பிள்ளை வரம்

ஜூலை 01-15

“என்ன, மருமகள் சாந்திக்கு ஏதேனும் விசேஷம் உண்டா? ஆறுமாசம் ஆயிடுச்சே’’
காவேரியிடம் இந்தக் கேள்வியை கேட்காதவர்களே இல்லை. வெளியில் சந்திக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றாலும் சரி, இந்தக் கேள்வியைத் தவறாமல் எல்லா பெண்களுமே கேட்காமல் விடமாட்டார்கள்.

தனது மகன் சுந்தருக்கும் சாந்திக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. திருமணமான இரண்டாவது மாதத்திலிருந்தே இந்தக் கேள்வியை பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினாள் காவேரி.

இதனால் காவேரி வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் அடைந்து கிடந்தாள். உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வதையும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்வதையும் முடிந்த வரை தவிர்த்தாள்.

அவளது கணவர் கண்ணுசாமிக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. தாத்தா ஆகவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தாலும் அதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் பக்கத்துத் தெரு பாட்டி, காவேரி வீட்டிற்கு வந்தார்.
“காவேரி, சொல்றேன்னு கோவிச்சுக்காதே. ஏதோ சாமி குத்தம் இருக்கும்னு நெனைக்கிறேன்’’ என்றார் பாட்டி.

“எனக்கும் அப்படித்தான் தோணுது. தினம் பெரியகோயிலுக்குப் போய் விளக்கேற்றி வைச்சி சாமி கும்பிட்டுத்தான் வர்றேன்’’ என்று பதில் கூறினாள் காவேரி.

“நவக்கிரகங்கள் கூடினால்தான் பிள்ளை உண்டாகும். ஆடிப்பூரம் நாளில் விரதம் எடுக்கச் சொல்லணும்’’ என்று உபதேசம் செய்தார் பாட்டி.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த காவேரியின் கணவர் கண்ணுச்சாமிக்கு எரிச்சலாக வந்தது. இருந்தாலும் காவேரியை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

மாதங்கள் கடந்தன. காவேரி தன் மருமகள் சாந்தியை மருத்துவரிடமும் அழைத்துச் சென்றாள். மருத்துவர் பொறுமையாக இருக்குமாறும் அவசரப்படத் தேவையில்லை என்றும் அறிவுரை கூறினார். ஆனால், காவேரியால் அவற்றை ஏற்க இயலவில்லை.

அக்கம் பக்கத்து வீடுகள், உறவினர்கள் வீடுகளில் உள்ள பெண்களுக்கெல்லாம் திருமணமாகி குழந்தைகள் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் தனது வீட்டில் மட்டும் குழந்தை சத்தம் கேட்கவில்லையே என்று மிகவும் ஆதங்கப்பட்டாள். அந்த ஆதங்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி மீது வெறுப்பை உருவாக்கியது.

சாதாரண நடைமுறைக்கெல்லாம் சாந்தியிடம் கோபித்துக் கொண்டாள். ஆனாலும் மகனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவருக்கு உதயமாகவே இல்லை. வெறுப்பு மருமகள் மீது மட்டுமே ஏற்பட்டது.

ஒரு நாள் தூரத்து உறவுப் பெண்மணி ஒருவர் காவேரி வீட்டிற்கு வந்தார். வந்தவுடன் கேட்ட முதல் கேள்வி மருமகளைப் பற்றித்தான்.

“ஒரு வருஷத்துக்கு மேலாயிருச்சு. இன்னுமா ஒண்ணும் ஆகலை? ஆண்டவன் கண்ணைத் தொறந்து பார்க்கலையா?’’ என்று தன்னாலான தூபத்தைப் போட்டார் அந்த உறவுக்காரர்.
“நானும் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. ஆனாலும் ஒண்ணும் நடக்கலையே’’ பெருமூச்சுடன் சொன்னாள் காவேரி.

“மருமகள் மலடியா எத்தனை நாள் இருக்கிறது? நான் சொல்றதைக் கேளு. சேத்திகுப்பம் என்கிற ஊரில் கருப்புசாமின்னு ஒரு சாமியார் இருக்கார். அவருகிட்ட போய் பூசை செஞ்சிக்கிட்டா கட்டாயம் பிள்ளை பிறக்கும்’’ என்றார் உறவுக்காரர்.

“அப்படியா? அந்த சாமிபற்றி சொல்லு’’
“சொல்றேன் காவேரி. ரொம்ப சக்திவாய்ந்த சாமியாரு அவரு. என்னோட மருமகளுக்கும் இப்படித்தான். ரெண்டு வருஷமா குழந்தை இல்லை.

அங்க போனப்புறம்தான் குழந்தை உண்டாச்சு. மூணு நாள் அங்கே தங்கும்படி ஆகும். பூசை, பரிகாரம் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா அடுத்த மாசமே குழந்தைக்கு கேரண்டி.

அதுவும் ஆம்பிளை பிள்ளையா பொறக்கும்’’
இந்த விவரத்தைக் கேட்ட காவேரிக்கு சாந்தியை அழைத்துக்கொண்டு சாமியாரிடம் செல்ல வேண்டுமென்ற முடிவிற்கு வந்தாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சாந்திக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. தன்னை மலடி என்று அந்த உறவுக்காரர் கூறியதைக் கேட்டு மனம் நொந்தாள்.

தனது கணவன் சுந்தரிடம் இதுபற்றிக் கூறி அழுதாள்.

“ஏன் அம்மா இப்படி அவசரப்படுகிறார்னு தெரியலை. வேணும்னா நாம ரெண்டுபேரும் மருத்துவர்கிட்ட போயிட்டு வரலாமா?’’ என்றான் சுந்தர்.

“அம்மா சாமியார்கிட்ட போகணும்கிறதில் உறுதியாக இருக்காங்க எனக்கு இது சுத்தமா புடிக்கல’’ என்றாள் சாந்தி.

“அம்மா பிடிவாதம் நமக்கு தெரிஞ்சதுதானே அவங்க திருப்திக்காக போயிட்டுத்தான் வந்திடுவோமே?’’

“என்னங்க நீங்களும் இப்படி சொல்றீங்க. சாமியார்கள் யோக்கியதை நமக்குத் தெரியாதா? நான் விலங்கியல் பாடத்தில் பட்டம் பெற்றவள். மறந்துடாதீங்க’’

“இருந்தாலும் அம்மா….’’ என சுந்தர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்தாள் காவேரி. வந்தவுடன் பொரிந்து தள்ளினார்.

“கண்டிப்பாக நாம சாமியாரைப் பார்த்து பூசை செய்துதான் ஆகணும். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஊர் உலகம் சாந்தியைப் பாத்து மலடின்னு சொல்லுது. இதைக்கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கிறது? வர்ர ஞாயிற்றுக்கிழமை அமாவாசை. எல்லோரும் சாமியாரைப் பார்க்கப் போகணும். தயாரா இருங்க’’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் காவேரி.

ஞாயிறு வந்தது. கண்ணுசாமி, காவேரி, சுந்தர், சாந்தி எல்லோரும் பேருந்து நிலையம் வந்து சேத்திகுப்பம் நோக்கி பயணம் செய்தனர்.

சாந்தி யாரிடமும் பேசவில்லை. கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டாள்.
சேத்திகுப்பம் வந்தவுடன் அனைவரும் பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி கருப்புசாமி கோயிலை நோக்கிச் சென்றனர்.

போகும்போதே ஆட்டோ ஓட்டுநர் பேச்சுக் கொடுத்தான்.

“என்ன சேதியா சாமியார்கிட்ட போறீங்க?’’ என்றான்.

“என் மருமகளுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால்தான் பரிகாரம் காண கருப்புசாமிகிட்ட போயிகிட்டு இருக்கோம். ஏம்பா டிரைவர், அந்த சாமியார் எப்படி?’’ எனக் கேட்டாள் காவேரி.

“ரொம்ப சக்திவாய்ஞ்ச சாமியாரு அம்மா. அவரு பூசை செய்தா நல்லதே நடக்கும். உங்க கஷ்டம் கண்டிப்பா தீரும்’’ என்று பதில் சொன்னான். ஓட்டுநர் அதோடு விடாமல் காவேரியின் குடும்பச் சூழலையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டான்.

ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் சாமியாரின் கையாள் என்பதை உணராமல் குடும்பச் சூழலையெல்லாம் விலாவாரியாகச் சொன்னார் காவேரி.

உண்மையில், தான் சேகரித்த செய்திகளையெல்லாம் சாமியாரிடம் ஓட்டுநர் தெரிவித்து விடுவான். சாமியார் தன் சக்தியால் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அனைவரையும் வியக்க வைப்பான்.

கோயில் வாசலில் ஆட்டோ நின்றது. நால்வரும் இறங்கி உள்ளே சென்றனர். நிறைய கூட்டம் காணப்பட்டது.

முதலில் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு சாமியார் எப்போது அழைக்கிறாரோ அப்போது அவர்முன் செல்ல வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநரைப் போல் மேலும் பலர் சாமியாரைப் பார்க்க வந்தவர்களைப்போல் நடித்து செய்திகளை சேகரித்து சாமியாரிடம் தெரிவிப்பார்கள்.

சாமியார் வெளியில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் பின் ஒருவராக அழைத்து குறைகளைக் கேட்டார். எல்லோரையும் மரியாதைக் குறைவாக திட்டினார். சிலர் சாமியாருக்கு சுருட்டு, பிராந்தி போன்றவைகளைக் கொடுத்தனர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணுசாமி உட்பட சிலருக்கு எரிச்சலாக வந்தது. வேடிக்கை பார்க்கவும் பலர் வந்திருந்தனர். சாமியாரின் அயோக்கியத்தனம் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அரசியல் புள்ளிகளின் செல்வாக்கு பெற்ற சாமியாரை யாரும் எதுவும் செய்ய இயலவில்லை. இவன் கொட்டம் எப்போது அடங்கும் என்று பலர் காத்திருந்தாலும் மூடநம்பிக்கைகள் நிறைந்த மக்கள் பெருமளவில் வருவதால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

வந்த இரண்டு நாள் கழித்துத்தான் சாந்தியை அழைத்தான் சாமியார். அதுவும் நன்கு இருட்டிய பின் கடைசி பெயராக அழைத்தான்.

நால்வரும் சாமியார் முன் சென்றனர். அவர்களை சாமியார் கீழே அமரச் சொல்லி சைகை செய்தார். சுற்றிலும் அடியாட்களைப் போல் பலர் நின்று கொண்டிருந்தனர்.

சாமியாருக்கு நாற்பது வயது இருக்கலாம். தடித்த உடம்பு. ஆனால் வசீகரமான விழிகள். திடீரென உரத்த குரலில் பேசினார்.

“ஏய் சாந்தி உனக்கு குழந்தையில்லைன்னு தானே வந்தாய்?’’
“ஆமாம் சாமி. இவள் என் மருமகள்.

இன்னும் குழந்தை இல்லை சாமி’’ என்று முந்திக்கொண்டு பதில் சொன்னாள் காவேரி.
திடீரென சாமியார் தியானத்தில் ஆழ்ந்தார்.  சாந்தியின் அழகு அவரை மயக்கியது.

நீண்டநேர தியானத்திற்குப் பின் சாந்தியைத் தவிர்த்து மற்றவர்கள் முகத்தில் விபூதியை எடுத்து வீசினார். மூவரும் அரை மயக்க நிலையை அடைந்து அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தனர்.

“ஏய் சாந்தி, எழுந்திரு. பூசை செய்யணும்’’ என்று அதட்டினார் சாமியார்.
அடியாட்கள் அப்படியே சாந்தியை பக்கத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர். சாமியாரும் உள்ளே சென்றார். கதவு சாத்தப்பட்டது.

வேடிக்கை பார்க்க வந்த பலருக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவது தெரிந்தது. ஆனாலும் அந்தச் சூழலில் எதுவும் செய்யத் தோன்றவில்லை. சம்பந்தப்பட்டவர்களே சும்மாயிருக்கிறார்களே!

சாமியாரின் அறைக்குள் சென்ற சாந்தி சுற்றிலும் பார்த்தாள். மங்கலான வெளிச்சத்தில் அறையில் சொகுசு மெத்தையுடன் கட்டிலும் ஒரு தட்டில் நிறைய பழங்களும் காணப்பட்டது. அறை முழுவதும் நறுமணம் வீசியது.

“பூசையை ஆரம்பிக்கலாமா?’’ என்று சிரித்துக்கொண்டே சாந்தியை நோக்கினான் சாமியார்.
ஒரு கிண்ணத்தில் இருந்த பாலைக் கொடுத்து குடிக்கச் சொன்னான்.

அதில் மயக்க மருந்து கலந்திருக்கலாம் என சாந்திக்குத் தோன்றியது. அதேநேரத்தில் வெளியில் ஏதோ சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தான் சாமியார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சாந்தி பாலைகீழே கொட்டிவிட்டு குடித்ததைப்போல் நடித்தாள்.

உண்மையில் அது மயக்க மருந்து கலந்த பால்தான். அவள் மயக்கமடைந்திருப்பாள் என நினைத்து தன்னை நிர்வாணப்படுத்திக்கொண்டு சாந்தியை நெருங்கினன் சாமியார்.

சாந்தி நிலைமையை உணர்ந்தாள். திடீரென அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. சில நாட்களுக்கு முன் கேரளாவில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. பழங்கள் வைத்திருந்த தட்டில் ஒரு கத்தியும் இருந்தது. துணிவுடன் அதை கையில் எடுத்தாள்.

சாந்தி குடும்பத்தினரும், பார்வையாளர்கள் சிலரும் மிகவும் பீதியுடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர்.

சில நிமிடங்களில் கதவு திறந்தது. கையில் கத்தியுடன் சாந்தி வெளியே வந்தாள்.
“அய்யோ! அய்யோ! அய்யோ!’’ என்று அலறியபடியே இரத்தம் சொட்டச்சொட்ட ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் தடாலென கீழே விழுந்து புரண்டான் சாமியார்.

நடந்த நிகழ்வை அனைவரும் உணர்ந்தனர். “ஒழிந்தான் சாமியார்’’ என்ற வார்த்தை அனைவர் வாயிலிருந்தும் ஒலித்தது.

– ஆறு.கலைச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *