இராஜாஜி பதவிக்கு வந்ததும் முதன்முதல் கல்வியில் கைவைத்து 2,500 பள்ளிகளை மூடினார். தமிழ்மக்கள் படிக்கக் கூடாது என்பதற்காக இந்தியைக் கொண்டுவந்தார். கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளை ஒழித்தார்.
அது மட்டுமல்ல, அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார். பள்ளிப் பாடப் புத்தகத்திலே பொம்மை போட்டு இன்னான் இன்ன வேலை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். சட்டசபையில் காங்கிரஸ் மைனாரிட்டியாக இருந்ததால் நாமினேஷன் பதவிக்கு வந்தவரை எந்தக் கட்சிக்காரனும் அவரை எதிர்த்து விரட்ட முடியவில்லை.
அவர் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் நாங்கள் மாநாடு கூட்டி கத்தியை எடுத்துக்கொள். பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராக வைத்துக் கொள். தேதி தருகிறேன்.
ஒரு கை பார்ப்போம் என்று சொன்ன பிறகு பதவியை விட்டு விலகினார்; அடுத்து தேர்தலில் திரு.காமராசர் ஜெயித்தார். அவர் வந்தவுடன் அவருக்குப் படிப்பு இல்லை. அவர் அப்படி இப்படி என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள்.
திரு.காமராசர் வந்தவுடனே மூடிய பள்ளிகளைவிட அதிகமாகவே திறந்துவிட்டார். அப்பொழுது குடியாத்தம் தேர்தல் வந்தது. அதில் நின்று வருகிறேன் என்று திரு.காமராசர் நின்றார். இந்தப் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு போய் வேலை செய்தார்கள். கம்யூனிஸ்டுகளும் பலத்த எதிர்ப்பு கொடுத்தார்கள்.
இதைப் பார்த்த நாங்கள் கச்சையைக் கட்டிக் கொண்டு போய் வேலை செய்தோம். அதன் பலன்தான் இன்று தமிழ்நாட்டிலே இருக்கிற அத்தனை கிராமங்களிலும் 300 பேர்கள் வாழ்கிற இடத்தில்கூட ஒரு பள்ளி வீதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் மூடினார். இவர் ஆறாகத் திறந்து விடுகிறார்.
இன்று பள்ளிக்கூடம் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை. பகலில் சாப்பாடு, துணி எல்லாம் கொடுக்கப்படுகிறது. புத்தகமும் வாங்கிக் கொடுத்து, சம்பளமில்லாமல் 10ஆவது வரை படிக்க வசதி ஏற்பாடு செய்யப் போகிறார். துணி _ சோறு _ சம்பளம் இல்லாமல் படிப்பு. இதை எல்லாம் பார்க்கிறபோது இராஜாஜிக்கு கோபம் வராதா?
கக்கூஸ் எடுப்பது, கல் உடைப்பது, வண்டி இழுப்பதெல்லாம் படிக்காதவன் வேலை. எந்தப் பார்ப்பானாவது கக்கூஸ் எடுக்கிறானா? வண்டி இழுக்கிறானா? காரணம் என்ன? அவன் படித்திருக்கிறான். சொகுசாக உத்தியோகம் பார்க்கிறான்.
திரு.காமராஜ் இன்னும் பத்து ஆண்டு இருந்தால் பார்ப்பான் கையில் மண்வெட்டி இருக்கும். பார்ப்பனத்தி கையில் புல் இருக்கும். இருவரும் கடைத்தெரு வழியே வருவதை நாம் காணமுடியும்.
இராஜாஜி சொல்லுகிறார் தனிப்பட்ட உரிமை வேண்டுமென்று. எப்படி என்றால், அவர்கள் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்தபடியே வசதி வேண்டுமென்கிறார்.
அதாவது மனுதர்ம முறையைக் கொண்டுவர வேண்டும் என்கிறார். அது நடக்கிற காரியமா? அதனால்தான் திரு.காமராசர் மீது கோபப்பட்டு அவரை அந்த இடத்திலிருந்து இறக்க வேண்டு-மென்று பாடுபடுகிறார்.
இங்கே நடக்கிற ஆட்சி கொடுமையான ஆட்சி என்று வடநாட்டிலே போய்ச் சொல்லுகிறார். நேருவிடத்தில் திரு.காமராசரை ஒழிக்க எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தார்கள். அவர் ஒரேயடியாகச் சொல்லிவிட்டார். “இப்போது இருக்கிற நிலைமைக்கு எந்த மந்திரியும் காமராசர் தண்டாவுக்குப் போகாதீர்கள்.
நம்முடைய ஆட்சியில் தினம் இரண்டு மந்திரி வெளியே போய்க் கொண்டிருக்-கிறார்கள். மற்ற மாகாணத்தைவிட தமிழ்நாட்டில்தான் அமைதியாக உயர்ந்த நிலையில் ஆட்சி நடந்துவருகிறது’’ என்று சொல்லிவிட்டார்.
அப்படி இருக்கிறபோது இந்த திரு.ஆச்சாரியாருக்கு ஏன் இந்தக் கோபம் என்றால் படிக்காத ஒரு சூத்திரன் தம்மைவிடத் திறமையாக ஆட்சியை நடத்துகிறானே என்ற பொறாமையினால். தமிழ்நாட்டுக்குப் பணம் கொடுத்தால் அதை நல்லமுறையில் செலவழித்துக் காட்டுகிறார்கள். கேரளாவுக்குக் கொடுத்தால் எந்த விபரமும் தெரியவில்லை.
திரு.காமராசருடைய ஆட்சி வந்தபிறகு உண்மையில் நாம் எவ்வளவோ முன்னேறி யிருக்கிறோம். படிப்பு நம் பிள்ளைகளுக்கு வந்தால் அறிவு ஏற்படும். பார்ப்பான் முன்னேற்றத்திற்கு அதுதான் காரணம்.
வசவச என்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது ஒருபுறம் இருந்தாலும், அவனுடைய ஆசை எல்லாம் படித்தால் எங்கேயாவது போய் வேலை செய்யலாம் என்று நினைக்கிறான். முனிசிபல் பியூனிலிருந்து போலீசுகாரன் வரை தன்னுடைய பிள்ளை படிக்க வேண்டுமென்று நினைக்கிறான். உடல் உழைப்பு செய்கிற வேலை எல்லாம் நம்முடையதுதான். அதில் யாரும் தலையிட முடியாது.
எவ்வளவு அயோக்கியனாகவும் ஒழுக்கக் கேடனாகவும் இருந்தாலும் பார்ப்பான் பார்ப்பான்தான். அவர்களிடம் எது நடந்தாலும் வெளிக்கு விட்டுக் கொடுக்காமல் ஒரே கட்டுப்பாடாக இருந்து காரியம் சாதிக்கிறார்கள். நம்மிடம் கட்டுப்பாடு இல்லை. இதனால்தான் நமக்குப் பல கேடுகள் நடைபெற்று வருகின்றன.
திரு. காமராசர் செய்கிற காரியம் ரொம்ப நல்ல காரியங்களைத் துணிவோடு செய்கிறார். அவரோடு திரு.சுப்பிரமணியமும் ஒத்துழைக்கிறார். கல்வியில் இவர்கள் காட்டுகிற அக்கறை ஒன்றே போதாதா?
யார் செய்ய முடியும்? நம்முடைய சமுதாயத்துக்கு இங்கே செய்கிற வேலையைப் பார்த்து டில்லிக்காரன் “உங்கள் நிதி மந்திரியையும், கல்வி இலாக்கா டைரெக்டர் சுந்தரவடிவேலுவையும் ஒரு ஆண்டுக்கு தருகின்றீர்களா?’’
என்று கேட்கிற நிலைமை ஏற்படுகிறதென்றால், இந்த மந்திரிசபையினுடைய நல்ல பெயரை நீங்கள் உணரவேண்டும்.
இந்த அய்க்கோர்ட்டில் ஜட்ஜு வேலை காலியாக இருந்தது. அதற்கு காமராசர் சர்க்கார் ஒரு தமிழரை சிபாரிசு செய்து அனுப்பினார்கள். அதை பார்ப்பன வக்கீல்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எதிர்த்து சர்க்காருக்குக் கெட்ட பெயரை உண்டாக்க வேலை செய்தார்கள். இதைப் பார்த்தும் நம் நாட்டில் யாரும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. நான்தான் கண்டித்தேன். அழகிரி நியமனம் சரி.
இந்தப் பார்ப்பனர்கள் வேண்டுமென்றே அவரைத் தடுக்கிறார்கள் என்று பத்திரிகையில் அறிக்கை விட்டேன். பொதுக் கூட்டத்திலே பேசினோம்.
அதைப் பார்த்த பிறகு டில்லியில் இருந்து பெரிய ஜட்ஜு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வந்தார். அவரைப் புகழ்ந்து இங்கே அராஜகம் நடைபெறுகிறது. அதைக் கண்டிக்க வேண்டும் என்கிற முறையில் வரவேற்பு கூறினார்கள்.
அவர் இவர்கள் மண்டையில் அடிக்கிற மாதிரி நீங்கள் செய்த காரியத்தால் நீதிக்கே கறை ஏற்பட்டு விட்டது. உங்களுக்கும் _ கோர்ட்டுக்கும் இழுக்கைத் தேடிவிட்டீர்கள் என்று வேட்டு வைத்து விட்டுப் போய்விட்டார்.
உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்தி மாதிரி இருந்துவிட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் காமராசருடைய ஆட்சிதான். வருகிற தேர்தலில் நாம் கட்டுப்பாடாக இருந்து திரு.காமராசரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தால் நமக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
(8.2.1961 அன்று ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து…)
நான் காமராசரிடம் அன்புகொண்டு அவருடைய பதவிக்கு என்னால் ஆன வழிகளில் ஆதரவு கொடுத்து வருகிறேன்.
காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்கின்ற உணர்ச்சியோடு ஆட்சி நடத்துகிறார். அதனால் அவருக்குப் பொறாமை காரணமாக காங்கிரஸ் வட்டாரத்திலும், வகுப்பு காரணமாக இரண்டொரு வகுப்பாரிடையிலும் சில எதிரிகள் இருந்துகொண்டு அவருக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
அத்தொல்லைகள் வெற்றி பெற்றால் தமிழர்களுடைய நிலை மோசமாகிவிடும். உத்தியோகத் துறையில் தமிழர்களுக்கு மிக மிகக் கெடுதிகள் ஏற்படலாம் என்று எண்ணுகிறேன்.
ஆதலாலேயே அவரது தமிழன் என்கின்ற உணர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள் வெற்றி பெறாமல் இருப்பதற்காக என்றே என்னாலானதைச் செய்கிறேன். அது யோசனை அற்றவர்களுக்கு காமராசரை நான் ஆதரித்ததாக ஆகிவிடுகிறது. காமராசர் தமிழ் மக்களுக்குக் காட்டும் நேர்மையானது அவர் எனக்கு ஏதோ ஆதரவு காட்டுவதாக ஆகிவிடுகிறது.
நான் அரசியல் தொண்டனல்ல; சமுதாய நலத்தொண்டனாவேன். அதிலும் பெரிதும் தமிழ் மக்கள் நலனுக்கென்றே பாடுபடுபவன். அதை முன்னிட்டு அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எதிர்க்கவும் விட்டுக் கொடுக்கவும் துணிவேன்.
காமராசருக்கும் எனக்கும் அரசியல் கருத்துக்களில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும் தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்வந்து அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, மற்றபடி எனது சொந்த சுயநலத்தை முன்னிட்டோ அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் கேட்டதும் கிடையாது.
குடியாத்தம் சட்டசபைத் தேர்தலில் நான் ஆதரித்தேன் என்றால் நான் அவரை ஆதரிப்பதாக அவரிடம் சொல்லிவிட்டு ஆதரிக்கவும் இல்லை அல்லது அவர் என்னை ஆதரிக்கவேண்டும் என்று என்னைக் கேட்கவும் இல்லை. திடீரென்று எனக்குத் தோன்றிய எண்ணத்தின் பேரில்தான் நான் வலியச் சென்று அவரை ஆதரிக்கும்படியாகியது. நானும் இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவனுமல்ல. அவர் விரும்புவார் என்று கூடக் கருதினவனல்ல.
ஒருநாள் நான் ஆத்தூர் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தேன். அதுசமயம் பத்திரிகை ஒன்றை என்னிடம் ஒரு தோழர் கொடுத்து, முதன் மந்திரி அவர்கள் சட்டசபைத் தேர்தலுக்கு குடியாத்தம் தொகுதியில் நிற்பதாகச் செய்தி வந்துள்ளது என்று சொன்னார்.
நான் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, உடனே அதே கூட்டத்திலேயே என்னுடைய எண்ணத்தை வெளியிட்டேன். காமராசர் அவர்களை குடியாத்தம் தொகுதியில் தோல்வி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும் என்பதாக அப்போதே கூறிவிட்டேன்.
இதற்கு யாருடைய யோசனையையும் சம்மதத்தையும் கேட்கவில்லை. ஏனெனில் நான், ஜனநாயக ரீதியில் தொண்டாற்றுபவன் என்று சொல்லிக் கொள்பவன் அல்ல.
நான் ஜனங்கள் உணராததை, கவலைப்படாததை, மற்ற யாரும் செய்ய முன்வராததை எடுத்துக் காட்டி உணர்த்தி கவலைப்படும்படி செய்து அவர்களை அவசியமான நேர்வழியில் நடக்கச் செய்ய வேண்டும் என்கிற தன்மையில் தொண்டாற்றுபவன். என்னுடைய கவலையும் அனுபவத்தையும் கொண்டு மக்களுடைய இழிவும் குறைபாடுகளும் நீங்க மக்களுக்கு வழிகாட்டும் பணியாற்று பவனாவேன்.
டாக்டர் வரதராஜூலு நாயுடுவின் 68ஆவது பிறந்தநாள் 27.11.1955 அன்று சென்னை ராஜாஜி ஹாலில் முதல்வர் காமராசர் தலைமையில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார்.