முத்தாய்ப்பாக, “இந்து மதமே! உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு!’’ என்றே முழக்கம் இடுகிறார், அம்பேத்கர்! சமத்துவமின்மையே இந்து மதத்தின் ஆன்மா. சுருங்கச் சொல்வது என்றால் இந்துமதம் மனிதத் தன்மையற்றது. நன்னடத்தையற்றது. மனிதாபிமானமற்றது. இகழ்ச்சிக்குரியது. மதம் என்று கூறுவதற்கே தகுதியற்ற மதம் இந்துமதம். இதைவிடக் கடுமையாகச் சொல்ல முடியாது என்கிற அளவுக்கு அம்பேத்கர் இந்துமதம் பற்றிக் கூறியுள்ளார். (தொகுப்பு: நூல் பாகம் 6, பக்கம் 119) அவரை இந்துமதப் பாதுகாவலர், நண்பர், இந்துத்வவாதி என்றெல்லாம் கூறுவதென்றால் அவர்களது சிந்தனையில் கோளாறு! அல்லது சிந்திக்கும் தன்மையில் கோளாறு! சித்தம் சரியாக இருந்தால் இத்தகையக் கோளாறுகள் வருவதற்கு வாய்ப்பில்லை. கோளாறுகள் ஏற்படுவதால் சித்தம் சரியாக இல்லையோ எனத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.
ஜாதியின் கொடுமைகளைப் பாரீர்! ஜாதிக்கொரு பெயரும், தனித் தலைப்பாகையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதப் பிரிவுக்கும் தனித் தலைப்பாகையாம். இந்தியாவில் 92 மதப் பிரிவுகளாம். ஒவ்வொன்றுக்கும் தனித் தனிக்குறியீடுகளாம். தனித்தனி சாப்பாட்டுப் பந்திகளாம். தண்ணீர் வாங்கிக் குடிப்பதிலும் பல்வேறு விதிகள் உள்ளன.
புகைபிடிப்பதில் கூடக் கடுமையான விதிகள். “ஹூக்கா’’ பிடிப்பதில் சக ஜாதிக்காரனுடன் தான் பிடிக்க முடியும். ஜாட், அஹிர், குஜார் ஜாதிக்காரர்கள் ஒரே குழாயில் புகைபிடிப்பர். இவர்கள் உறவுடைய ஜாதிக்காரர்களாம்.
இந்துமதத்தின் ஏணிப்படி போன்ற ஜாதிகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. தமக்கு மேலுள்ள ஜாதியார் மீது வெறுப்பும் கீழுள்ள ஜாதியினர் மீது அவமதிப்பும் ஜாதிக்காரர்களின் குணம், இத்தகைய ஜாதிகளின் தொகுப்புதான் இந்துமதம். ஜாதிகள் இல்லையேல் இந்துமதமே கிடையாது. எனவே, ஜாதிதான் இந்து மதத்தின் உயிர்நாடி. சூத்திரர்களைப் போன்றவர்களே, இந்து மதத்தில் பெண்களும்! பெண்களுக்கும் வேதபாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. (9.18_மனு) சூத்திரன் அருகில் இருந்தால் பார்ப்பனன் வேதம் ஓதலாகாது (4.99 மனு) இதை மீறி எவனாவது வேதம் கற்பித்துவிட்டால் ஓராண்டுக் காலம் அப்பார்ப்பனன் பார்லி கஞ்சியை மட்டுமே உண்டு உயிர் வாழ வேண்டும். (9:199 மனு) கேடு கெட்ட இத்தகையச் சமத்துவமின்மை இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. இவற்றையெல்லாம் கடவுளே உண்டாக்கியதாகச் சொல்லி, இந்துமதம் உயிர் பிழைத்துள்ளது. அதனை ஒழிக்கத் தன் படிப்பு, ஆய்வு, ஆராய்ச்சி அறிவு அனைத்தையும் செலவிட்டவர் அம்பேத்கர்!
கி.மு.305ஆம் ஆண்டில், சந்திரகுப்த மவுரியர் ஆட்சிக்காலத்தில் கிரேக்க மன்னரின் தூதராக இந்தியா வந்த மெகஸ்தனீஸ் இந்திய மக்கள் ஏழு பிரிவினராக இருப்பதைப் பதிவு செய்துள்ளார். புரோகிதர்கள், உழவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், வணிகர்கள், போர் வீரர்கள், ஒற்றர்கள், அரச ஆலோசகர், (வரி மதிப்பீட்டாளர்கள்) என ஏழு பிரிவுகளாம். ஜாதி விட்டு ஜாதியில் மண உறவு கூடாது. ஒருவரின் தொழிலை மற்றவர் செய்யக் கூடாது.
கி.பி.1030இல் இந்தியாவுக்கு வந்த அல்பெருணி என்பவர் பதிவு செய்தவை: சூத்திரர்களுக்குக் கீழே அந்தியாஜா என்போர் உள்ளனர். எட்டுப் பிரிவினராகப் பல்வேறு பணிகளைச் செய்தனர். அவர்களுக்குள் திருமண உறவு உண்டு. நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் தனியாகவும் அந்தியாஜா எனும் சலவையாளர், காலணி செய்பவர், செப்படி வித்தைக்காரர், கூடை முடைபவர், கேடயம் செய்பவர், மாலுமி_மீனவர், வேட்டை யாடுவோர், நெசவாளர் ஆகியோரே எட்டுப் பிரிவினர். கிராமத் துப்புரவாளராகவும் மற்றைய இழிதொழில்களைச் செய்வோர் ஹாதி, தொம்பர், சண்டாளர், பதாதாவர் எனப்பட்டவர்கள். இவர்கள் சூத்திரத் தந்தைக்கும் பார்ப்பனத் தாய்க்கும் பிறந்தவர்களாம். இவர்கள் ஜாதியற்ற இழிவானவர்களாம்.
சதுர்வர்ணப் பாகுபாட்டிற்குள் அடங்கிய பார்ப்பன, சத்ரிய, வைசிய, சூத்திரர்கள் சவர்ணர்களாம்! சதுர்வர்ணத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டோர் அவர்ணஸ்தர்கள் எனப்பட்டனர். சவர்ணர்கள் ஜாதி இந்துக்கள் (Caste Hindus) எனவும், அவர்ணஸ்தர்கள் ஜாதியில்லா இந்துக்கள் (Non Caste Hindus) என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இப்படி எத்தனை யெத்தனை அடுக்குகள், உள்அடுக்குகள், ஜாதிகள், உள்ஜாதிகள் என்று ஆயிரக்கணக்கான ஜாதிகளைக் கொண்டது இந்து மதம். பார்ப்பன ஜாதியில் மட்டுமே 1886 உபஜாதிகள் உள்ளன. பஞ்சாபில் உள்ள சரஸ்வதப் பார்ப்பனர்களில் 469 உபஜாதிகள் உள்ளன. பஞ்சாப் காயஸ்தர்களிடையே 890 உபஜாதிகள் உள்ளன. இப்படிக் கணக்கெடுத்தால் “6 மதங்களும் 6,400 ஜாதிகளும்’’ என்று நீதிமன்றங்கள் குறிப்பிட்ட ஜாதிகளின் கூட்டுத் தொகை இன்னும் பல ஆயிரங்களைக் கூட்டும் எனலாம். இத்தனை ஜாதிகளும்தான் இந்துமதத்தைக் கட்டிப் பிடித்துக் காப்பாற்றிக் கொண்டுள்ளன என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரி கூறியது சரிதான். ஆகவேதான் இந்து என்பவன் ஜாதியைக் காப்பாற்றுகிறான். அதனை ஒழிப்பதற்குத் தயாரில்லை. ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என அரசமைப்புச் சட்டத்தில் எழுதக்கூடத் தயாரில்லை. இதனால்தான் பஞ்சாபின் ஜாட்பட் தோடக் மண்டலில் பேசிய அம்பேத்கர் ஜாதி ஒழிய இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசினார். அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?
வெள்ளையர்களால் இந்தியாவில் நடத்தப்பட்ட உணவுச் சாலைகள், பொழுது போக்குக் கிளப்கள் போன்றவற்றில் ஓர் அறிவிப்புப் பலகை தொங்கியது. “நாய்களும் இந்தியர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ எனும் அறிவிப்பு. இன்றைக்கும்கூட இந்துக் கோயில்களில் நாய், மாடு, குரங்கு போன்ற விலங்குகளும் இந்துக்களும் அனுமதிக்கப் படுகிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வர்களுக்கு அனுமதி கிடையாது. என்றால், என்ன பொருள்? அவர்கள் இந்துக்கள் அல்ல என்பதால்தானே தடை? இந்துக்கள் அல்லாதார் என்றும் விட்டுவிடாது இந்துமதம். தீண்டாதோர் எனக் கூறிச் சித்ரவதை செய்வது இந்து மதம். பூரியிலுள்ள ஜெகன்னாத் கோயிலில் மவுன்ட்பேட்டன் பிரபு அனுமதிக்கப் பட்டார். எப்படி? அவர் மிலேச்சர் ஆயிற்றே! ஆனால், கவர்னர் ஜெனரல் ஆயிற்றே! இந்துக்களையும் அவர்களின் ஆண்டவன் பூரி ஜகன்னாதனையும் ஆண்டவர் ஆயிற்றே! ஆனால், டாக்டர் அம்பேத்கரை உள்ளேவிட மறுத்தனரே! ஏன்? அவர் மிலேச்சரல்ல _ இழி பிறப்பாளர் _ தாழ்த்தப்பட்டவர் _ சண்டாளர் _ எனவே அனுமதி கிடையாது. இந்திராகாந்தியையும் உள்ளே விடவில்லை. ஏன்?
அவரின் பெற்றோர் காஷ்மீரிப் பார்ப்பனரே! என்றாலும் அவரின் கணவர் ஃபெரோஸ் காந்தி இந்துவல்ல! பார்சி! இந்து அல்லாத மதக்காரர்! ஆகவே அனுமதி இல்லை. இத்தகைய விசித்திரமான குளறுபடிகள் எல்லாம் கொண்டதுதான் இந்துமதம். இந்த மதத்தின் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுக்காகப் போராடியது அவர்களின் சுயமரியாதையைக் காத்துக் கொள்வதற்காக! ஒருவனுக்குத் தரப்படும் உரிமை ஏன் மற்றவர்க்கு மறுக்கப்பட வேண்டும் என்கிற உரிமை சம்பந்தப்பட்டது! இந்துமதத்தில் உரிமைகள் ஏற்றத்தாழ்வுகளோடு கற்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. அதனை எதிர்த்த அம்பேத்கர், இந்து மதத்தையும் எதிர்த்தார். அவர் எப்படி இந்துத்வர்? தீண்டாமைக்கும் அடிமைத்தனத்துக்கும் வேற்றுமையுண்டு. அடிமையாக ஒருவனை வைத்துக்கொள்ள ஒரு நபருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, அந்நாள்களில்! அடிமை வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். கட்டாயம் கிடையாது. ஆனால், இந்துமதத்தின் கட்டளைப்படி ஒருவனைத் தீண்டத்தகாதவனாகக் கருதவும் கட்டளைப்படிச் சில விலக்குகளைக் கடைப் பிடிக்கவும் இந்துவுக்குக் கட்டாயமாக இருக்கிறது. அவனது தனிப்பட்ட கருத்து எதுவாக இருந்தாலும் மதக் கட்ளையிலிருந்து விலக்குப் பெறவே முடியாது. அதுதான் இந்துமதம். இதை அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர். அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?
இந்துக்களில், ஆக உயர்ஜாதி எனக் கூறப்படும் பார்ப்பனர்கள் முஸ்லிம்களின் தர்காவில் புரோகிதராகப் பணியாற்றி காணிக்கைகளை வாங்கிக் கொள்பவராக இருக்கிறார். கல்யாண்மலை உச்சியில் உள்ள பாவா மலங்க்ஷா என்பவரின் தர்காவில் அவர் பணி செய்தார். முஸ்லிம் உடை தரித்து பணம் பெறுகிறார். இவருக்கு மத அபிமானம் கிடையாது. பண வருமானமே இலட்சியம். மதம் இவருக்கு வியாபாரம். இதுதான் இந்துமதம் பார்ப்பனர்களின் யோக்யதை! (தொகுப்பு: பகுதி 8, பக்கம் 4)
இந்து மதம் பல்வேறு கொள்கைகளும் கோட்பாடுகளும் ஒன்று சேர்க்கப்பட்ட கலவை என்கிறார் அம்பேத்கர். மல்கானாக்கன் எனும் இந்துமதப் பிரிவினர் ஆக்ரா போன்ற மாவட்டங்களில் உள்ளனர். ராஜ்புத், ஜாட், பனியா வகுப்பினர். இந்துமதப் பெயர்களையே வைத்துக் கொண்டுள்ளனர். இந்துக் கோயில்களில் கும்பிடுகின்றனர். ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இந்துமத வழக்கப்படி ராம்_ராம் என்றே கூறிக் கொள்கின்றனர். மறுபக்கத்தில் மசூதிக்கும் போகிறார்கள். ஆண் குறியைச் சுன்னத் செய்து கொள்கிறார்கள். இறந்த உடலைப் புதைக்கிறார்கள். இந்துவைப் போல் எரிப்பதில்லை. இசுலாமியர்களுடன் சேர்ந்து உண்கிறார்கள். இவர்களைப் போன்றே இரண்டு மதத்திலும் ஈடுபாடு காட்டும் நபர்கள் குஜராத்திலும் உள்ளனர். மாட்டியாகுன்பி எனும் வகுப்பினரும் இப்படிப்பட்டோர்.
இன்னொரு வகுப்பினரான ஷோக்கடா என்போர் இந்து, முசுலிம் முறைப்படி அந்தந்த மதப் புரோகிதர்களை வைத்துத் திருமணம் செய்கின்றனர். மோமன் எனும் வகுப்பினர் முசுலிம்களைப் போல் சுன்னத் செய்தல், பிணத்தைப் புதைத்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். தம்முடைய மதம் பற்றிய இத்தகைய குழப்பங்களையும் சங்கடங்களையும் பற்றி யாராவது சிந்தித்தார்களா? பார்சி, கிறித்துவர், இசுலாமியர் போன்ற பிற மதக்காரர்கள் போன்று இந்துக்கள் தங்கள் மதம் பற்றிய கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தயக்கமின்றிக் கூறும் நிலையில் இருக்கவில்லையே! குழப்பங்களுக்குப் பெயர்தான் இந்துமதம் என்றே கூறிவிட்டார் அம்பேத்கர். அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?
(கேள்விகள் தொடரும்…)
சு.அறிவுக்கரசு