நூல்: கனவுகளின் மிச்சம்
(ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு)
ஆசிரியர்: அருணன்
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்,
69-24ஏ, அனுமார்கோயில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை – 625001.
பேசி: 0452-2621997, 9442261555
பக்கங்கள்: 288 விலை: ரூ.200/-
தோழர் அருணன் அவர்கள் சிறந்த மனிதநேயர். கொள்கைப் பிடிப்பும், அதன்வழி நிலைத்து நின்று பணியாற்றும் தகமையும் உடையவர். அவர் எழுதிய நூல்கள் அதுசார்ந்த சூழல்கள், தேடல்கள், கட்சிப் பணிகள், கட்சியின் கொள்கைச் செயல்பாடுகள் சார்ந்த தன் கருத்துகள் என்று எல்லாவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். அருணனை அவர் மூலமே அறிய உதவும் நூல் இது.
“இருக்கும்போதே பாராட்டுவதே சிறந்தது!’’ என்ற சரியான கருத்தை இந்நூலில் பதிவு செய்யும் அருணன், “வெள்ளையன் விருது’’டன் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்ட ரூ.10,000 பணத்தை த.மு.எ.க.ச.விற்கு நன்கொடையாக அளித்தமை, “செம்மலர்’’ நிறுவனரின் அறக்கட்டளை அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயை “தீக்கதிர்’’ வளர்ச்சிநிதியாக அளித்தமை போன்ற அவரின் சுயநலமற்ற செயல்பாடுகளை இந்நூலின்வழி நாம் அறிய முடிகிறது.
அவர் உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் செய்த சுற்றுப்பயணங்கள் அனைத்தையும் ஆய்வுப் பயணங்களாகவே மேற்கொண்டதையும்,
2004இல் மத்திய ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கு பெறாதது சரியான முடிவல்ல, பங்கு பெற்றிருக்க வேண்டும் என்று விமர்சிப்பது அவரின் நேர்மைக்கும், துணிவிற்கும் சான்றாகும்.
தந்தை பெரியாரைப் பற்றி தனித் தலைப்பிலே சிறப்பித்து எழுதும் இவர், “பழமைப் பாசத்திற்கு ஆட்படாதவர் பெரியார். பெண்ணின் உரிமைக்குப் போராடிய உண்மையான ஆண்மகன்!’’ என்று பெரியாரைப் பதிவு செய்கிறார்.
அவர் பங்குகொண்ட தொலைக்காட்சி நிகழ்வுகள், ஒரு நிகழ்வில் நடந்த கசப்பான சொல்லாடல் பற்றிக்கூட பதிவு செய்து, தன்வரலாறு நூலாக இதை எழுதியுள்ளார்.
அவர் வரலாற்றைத் தெரிவிக்கும் இந்நூலில் புகுவோர், பல வரலாற்றுக் குறிப்புகளை தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பை அளிப்பதால், இது அனைவரும் படிக்க வேண்டிய நூல் ஆகும்.
அருணன் வாழ்க!
– நுண்ணோக்கி