வளரும் விஞ்ஞானத்தால் தகரும் மூடநம்பிக்கைகள்!

ஜூலை 01-15


ஒன்பது கோள்களின் இயக்கம் நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று கருதி, கணக்கிட்டு சோதிடம் கணித்தனர். வெறுங்கண் களால் பார்த்து கண்டறியப்பட்ட கிரகங்களின் இயக்கங்களைக் கொண்டு, சோதிடம் கணிக்கப் பட்டது. ஆனால், அறிவியல் வளர வளர புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

கிரகங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக்கப்பட்ட சோதிடம் எப்படிச் சரியனாதாகும்?

சில கோள்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக்கப்பட்ட சோதிடத்தில், விடுபட்ட கோள் களின் தாக்கம், பங்கு விடுபட்டுவிட்ட நிலையில் சோதிடமே தப்பாகிறதே.

அப்படிப்பட்ட சோதிடத்தைக் கணித்து எண்ணற்றோரின் வாழ்வைப் பாழடிப்பது குற்றச் செயல் அல்லவா?

இதிலே செவ்வாய் தோஷம் வேறு. செவ்வாய் தோஷத்தைச் சொல்லி எவ்வளவு பெண்களின் வாழ்வு பாழாக்கப்படுகிறது.

அமெரிக்க வானியல் அறிஞர் கிளைட்-டோமா என்பவரால், “புளூட்டோ’’ என்ற கிரகம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் 8 கிரகங்கள்-தானே இருந்தன. அதன்பின்தானே ஒன்பதானது.
நவகிரகம் என்பதே நவீன அறிவியலின் பிச்சையல்லவா? சிந்திக்க வேண்டாமா?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 24.08.2006இல் புளுட்டோ ஒரு கோளே அல்ல என்று மறுக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்க நவக்கிரகம் என்பது நகைப்பிற்குரியது அல்லவா? அவற்றை வைத்துச் சொல்லப்படும் சோதிடம் கேலிக்குரியது அல்லவா? உண்மைக்கு மாறான பித்தலாட்டம் அல்லவா?

1995ஆம் ஆண்டு வரையிலும் சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை 9. பின் சிறிய ப்ளூடோவைக்  கழித்தபோது எண்ணிக்கை 8 ஆனது. ஆனால், சூரிய மண்டலம் தாண்டியுள்ள பல்வேறு கோள்களை ஸ்பேஸ் டெலஸ்கோப்புகள் காட்டிக்கொடுக்க, கோள்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

அந்த வகையில் 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் வியாழனின் சைசில் ‘51 பேகாஸி பி’ என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நிறுவப்பட்டபின் கண்டறியப்பட்ட கோள்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தொட்டது!

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்தக் கோள்களில் மனிதர்கள் வாழச் சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத் திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.

இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.

2017 பிப்ரவரியில் 7 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததன் மூலம் சோதிடத்தின் அடிப்படையே நொறுங்கியது.

இந்த ஏழு கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கிறது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது. புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இந்தக் கோள்களில் வாழக் கூடிய தன்மைகள் இருப்பது மேலும் ஆய்வுகள் நடத்திப் பின்பு தான் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரினங்கள் வாழக்கூடிய பத்து புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

தற்போது, நாசா எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், உயிரினங்கள் வாழக்கூடிய மேலும் பத்து புதிய கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட கோள்களில் உயிரினங்களுக்குரிய தட்பவெப்ப நிலையும் அளவும் உண்டு என நம்பப்படுகின்றது.

4 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு கெப்லர் (Kepler) தொலைநோக்கி கோடிலொக்ஸ் (Goldilocks) பகுதியில் மொத்தம் 49 கோள்களைக் கண்டுபிடித்தது.

கண்டுப்பிடிக்கப்பட்ட 10 கோள்களில் 7 பூமியைப் போல் அளவில் உள்ளன. ஆக, புதிது புதிதாய்க் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், 9 கோள்களுடன் கணிக்கப்படும் சோதிடம் எப்படிச் சரியாகும்?

வானில் உள்ள கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்வைத் தீர்மானிக்-கின்றன என்பதே சோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். “இதுவொன்றும் மூடநம்பிக்கை-யில்லை; அறிவியல் அடிப்படையில்தான் கணிக்கப்-படுகிறது’’ என்று இதற்கு வக்காலத்தும், சப்பைக்கட்டும் தொடர்ந்து செய்யப்படுகின்றன. எப்படி இது அறிவியல் சார்ந்தது என்று அவர்களால் விளக்க இயலவில்லை; ஆனால், அறிவியல் சார்ந்தது என்று மட்டும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அறிவியல் என்றால் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான கருத்து இருக்க வேண்டும். சோதிடத்தில் ஒரே கருத்து உலக அளவில் உள்ளதா? இல்லையே!

முரண்பட்ட நம்பிக்கைகள்:

கடவுள் நம்பிக்கை, சோதிட நம்பிக்கை, வாஸ்த்து, இராசிக்கல், பெயர் நம்பிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பதைக்-கூட சிந்தித்துத் தெரிந்து _ தெளிந்து _ கொள்ளாமல் அரைவேக்காட்டு, அரைகுறைச் சிந்தனைகளைக் கூறி வருகின்றனர்.

பஞ்சாங்கம் அறிவியலா?

பல பஞ்சாங்கங்கள் வேறுபட்டக் கருத்துக்களைச் சொல்வதே பஞ்சாங்கம் பொய் என்பதற்குச் சரியான சான்றாகும்.

3 வகையான பஞ்சாங்கங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் வேறு- திருக்கணிதப் பஞ்சாங்கம் வேறு எபிமெரிக் பஞ்சாங்கம் வேறு. அவர்களே சொல்கின்றார்கள் பாருங்கள்” திருக் கணிதம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. …தோராயக் கணிதங்களுடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்டது வாக்ய முறைக் கணிதமாகும்.

சில துல்லியமான கணித அமைப்புடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்டது திருக்கணிதமாகும். இரண்டு பஞ்சாங்கங்களில் உள்ள கோள்களின் அசைவுகள் ஒன்றுபோல் இருப்பது இல்லை. வாக்ய கணித முறையில் தயாரிக்கப் படும் அனைத்து விபரங்களும் திருக்கணித முறையுடன் இணைந்து செல்வதில்லை.

ஆதலால் கோள்களின் மாற்றத்திலும் திசையின் இருப்பிலும் அதிகமான வித்தியாச அமைப்பு ஏற்படும். ஒரு பொழுதும் நவாம்சச் சக்கரம் இரண்டு கணித அமைப்பிற்கும் ஒன்று போல் இருப்ப தில்லை. இவ்வாறு இரண்டு பஞ்சாங்க நிலைகளும் வேறுபட்டு இருப்பது போல் எபிமெரிஸ் என்று சொல்லப் படுகிற பஞ்சாங்கமும் வேறுபட்டுள்ளது.

ஜாதகம் கணிப்பதற்கு அடிப்படையே பஞ்சாங்கம் தான். பஞ்சாங்கம் பார்த்து தான் கோள்களின் இருப்பு, நட்சத்திரம் போன்றவற்றைச் சொல்கின்றார்கள். புதிதாக ஜாதகம் கணிக்கப் பழகுபவர்கள் நான் எந்தப் பஞ்சாங்கம் அடிப்படையில் ஜாதகம் கணிக்க? எனக் கேட்டால் 3 வகையிலும் பழகுங்கள், அனுபவத்தின் அடிப்படையில் எது சரியாக வருகின்றது எனப் பார்த்து அந்த முறையில் கணித்துக் கொள்ளுங்கள் என்கின்றார்கள் .

பஞ்சாங்கம் மடத்தின் அடிப்படையில் பலவிதம் . . சிறீரெங்கம் பஞ்சாங்கம் , சிருங்கேரி மடம் பஞ்சாங்கம். சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்தப் பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்யப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்துப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டானப் பஞ்சாங்கம், பாம்புப் பஞ்சாங்கம், யோக சேம பஞ்சாங்கம் இப்படிப் பலவிதமான பஞ்சாங்கங்கள். ஒவ்வொன்றுக்கும் வேறு-பாடுகள்.

எந்தப் பஞ்சாங்கம் இந்து மதப் பஞ்சாங்கம் -சொல்வார்களா? பஞ்சாங்கம் மொழி அடிப்படையில் பலவிதம். தமிழ்ப் பஞ்சாங்கம், தெலுங்குப் பஞ்சாங்கம், பெங்காலிப் பஞ்சாங்கம், குஜராத் பஞ்சாங்கம், மராத்திப் பஞ்சாங்கம், ஹிந்திப் பஞ்சாங்கம் .. ஒவ்வொரு மொழிக்கும் புத்தாண்டு தினம் வெவ்வேறு.- அதனால் அதனோடு தொடர்புபடுத்தி சொல்லப்படும் பஞ்சாங்கம் வெவ்வேறு. இதில் எந்த மொழிப் பஞ்சாங்கம் இந்து மதப் பஞ்சாங்கம் – சொல்வார்களா?

பஞ்சாங்க நூல்கள் அப்படிப் பட்டவைதான் . பஞ்ச+ அங்கம் (5 உறுப்புகள்) = பஞ்சாங்கம் என்கின்றார்கள். 5 உறுப்புகள் எவை என்றால் 1. திதி 2. வாரம் 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம் என்கின்றனர் .

நிலையாக இருக்கும் விண்மீன் கூட்டங்களையும்,சூரியன் நகர்ந்து செல்வதாக நினைத்து இரண்டையும் இணைத்து ராசி என்பதை வெளிநாட்டினர் ஏற்படுத்தினர். இது சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை ஆகும். வேத ஜோதிடத்தில் சந்திரனை மையமாக வைத்து ராசிகளையும் நட்சத்திரங்களையும் குறித்தனர்.

சோதிடம் விஞ்ஞானம் என்றால், விஞ்ஞானம் எல்லா இடத்திலும் ஒன்று போல்தானே இருக்க வேண்டும்?

ஜோதிடம் அப்படியா? – மேலை நாட்டு ஜோதிடம் வேறு, கீழை நாட்டு சோதிடம் வேறு- கீழை நாட்டு ஜோதிடத்திலேயே சீனா ஜோதிடம் வேறு, இந்தியா ஜோதிடம் வேறு.- இந்தியா நாட்டு ஜோதிடத்திலேயே வட இந்திய ஜோதிடம் வேறு, தென் இந்திய ஜோதிடம் வேறு.

தென் இந்திய ஜோதி டத்திலேயே எண் ஜோதிடம் வேறு, ஜாதக ஜோதிடம் வேறு,கை ரேகை ஜோதிடம் வேறு. ஜாதக ஜோதிடத் திலேயே அந்த ஜோதிடர் சொன்னால் பலிக்காது, இந்த ஜோதிடர் சொன்னால் பலிக்கும் என்னும் தந்திரங்கள் வேறு,- எப்படி ஜோதிடம் விஞ்ஞானம்? பதில் சொல்வார்களா ஜோதிடர்கள்?

சூரிய வட்டத்தில் எந்தெந்தக் கிரகம் எந்தவிடத்தில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் சோதிடம் கணிக்கப்பட்டிருக்கிறது.

சூரியனுக்குப் பக்கத்திலே இருக்கும் புதன் கிரகத்தை செவ்வாய் கிரகத்திற்குப் பக்கத்தில் இருப்பதாகவும், சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கும் வெள்ளி கிரகத்தை 5ஆவதாக இருக்கும் வியாழன் கிரகத்திற்குப் பக்கத்தில் இருப்பதாகவும் இப்படி ஒரே குழப்பமாக கிரகங்களின் வரிசையை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று கூறினால் அதைக் கேட்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா!

அறிவியல்படி சூரியனிலிருந்து கிரகங்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று இருப்பதை சோதிடத்தில் சூரியன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த மிகப் பெரிய தவறை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று பொய் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் நம்பினார்கள் பூமியை மய்யமாக வைத்துத் தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருவதாக!

அறிவியல் ஆய்வுக்குப்பின் அது தவறு என்று தெரிந்த பிறகாவது சோதிடர்கள் திருத்திக் கொள்ள வேண்டாமா? எனவே சோதிடம் என்பது தவறான அடிப்படையில் தவறாகக் கணிக்கப்பட்டு பொய்யும் புரட்டும் இணைக்கப்பட்டு கூறப்படுவதுதான் என்பது இவற்றால் உறுதியாகிறதே!

பூமியின் துணைக் கோள் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள், செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள் 2, வியாழனின் துணைக் கோள்கள் 16, சனியின் துணைக்கோள்கள் 22, இவை சோதிடத்தில் சேர்க்கப்படவில்லை!

அக்கால சோதிடருக்கு இந்தத் துணைக்கோள்கள் தெரிந்திருக்க வில்லை! அவர்களுக்குத் தெரிந்திருந்த அரை குறையான வானவியல் அறிவைக் கொண்டு மனித வாழ்க்கையின் முழுமையையும் கூறிட முடியும் என்று நம்ப வைத்து வருகின்றனர்!

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?

பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?

குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும்.

பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் சொல்கிறது! அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தாத்பரியம் என்ன வென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே அலாஸ்க்கா, நோர்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது.

இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.

மனிதன் பிறந்த புவிக் கோளையும் அதன் தாக்கத்தையும் சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாஸ்த்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியிருக்க சோதிடம் எப்படி உண்மையாகும்?

கடவுள் தத்துவப்படி சென்ற பிறவியின் செயல்பாட்டைக் கொண்டு இப்பிறவி வாழ்வு இறைவனால் விதியாகத் தீர்மானிக்கப்பட்டு, அதன்படி மனித வாழ்வை கடவுள் அமைக்-கிறது. அதன்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்பது கடவுள் கோட்பாடு.

ஆக, கடவுளை நம்புகின்றவன், கடவுள் விதித்த விதிப்படிதான் வாழ்வு அமையும் என்று நம்ப வேண்டும். அப்படியாயின் சோதிடத்தை நம்புகின்றவன், கடவுளை மறுக்கிறான் என்றே பொருள். சோதிடம், கிரகங்களின் இயக்கப்படி வாழ்வு என்பதால், கடவுள் விதிப்படிதான் வாழ்வு என்பதை மறுப்பதாகப் பொருள். அப்படியாயின் கடவுளையும் மறுப்பதாகவே பொருள். எனவே, சோதிடத்தை நம்புகிறவன் கடவுளை மறுக்கிறான் என்பதே உண்மை!

வாஸ்த்து நம்பிக்கையாளன் கடவுளையும் மறுக்கிறான், சோதிடத்தையும் மறுக்கிறான் என்பது பொருள். காரணம், வாசல்படியை (வாசகால்), மாற்றி வைத்தாலே வாழ்வு மாறிவிடும் என்கிறான். அப்படியாயின் வாழ்வை கடவுளும், கிரகங்களும் தீர்மானிக்கின்றன என்பவற்றை வாஸ்த்து நம்பிக்கையாளன் மறுக்கிறான் என்றே பொருள். ஆக, வாஸ்து நம்பிக்கையாளன் கடவுள் மறுப்பாளன், சோதிட மறுப்பாளன் என்பதே உண்மை!

பெயர் மாற்ற நம்பிக்கையாளன் கடவுள், சோதிடம், வாஸ்து எல்லாவற்றையும் மறுக்கிறான் என்பது பொருள். பெயரை மாற்றினால் ஒருவனின் வாழ்வே மாறிவிடும் என்று நம்பினால், கடவுளின் விதிப்படி வாழ்வு, கிரகங்களின் இயக்கப்படி வாழ்வு, வாஸ்த்துப்படி வாழ்வு என்பதை அவன் மறுக்கிறான் என்பது-தான் உண்மை.

இராசிக்கல்லை நம்புகின்றவன் மேற்படி எல்லாவற்றையும் மறுக்கிறான் என்று பொருள். பச்சைக் கல்லை மாற்றி நீலக்கல்லை அணிந்தால் வாழ்வே மாறிவிடும் என்று இவன் நம்புவதால், மற்றவற்றை இவன் மறுக்கிறான் என்பதே உட்பொருள்.

ஆக, வாழ்வை தீர்மானிப்பது கடவுளின் விதியா? கிரங்களின் இயக்கமா? வாஸ்தா? இராசிக்கல்லா? பெயரா? என்பதைக் கூட உறுதியாகக் கூறமுடியாமல் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்வதும், நம்புவதும் இவை எதுவும் உண்மையல்ல என்பதை உறுதி செய்கின்றன.
சூரியன் இடம்பெயருகிறதா?

சோதிடம் கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. கிரகங்கள் மாறும்போது (இடம்பெயரும்போது) வாழ்வு மாறும் என்கின்றனர். இவற்றுள் சூரியனையும் சேர்த்து, சூரியன் இடம் பெயருவதாக சோதிடம் கணிக்கின்றனர்.

நிலையாக உள்ள சூரியன் இடம் பெயர்-வதாகத் தவறாகக் கருதிக்கொண்டு, சோதிடம் கணிக்கப்படுகிறது. அடிப்படையே தவறு என்னும்போது, சோதிடம் எவ்வாறு உண்மை-யாகும்?
அது மட்டுமல்ல, சூரியன் ஒரு கோளும் (கிரகம்) அல்ல. அது ஒரு நட்சத்திரம். நட்சத்திரத்தை கோளாகக் கூறி, சோதிடம் கணிப்பதும் அறியாமையின் அடையாளமாகும். அப்படியாயின் தவறான நம்பிக்கையின்படி கணிக்கப்படும் சோதிடம் எவ்வாறு சரியாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

“காலரா’’ காளியாத்தாள் சீற்றத்தால் வருகிறது, “அம்மை’’ மாரியாத்தாள் கோபத்தால் வருகிறது என்று எண்ணி நோய் தீர கடவுளை வேண்டி வந்த நம்பிக்கையை, விஞ்ஞானத்தால் தயாரித்த காலரா, அம்மைத் தடுப்பூசிகள் தகர்த்து தரைமட்டமாக்கின.

கடவுள் உலகத்தைப் படைத்தார், உயிரினங்களைப் படைத்தார் என்ற கற்பிதங்களை, நம்பிக்கைகளை டார்வின் அவர்களின் பரிணாமக் கோட்பாடு பொய்யென்று உறுதிசெய்தது.
மருத்துவத் துறையின் சாதனைகள் மனித ஆயுளை நீட்டித்து, விதிப்படி வாழ்வு என்ற மூடநம்பிக்கையை ஒழித்தது. மனித வாழ்வின் அளவை வாழ்க்கை முறையால், அறிவியல் கண்டுபிடிப்புகளால் உயர்த்தலாம் என்று சாதித்துக்காட்டி, ஆயுளை கடவுள் தீர்மானிக்கிறார் என்ற எண்ணம் முறியடிக்கப்பட்டது.

விஞ்ஞான வளர்ச்சியால் சோதிடம் தகர்க்கப்படுவது மட்டுமல்ல, மூடநம்பிக்கைகள் அனைத்துமே முற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டன.

கடவுள் உயிரினங்களைப் படைத்தால், அவற்றின் உடலையும் உடல் உறுப்புகளையும் படைத்தால் ஒருவர் உறுப்பை மற்றவருக்கு எடுத்து வைத்து எப்படி உயிர் பிழைக்கச் செய்ய முடியும்?

ஒருவர் உறுப்புகளை மற்றவருக்கு மாற்றிப் பொருத்தி உயிர் வாழச் செய்யும் விஞ்ஞான வளர்ச்சி கடவுள் படைப்புத் தத்துவத்தையே தகர்த்துவிட்டது அல்லவா?

ஓர் ஆட்டின் ஓர் உயிர் அணுவை எடுத்து ஆட்டுக் குட்டியை “குளோனிங்’’ முறையில் உருவாக்கியதன் மூலம் கடவுளே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

– மஞ்சை வசந்தன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *