வெறி
நிழலை நிஜமென்று நம்பும் திரைப்பட ரசிகர்கள் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதைப் பேசுகிறது இந்த பத்து நிமிட குறும்படம். வேலைக்குப் போகாமல் குட்டிச் சுவற்றில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இரண்டு இளைய குழுவினர் தங்களின் தலைவருக்காக (நடிகர்) மோதிக் கொள்கின்றனர். அதில் ஒருவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்படுகிறான். பெற்றவர்கள் இரண்டு தரப்பினரையும் கண்டிக்கின்றனர். மற்ற சமயங்களில் உணரமுடியாத உண்மையை அடிபட்டுக் கிடக்கும் நண்பன் உணர வைக்கிறான்.
பிறகு நண்பனும் குணமடைகிறான். அந்தப் பொய் நிழல் அவர்களின் புத்தியிலிருந்து விலகுகிறது. அடித்துக் கொண்டவர்கள் சேர்கின்றனர். இணைந்து வேலைக்குச் செல்கின்றனர். அதையே சமூக சேவையாகவும் மாற்றிக் கொள்கின்றனர். இக்குறும்படத்தின் கருத்து இளைய சமூகத்திற்கு என்றைக்குமே தேவைப்படுகிற ஒன்றுதான். நேர்த்தியாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை குருதர்ஷன் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. இயக்குநர் சதீஷ் குருவப்பன்: 91766 82190.
– உடுமலை