1929இல் பெரியார், “உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால், அதுவே அரசியலையும் தேசியத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு, அரசியல் வேறு, தேசியம் வேறு, மதஇயல் வேறு, ஒழுக்க இயல் வேறு, அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும்.
உதாரணமாக, நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால் அந்த வார்த்தையிலேயே நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்பது தானாக உதயமாகிவிடும். அதுபோலவே நமக்கு மேலாகவோ, கீழாகவோ ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதும் தோன்றிவிடும். பொதுவாக சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினை பலப்படுத்தி சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கிவைத்து விட்டால் பிறகு அதில் எந்த இயந் திரத்தை (மிஷினை) கொண்டு வந்து அத்தோடு இணைத்து தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும்.
அது இன்னவிதமான இயந்திர மாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தகுந்ததுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடம் இருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் லட்சியம். ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறுவேகம் போல் இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது. மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான், அதன் உண்மையான சக்தியும் பெருமையும் வெளியாகும்.
அன்றியும் இது கிளம்பிவிட்டால் யாராலும் இதை அழிக்கவோ அல்லது சற்றாவது அடக்கி வைக்கவோ கண்டிப்பாய் முடியாது என்பதுடன், அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல் எதிர்க்க எதிர்க்க வளர்ந்து கொண்டே போகும் சக்தி உடையது, என்பதே நமது உறுதி.
அன்றியும் எந்தவிதத்திலும் எல்லோரும் எவ்வித அபிப்பிராய முடையவர்களும் இது இன்றைக்கில்லாவிட்டாலும் நாளைக்காவது சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பதுவும் நமது பலமான உறுதியாகும்’’ என்று ‘குடிஅரசு’ ஏட்டின் மூலம் கூறினார்கள்.
அவரது முதன்மைக் கொள்கை சுயமரியாதை. கடவுள், மதம், சாஸ்திரங்கள் பெயரால் மக்களைப் பிறவியால் பேதம் கற்பித்து, உயர்வு_தாழ்வு கற்பித்து, பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தி, மான உணர்ச்சியற்றவர்களாக ஆரியப் பார்ப்பனர்கள் ஆக்கினர். இச்சூழ்ச்சியை, தந்தை பெரியார் முறியடித்து, தன்மான உணர்ச்சியை நாள்தோறும் ஊட்டி, சட்ட ரீதியாகவும், வாழ்க்கைமுறை மாற்றத்தாலும், ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கத்தை அகற்றினார்.
பெரியார் ஊட்டிய சுயமரியாதை உணர்வு உலக அளவில் தனிச்சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் பொருளாதாரம் சார்ந்து போராடிக் கொண்டிருந்த வேளையில், அதனினும் மனிதனுக்கு சுயமரியாதையே முக்கியம் என்ற சூடான உணர்வை உருவாக்கினார். இச்சுயமரி-யாதைச் சூடு இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டதோடு, மெல்ல மெல்ல அயல்நாடுகளுக்கும் பரவி, இன்று பெரியார் உலகமயமாகி உணர்ச்சி ஊட்டிக்-கொண்டிருக்கிறார்.
கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற திட்டங்கள் என்பவை சுயமரியாதை உணர்வின் ஓர் அங்கமே ஆகும்.
பகுத்தறிவுள்ள மனிதனை கல்லும், சிலையும் மதமும், மூடநம்பிக்கையும் ஆதிக்கம் செலுத்தினால் _ அவனது செயல்பாட்டைத் தீர்மானித்தால், அது அவனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்தானே? எனவே, ஆதிக்கவாதி களிடமிருந்து விடுபடுவது போலவே, இவற்றிட மிருந்தும் விடுபடுவதும் சுயமரியாதை உணர்வினை அடிப்படையாகக் கொண்டதே யாகும். இன்று பெரியாரின் சிந்தனைகள் உலக அளவில் பெருமளவில் பரவி வருகின்றன.
இந்தியாவைத் தவிர்த்து, வளர்ச்சி பெற்ற நாடுகளைக் கணக்கில் கொண்டால்,
60%க்கும் மேலான மக்கள் கடவுளையும், மதத்தையும் மறுக்கின்ற உண்மை நிலை ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
உலகில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் போராட்டங்கள் பலவும் ஆதிக்கத்தை நிலைக்கச் செய்ய, விரிவாக்க செய்யப்படுபவை. இது மண் ஆதிக்கமாகவோ, மத ஆதிக்கமாகவோ, இன ஆதிக்கமாகவோ, ஜாதி ஆதிக்கமாகவோ இருக்கும். இந்த ஆதிக்கங்களுக்கு எதிரான போராட்டங்களும் அவற்றின் எதிர் வினையாக நடக்கும். இதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். இவை உலக வரலாற்றின் நெடுகிலும் நீக்கமற நிற்கும் காட்சிகள்.
ஆனால், உலகிலேயே சுயமரியாதைக்கென ஒரு தனி இயக்கம் தொடங்கி, போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார் அவர்கள் ஒருவரே! இவரது இந்த இயக்கமோ, போராட்டமோ எந்த இழப்பையும் ஏற்படுத்தாத மனிதநேயப் போராட்டம் ஆகும். எனக்கு மேலும் ஒருவன் வேண்டாம்; கீழும் ஒருவன் வேண்டாம் என்னும் சமத்துவ, சமஉரிமைப் போராட்டம். ஆதிக்கம் செலுத்தவும் கூடாது, அடிமையாய் வாழவுங் கூடாது என்னும் “பிறப்பொக்கும்’’ கோட்பாட்டுப் போராட்டம்.
இன்றும் உலகில் நடத்தப்படும் எந்தவொரு மனித உரிமைப் போராட்டமாயினும் (பெண்ணுரிமை போராட்டங்கள் உட்பட) அனைத்தும் சுயமரியாதை உணர்வின் உந்துதலால் ஏற்படுபவையேயாகும்.
சுயமரியாதையின் அவசியம் குறித்து அம்பேத்கர்,
“பெரும்பான்மை மக்களை அடிமை அரசியல் தளையிலிருந்தும், சமூகப் பொருளாதார ஒடுக்குமுறையிலிருந்தும் மீட்டெடுக்க சுயமரியாதை உணர்வே ஒரே தீர்வு.’’ என்றார்.
சுயமரியாதையின் கட்டாயம் குறித்து வி.பி.சிங்,
“சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் அபரிமிதமாக உள்ளது. ஆனால், அது அடக்கி ஒடுக்கிடப்படுவதால் செயலற்ற தன்மையில் உள்ளது. ஒரு மனிதன் அடுத்த மனிதன்மீது காரித் துப்பும்போது, துப்பப்பட்டவனின் சுயமரியாதை விழித்தெழுந்து அவனை கோபங்கொள்ளச் செய்கிறது.
மண்டல் குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டது, சமூக அடிமைத்தனத்தில் உழன்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வால் கிடைத்தது.
இந்தச் சுயமரியாதையை நிலைநாட்ட ஒருவித தியாகத்தையும், விலையையும் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
இதற்காக நான் கொடுத்த விலை எனது பிரதம அமைச்சர் பதவியாகும். மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கிய மேன்மையான செயலுக்காக பிரதம அமைச்சர் அலுவலகத்தினின்று வெளியேறியது எனக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. சமூகநீதியைப் பெறுவதற்கான உத்வேகத்தை அளிப்பது சுயமரியாதையே’’ என்றார்.
சுயமரியாதை இயக்கத்தின் சாதனையாக அசோக் மேத்தா கூறுகையில்,
“1977 செப்டம்பரில் தமிழகத்துக்கு வந்த பிரபல சோலிஸ்டும், பொருளாதார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள் சென்னையில் செய்தியாளர்-களிடையே பேசும்போது கீழ்க்-கண்ட கருத்தைச் சொன்னார்.
“தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது உயர்ஜாதிக்-காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காணமுடிகிறது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள் விவசாயிகள்தான். அத்தகைய பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப் பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது!’’ என்றார்.
இத்தகு “சுயமரியாதை’’ என்னும் இந்த மாந்த மாண்பு இன்று உலகெங்கும் மலரத் தொடங்கி, அது ஜெர்மனியில் மாநாடாக மான மணம் வீசக் காத்திருக்கிறது! இது தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியைக் குறிப்பதோடு, அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதையும் உறுதி செய்கிறது.
ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு
ஜூலை 27, 28 & 29 – 2017 ஆகிய நாள்களில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
இது பன்னாட்டளவில் நடைபெறவுள்ள முதல் சுயமரியாதை மாநாடு ஆகும்.
அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு (Periyar International) மய்யத்தின் ஏற்பாட்டில், ஜெர்மனி நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் கிளையும், தஞ்சை_வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் இணைந்து மாநாட்டினை நடத்துகின்றனர்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் _ குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மனித நேயர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அமைப்பின் சார்பாகவும் பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து கருப்புச்சட்டைத் தோழர்கள், திராவிடர் கழகத்தின் சார்பாகத் தங்களது சொந்த செலவில் பங்கேற்க உள்ளனர்.
மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதல் நாள் 27.07.2017 பிற்பகல் 3.00 மணிக்கு மாநாட்டு தொடக்க விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் நிகழ்விற்கு தலைமை ஏற்க, இங்கிலாந்து நாட்டின் Croydon நகராட்சியின் துணை மேயர் நிகழ்வைத் துவக்கி வைக்க, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குர்கள், டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சித்தாநந்தம் போன்றோர் பாராட்டுரை வழங்கவுள்ளனர்.
28.07.2017 இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சி 9 மணிக்குத் தொடங்க, காலையில் இரு நிகழ்வாகவும், மாலையில் இரு நிகழ்வாகவும், ஆய்வுக் கட்டுரைகள் வழங்கு நிகழ்வு நடக்கவுள்ளது.
பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர், பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் வரவேற்புரையாற்ற, 29.07.2017 மூன்றாம் நாள் விருது வழங்கும் விழா.
காலை 10.00 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வில், டாக்டர். இலக்குவன் தமிழ் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, அறிமுகவுரையை டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் நிகழ்த்த, டாக்டர் சித்தாநந்தன் அவர்கள் பாராட்டுரை வழங்க, மரியாதைக்குரிய துணைமேயர் மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கப்பட, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டின் சிறப்புக் கூறாக, உலக இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது.
32 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இப்போட்டிக்கு
1. பெண்ணின் ஆளுகைத்திறன்.
2. சுயமரியாதை இயக்கமும் பயனும்.
3. பெரியாரின் மனிதநேயமும் எதிர்காலமும்.
ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் கோரிப் பெறப்பட்டு, தேர்வு பெறுவோருக்கு,
முதல் பரிசு 500 அமெரிக்க டாலரும்
இரண்டாம் பரிசு 300 அமெரிக்க டாலரும்
மூன்றாம் பரிசு 200 அமெரிக்க டாலரும்
வழங்கப்படவிருக்கிறது.
பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு பற்றிய மேலும் விபரங்களை www.periyarinternational.com/selfrespectconf இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
– மஞ்சை வசந்தன்