண்மைக்கு மாறாக கருத்துச் சொல்லும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்)
– சிகரம்