தனித்தமிழ் எனும் சொல்லுக்கு வித்திட்ட காரணத்தால் தனித் தமிழ்த் தந்தை என அழைக்கப் பட்டவர்.
நாகப்பட்டினம் அருகே கடம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த மறைமலையடிகளின் தந்தை பெயர் சொக்கநாதப் பிள்ளை, தாயார் சின்னம்மை. மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாசலம்.
தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாகத் தன் பெயரை வேதம் = மறை, சலம் = மலை எனும் அடிப்படையில் மறைமலை என்பதாக அவர் மாற்றிக்கொண்டார். நாளடைவில் இதுவே மறைமலையடிகள் என அழைக்கும்படி ஆனது.
நாகப்பட்டினத்தில் வெ.நாராயணசாமிப் பிள்ளை எனும் புலவரால் சிறுவயதிலேயே தமிழ் மேல் ஆர்வம் தூண்டப் பெற்றவர். தினந்தோறும் 50 ரூபாய்க்கு நூலை வாங்கிப் படிப்பதைக் கொள்கையாகக் கொண்டு அதனைக் கடைப்பிடித்து இன்று புகழ்பெற்று விளங்கும் மறைமலையடிகள் நூலகத்துக்கு அடித்தளமிட்டவர்.
அது நாள் வரை வடமொழி, ஆங்கிலம், உருது ஆகியவற்றின் கலப்பினால் மூச்சடைத்துக் கிடந்த தமிழ், தன்னுணர்வு பெற்று விழிப்பு நிலை பெற்றது இவரால். தொடர்ந்து தனித்தமிழ் எனும் இயக்கத்தையும் வழி நடத்தியவர் என்பது இவரது வாழ்நாள் சிறப்பு.
1898 முதல் 1911 வரை பதின் மூன்று ஆண்டுகள் சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கல்லூரி நிருவாகம் தமிழ் வளர்க்க தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்காததைக் கண்டித்து தன் பணியைத் துறந்தார்.
இவர் எழுதிய ‘அறிவுக்கொத்து’ என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது, அதில் அமைந்திருந்த ‘மேல்நாட்டவரும் தமிழ் நாட்டவரும்’ கட்டுரைக்கு பார்ப்பனர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
தந்தை பெரியார் இந்த எதிர்ப்புகளுக்கு பதிலடி தந்து ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ‘மறப்புக்கு மறுப்பு’ எனும் தலைப்பில் புத்தகமாக வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் புலமை பெற்ற அடிகள் வாழ்நாளில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 50க்கும் மேல். 1937இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தன் தமிழைக் காப்பாற்றப் போராடியவர்.