Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆலயம் தொழுதும்
வேலையும் இல்லை
சாலவும் வீண்!

திருஷ்டிப் பூசணிகளின்
மிரட்டும் சாலை மறியல்
ஆயுத பூஜை

புரட்டாசி சனியில்
வீட்டில் களவு
குடும்பத்திற்கே நாமம்

ஆண்டுதோறும்
அச்சுறுத்தும் நரகாசூரன்
தீபாவளி பட்ஜெட்

ஏழுநாளாய் நெய்யில் எரியும்
அண்ணாமலையார் தீபம்
எரியாத ஏழை அடுப்பு

உருவ வழிபாடு வேண்டாம்
போதித்த புத்தர்
வழிபடும் தெய்வமானார்

நாத்திக கட்டுரை
துவக்கத்திலேயே திகைப்பு
பிள்ளையார் சுழி

யாமிருக்க பயமேன்
எழுத்தின் கீழ்
பூட்டுடன் உண்டியல்

அன்னையின் அருள்வாக்கு
சொல்பவன்
அரும்பு மீசை (ஆ)சாமி

முற்றுந் துறந்த துறவிக்கு
கனகாபிஷேகம்
தங்கக் காசுகளால்

வேப்ப மரத்துடன்
ஆலயமானது அரசங்கன்று
காகத்தின் எச்சம்

வானுயர்ந்து நிற்கும்
பலவான் அனுமான்
எச்சமிடும் காகம்

தமிழாசான் விளக்கமொன்று
அறிவியல் ஆசிரியர் விளக்கம் வேறு
அமாவாசை இருளில் மாணவர்

பெற்றோர் முதியோர் இல்லத்தில்
மகனோ
தினமும் ஆலய வழிபாடு

பிள்ளைப் பேறுக்கு
சுற்றாத கோயிலில்லை
கிடைத்தது மலடி பட்டம்

இயல்பாய் நடந்தவனை
இருளில் விரட்டியது
வெக்காளி அம்மன் சிலை

காய்ந்த மாடு
புகுந்த கம்பங்கொல்லை
திரும்பும் ஐயப்ப பக்தர்கள் வீடு

– பெரணமல்லூர் சேகரன்